இதயம் திறந்த அனுபவங்கள் - பகுதி (3)


அடுத்தது அறுவைச் சிகிச்சை அறைக்கு (Operation theatre)  வந்த பிறகு என்ன நடக்கும் என்று காணலாம். சிஏபிஜி (CABG) அறுவைச் சிகிச்சையைப் பொறுத்தளவில் நடைமுறைகள் (procedures) பெரும்பாலான  மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும் சிற்சில வேறுபாடுகளும் இருக்கலாம்.

(1) மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் பல அறுவைச் சிகிச்சை நிபுணர்களுடனும் (Surgeons) இணைந்து செயல்பட மருத்துவர்கள் (Doctors), செவிலியர்கள் (Nurses) மற்றும் மருத்துவக் கருவிகளைக் கையாளும் தொழில் நுட்பப் பணியாளர்கள் (Technical staff) அடங்கிய அனுபவம் வாய்ந்த பணியாளர் குழுக்கள் (Operation theatre crews) அறுவைச் சிகிச்சைக்கூடப் பணிகளுக்காகத் தனியே  இருக்கும். 

(2) நோயாளியை அவரது அறைப்பிரிவில் பணியில் இருக்கும் செவிலியர் (ward duty nurse) அறுவைச் சிகிச்சைக் கூடத்திற்கு இட்டுச் செல்லும் போது கூடவே நோயாளி குறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய மருத்துவக் கோப்புடன் (file) வருவார். அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் (operation theatre) பணியில் உள்ள செவிலியரிடம் நோயாளியை அவரது மருத்துவக் கோப்புடன் முறையாக ஒப்படைத்து விட்டு மீண்டும் தனது பணி அறைப்பிரிவுக்குத் (duty ward) திரும்பி விடுவார்.

(3) குறிப்பிட்ட அறுவைச் சிகிச்சை நிபுணருடன் அன்றைய தினம் பணிபுரியப் போகும் பணிக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் நோயாளியிடம் தனித்தனியாக வந்து நோயாளியின் பெயர் (Name of the patient), வயது(age), இதயமருத்துவரின் பெயர் (Name of the cardiologist) , அறுவைச் சிகிச்சை அளிக்கப் போகும் நிபுணரின் பெயர் (Name of the surgeon) மற்றும் என்ன அறுவைச் சிகிச்சைக்காக (Name of the Surgery) அனுமதிக்கப்பட்டுள்ளார் போன்ற விவரங்களைக் கேட்டறிந்து அதனை அவரது இடது கையில் கட்டப்பட்டுள்ள மணிக்கட்டுப் பட்டையுடன் (wristband) அவற்றை ஒப்பிட்டும் உறுதி செய்து கொள்வார்கள். இதனால் நோயாளி மாறிப் போவது மாதிரியான குழப்பங்கள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படும். 

(4) இவ்வாறு குழுவினர்கள் அனைவருமே உறுதி செய்து கொண்ட பின்னரே நோயாளிக்கு அறுவைச் சிகிச்சைக்கு செய்யப்படுவதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப்பணிகளுக்கான எந்த ஒரு நடவடிக்கையையும் துவங்குவார்கள்.

 அடுத்தது தூக்குப் படுக்கையிலிருந்து (stretcher) மெதுவாக அறுவைச் சிகிச்சை மேசைக்கு (operation table) மாற்றம் செய்யப்பட்டு  நோயாளி மல்லாந்து (lying on back) இருக்குமாறு கிடத்தப்படுவார்.

உடலின் புறப் பகுதியில் (peripheral) உள்ள சிரை இரத்தக் குழாய் (vein) வழியாகச் சிறியதொரு பிளாஸ்டிக் குழாயைச் (cannula) செருகுவது ஆங்கிலத்தில் ஐவி லைன் (IV line) அல்லது இன்ட்ரெவனஸ் கேனூலேஷன் (Intravenous cannulation)  என்றழைக்கப்படுகிறது.  


Image source: pixabay https://www.nursesclass.com/2020/06/20-iv-therapy-tips-and-tricks-improve-cannulation-skills.html





அடுத்தடுத்து சிரை வழியாகத் திரவங்கள், மருந்து மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை உடலுக்குள் செலுத்த இம்முறை பயன்படுத்தப்படும். சில சமயங்களில் இந்தக் குழாய் (cannula) வழியே இரத்த மாதிரிகளும் எடுக்கப்படும். இதனைத் தவிர இரத்த அழுத்தம் மற்றும் இதயச் செயல்பாடுகளைக் கண்காணிக்க மணிக்கட்டிலும் கழுத்திலும் சிலாகைகள் (Catheters)  இணைக்கப்படும்.  

