இதயம் திறந்த அனுபவங்கள் - பகுதி (2)

 அறுவைச் சிகிச்சைக்குத் தயாராதல்

நோயாளிக்கு சி.ஏ.பி.ஜி (CABG) அறுவைச்சிகிச்சை ஏன் செய்யப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை மருத்துவர் முதலில் கூறுவார். அதன் பின்னர் செயல்முறை (procedure) குறித்து விளக்கி அதில் சாத்தியமான  அபாயங்களைப் பற்றியும் எடுத்துரைப்பார் . அப்போது நோயாளி தன் மனதில் தோன்றும் அனைத்து ஐயங்களையும் அச்சங்களையும் மருத்துவரிடம் தெரிவித்து அவற்றுக்கான தக்க விளக்கங்களைப் பெற்றுத் தெளிவு பெறலாம். 

நோயாளி அறுவைச்சிகிச்சைக்கு வாய்மொழி ஒப்புதல் கொடுத்த பின்னர் அறுவைச் சிகிச்சைக்கு முன்னதாக மேற் கொள்ள வேண்டிய சோதனைகளுக்கான எழுத்துப் பூர்வமான அனுமதி அளிக்கும் படிவங்களில்  நோயாளியின் கையொப்பம் பெறப்படும். கையொப்பம் இடுமுன் படிவத்தைக் கவனமாகப் படித்தும் தெளிவு பெற இயலாத பட்சத்தில் மருத்துவரிடம் வினாக்களை எழுப்பித் தெளிவு பெறலாம். 

நோயாளியின் மருத்துவ  வரலாற்றை (medical history) மருத்துவர் குழு முழுமையாக மதிப்பாய்வு செய்தும் முழு உடற்பரிசோதனைகளுக்கு உட்படுத்தியும் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளும் உடற்தகுதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வார். இது தவிர வேறு சில இரத்தப் பரிசோதனைகளும் பிற கண்டறியும் சோதனைகளும் கூடுதலாகத் தேவைப்படலாம்.

எடுத்துக்காட்டாகத்  தற்போது முதலில் கோவிட் -19  தொற்றுச்  சோதனை நோயாளிக்குச் செய்யப்பட்டு எதிர்மறை (negative) என்று உறுதியான பின்னரே அடுத்த கட்டப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


(1) உள் நோயாளியாக (inpatient) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் நோயாளியின் இடது கையில் நோயாளியின் விவரங்கள் குறிக்கப்பட்ட மணிக்கட்டுப்பட்டை (wristband) கட்டப்படும்.




படம் : மணிக்கட்டுப் பட்டை (wrist band)


(2) அடுத்து வழக்கமாக அணியும் உடைகளுக்குப் பதிலாக மருத்துவமனையில் வழங்கப்படும் அங்கியையே அணிந்து கொள்ள வேண்டும். இதனால் மருத்துவமனையில் நோயாளியைப் பிரித்தறிய எளிதாக இருக்கும். மேலும் மருத்துவமனையில் செய்யப்படும் பல்வேறு சோதனைகளுக்கு வசதியாகவும் இருக்கும். 


படம்: மருத்துவமனை அங்கியில் நான்

(3) அடுத்து அறுவைச் சிகிச்சைக்கு இடையூறாக இருக்கக் கூடிய நகைகள், தாயத்துகள் மற்றும் அரைஞாண் கயிறு போன்ற பிற பொருட்களும் அகற்றப்படும்.

1) அறுவைச் சிகிச்சைக்கு முன் தினம் அதிகாலையில் இரத்தப் பரிசோதனைக்கு மாதிரி (sample) எடுக்கப்படும்.

2) நோயாளிக்கு முழு உடற்சவரம் (Full body shave) செய்யப்படும். அதன் பின்னர் சோப்புத் தேய்த்து சிறப்புக் கிருமி நாசினி கலந்த வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

அடுத்து காலைச் சிற்றுண்டி உண்ட  இரண்டு மணி நேரத்திற்குப் மீண்டும் பரிசோதனைக்காக இரத்த மாதிரி எடுக்கப்படும்.

3) அடுத்து நோயாளிக்கு மார்பு எக்ஸ் கதிர் (Chest X - ray) படம் எடுக்கப்படும். 


4) அடுத்து இருபரிமாண வண்ண டாப்ளர் (2D Colour Doppler) சோதனை செய்யப்படும்.

