இன்சுலின் பேனா ஊசி


பொதுவாகவே நம்மில் பலருக்கு ஊசி என்றாலே பயம்தான். பள்ளிக்கூடத்தில் காலரா தடுப்பூசி போட்டுக் கொள்ளப் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளும் மாணவர்கள் பலர் உண்டு. இதற்கு அடிப்படையான காரணம் ஊசி போட்டுக் கொள்ளும் போது வலிக்கும் என்ற எண்ணம்தான். பலர் மருத்துவர் அல்லது சுகாதார ஊழியர்  ஊசி போட்டாலே அதைத் தவிர்க்க நினைப்பார்கள். அதிலும் தனக்குத்தானே ஊசி போட்டுக் கொள்வதென்பது இன்னுமே கடினமானது.

 

ஆனால் பிறவியிலேயே இன்சுலின் குறைபாடு கொண்ட குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் நாள்தோறும் தவறாமல்  ஊசி மூலம் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள். இவர்களைத் தவிர இதய அறுவைச் சிகிச்சை போன்ற பெரிய அறுவைச் சிகிச்சை (major surgery) செய்து கொண்டவர்களின் காயங்கள் விரைவாக ஆறும் பொருட்டுச் சில காலம் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தும் செயலைப் பயிற்சி பெற்ற செவிலியர்களோ அல்லது மருத்துவர்களோ மட்டுமே மேற்கொள்கிறார்கள். ஆனால் நாள்தோறும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டிய நீரிழிவு நோயாளிகள் அதற்காக  ஒவ்வொரு முறையும் அதன் பொருட்டு மருத்துவமனைக்குச் செல்வதோ அல்லது பயிற்சி பெற்ற செவிலியரையோ அல்லது மருத்துவரையோ நாடிச் செல்வது இயலாத ஒன்று.  


 

மேலும் ஊசி மருந்து தனியாக ஒரு சிறிய கண்ணாடிச் சீசாவில் இருக்கும். அதனைத் தேவையான அளவு பீச்சுக் குழலில் (Syringe) காற்றுக் குமிழ்கள் இல்லாமல் கவனத்துடன் எடுத்துக் கொண்டு தனக்குத்தானே ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். இதற்கும் முறையான பயிற்சி தேவைப்படும். இத்தகைய ஊசிகள் அளவில் சற்று நீளமானவையாகவும் தடிமனாகவும் இருக்கும். இதனால் சரியான முறையில் செலுத்தப்படாவிட்டால் மருந்து தோலின் அடியில் உள்ள கொழுப்புப்படலத்தைத் தாண்டி திசுப்பகுதியில் தவறாகச் செல்லவும் வாய்ப்புள்ளது. நோயாளிகளின் இத்தகைய பிரச்சினைகளை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட இன்சுலின் பேனாக்கள் உண்மையில் மிகப் பெரிய வரப்பிரசாதம்.

 

இன்சுலின் பேனா ஊசி ஒருவர் மட்டுமே பயன்படுத்துவதற்கு உரியது. ஒரு பேனாவில் உள்ள இன்சுலினைப் பலருக்கும் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.


    




இந்த நிலையில் ஊசி உள் மூடியால் மூடப்பட்டிருக்கும்ஊசி போடும் முன்னர் எக்காரணம் கொண்டும் ஊசி முனையைக் கையால் தொடக் கூடாது. இந்தத் தாள் முத்திரையை அகற்றிய பின்னர் ஊசியின் வெளி மூடியின் உட்புறமுள்ள வெள்ளையாகத் தெரியும் ஊசிப் பீடத்தை பேனாவின் மேல்புறம் உள்ள மரையில் திருகிச் சரியாக இணைக்க வேண்டும்இதன் பின்னர் ஊசியின் வெளி மூடியைக் கையால் இழுத்தால் அதுமட்டும் தனியாக வந்து விடும். 






பேனா வடிவ ஊசியில் உள்ள பீச்சும் குழலில் (syringe) இன்சுலின் 300 அலகுகள் (Units) நிரப்பப்பட்டிருக்கும்.  1 மிலி க்கு (ml) 100 அலகு (Unit) என்ற கணக்கில்    3 மிலி × 100 அலகுகள் என்று கணக்கில் மொத்தம் 300 அலகுகள் (units) இன்சுலின் நிரப்பப்பட்டிருக்கும்.


நாம் பள்ளியில் இயற்பியல் ஆய்வகத்தில் திருகு அளவி (screw gauge) என்னும் கருவியைப் பயன்படுத்தி இருப்போம். அது போன்ற ஒரு அமைப்பு பீச்சுக்குழாயின் அடிப்பகுதியில் இருக்கும். அந்தத் திருகு அமைப்புக்கு அருகில் ஒரு சதுர வடிவத் திறப்பு (window) குறிமுள்ளுடன் இருக்கும். திருகு திருப்பப்படும் போது திறப்பில் எண்கள் குறிமுள்ளுக்கு (Pointer) எதிரில்  நகரும். இதன்மூலம் தேவையான அளவு மருந்தை உடலில் செலுத்த எடுத்துக் கொள்ள இயலும். 





