இதயம் திறந்த அனுபவங்கள் - பகுதி (4)
அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி மீட்பு அறைக்கு (recovery room) மாற்றப்படுவார். ஒரு அறுவை சிகிச்சைக்கோ அல்லது செயல்முறைக்கோ மயக்க மருந்து (anesthesia) செலுத்தப்பட்டதால் நோயாளி உணர்வற்ற நிலையில் இருப்பார். உணர்விழந்த நிலையிலிருந்து விழித்தெழுவதற்காக, நோயாளி மயக்கநிலைக்குப் பின்னரான பராமரிப்பு பிரிவுக்கு (Post Anesthesia Care Unit - PACU ) மாற்றப்படுவார். சில மருத்துவமனைகளில் இப்பிரிவு இல்லாமலும் இருக்கலாம்.
கண்காணிப்பு உபகரணங்கள் மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற ஊழியர்களைக் கொண்ட இப்பகுதி பெரும்பாலும் மருத்துவமனையின் அறுவைச்சிகிச்சை அரங்கங்களுக்கு (operation theatres) அருகிலேயே அமைந்திருக்கும் .
Picture courtesy: https://www.venturemedical.com/blog/choosing-patient-monitor/
இந்தக் கண்காணிப்புக் கருவியில் இதய மின் வரைவி (ECG) இதயத் துடிப்பு வீதம் (Heart rate), இரத்த அழுத்தம் (NIBP) , மற்றும் தெவிட்டிய ஆக்ஸிஜன் நிலை (SpO2) போன்றவை கண்காணிக்கப் படுகின்றன.
சில மருத்துவமனைகளில், இது பல நோயாளிகள் பகிர்ந்து கொள்ளும் இடமாகவோ (Dormitory) அல்லது ஒரு தனி நபர் பயன்படுத்தும் அறையாகவோ (Single private room) இருக்கலாம்.
நோயாளி மீட்பு அறையில் முக்கால் மணி நேரம் முதல் முதல் இரண்டு மணி நேரம் சிறப்புப் பயிற்சி பெற்ற செவிலியர்களால் தீவிரக் கண்காணிப்புக்கு உடபடுத்தப்படுவார். நோயாளிக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையைப் பொறுத்தும் மயக்க மருந்தின் தாக்கத்திலிருந்து எவ்வளவு விரைவாக மீண்டு விழித்தெழுகிறார் என்பதைப் பொருத்தும் நோயாளி இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமான காலத்திற்குக் கூட மீட்பு அறையில் இருக்க வேண்டியிருக்கலாம்.
செவிலியர்கள் நோயாளியின் முக்கிய அறிகுறிகள் அனைத்தையும் கண்காணித்து அவருக்கு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் உங்களுக்கு உதவுவார்கள். மயக்கநிலைக்குப் பின்னரான பராமரிப்பு பிரிவானது (Post Anesthesia Care Unit - PACU ) நோயாளியின் முக்கிய அறிகுறிகளை உன்னிப்பாகக் கவனித்துத் தேவையான திரவங்களை உட் செலுத்தலும், வலி மேலாண்மையும் (pain management) தொடங்கப்படும் ஒரு முக்கியமான பராமரிப்பு அலகு (care unit) ஆகும். நோயாளி மயக்கநிலை தெளிந்து எழுந்ததும் அவருக்குச் சில உடல் ரீதியான சங்கடங்கள் இருக்கலாம்.
அடுத்து தீவிர சிகிச்சை பிரிவு (ஐ.சி.யூ)க்கு மாற்றப்படும் நோயாளி அங்கு உன்னிப்பாக கண்காணிக்கப்படுவார். நோயாளியுடன் இணைக்கப்பட்ட இயந்திரங்கள் தொடர்ந்து எலக்ட்ரோ கார்டியோகிராம் (E.C.G) தடமறிதல், இரத்த அழுத்தம், பிற அழுத்த அளவீடுகள், சுவாச வீதம் மற்றும் உங்கள் ஆக்ஸிஜன் அளவைக் காண்பிக்கும்.
Picture courtesy: https://healthmanagement.org/products/view/resp-multi-parameter-monitor-nibp-temp-ibp-17-tft-vizor-17-heyer-medical
இதயத் தமனி புறவழி இரத்தக்குழாய் ஒட்டு அறுவைசிகிச்சைக்குக்குப் பின்னர் (CABG) குறைந்தபட்சம் ஒருவாரம் மருத்துவமனையில் தங்க வேண்டும்.