என்னுடைய சொந்த அனுபவத்தில் இருகைகளிலும் ஐவி குழாய்களை  (IV line) இணைக்கும் வரை சிறு வலியை உணர்ந்தேன். அதன் பின்பு என்ன நடந்தது என்பதை உணரவில்லை. ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்று விட்டேன். ஆகவே இதன் பின்னர் என்னென்ன செயல்பாடுகள் நிகழ்ந்தன என்பதை என் உறவினரான மருத்துவரிடம் துருவித்துருவிக் கேட்டு அறிந்து கொண்டேன்.

அறுவைச்சிகிச்சை முழுவதும் மயக்க மருந்து நிபுணர்( anesthetist) இதயத்துடிப்பு (heart beat), இரத்த அழுத்தம் (Blood pressure) , சுவாசம் (Breathing) மற்றும் இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பார். நோயாளி ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்றதும் தொண்டை வழியே ஒரு சுவாசக் குழாய் செலுத்தப்படும். இக்குழாய் செயற்கைச் சுவாசக் கருவியுடன் (Ventilator) இணைக்கப்படும்‌. அறுவைச்சிகிச்சை நடைபெறும் போது நுரையீரலின் சுவாசிக்கும் செயல்பாட்டை இக் கருவி மேற் கொள்ளும். அடுத்து ஒரு சிலாகை (Catheter) சிறுநீர்ப்புறவழி வழியாகச் சிறுநீர்ப்பையில் செலுத்தப்பட்டு சிறுநீரை வெளியேற்ற வழி செய்யப்படும். அனைத்துக் குழாய்களும் கண்காணிப்புக் கருவிகளும் (monitors) உடலுடன் சரியாக இணைக்கப்பட்டு அவற்றின் பழுதற்ற செயல்பாடு உறுதி செய்யப்பட்ட பின்னரே அறுவைச் சிகிச்சை தொடங்கப்படும். 

அறுவைச் சிகிச்சை செய்யவிருக்கும்  மார்பகப்பகுதியின் மேல் தோலின் மீது கிருமி நாசினித் திரவம் தேய்க்கப்பட்டுச் சுத்தம் செய்யப்படுகிறது. அடுத்ததாக அறுவைச் சிகிச்சை நிபுணர் கால் அல்லது கையில் இருந்து நீண்ட கீறல் அல்லது கீறல்களை (incisions) ஏற்படுத்துவதன் மூலம் புறவழி ஒட்டுப் (bypass grafting)  போடப் பயன்படுத்தப் போகும் சிரை இரத்தக் குழாயை அடைவார். அந்த இரத்தக் குழாய்களை வெட்டி நீக்கிய பின் கீறல்களைத் தையல் போட்டு மூடி விடுவார்.

இதற்குப் பின்பு அறுவைச்சிகிச்சை நிபுணர் மார்பின் நடுப்பகுதியில் தொண்டையில் ஆதாமின் ஆப்பிளுக்குச் (Adam's apple) சற்றே கீழிருந்து தொப்புள் (navel) சிறிது மேல் வரையில் அடுத்து நீளவாக்கில் கீறலிடுவார் (Incision).  மார்பெலும்பு (Sternum)  இரண்டு பாதியாக வெட்டப்பட்டு மார்பகத்தின் பகுதிகள் பரப்பி விரிக்கப்படுவதன் மூலம் இதயம் வெளிப்படுத்தப்படும்.

இதயத் தமனி புறவழி ஒட்டு அறுவை சிகிச்சை (Coronary Artery Bypass Graft Surgery) -  அழுத்த விசைக்குக் கருவி இயக்க நிலை முறை (on - pump procedure)

 கரோனரி தமனிகள் மிகச் சிறிய அளவிலானவை. இவற்றின் மீது ஒட்டு இரத்தக் குழாய்களைத் தைக்க வேண்டுமானால் மருத்துவர் இதயத்தின் இயக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்தி விட வேண்டும். இதற்காக இதய-நுரையீரல் புறவழி இயந்திரம் (Heart- Lung bypass machine) மூலம் இரத்தத்தை உடலில் செலுத்தும் வகையில் வெளியிலிருந்து குழாய்கள் இதயத்திற்குள் வைக்கப்படும். 