இருபரிமாண எதிரொலி (2D Echo) என்பது இதயத்திற்கான ஒரு சோதனை, இதில் மீயொலி (ultrasound) நுட்பம் இதயத்தைப் படங்கள் எடுக்கப் பயன்படுகிறது. இது துடிக்கும் இதயம், இதயத்தின் அறைகள், வால்வுகள் மற்றும் இதயத்தின் முக்கிய இரத்த நாளங்களை குறுக்கு வெட்டு முதலியவற்றை ‘ஸ்லைஸ்’ (Slice)  காட்டுகிறது.  இதயத்தின் இரத்த ஓட்டத்தை மதிப்பிடும் ‘டாப்ளர்’ (Doppler) இந்த மீயொலிப் பரிசோதனையின் சிறப்பு உறுப்பாகும்.


படம்: இருபரிமாண வண்ண டாப்ளர் (2D colour Doppler) கருவி

4) காலை மற்றும் இரவில் துகள் தெளிப்பான் (nebulizer) கருவி உதவியுடன் நுரையீரலுக்கும் மற்றும் சுவாசப் பாதைக்கும் மருந்து செலுத்தப்படும். இதனால் சுவாசப் பாதையில் தடைகளும் நுரையீரலில் உள்ள பிரச்சினைகளும் நீக்கப்படக் கூடும்.

5) நோயாளி தற்போது புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவராக இருக்கலாம் அல்லது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்திருக்கலாம். இவர்களுக்கு நுரையீரல் இறுக்கத்தைக் குறைக்க அறுவைச் சிகிச்சைக்கு முன்பாகவே மூன்று பந்து  ஊக்க ஸ்பைரோமீட்டர் (Tri ball incentive spirometer) கருவியை ஒரு மணி நேரத்திற்கு 10 முறை பயன்படுத்த மருத்துவர் பரிந்துரைப்பார்.




6) பல வகையான இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதயம் குறித்த விவரங்கள் ( Cardiac profile) சேகரிக்கப்படுகின்றன. 

அடுத்துவரும் பகுதியில் அறுவைச் சிகிச்சைக்கு முன் செய்யப்படும் பல்வேறு பரிசோதனைகளைக் குறித்து மிகச் சிறிய அளவில் எடுத்துக் கூறியுள்ளேன். உங்களுக்கு அப்பகுதி சலிப்பூட்டுவதாக உணர்ந்தால் நேராக  பகுதி (3) க்குச் செல்லலாம். இருந்தாலும் வாழ்க்கையில் எப்போதாவது இச் சோதனைகள் நமக்குச் செய்யப்பட்டால் அவை ஏன் எதற்காகச் செய்யப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள உதவும்.

 

(அ) இரத்தச் சர்க்கரை விவரங்கள்  (Sugar Profile)

உணவு உட் கொள்ளாத நிலையில் இரத்தச் சர்க்கரை அளவு (Fasting Blood Glucose - FBG), 

உணவு உட்கொண்ட 2 மணி நேரத்திற்கு பின் இரத்தச் சர்க்கரை அளவு (Post Prandial Blood Glucose - PPBG) , 

HbA1c சோதனை மூன்று மாத காலப்பகுதியில் இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்பட்ட ஏராளமான ஏற்ற இறக்கங்களின் சராசரியை அளவிடுகிறது. மூன்று மாதங்களில் எந்த அளவிற்கு இரத்தச் சர்க்கரை கட்டுப்படுத்தப்பள்ளது என்பதையும் HbA1c தெரிந்து கொள்ள உதவுகிறது.

ஆ) கொலஸ்டிரால் கொழுப்பு விவரங்கள் (Lipid profile)

கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு (Fat). கல்லீரல் (Lever) உடலுக்குத் தேவையான கொழுப்பை உருவாக்குகிறது. உண்ணும் உணவுகளிலிருந்தும் கொலஸ்ட்ரால் கொழுப்பைப் பெறலாம். இறைச்சி, மீன், முட்டை, வெண்ணெய், சீஸ் மற்றும் பால் அனைத்தும் கொலஸ்ட்ரால் கொழுப்பைக் கொண்டுள்ளன. பழங்கள், காய்கறிகள் மற்றும் ஓட்ஸ் போன்ற தானியங்களில் எந்த கொலஸ்டிரால் கொழுப்பும் இல்லை.

இந்த இரத்தப் பரிசோதனையில் மொத்தக் கொலஸ்டிரால் (Total cholesterol)

 டிரைகிளிசரைடு (Triglyceride), 

குறை அடர்த்திக் கொலஸ்டிரால் (LDL) அல்லது கெட்ட கொலஸ்டிரால் (Bad cholesterol),

மிகு அடர்த்திக் கொலஸ்டிரால் (HDL) அல்லது நல்ல கொலஸ்டிரால் (Good cholesterol), 

மொத்தக் கொலஸ்டிரால் அளவுக்கும் மிகு அடர்த்திக் கொலஸ்டிரால் அளவுக்குமான (HDL) விகிதம் ஆகியவற்றின் மதிப்புகள் கண்டறியப்படுகின்றன. 

