வயிறு வலிக்கச் சிரிக்க வைத்த கோவிட் -19
சுய தனிமை நாட்களின் அனுபவங்கள்
இதை ஆங்கிலத்தில் யாரோ ஒருவர் எழுதியிருக்கிறார். அது எனக்கு வாட்ஸ்அப் நண்பரொருவர் மூலம் கிடைத்தது. அதைப் படித்து ரசித்த எனக்கு உடனே மொழி பெயர்த்துத் தமிழில் தர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்தப் பதிவிற்கு நீங்கள் தரும் பாராட்டுகள் அனைத்தும் ஆங்கில மூலத்தை எழுதிய பதிவருக்கே உரியது.
1) மார்ச் 11 அன்று என்னுடைய முகநூல் பக்கத்தில் எனக்கு மேற் கொள்ளப்பட்ட கோவிட் சோதனையின் முடிவு நேர்மறை (Positive) என்ற செய்தியைப் பதிவிட்டிருந்தேன். அதற்குமே அடடா உடனே என்னவொரு ஆதரவு பாருங்களேன். அடுத்த இருபது நிமிடங்களுக்குள் 60 பேர் விருப்பக்குறி👍 (LIKE) இட்டிருந்தார்கள். ☺
2) அதற்குப்பின் விரைந்து குணமடைய நான் ஏதோ தயக்கம் காட்டுவது மாதிரியாக, "விரைவில் குணமடையுங்கள்" , என்று கருத்துப் பதிவுகள் வந்து குவிய ஆரம்பித்தன.
3) நண்பர்கள் பலரிடமிருந்தும் எனக்கு தகவலை மறுஉறுதி செய்து கொள்ளச் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அதில் ஒன்றில் "உனக்கு கோவிட் நேர்மறை (Positive) என்று கேள்விப்பட்டேன். சீக்கிரமே எதிர்மறையான செய்தியைக் (Negative news) கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றிருந்தது.
4) மனசாட்சியே இல்லாமல், கொரோனா வைரஸ் என் மீது தொற்றிக் கொண்ட இடத்தை ரச துல்லியமாக நான் அறிந்திருப்பேன் என்பது போல பலரும் அடிக்கடி என்னிடம் கேட்ட கேள்வி (FAQ) , எங்கேயிருந்து நீ கொரோனாவை கூட்டிக்கொண்டு வந்தாய்? என்பதுதான்.
5) நிறைய என் நலம் விரும்பி நண்பர்கள் அல்லும் பகலும் 24 மணி நேரமும் நான் விரைவில் குணமடைய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்திருப்பார்கள் போலிருக்கு. காரணம் சில நண்பர்கள் இரவு பதினோரு மணிக்கு மேலெல்லாம் தொலைபேசியில் "இப்போ எப்படி நலமா இருக்கீங்கதானே"? என்று குசலம் விசாரித்தனர். உண்மையைச் சொல்லப் போனால்," அடப்பாவி நீ மெனக்கிட்டு இப்படி நட்டநடு இராத்திரியில் தொலைபேசியில் அழைத்து என் தூக்கத்தைக் கெடுப்பதற்கு முந்தைய நிமிடம் வரைக்கும் நல்லாத்தான் இருந்தேன்டா" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
6) இன்னொரு நண்பனோ இரண்டாம் தவணை தடுப்பூசியை நாற்பது நாட்களுக்குள் எடுத்துக் கொள்ளாதே என்று இலவச அறிவுரை சொன்னான். என்னவோ தடுப்பூசி மையத்தில் நம்மிடம் விருப்பம் கேட்டு ஊசி போடுகிற மாதிரி நினைச்சிட்டு, "நீ எந்த தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டாய்" என்று கேட்டுவிட்டு, "ஐயய்யோ நீ இதுக்குப் பதில் அந்தத் தடுப்பூசியை போட்டுக் கொண்டிருக்கலாம்" என்று வருத்தப்பட்டார்.
8) அதிலேயே சில பெரிய கைகள், "நீ ஒண்ணியும் கவலைப்படாதே மச்சி. உனக்கு வேண்டுமென்றால் எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லு மருத்துவமனையில் படுக்கையோ இல்லாட்டி வெண்டிலேட்டரோ எதுனாலும் ஏற்பாடு பண்ணிடலாம் என்றனர். கடவுளுக்கு நன்றி. நல்லவேளையாக யாரும் மின் மயானத்தில் பதிவு பண்ணி வைக்கிறதாச் சொல்லவில்லை.