உடலின் இரத்த ஓட்டம் திசை திருப்பப்பட்டு இதய - நுரையீரல் புறவழி இயந்திரம் வழியாக  நடைபெறத் துவங்கியதும் மருத்துவர் இதயத்தில் ஒரு குளிர்ந்த திரவத்தை ஊசி மூலம் செலுத்தி இதயத்தின் இயக்கத்தை நிறுத்தி விடுவார்.

இதயம் 2 வழிகளில் குளிர்விக்கப்படலாம்:

இதயம் - நுரையீரல் இயந்திரம் வழியாக செல்லும்போது இரத்தம் குளிர்ச்சியடைகிறது.  இந்தக் குளிரூட்டப்பட்ட இரத்தம் உடல் உறுப்புகள் அனைத்தையும் அடையும் போது உடல் வெப்பநிலையைக் குறைக்கிறது.

குளிர்ந்த உப்பு நீர் (saline) இதயத்தின் மீது ஊற்றப்படுகிறது. குளிர்ந்த பிறகு, இதயம் மெதுவாக நின்று நிற்கிறது. ஒரு சிறப்பு பொட்டாசியம் கரைசலை (special potassium solution) இதயத்தில் செலுத்துவதன் மூலம், இதயத்தின் இயக்கத்தை நிறுத்திவிடும் செயலை விரைவுபடுத்தி இதயத்தை முழுவதுமாக நிறுத்தி விட முடியும். இப்போது இதயம் சுமார் 2 முதல் 4 மணி நேரம் வரையில் இதயத்திசுக்கள் சேதமடையாமல் பாதுகாப்பாக இருக்கும். புறவழி அறுவை சிகிச்சையின் போது, ​​மார்பெலும்பு (sternum) பிரிக்கப்பட்டு, இதயம் நிறுத்தப்பட்டு, இதய-நுரையீரல் இயந்திரம் மூலம் இரத்தம் அனுப்பப்படுகிறது. மற்ற வகையான இதய அறுவை சிகிச்சைகளைப் போல் இல்லாமல், பைபாஸ் அறுவை சிகிச்சையின் போது இதயத்தின் அறைகள் திறக்கப்படுவதில்லை.




ஒற்றைப் புறவழி (single bypass), இரட்டைப் புறவழி (double bypass) , மூன்று புறவழி (triple bypass) அல்லது நான்கு புறவழி (quadruple bypass) ஆகிய சொற்கள் அடைத்துக் கொண்ட எத்தனை தமனிகளின் (blocked arteries) இரத்தக் குழாய்கள் புறவழி ஒட்டிட்டு இணைக்கப்பட்டன என்பதைக் குறிக்கின்றன. என்னுடைய நேர்வில் மூன்று தமனிகளின் இரத்தக் குழாய்கள் புறவழி ஒட்டுப் போட்டு இணைக்கப்பட்டன (triple bypass) என்று அறிந்து கொண்டேன். 

கீழே தரப்பட்டுள்ளது என்னுடைய புறவழி ஒட்டு அறுவைச் சிகிச்சையின் மாதிரிப் படம்.


இதயத்தின் இயக்கம் நிறுத்தப்பட்டதும், பெருநாடி அல்லது பெருந்தமனியில் சிறிய திறப்பொன்று ஏற்படுத்தப்படும். காலிருந்தோ அல்லது கையிலிருந்தோ வெட்டி எடுக்கப்பட்ட சிரை இரத்தக் குழாயின் ஒரு பகுதியின் ஒரு முனையை திறப்புக்கு மேலாகவும் மற்றொரு முனையை அடைப்புக்கு கீழாகவும் தைத்து விடுவதன் மூலம் புறவழி ஒட்டு நடைமுறையை (bypass graft Procedure) மருத்துவர் செய்வார். மருத்துவர் மார்புக்குள் உள்ள உள் நெஞ்சகத் தமனியை (internal mammary artery) புறவழி ஒட்டுக்குக்காகப் ( bypass grafting) பயன்படுத்தினால், தமனியின் கீழ் முனை மார்பின் உள்ளே இருந்து வெட்டப்பட்டு அடைப்புக்கு கீழே உள்ள இதயத் தமனி (Coronary Artery) யில் செய்யப்பட்ட ஒரு திறப்பு மீது வைத்துத் தைக்கப்படும். பெண்களுக்கு இந்த உள் நெஞ்சகத் (IMA) தமனியை புறவழி ஒட்டாகப்  பயன்படுத்துவது குறித்து இருவேறு கருத்துகள் உள்ளன. 

