திரு. இரா. செழியன்

இன்று திரு. இரா செழியன் அவர்களின் நினைவு நாள். மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர் .  


1923 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் திருக்கண்ணபுரத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் இராஜகோபால். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 1964 ஆண்டு இந்து பத்திரிகை வெளியிட்ட  நாடாளுமன்றம் குறித்த கட்டுரையில் (Parliament Gallery) படிக்கும் காலத்தில் கணிதத்திலும் புள்ளியியலும் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார் என்று குறிப்பிடுகிறது.  

இவரது இயற் பெயர் ஸ்ரீனிவாசன். இது வட மொழிப் பெயர் என்பதால்  இரா.செழியன் என்று தூய தமிழ்ப் பெயராக மாற்றிக் கொண்டார். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களில் ஒருவரான மறைந்த திரு. நெடுஞ்செழியன் அவர்களின் இளைய சகோதரர்.

1952 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டுவரை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்.

1962 முதல் 1967 வரை பெரம்பலூர் தொகுதியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர். 1967 முதல் 1977 வரையில் கும்பகோணம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். 1978 முதல்1982 வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் என்று இரண்டு தசாப்தங்கள் சேவை புரிந்தவர். எந்த ஊழல் குற்றச்சாட்டோ குறையோ சொல்ல இயலாத அப்பழுக்கற்ற தூய்மையான அரசியல் வாழ்க்கையை வாழ்ந்தவர்


1976 க்குப் பின்னர் மறைந்த தலைவர் திரு. ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1977 ஆம் ஆண்டு ஜனதா கட்சியில் இணைந்தார்.ஜனதா கட்சி உடைந்த பின் கடைசியாக திரு. இராமகிருஷ்ண ஹெக்டேயின் லோக்சக்தி கட்சியுடன் இணைந்திருந்தார்.2001 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தீவிர அரசியலில் இருந்து விலகி விட்டார்.


இவரது சகோதரர் திரு. நெடுஞ்செழியன் அவர்கள் மக்கள் திமுக  என்று புதிய கட்சி தொடங்கிய போது அதில் இணைய மறுத்து விட்டார். பின்னர் திரு. நெடுஞ்செழியன் அவர்கள் அஇஅதிமுக வுடன் தனது கட்சியை இணைத்து விட்டார். தவிரவும் வைகோ அவரது கட்சியை தலைமை ஏற்று நடத்த அழைத்த போதும் பணிவுடன் மறுத்து விட்டார். மேலும் திரு. வி.பி. சிங் அவர்கள் கவர்னர் பதவியை தரத் தயாராக இருந்த போதும் அதனை மறுத்து விட்டார் என்று குறிப்பிடுகிறார் திராவிட இயக்கங்களின் ஆய்வாளரான திரு. கே திருநாவுக்கரசு அவர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அண்ணா அவர்கள் செழியனைக் குறித்து சொல்லும் போது, " அரசியல் மற்றும் சொந்தப் பிரச்சனைகளுக்காகப் பலர் என்னிடம் ஆலோசனை கேட்பதுண்டு. ஆனால் நான் செழியனின் ஆலோசனையைக் கேட்பேன்" என்பாராம். அந்த அளவுக்கு அவரது சொற்களுக்கு முக்கியத்துவம் இருந்தது. 

நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் தலைவராக 1971 முதல் 1973 வரை செயல்பட்ட போது 93 அறிக்கைகளைத் தாக்கல் செய்து சாதனை படைத்திருக்கிறார்.

இப்போது அதிகம் பேசப்படும் மத்திய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்த நீதியரசர் ராஜ் மன்னார் அவர்களின் பரிந்துரைகளின் மீதான விரிவான அறிக்கையை திரு. செழியனும், திரு. முரசொலி மாறனும் இணைந்து தயாரித்தனர்.

நாடாளுமன்றத்தில் இந்தி திணிப்பு தொடர்பான பிரச்சினையில் எந்தவொரு விவாதத்திலும் யார் எத்தனை முறை இடையூறு செய்தாலும் தன் கட்சியின் தரப்புக் கருத்தை ஆணித்தரமாக ஆதாரங்களுடன் முன் வைப்பார். மிக நுட்பமாக  இந்தி திணிப்பை மத்திய அரசின் சுற்றறிக்கைகளைத் தேடி அலைந்து ஆதாரங்களுடன் நிருபிப்பார். இதில் ஆளும் கட்சி கூட்டணிக் கட்சி என்றாலும் அதற்காக எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டார்.

திரு. இரா. செழியன் அவர்களின் நாடாளுமன்ற உரைகள் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் Parliament for the people என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.






 


 







1952 முதல் 1976 வரை திராவிட

Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)