தொண்டன்
சார்... ஃபோன் வந்தது. அங்கேயிருந்து பெரியவரோட பிஏ பேசினாரு.
பெரியவருக்கு காய்ச்சலாக இருக்கிறதாம். கொரோனார டெஸ்ட் எடுத்திருக்கிறார்களாம். ஒருவேளை ரிசல்ட் பாஸிட்டிவ் என்றால் இங்கே அட்மிஷன் போடணுமாம். 'அன்பான' வேண்டுகோளாம். உங்களுக்குத் தகவல் சொல்லச் சொன்னாங்க.
சரிய்யா. கொடுத்துத் தொலைச்சிடலாம். அவங்களைப் பகைச்சிக்கிட்டு வேற என்ன நம்மால செய்ய முடியும்? ஆமா கட்சிக்கார விஐபி எத்தினி பேரு இப்ப நம்ம கிட்ட டிரீட்மெண்டில் இருக்காங்க?
அதுவா சார், இருபது முப்பது பேரு இருப்பாங்க. அதில் ஒரு நாலைஞ்சு கேசு இழுபறியில இருக்கு.
ஓ. ஆக்ஸிஜன் கையிருப்பு பத்துமா? இன்னும் எத்தினி நாளுக்கு வரும்?
அதுதான் சார் பிராப்ளம். கையிருப்பு நாலு நாளுக்குத் தாங்கும்.
இது தெரிஞ்சும் ஏன்யா முப்பது அரசியல் விஐபி களை அட்மிஷன் போட்டீங்க. கொஞ்சம் கவனமாயிருந்து எதுனா வேற காரணம் சொல்லி வேற இடத்துக்குத் தள்ளி விட்டிருக்கலாமே. என்னவோ போங்கய்யா.
இப்போ பெரியவரை வேற சேர்த்துட்டா இங்க ஒரே தேர்க் கூட்டம் திருவிழாக் கூட்டமாயிடும்.
எப்படி சமாளிக்கத் போற?
அதுதான் சார் உங்களைக் கலந்துகிட்டு...... அப்புறமா பெரியவர் பிஏ கிட்ட கன்பார்ம் பண்ணணும். மே 2 கவுண்டிங் வேற இருக்கு முடிவுகள் வந்து பெரியவர் ஜெயிச்சி இங்க இருந்தா இன்னும் சிக்கலாகும்.
இப்பத்தைக்கு விஐபி டீலக்ஸ் ரூம் எல்லாம் ஃபுல்லா இருக்கு.
சரி... சரி... பெரியவருடைய பையன் நம்பருக்குப் ஃபோனைப் போட்டுக் குடு. நான் பேசறேன்.
அதுக்கிடையில பெரியவர் கட்சி ஆளு விஐபி ரூம்மில இருக்கிறவங்க லிஸ்ட எனக்கு அனுப்பு.
அண்ணே வணக்கம். பெரியவருக்கு உடம்பு சரியில்லை. நம்மகிட்ட அட்மிஷன் போடணும் அப்படின்னு பிஏ சொன்னாரு. இங்கபாருங்க நம்மட்டையும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருக்கு......
அது கழுதைய விடுங்க சார், பெரியவர் வரதாயிருந்தா நான் சென்ட்ரலில பேசி ஸ்பெஷல் ப்ரொக்யயூர்மெண்ட்டுக்கு ஆர்டர் வாங்கிடலாம். ஆனா...
ஆனா என்ன ஆனா? இழுக்கறே....
அது ஒண்ணும் இல்லை. விஐபி சூட் எல்லாம் ஃபுல். உங்க கட்சி ஆளுங்களே பத்து ரூம்மில இருக்காங்க. நம்ம கிட்ட லிஸ்ட் இருக்கு. படிக்கவா?
உம். உம் படிங்க.
ராஜி, செல்வம், தீனா, மதி, அழகேசன், உமாபதி, ரமாதேவி, பாண்டியன், காதர் பாட்சா, ஸ்டீபன்.
இதில நாலு பேரு நிலைமை இழுபறியாக இருக்கு. நீங்க என்ன செய்யணும்னு சொன்னீங்கன்னா, சொல்லறபடி செஞ்சிடறேன். உடனே அட்மிஷன் போட்டுறலாம்.
"..........................................................". சரியா?
சரிண்ணே.அப்படியே செஞ்சிடலாம். சாயங்காலம் ஆறு மணிக்கு அட்மிஷன் போட்றலாம்.
பிரஸ் ஆட்களுக்கும் பந்தோபஸ்துக்கு போலீஸுக்கும் தகவல் அனுப்பிடறேன்.
நாலு மணிக்கு யுரேனஸ் செய்தியில் அதிர்ச்சித் தகவல் பகுதியில செய்தி வந்தா நல்லாயிருக்கும். நீங்க ஆறு மணிக்கு வரும் போது சரியா இருக்கும்.
சரி. ஆக வேண்டிய வேலையைப் பாருங்க.
அண்ணே ஆட்சிக்கு வந்ததும் படப்பைல உள்ள அந்த பிரச்சினைய கொஞ்சம் கிளியர் பண்ணி விட்டா சந்தோஷமா இருக்கும்.
சரியா. பண்ணிடலாம்யா. ரிசல்ட் வந்த பின்னாடி நினைவுபடுத்து. சரி இப்ப ஃபோனை வைச்சிடறேன்.
சரிண்ணே.
ஏய் யாரது? அந்த விஐபி ரூம் டியூட்டி டாக்டர் யாரு? வரச் சொல்லு.
நாலு மணிக்கு யுரேனஸ் தொலைக்காட்சியில் ******கட்சியின் மாவட்டச் செயலாளர் திரு.மதி அவர்கள் ######மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திடீர் மரணம்.****** கட்சித் தலைவரின் மகன் மருத்துவமனைக்கு நேரில் சென்று மறைந்த மாவட்டச் செயலாளர் உடலுக்கு மலரஞ்சலி செலுத்துவார் என்று கட்சியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது..
மாலை ஆறு மணிக்கு யுரேனஸ் தொலைக்காட்சியில்****** கட்சியின் மூத்த தலைவருக்கு தொற்று உறுதி. ###### மருத்துவமனையில் திடீர் அனுமதி என்று செய்தி ஓடிக் கொண்டிருந்தது.
Comments
Post a Comment