நோயாளிக்கு இதய இரத்தக் குழாயில் எத்தனை அடைப்புகள் உள்ளன, அவை எங்கு அமைந்துள்ளன என்பதைப் பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட புறவழி இரத்தக் குழாய் ஒட்டுதல்கள் செய்யப்படலாம். அனைத்து ஒட்டுக்களையும் தைத்து முடிந்தபின், அவை வேலை செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த மருத்துவர் தைக்கப்பட்ட பறவழி ஒட்டு இரத்தக் குழாய்கள் வழியாக இரத்த ஓட்டம் செல்கிறதா என்பதைக் கூர்ந்து பரிசோதிப்பார்.

புறவழி இரத்தக் குழாய் ஒட்டுகள் பரிசோதிக்கப்பட்டு அவற்றின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பின், மருத்துவர் இதய - நுரையீரல் புறவழி இயந்திரம் வழியாகச் செல்லும் இரத்தத்தை மீண்டும்  இதயத்தின் வழியாகச் செல்ல அனுமதித்து இயந்திரத்திற்குச் செல்லும் குழாய்களை அகற்றி விடுவார். நோயாளியின் இதயம் தானாகவே மீண்டும் இயங்கத் தொடங்கலாம் அல்லது அவ்வாறு நிகழாத நேர்வில் மறுபடியும் இயங்கச் செய்ய லேசான மின்சார அதிர்ச்சி (Electric shock) தரப்படலாம்.

அவசியம் ஏற்பட்டால் மருத்துவர்கள் இதயத்தின் தொடக்க மீள் இயக்கத்திற்காக இதயத்தில் மின் கடத்திக் கம்பிகளைச் செலுத்தி அவற்றை இதய மின்முடுக்கியுடன் (Pace maker) தற்காலிகமாக இணைத்து இதயத்தை இயங்கச் செய்வார்கள்.

இதயத் தமனிப் புறவழி ஒட்டு அறுவை சிகிச்சை (Coronary Artery Bypass Graft Surgery) - அழுத்த விசைக்குக் கருவி இயங்கா நிலை முறை (off - pump procedure)

இந்த முறையில் இதயத்தின் துடிப்பு நிறுத்தப்படுவதில்லை. மருத்துவர் மார்பைத் திறந்து இதயத்தை வெளிப்படுத்தியதும் ஒரு சிறப்புக் கருவியால் இதயத்தின் எந்தத் தமனிக்குழாய்க்குப் புறவழி இரத்தக் குழாயைத் தைத்து ஒட்டுப்  போட்டு இணைக்க வேண்டுமோ அதைச் சுற்றியுள்ள பரப்பை நிலைப்படுத்தி விடுவார்கள். 

நிலைப்படுத்தல் அமைப்பு (Stabilization system) ஒரு இதய இடப் பொருத்தியையும் (Heart positioner)  மற்றும் திசு நிலைப்படுத்தியையும் (Tissue stablizer) கொண்டுள்ளது. இதய இடப் பொருத்தி இரத்த ஓட்டத்தைச் சீர் குலைக்காமல்  இதயத்தை உயர்த்தித் தாங்கிப் பிடித்து கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இதயத்தை திருப்பி அடைபட்ட தமனிகளை (blocked arteries) அடைவதற்கான சிறந்த அணுகலைப் பெற (best access) வழிவகுக்கிறது. திசு நிலைப்படுத்தி இதயத்தின் ஒரு சிறிய பகுதியில்  அறுவை சிகிச்சை நிபுணர் வேலை செய்யும் போது அப்பகுதியை அசையாமல் நிலையாக வைத்திருக்கிறது. 

என்னுடைய இதய அறுவைச் சிகிச்சை அழுத்த விசைக் கருவி (off pump coronary artery bypass - OPCAB)  இயங்கா நிலையில் ஆக்டோபஸ் 4.3 (Octobus 4.3) என்ற நிலைப்படுத்தும் அமைப்பைப் பயன்படுத்திச் செய்யப்பட்டது என்பதை என்னுடைய அறுவைச் சிகிச்சை ஆவணங்களிலிருந்து  தெரிந்து கொண்டேன். 