இ) சிறுநீரகச் செயல்பாடுச் சோதனைகள்

இரத்த யூரியா நைட்ரஜன்                        (Blood Urea Nitrogen - BUN), 

கிரியாட்டினின் ( Creatinine ), 

இரத்த யூரியா நைட்ரஜனுக்கும் கிரியாட்டினின் அளவுக்குமான விகிதம்.

(ஈ) மின்பகு பொருட்கள் குழுச் சோதனை (electrolyte panel test)  

மின்பகு பொருட்கள் குழுச் சோதனை (electrolyte panel test)  அல்லது குருதி ஊனீர்ச் சோதனை (serum electrolytes test)  என்பது உடலின் முக்கிய மின்பகு பொருட்களை அளவிடும் இரத்தப் பரிசோதனை ஆகும்.

மின்பகு பொருட்கள் (electrolytes) உடல் திசுக்களிலும், இரத்தத்தில் கரைந்த உப்புக்களின் வடிவத்தில் காணப்படும் தாதுக்கள். மின்பகு பொருட்கள் மின்னூட்டம் பெற்ற துகள்கள். இவை உடலின் உயிரணுக்களுக்கு (body cells)  ஊட்டச்சத்துக்களை உள்ளேயும், கழிவுகளை வெளியேயும் நகர்த்த உதவுகின்றன. ஆரோக்கியமான அளவில் உடலில் உள்ள  திரவங்களின் அளவை பராமரிப்பதிலும்,  உடலின்  அமில  காரச் சமநிலையைப் (acid - base balance) பேணுவதிலும், உடலின் அமில - காரத்தன்மை (pH) அளவை நிலைநிறுத்தவும் உதவுகின்றன. 

இவை தசை மற்றும் நரம்புச் செயல்பாடு (muscular and neural activity), இதயத்தின் தாளலயம் (heart rhythm) மற்றும் வேறு பிற முக்கிய செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவதில் உதவுகின்றன. 

(1) சோடியம் (Sodium)  உடலில் உள்ள திரவத்தின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உங்கள் நரம்புகள் மற்றும் தசைகள் சரியாக வேலை செய்ய உதவுகிறது

(2) குளோரைடு (Chloride) உடலில் உள்ள திரவத்தின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கூடுதலாக, இது ஆரோக்கியமான இரத்த அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது

(3) பொட்டாசியம் (Potassium)  உங்கள் இதயம் மற்றும் தசைகள் சரியாக வேலை செய்ய உதவுகிறது.

(4) மொத்த கார்பன் டை ஆக்சைடு (Total Carbon di oxide - CO2) சோதனை என்பது  இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவை அளவிடும் எளிய இரத்த பரிசோதனையாகும் . கார்பன் ஆக்சைடு (Carbon di oxide - CO2) சோதனை சிறுநீரக மற்றும் சுவாசப் பிரச்சினைகளைக் கண்டறியவும்  உதவும். 

  உ) கல்லீரல் சோதனைகள் (Lever tests) 

பிலிரூபின்(Bilirubin) என்பது மஞ்சள் நிற நிறமி (Yellowish pigment) ஆகும், இது சிவப்பு இரத்த அணுக்கள் (Red cells) இயல்பாக முறியும் (normal breakdown) போது உற்பத்தியாகிறது. பிலிரூபின் கல்லீரல் (lever) வழியாகச் சென்று இறுதியில் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இரத்தத்தில் காணப்படும் பிலிரூபின் அளவை பிலிரூபின் சோதனை அளவிடுகிறது. சோதனையில் 

மொத்த பிலிருபின் அளவு (Total Bilirubin), 

இணைந்த பிலிருபின் (Conjugate Bilirubin) ஆகியவை அளவிடப்படுகின்றன. 

இயல்பான அளவை விட பிலிரூபினின் அளவு அதிகமாகக் காணப்படுவது பல்வேறு வகையான கல்லீரல் அல்லது பித்த நாளப் பிரச்சினைகளைக் குறிக்கலாம். ஹீமோலிசிஸ் (Hemolysis) என்ற சிவப்பு இரத்த அணுக்கள் அழிவடையும் வீதம் எப்போதாவது அதிகரித்தால் இரத்தத்தில் பிலிரூபின் அளவும் உயரலாம்.