சுவாச இயந்திரம் அதாவது வென்டிலேட்டர் (Ventilator) மூலம் சுவாசிக்க உதவுவதற்கு உங்கள் தொண்டையில் ஒரு குழாய் வைக்கப்பட்டு இருக்கும். நோயாளி போதிய அளவுக்கு நிலையாகத் தானாகவே சுவாசிக்கும் வரையில் சுவாச இயந்திரம் இணைக்கப்பட்டு செயல்பாட்டிலேயே இருக்கும்.
Picture courtesy: https://m.indiamart.com/proddetail/icu-ventilator-siemens-300-16415709891.htmlநான் சுய நினைவை மீண்டும் அடையப் பெற்ற பின்னர் எழுதப்பட்டவை என் சொந்த அனுபவத்தின் அடிப்படையிலானவை.
மயக்க மருந்தின் தாக்கத்திலிருந்து விடுபட்டுத் தொடர்ந்து நோயாளி சுயமாக சுவாசிக்கத் தொடங்கும் போது, அதிக அளவில் சுயமாகச் சுவாசிப்பதை அனுமதிக்கும் வகையில் மருத்துவர் சுவாச இயந்திரத்தின் செயல்பாட்டை மாற்றியமைக்கக்கூடும்.
நோயாளி போதுமான அளவு விழித்திருந்து சுயமாகவும் முழுமையாகவும் சுவாசிக்க தொடங்கி அவரால் இருமவும் (cough) முடிந்தால், மருத்துவர் சுவாசக் குழாயை அகற்றி விடுவார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பொதுவாக அறுவைச் சிகிச்சை நடைபெற்ற நாளிலோ அல்லது மறுநாள் அதிகாலையிலோ சுவாசக் குழாய் (Breathing tube) அகற்றப்படும். அவ்வாறு அகற்றும் போதே மருத்துவர் வயிற்றுக் குழாயையும் அகற்றி விடுவார்.
சுவாசக் குழாயை வெளியே எடுத்த பிறகு நோயாளியின் நுரையீரலில் சளி சேர்ந்து நிமோனியா (Pneumonia) ஏற்படாமல் தவிர்ப்பதற்கு ஆழ்ந்த மூச்செடுத்து இருமி சளியை வாய் வழியே வெளியேற்ற வேண்டியது மிகவும் அவசியம்.இதன் பொருட்டு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நோயாளி ஆழ்ந்த மூச்சு எடுத்து இரும வேண்டும். இதனைச் செவிலியர் உதவியுடன் செய்தாலுமே மூச்சுக்குழாயில் ஏற்பட்டுள்ள புண்கள் காரணமாக இது மிகச் சிரமமானதாக இருக்கும். ஆனால் மார்போடு ஒரு தலையணையை இறுக்கமாக அணைத்துக்கொண்டு இருமினால், இருமும் போது ஏற்படும் வலியையும் சிரமத்தையும் தணிக்கலாம். எனக்கு மருத்துவமனையில் மார்புடன் இறுக்கமாகப் பிணைத்துக் கொள்ளும் (chest brace) வெல்க்ரோ (velcro) அமைப்புடன் கூடிய சிறியதொரு சதுர வடிவிலான மார்பெலும்புத் திண்டு (sternum pad) தரப்பட்டது.
இதய அறுவைச்சிகிச்சைக் கீறல் காயங்கள் (CABG incision wounds) பல நாட்களுக்கு மென்மையாகவோ (tender) அல்லது புண்பட்டோ (sore) இருக்கலாம். இதனால் ஏற்படும் வலிக்கு மருத்துவர் பரிந்துரைத்த வலி நிவாரணியை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆஸ்பிரின் (Asprin) அல்லது வேறு சில வலிநிவாரணிகள் இரத்தப்போக்கு ஏற்படும் (bleeding) வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்.
மருத்துவர் இரத்த அழுத்தம் மற்றும் இதயத்திற்கு உதவவும், இரத்தப்போக்கு தொடர்பான எந்தவொரு சிக்கலையும் கட்டுப்படுத்தவும் IV குழாய் (IV line) மூலம் மருந்துகளை வழங்கலாம். நோயாளியின் உடல்நிலை சீராகும்போது, படிப்படியாக மருந்துகளின் அளவைக் குறைந்துப் பின்னர் நிறுத்துவார். மருத்துவர் சுவாச மற்றும் வயிற்றுக் குழாய்களை அகற்றிய பின்னர் நோயாளி நிலையாக (stable) இருந்தால், அவர் திரவ உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்கலாம். நோயாளியால் திட உணவுகளை உண்ண இயலுமானால் படிப்படியாகத் திட உணவுகளை அதிகரிக்கலாம்.