Picture courtesy: https://www.ahajournals.org/doi/full/10.1161/01.cir.0000120292.65143.f5


திசு நிலைப்படுத்தியால் (tissue stabilizer)  நிலைப்படுத்தப்பட்ட இதயத்தின்  குறிப்பிட்ட சிறு பரப்பைத் தவிர பிற பகுதிகள் இயக்கத்திலேயே இருக்கும். மேலும் இரத்தத்தை உடலில் அழுத்திச் செலுத்தும் (Pumping) பணியைத் தொடர்ந்து செய்யும். இதயத்தின் மீதமுள்ள பகுதிகள் தொடர்ந்து செயல்பட்டு உடல் வழியாக இரத்தத்தை செலுத்தும்.

ஒருவேளை இதயத்துடிப்பில் ஏதாவது எதிர்பாராத சிக்கல் அறுவைச் சிகிச்சையின் போது ஏற்பட்டால் புறவழி இயந்திரம் புறவழி இரத்தக்குழாய் ஒட்டுதலை முடிக்கத் தேவைப்படக் கூடும். ஆகவே அத்தகைய நிலையில் இயந்திரமும் அதனை இயக்குவதற்குத் தொழில்நுட்பப் பணியாளரும் தயார் நிலையில் இருப்பார்கள். மற்றபடி இதய-நுரையீரல் புறவழி இயந்திரம் (Heart -Lung machine)  ஒரு மாற்று ஏற்பாடாக மட்டுமே இருக்கும். 

பெருநாடி அல்லது பெருந்தமனியில் சிறிய திறப்பொன்று ஏற்படுத்தப்பட்டு இரத்தக் குழாயின் ஒரு பகுதியின் ஒரு முனையை திறப்புக்கு மேலாகவும் மற்றொரு முனையை அடைப்புக்கு கீழாகவும் தைத்து விடுவதன் மூலம் புறவழி ஒட்டு நடைமுறையை (bypass graft Procedure) மருத்துவர் செய்வார். 


நோயாளிக்கு இதய இரத்தக் குழாயில் எத்தனை அடைப்புகள் உள்ளன, அவை எங்கு அமைந்துள்ளன என்பதைப் பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட புறவழி இரத்தக் குழாய் ஒட்டுதல்கள் செய்யப்படலாம். அனைத்து ஒட்டுக்களையும் தைத்து முடிந்தபின், அவை சரியாக வேலை செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த மார்பை மூடுவதற்கு முன் மருத்துவர் தைக்கப்பட்ட பறவழி ஒட்டு இரத்தக் குழாய்கள் வழியாக இரத்த ஓட்டம் செல்கிறதா என்பதைக் கூர்ந்து பரிசோதிப்பார்.

இப்போது சிஏபிஜியின் (CABG) அழுத்த விசைக்குக் கருவியின் இயக்க நிலை முறை (on pump) மற்றும் அழுத்த விசைக்குக் கருவி இயங்கா நிலை முறை (off pump) ஆகிய இருவகையான செயல்படும் முறைகளிலும் (Procedures) அறுவைச் சிகிச்சை கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையை நெருங்கி விட்டது.

அடுத்த கட்டமாகச் சில நேரங்களில் உடைந்த எலும்பை சரிசெய்யக் கம்பிகளைப் பயன்படுவது போல் சிறிய கம்பிகளால் மார்பெலும்பு(sternum) மருத்துவரால் தைக்கப்படும். இதயத்தைச் சுற்றிலும் சேர்ந்துள்ள இரத்தம் மற்றும் திரவங்களை வெளியேற்ற மார்பில் குழாய் செருகப்படும். அடுத்து மார்பெலும்பின் மீதுள்ள தோல் மீண்டும் ஒன்றாக இணைத்துத் தைக்கப்படும்.


வயிற்றுப் பகுதியில் சேர்ந்துள்ள திரவங்களை வெளியேற்றுவதற்காக மருத்துவர் மூக்கு அல்லது வாய் வழியாக வயிற்றுக்குள் ஒரு குழாயைச் செலுத்துவார்.


இதன் பின்னர் அறுவைச் சிகிச்சைக் (surgical wounds) காயங்களுக்கு கிருமித் தொற்று நீக்கப்பட்ட (sterilised bandage) புண் கட்டுத் துணியால் மருத்துவர் கட்டுகள்(dressing) இடுவார்

தொடரும்..















Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)