இந்தியாவைப் பொறுத்தவரையில்
கர்கரால் (Garga) எழுதப்பட்ட கர்கசம்ஹிதா (Garga Samhitha) சோதிட ஆய்வு
நூலில் 3 × 3 மாயச்சதுரத்தைப் பற்றிய முதல் குறிப்பு காணப்படுகிறது.
சூரியன், சந்திரன், புதன்,
செவ்வாய், சுக்கிரன், வியாழன்,
சனி, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்களையும் சாந்தி செய்ய 3 × 3 மாயச்சதுரத்தைப் பயன்படுத்த கர்கசம்ஹிதாவில்
கர்க மகரிஷி பரிந்துரைத்துள்ளார். இந்த ஆய்வு நூலின்
பழமையான பதிப்பு பொதுயுகம்100 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. ஆனால் கிரகங்கள்
குறித்த பத்தியை அலக்ஸாண்டரின் படையெடுப்பு நிகழும் முன்னர், அதாவது 400 CE க்கு முன்பே எழுதியிருக்க வாய்ப்பில்லை.
பொதுயுகம் 900 மாவது ஆண்டு வாக்கில் சித்தயோக்(Siddhayog) என்ற மருத்துவப் புத்தகம் விரிந்தா மாதவா (Vrinda Madhava) என்பவரால் எழுதப்பட்டது. இப்புத்தகத்தில் கருவுற்றிருக்கும் பெண்களுக்கு எளிதாகப் பிரசவம் நிகழ 3 × 3 மாயச் சதுரத்தை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதையே மாயச் சதுரங்களின் காலக் கோட்டுத் தொடக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.
நான்குக்கு நான்கு (4X4) மாயச் சதுரம் அல்லது நான்காவது
வரிசை மாயச் சதுரம் (Fourth order magic square) குறித்த உலகின்
மிகப் பழமையான குறிப்பு வராகமிகிரரால் பொதுயுகம் 587 ஆண்டில் எழுதப்பட்ட பிரஹத்
சம்ஹிதா (Brahath Samhitha) என்னும் கலைக் களஞ்சியத்தில் காணப்படுகிறது. இதில் 16 வெவ்வேறு பொருட்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பொருட்களைப்
பயன்படுத்தி வாசனை திரவியங்களை உருவாக்குவதற்காக மாயச் சதுரம் உருவாக்கப்பட்டுள்ளது. சதுரத்தின் 16 கட்டங்களும் ஒரு குறிப்பிட்ட
மூலப்பொருளைக் குறிக்கிறது, அதே சமயம் கலத்தில் உள்ள எண் மூலப்பொருளின்
விகிதத்தைக் குறிக்கிறது, அதாவது நிரை வரிசைகள் (rows),
நிரல் வரிசைகள் (columns) மற்றும் மூலைவிட்டக்
கட்டங்களின் (diagonals) வரிசைகள் ஆகியவற்றின் தனித்தனியான கூடுதல் எந்த
நான்கு மூலப்பொருட்களின் கலவைகளின் மொத்த அளவைக் கொடுக்கும். இக்கலவைகளின் மொத்த அளவு மாயச் சதுரத்தின் மாறிலிக்குச் (Magic constant) சமமாக இருக்க வேண்டும். புத்தகம் பிரஹத் சம்ஹிதா குறி சொல்லுவது
பற்றியது என்றாலும் மாயச் சதுரத்திற்கு எந்த
மந்திர பண்புகளும் இருப்பதாகக் குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை. மேலும் இங்கு
மாயச் சதுரம் பல்வேறு பொருட்களின்
ஒருங்கிணைந்த சேர்க்கையின் வடிவமைப்பு சார்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது.
Comments
Post a Comment