1960 - 80 காலகட்டத்தில் எங்கள் ஊரான கல்லிடைக்குறிச்சி கடைத் தெருவில் "நித்திய கல்யாணி தகரக்கடை"  , "நித்திய கல்யாணி பூக்கடை" என்று இரண்டு கடைகள் அடுத்தடுத்து இருந்தன. இரண்டு கடைகளையும் உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ஒருவர் நடத்தி வந்தார்.

கல்லிடைக்குறிச்சியில் அதிகமாக அனைவராலும் அறியப்பட்ட தையற் கலைஞர்கள் இருவர். ஒருவர் விடுதலைப் போராட்டத் தியாகி யக்ஞேஸ்வர சர்மாவின் புதல்வர் ராஜ் மாமா. முன்பு திரு. யக்ஞேஸ்வர சர்மாவின் பேராலேயே கடை வீதி சர்மாஜி ரோடு என்றழைக்கப்பட்டது. இப்போது அது மெயின் ரோடாகிப் போய் விட்டது.

மற்றவர் திரு. நாகூர். உள்ளூர் கம்யூனிஸ்ட் தொண்டர். மிகப் பணிவானவர். அக்ரஹாரத்தில் பலரது வீடுகளுக்கு  குடும்ப டெய்லர் இவர்கள் இருவரில் யாராவது ஒருவராகத்தான் இருப்பார்கள். எங்கள் குடும்பத்திற்கு ஆஸ்தான டெய்லர் திரு. நாகூர்தான்.  திரு.நாகூர் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான தொண்டர். 


இப்போது சொல்ல வந்தது திரு. நாகூரைப் பற்றி இல்லை. நித்ய கல்யாணி தகரக்கடை பற்றியே. இந்தக் கடை நாகூரின் தையல் கடைக்கு எதிரில் இருக்கும். 


அப்போதெல்லாம் முகப் பௌடர் டப்பாக்கள் நாலைந்து சேர்ந்ததும்  அவற்றைத் தகரக் கடையில் கொடுத்தால் இருபது காசு கூலியில் அழகாக முறம் செய்து கொடுத்து விடுவார். இது ஒரு சிறு எடுத்துக் காட்டு. நிறையப் பொருட்கள் மறு சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டன.‌ தேங்காய்ச் சிரட்டையில் கிண்ணங்கள், அகப்பைகள் எல்லாம் செய்து தருவார்கள். 


வாசலில் மோர் விற்க வருபவர்கள் அளப்பதற்கு நன்கு தேய்த்து மழுமழுப்பாகச் செய்யப்பட்ட சிரட்டையையே பயன்படுத்துவார்கள். திருமண வீடுகளில் பந்தியில் சாம்பார், ரசம் எல்லாம் பரிமாற சிரட்டை அகப்பைகள்தான்.


இப்போது எல்லாம்  எல்லா வீடுகளிலும் எவர்சில்வர் முறங்களும் கரண்டிகளும்தான்.


மறு சுழற்சிப் பயன்பாடு கேவலம் என்ற கண்ணோட்டத்திலும் பொருளாதாரத்தில் நலிவுற்ற விளிம்பு நிலை மனிதர்களின் பொருட்களாகவுமே பார்க்கப்படுவது தான் மிகப்பெரிய கொடுமை.

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)