8) மனைவியோட சொந்தக்காரர் ஒருவர் ஒருநாள் நலம் விசாரிக்க அழைத்தவர் கிட்டத்தட்ட ஒருமணி நேரமா அப்படி விஸ்தாரமா விசாரித்தார். விசாரணையில் அவரது குடும்பத்திலும் நண்பர்கள் வட்டத்திலும் நிகழ்ந்த நான்கு கொரோனா மரணங்களையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பதினோரு நபர்கள் குறித்தும் விலாவாரியாகப் பேசியதில் அதற்குப் பின் அடுத்த மூன்று நாட்களுக்கு மனைவிக்கும் குழந்தைகளுக்கும் உறக்கம் தொலைந்து போனதுதான் கண்ட பலன்.
9) ஒரு வெளியூரில் வசிக்கும் நண்பர் கோவிட் -19 நோய்க்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்துப் பட்டியலுடன் வைட்டமின் ஏ, துத்தநாகம் உள்ளிட்டவற்றையும் உட்கொள்ள வம்படியாகச் சிபாரிசு செய்தார். அவற்றை எடுத்துக் கொள்ள வற்புறுத்துவது மட்டுமின்றி தினமும் ஒருமுறை தொலைபேசி வாயிலாக நான் எடுத்துக் கொள்கிறேனா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேறு செய்வார்.
10) மற்றொருவர், எனக்கு ரெம்டெசிவர் மருந்தைத் தன்னால் ஏற்பாடு செய்து தர முடியும் ஆனால் புறநகர் பகுதியில் உள்ள காந்தி சிலை அருகில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதித்தார். எனக்குத் தெரிந்து பல தசாப்தங்களாகத் தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்படும் இந்த மாதிரி நிழலான சமாச்சாரங்களுக்கெல்லாம் காந்தி சிலைதான் சாட்சியாக இருக்கும். "இதுக்கெல்லாம் காரணம் தேவை அதிகமாக இருப்பதால் மருந்துக்குத் தட்டுப்பாடுப்பா. நான்தான் உனக்கு எளிதாக வாங்கித் தருகிறேன் என்கிறேன் நீ ஏன் வேண்டாம் என்று சொல்கிறாய்" என்று அடிக்கடி கேட்டுத் துளைத்தெடுத்து விட்டார். ரெம்டெசிவர் மருந்தை என் மருத்துவர் பரிந்துரைக்கவே இல்லை.
11) யூ ட்யூப் சேனல் நடத்தும் ஒரு நண்பர் தினமும் அவரது "கொரோனா நோய்த் தடுப்பு, மேலாண்மை மற்றும் குணமாக்கம்" என்ற தொடரில் காணொலிகளைத் தவறாமல் அனுப்புவார். இரண்டு மூன்று நாட்களாக அவரிடமிருந்து காணொலி எதுவும் வராததால் நான் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் , பாவம் அவருக்குக் கொரோனாவாம். கோவிட் வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறதாகத் தகவல் கிடைத்தது.
12) இதுவரை கோவிட் நோய்க்கு ஏகப்பட்ட வீட்டு வைத்திய முறைகள் இருப்பதே எனக்குத் தெரியாது. ஆனால் என் கைபேசி இத்தகைய வைத்தியக். குறிப்புகளால் நிரம்பிக் கிடக்கிறது.
மஞ்சள், எலுமிச்சை, இஞ்சி கொண்டு தயாரிக்கப்படும் வீட்டுத் தயாரிப்பு பானம் உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் போன்ற சில அபூர்வத் தகவல்கள்...
இந்த சிறு குறிப்புகளை எல்லாம் தொகுத்து கோவிட்டிற்குப் பின் ஒரு புத்தகமாக வெளியிட எனக்கொரு உத்தேசமுள்ளது.
மார்ச் கடைசி வாரத்தில் இரண்டு முறை நான் கோவிட் 19 சோதனை செய்து கொண்டபோதும் எதிர்மறை என்று முடிவு கிடைத்தது. இதை நேர்மையாக எல்லா நண்பர்களுக்கும் உடனடியாகத் தெரிவித்து விட்டேன். கடந்த இரண்டு மாதங்களாக அவர்களில் யாராவது என் வீட்டிற்கு வந்து வாழ்த்துத் சொல்வார்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மறந்தே போனேன். இது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் யுகமல்லவா. அப்புறம் யாரு நேரில் வரப் போறாங்க.
Comments
Post a Comment