நோயாளி அடுத்த கட்டத்திற்குச் செல்லத் தயாராக இருப்பதாக மருத்துவர் தீர்மானிக்கும்போது, தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து (ICU) அறுவை சிகிச்சைக்கு பிந்தைய நர்சிங் பிரிவுக்கு (Postoperative Nursing Care Unit - PNCU) மாற்றப்படுவார். நோயாளியின் மீட்பு (Recovery) அங்கு தொடரப்படும். காலை மாலை இரு வேளைகளிலும் படுக்கையில் இருந்து எழ வைத்துக் குறைந்தது இரண்டு மூன்று மணி நேரம் நாற்காலியில் அமர வைக்கப்படுவார். ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் பத்து முறை என்ற அளவில் மூன்று பந்து மூச்சுப் பயிற்சி ( tri ball breathing exercise) செய்வது நல்லது. ஆனால் உணவு எடுத்துக் கொண்ட இரண்டு நேரம் பயிற்சி செய்வது கூடாது. படிப்படியாக நோயாளியின் செயல்பாடுகள் அதிகரிக்கப்படலாம். இதற்கிடையில் சிறுநீர் வடிகுழாய் (urine catheter) நீக்கப்படும். அறுவைச் சிகிச்சையின் காரணமாக ஏற்பட்ட இரத்தக் கசிவு நின்று விட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் மார்பில் வைக்கப்பட்ட குழாயையும் மருத்துவர் எடுத்து விடுவார். நோயாளி திடமான உணவுகளை எடுத்துக் கொள்ள முடிந்தால் அவற்றை உண்ணலாம். இந்தப்பிரிவில் இரண்டு தினங்கள் இருந்த பின்னர் நோயாளி நிலையாக (stable) இருக்கும் என்று பட்சத்தில் மூன்றாம் நாளன்று இடது புறங்கையில் இரத்த நாளத்துடன் இணைக்கப்பட்ட ஐ.வி குழாய் தவிர மற்றவை எல்லாம் எடுக்கப்பட்டு விடும். நோயாளிக்கு மலமிளக்கி(laxative) தரப்பட்டு மலம் வெளியேற வழி செய்யப்படும். இடது கையில் உள்ள ஐ.வி குழாய் (IV cannula) அவசரத் தேவைக்காக நோயாளி மருத்துவமனையை விட்டு வெளியேறும் வரையில் விட்டு வைக்கப்படும். எல்லா கண்காணிப்புக் கருவிகளின் இணைப்பும் நீக்கப்பட்டு நோயாளி அறைத் தொகுதிக்கு (ward) அனுப்பப்படுவார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் வரையில் நோயாளிக்கு உதவியாக இருந்த செவிலியர் அவரது திரவ உணவு மற்றும் நீர் கொடுக்கப்பட்ட விபரங்களையும் (Input) மற்றும் வெளியேறும் சிறுநீரின் அளவையும் குறித்துக் கொண்டு வருவார். அறைத் தொகுப்புக்கு வந்த பின்பு அதற்காகத் தரப்படும் படிவம் அவ்வப்போது நோயாளியின் உதவியாளரால் தவறாமல் நிரப்பப்பட வேண்டும். சிகிச்சையின் போது செலுத்தப்பட்ட திரவங்கள் காரணமாக உடலின் நிறை அறுவைச் சிகிச்சைக்கு முன் இருந்ததை விட அதிகமாக இருக்கும். திரவங்கள் வெளியேற வெளியேற உடல் நிறை குறையத் துவங்கும். உடல் நிறை தினசரி கண்காணிக்கப்படும்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் போது இயன் மருத்துவர் (Physiotherapist) மார்புச் சளியை வெளியேற்றும் பயிற்சிகளைத் துவக்கியிருப்பார். அறைத் தொகுதிக்கு வந்த பின் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நோயாளியை நடக்க வைத்துச் சில உடற்பயிற்சிகளையும் செய்ய வைப்பார். அறைத் தொகுப்புக்கு வந்த இரண்டாம் நாள் இயன்முறை மருத்துவர் நோயாளிக்கு மாடிப் படிகள் ஏறப் பயிற்சி தருவார். இருப்பினும் ஆறு வார காலத்திற்கு அவசியம் ஏற்பட்டான்றி மாடிப்படிகளில் ஏறுவதை நோயாளி தவிர்க்கலாம்.
