தக்ளியும் நானும்
கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ஆவணி அவிட்டம் தொடர்பாக ஒரு பதிவு இட்டிருந்தார். அந்தப்பதிவு, என் பள்ளிக்கூட நாட்களின் இனிய நினைவுகளைக் கிளறி விட்டது.
கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா பள்ளியில் படித்த காலத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை கைவினை (Craft) வகுப்பு உண்டு. அங்கு கைவினை வகுப்பில் நெசவு கற்றுத்தரப் பட்டது. அந்த வகுப்பறையில் இரண்டு பெரிய தறிகளும் ஏழெட்டு நாடா தயாரிக்கும் சிறு தறிகளும் உண்டு.
நெசவு ஆசிரியர் பக்கத்தூர் வெள்ளங்குளியிலிருந்து வருவார். வெள்ளங்குளி நிறைய சௌராஷ்டிர இன நெசவாளர்களைக் கொண்ட ஊர். அவர் சௌராஷ்டிர மொழியுடன் தமிழைக் கலந்து வா, போ என்பதை வால்னி, போல்னி என்று சொல்வது வேடிக்கையாக இருக்கும்.
நெசவு வகுப்பிற்குக் கண்டிப்பாக தக்ளியும் பஞ்சும் கொண்டு போக வேண்டும். தக்ளியும் பஞ்சும் பாரதி நியூஸ் மார்டில் (ரங்கசாமி கடை) கிடைக்கும். குச்சி மிட்டாய் மாதிரி அரையடி நீளத்தில் பஞ்சு நடுவிரல் கனத்திலிருக்கும். 1966 ஆண்டு திலகர் வித்யாலயாவில் ஐந்தாம் வகுப்பு சேர்ந்த போது இந்தத் தக்ளியும் பஞ்சும் அறிமுகமாயின. இப்போது1990களுக்குப்பின் பிறந்த தலைமுறையினருக்குத் தக்ளி என்றால் என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினக்கிறேன்.
தக்ளி 10 காசு. மூன்று நீட்டுப் பஞ்சுகள் 5 காசு. தறி வகுப்புகளில் நூல் நூற்றுக் காண்பிக்க வேண்டும். தக்ளியும் பஞ்சும் கொண்டு வராத மாணவர்களுக்கு அபராதமோ அல்லது பிரம்படியோ உண்டு.
ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நான் நூற்ற நூலின் நீளத்தை அளந்தால் பத்து மீட்டர் கூட வராது. நூலும் தேர்வடம் அல்லது சமுக்காளம் செய்யத்தான் பயன்படுத்தலாம் அத்தனை தடிமனாக இருக்கும். சொல்லப்போனால் வாங்கிவந்த பஞ்சுக்கும் தக்ளி கொண்டு நான் தயாரித்த நூலுக்கும் பெரிய வேறுபாடு இருந்ததாகத் தோன்றவில்லை.
இஸ்லாமிய மாணவர்கள் சிலருக்கும் முதலியார் இன மாணவர்கள் சிலருக்கும் தறி நெசவு செய்யத் தெரிந்திருக்கும். இவர்கள் தக்ளி இல்லாவிட்டாலும் மன்னிக்கப்படுவார்கள். அவர்கள் ஒரு மூலையில் உட்கார்ந்து யாராவது ஒரு மாணவன் சன்னமான குரலில் ஒவ்வொரு கட்டமாகச் சொல்லும் சினிமாக் கதையைச் செவிமடுத்தவாறு இருக்க அனுமதியுண்டு.
மாவட்டக் கல்வி அலுவலர் ஆண்டாய்வுக்கு வரும்போது என் வகுப்பில் பயின்ற ஆதிமூலப் பெருமாளோ அல்லது திவான் மொய்தீனோ மின்னல் வேகத்தில் சுட்டித் துண்டு நெய்து அலுவலரை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்கள். அன்றைக்கெல்லாம் அவர்கள்தான் வகுப்பில் ஹீரோ.
அம்பாசமுத்திரத்தில் பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் இருக்கும். சிறுவனாக இருந்த போது அங்கு எப்போதும் கதராடை அணிந்த ஒரு பெரியவர் கைராட்டையில் நூற்றுக் கொண்டிருப்பதைப் பலமுறை கண்டிருக்கிறேன். அந்தப்பக்கமாகச் செல்பவர்கள் அவரை மரியாதையுடன் வணங்கிச் செல்வார்கள். அவர்தான் அம்பாசமுத்திரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு. கோமதி சங்கர தீட்சிதர் என்று பின்பு தெரிந்து கொண்டேன்.
பள்ளியில் நெய்யப்பட்ட வேட்டி, துண்டு ஆகியவை நல்ல தரத்தில் இருக்கும். பெரும்பாலும் ஏலத்தில் எங்கள் ஆசிரியர்களே வாங்கிக் கொண்டு விடுவார்கள்.
தறி வகுப்பறையுடனான பந்தம் ஒன்பதாம் வகுப்புடன் முடிவடைந்தது. அதனிடத்தை விருப்பப் பாடம் ( Elective subject) எடுத்துக் கொண்டு விட்டது.
அப்புறம் 1979 இல் காஞ்சீபுரம் மாவட்டம் ஆற்பாக்கம் பள்ளியில் பணியாற்றும் போது நெசவு ஆசிரியர் இருந்த போதும் அங்கு இந்த தறி வகுப்பறையே இல்லாமல் இருந்தது வியப்பளித்தது. இப்போது பல பள்ளிகளில் நெசவு வகுப்புகள் இல்லை. ஆசிரியர்கள் இருக்கும் ஒருசில பள்ளிகளிலும் அதற்கான கட்டமைப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.
கடைசியாக 2019 ஆம் ஆண்டு புனே சென்றிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சிறை வைக்கப்பட்டிருந்த ஆகாகான் மாளிகையைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கைராட்டையைப் பார்த்த போது மெய் சிலிர்த்தது.
மகாத்மா காந்தியை நேரில் காணும் பாக்கியம் கிடைக்காவிட்டாலும் புனே ஆகாகான் மாளிகையில் உள்ள அன்னை கஸ்தூரிபா மற்றும் திரு. மகாதேவ் தேசாய் ஆகியவர்களின் சமாதிகளை தரிசித்து வலம் வரும் பாக்கியம் கிடைத்ததை வாழ்வின் பெரும் பேறாகக் கருதுகிறேன்.
தக்ளிகளின் படம் நன்றியுடன்: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF
Casinos Near Bryson City - MapyRO
ReplyDeleteThe Bryson 양주 출장안마 City Casino is one of the most well-regarded casinos in Bryson City. 군산 출장마사지 It provides the 고양 출장샵 most convenient, and reliable place for 의정부 출장마사지 business. 공주 출장마사지