பீச்சுக்குழலில் உள்ள இன்சுலினை நாம் கண்ணால் காண்பதற்கு வசதியாக ஒளி ஊடுருவும் பிளாஸ்டிக் பொருளால்  (Transparent plastic material) வடிவமைக்கப்பட்டு அதன் பக்கவாட்டில் மருந்தின் அளவைத் தெரிந்து கொள்ள மில்லி லிட்டரில் அளவீடு செய்யப்பட்டுள்ளது.






மருந்தை உந்தித் தள்ள ஒரு உந்துதண்டு(piston) இருக்கும். இந்த உந்துதண்டை இயக்குவதற்காகப் பொத்தான் (button) ஒன்று திருகின் முனையில் இருக்கும். படத்தில் திருகு ஆழ்ந்த நீல நிறத்திலும் பொத்தான் வெளிர் நீல நிறத்திலும் இருப்பதைக் காணலாம்.உடலில் இன்சுலின் ஊசியை தொப்புளைச் (Navel) சுற்றிப் போடுவதையே மருத்துவர்கள் பெரிதும் பரிந்துரைக்கிறார்கள். காரணம் இவ்வாறு செலுத்தப்படும் இன்சுலினை உடல் மிக விரைவில் உட்கவர்ந்து விடும். மேற்கைகளின் வெளிப்புறம் ஊசி மூலம் செலுத்தப்படும் இன்சுலினை உடல் நடுத்தரமான வேகத்திலும் தொடைகள் (Thighs) மற்றும் பிட்டத்தில்(Buttocks) செலுத்தப்படும் இன்சுலினை உடல் மிகவும் மெதுவாகவும் உட்கவரும்.









இன்சுலின் ஊசியை உடலில் செலுத்தும் முன் கைகளை சோப்பால் கழுவிச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். உடலில் ஊசி மருந்தைச் செலுத்தும் இடத்தை பீட்டாடைன் (Betadine) அல்லது ஆல்கஹால் (Alcohol) தோய்த்த பஞ்சு கொண்டு துடைத்துச் சுத்தம் செய்தல் மிக அவசியம். இன்சுலின் ஊசியை உடலில் செலுத்தும் போது தோல் அடுக்கைத் தாண்டி கொழுப்பு அடுக்கில் செலுத்த வேண்டும்.





இதற்காக ஊசி மருந்தைச் செலுத்தும் பகுதியை மிக லேசாக இரு விரல்களால் அழுத்தியபடி 45 பாகை (degree) கோணத்தில் ஊசியைச் செலுத்த வேண்டும். பொத்தானை அழுத்திய பின் சுமார் ஐந்து நொடிகள் வரை ஊசியை வெளியே எடுக்கக் கூடாது. 

 

மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் இன்சுலின் பேனா ஊசி கெட்டியான அட்டைப் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுக் கிடைக்கும். இன்சுலின் பேனா ஊசியை 2 முதல் 8 செலிசியஸ் வெப்ப நிலையில் வைத்திருப்பது அவசியம். வெப்பநிலை எந்த நேரத்திலும் 30 செலிசியஸ் வெப்பநிலைக்குக் கீழ்தான் இருக்க வேண்டும். இதற்காக ஊசியை குளிர்பதனி (Refrigerator) வைக்கலாம். ஆனால் ஊசி மருந்து உறைந்து  (freeze) விடக் கூடாது. 

 

ஊசி மருந்து குழந்தைகளின் கைகளில் கிடைக்காமல் வைக்கப்பட வேண்டும். ஊசியின் முதல் பயன்பாட்டுக்குப் பின்னர் அதிகபட்சமாக நான்கு வாரகாலத்துக்குள் மருந்தைப் பயன்படுத்தி விட வேண்டும். மருந்து உருளையில் தெரியும் இன்சுலின் நிறமற்றுத் தெளிவாக இருத்தல் அவசியம். மருந்து கலங்கலாக இருந்தால் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு பயன்பாட்டுக்குப் பின்னரும் இன்சுலின் பேனா ஊசியை ஒளிபுகாமல் இறுக்கமாக மூடி வைத்தல் மிக அவசியம். 

 

இன்சுலின் பேனா ஊசி மிக மெல்லியது என்பதால் பெரும்பாலும் வலியோ எரிச்சலோ ஏற்படாது. இறுதியாக இன்சுலின் பேனா ஊசியை மருத்துவரின் பேரில் பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அடிக்கடி இரத்தச் சர்க்கரை அளவைச் சோதனை பரிசோதனை மேற்கொண்டு மருத்துவரின் ஆலோசனையின்படி இன்சுலின் எடுத்துக் கொள்ளும் அளவை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் மருத்துவரின் ஆலோசனையோ பரிந்துரையோ இன்றிச் சுயமாக மருத்துவம் செய்து கொள்ளுதல் நிச்சயமாக உயிராபத்தை எற்படுத்தும்.

முக்கியமாக இந்த ஊசி தனிநபர் பயன்பாட்டுக்கு மட்டுமே  உரியது. ஆகவே ஒரே ஊசியை பலருக்குப் பயன்படுத்தக் கூடாது. 

கட்டுரையின் யூ டியூப் ( U - Tube ) link:

https://youtu.be/oMOJ0NhG9iI

இக்கட்டுரை ஹெல்த் கேர் (தமிழ்) மாத இதழில் வெளியாகி உள்ளது.




**********************************************************************************************************





 


Comments

Post a Comment

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)