அறைத் தொகுப்புக்கு (ward) வந்ததும் மறுநாள் மார்பு மற்றும் கால்களில் இடப்பட்ட தையல்கள் மருத்துவரால் ஆய்வு செய்யப்பட்டு ஆறியிருப்பின் பிரிக்கப்படும். இல்லாவிட்டால் நோயாளி மருத்துவ மனையை விட்டு வெளியேறும் தினத்தில் (day of discharge) தையல் பிரிக்கப்படும். அதன் பிறகு குளிக்கும் முறையை மருத்துவர் நோயாளிக்கு விளக்குவார். அந்த முறையில் தையல் இடப்பட்ட பகுதியில் நீர் சேராமல் உடனடியாக மிருதுவான துவாலையால் ஒற்றி எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தையல் இடப்பட்டிருந்த இடங்களை அழுத்தித் துடைக்கக் கூடாது. தையல் பிரிக்கப்பட்ட பகுதிகளில் நகத்தால் காயம் ஏற்படாவண்ணம் மெல்லிய ரப்பர் கையுறைகள் (gloves) அணிந்து தினமும் சோப்புத் தேய்த்துக் குளிக்க வேண்டும். தையல் பிரிக்கப்பட்ட பின்னர் நோயாளி தினமும் குளிக்கலாம். குளித்து முடித்ததும் மறக்காமல் பீட்டாடைன் (Betadine solution) கரைசலை தையல் பிரிக்கப்பட்ட இடங்களில் மருத்துவர் நிறுத்தச் சொல்லும் வரையில் தொடர்ந்து பூசி வர வேண்டும்.
நோயாளியின் இரத்தச் சர்க்கரை அளவு தினமும் சோதனை செய்யப்படும். நோயாளிக்கு நீரிழிவு நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நோயாளியின் இரத்தச் சர்க்கரை அளவைச் சார்ந்து அறுவைச் சிகிச்சையின் போது ஏற்பட்ட காயங்கள் விரைவாக ஆற வேண்டி அவருக்கு இன்சுலின் ஊசி (Insulin injection) குறிப்பிட்ட காலத்திற்குச் செலுத்தப்படலாம். நோயாளிக்கு நீரிழிவு நோய் இருந்தால் அதனைக் கட்டுக்குள் வைக்க நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளும் (anti - diabetes drugs) தரப்படலாம்.
அறுவைச் சிகிச்சை முடிந்த நாளுக்கு மறுதினம்,
அதாவது இரண்டாம் நாள் முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இதயத் துடிப்பலை வரைவிப்படம் (ECG) நோயாளிக்கு எடுக்கப்படும். தவிரவும் நோயாளியின் இரத்த மாதிரிகள் தினமும் அதிகாலையில் எடுக்கப்பட்டுப் பரிசோதிக்கப்படும். என்னுடைய நேர்வில் (my case) இருமுறை முழுமையான இரத்த அணுக்கள் எண்ணிக்கையும் (complete blood count) ஒருமுறை பிற பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்த மறுநாள்
மீண்டும் அதிகாலையில் இரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு
சோடியம்(சீரம்), யூரியா (சீரம்/ பிளாஸ்மா), கிரியாட்டினின் (சீரம்/பிளாஸ்மா), பொட்டாசியம் (சீரம்/பிளாஸ்மா) ஆகியவையும்
முழுமையான இரத்த அணுக்கள் எண்ணிக்கைச் சோதனை (Complete Blood Count - CBC)யும் காணப்பட்டன.
மீண்டும் அறுவைச்சிகிச்சை நடந்து முடிந்த மூன்றாவது நாளில்
முழுமையான இரத்த அணுக்கள் எண்ணிக்கைச் சோதனை (Complete Blood Count - CBC)யும் கூடுதலாக சோடியம்(சீரம்), யூரியா (சீரம்/ பிளாஸ்மா), கிரியாட்டினின் (சீரம்/பிளாஸ்மா), பொட்டாசியம் (சீரம்/பிளாஸ்மா) ஆகியவையும் காணப்பட்டன.
நான்காவது நாளில்
முழுமையான இரத்த அணுக்கள் எண்ணிக்கைச் சோதனை (Complete Blood Count - CBC)யும் கூடுதலாக தொடர்பின்றி எடுக்கப்பட்ட இரத்தச் சர்க்கரை அளவும் (random blood sugar) காணப்பட்டன.
இச் சோதனைகளின் அடுக்கு நிகழ்வு (frequency) மருத்துமனைக்கு மருத்துவமனை நோயாளிக்கு நோயாளி மாறுபடலாம்.
அறுவைச்சிகிச்சைக்குப் பின்பு மேற்கொள்ளப்பட்ட எல்லாப் பரிசோதனை முடிவுகளும் திருப்தி அளிக்கும் பட்சத்தில் நோயாளி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட தினத்திலிருந்து எட்டாவது நாளிலிருந்து பத்தாவது நாளுக்குள் மருத்துவமனையிலிருந்து முறைப்படி வெளியேறி (discharge) வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படலாம்.
தொடரும்..
Comments
Post a Comment