அல்கலைன் பாஸ்பேடேஸ் (Alkaline phosphatease -ALP) எனப்படும் கார பாஸ்பேடேஸ் சோதனை கல்லீரல் நோய் அல்லது எலும்பு கோளாறுகளைக் கண்டறிய உதவுகிறது. இது பெரும்பாலும் கல்லீரல் குழுச் சோதனைகளின் (Liver panel tests) ஒன்றாகச் செய்யப்படுகிறது.  கல்லீரலைப் பாதிக்கும் நிலைமைகளில், சேதமடைந்த கல்லீரல் செல்கள் இரத்தத்தில் அதிகரித்த ALP ஐ வெளியிடுகின்றன.

மொத்தப் புரத சோதனை:

இந்த இரத்தப் பரிசோதனை இரண்டு வகையான புரதங்களை அளவிடுகிறது.   (1) அல்புமின்  மற்றும் (2) குளோபுலின். புரத அளவு குறைவாக இருந்தால், நோயாளிக்கு கல்லீரல் அல்லது சிறுநீரக நோய் இருப்பதாகக் கருதலாம்.

அல்புமின் (Albumin): 

உடலின் திரவச் சமநிலையைப் பராமரிக்க உதவும் புரதங்கள் இரத்தத்தில் முழுவதுமாகப் பரவுகின்றன. அல்புமின் என்பது கல்லீரல் உருவாக்கும் ஒரு வகை புரதமாகும். இது உங்கள் இரத்தத்தில் மிகுதியாக உள்ள புரதங்களில் ஒன்றாகும். இரத்த ஊனீர் அல்புமின் சோதனை (Blood serum Albumin test)  என்பது  இரத்தத்தில் உள்ள அல்புமினின் அளவை அளவிடும் எளிய இரத்தப் பரிசோதனை ஆகும். அறுவை சிகிச்சை, தீக்காயம் அல்லது திறந்த காயம் காரணமாக குறைந்த ஆல்புமின் அளவை இரத்தத்தில் கொண்டிருப்பதற்கான வாய்ப்புள்ளது.. ஆனால்  மேற் குறிப்பட்ட எதுவும் இல்லாத நிலையில் இரத்த ஊனீர் அல்புமின் அளவு அசாதாரணமான நிலையில் காணப்பட்டால் கல்லீரல் (Liver) அல்லது சிறுநீரகங்கள் (Kidneys) சரியாகச் செயல்படாத  நிலையின்  அறிகுறியாகவோ  அல்லது ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதையோ  குறிக்கலாம்.

குளோபுலின்கள் (Globulins)

குளோபுலின்கள்  இரத்தத்தில் காணப்படும் புரதங்களின் குழுவாகும். அவை  நோயெதிர்ப்பு மண்டலத்தால் கல்லீரலில் தயாரிக்கப்படுகின்றன. கல்லீரல் செயல்பாடு, இரத்த உறைதல் மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் குளோபுலின்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குளோபுலின்களில் நான்கு முக்கிய வகைகள் உள்ளன. அவை ஆல்பா 1, ஆல்பா 2, பீட்டா மற்றும் காமா என்று அழைக்கப்படுகின்றன. பல்வேறு வகையான குளோபுலின்கள் இருப்பதைப் போலவே, பல்வேறு வகையான குளோபுலின் சோதனைகளும் உள்ளன.


G) ஏமக்குறைவு  நோய்கான சோதனை (AIDS - HIV)

எச்.ஐ.வி அல்லது மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மம் (HIV - Human immunodeficiency virus) எனப்படுவது ஏமக் குறைவு நோயை உருவாக்கும் தீ நுண்மம் ஆகும். எச்.ஐ.வி சோதனையில்  நேர் மறையான முடிவு கிடைத்தால், நோயாளி  எய்ட்ஸ் நோயை உருவாக்கும் தீ நுண்மக்கிருமியால் நோயாளி பாதிக்கப்பட்டுள்ளார் என்று பொருள்.

H) ஈரலழற்சி பி தீ நுண்மம் (HBsAg)

HBsAg சோதனையில் நேர் மறையான முடிவு கிடைக்கப் பெற்றால், நோயாளி ஹெபடைடிஸ் பி தீ நுண்மக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகவே ஹெபடைடிஸ் பி  நுண்மத்தை அவர் இரத்தத்தின் மூலம் மற்றவர்களுக்கும் பரப்பக் கூடும்.

H) இரத்த உறைதல் காலம் (Blood clotting time), புரோத்திராம்பின் காலம் (Prothrombin time) , இரத்தப் போக்கு நேரம் (Bleeding time)

புரோத்ராம்பின் நேரம் (Prothrombin time - PT) என்பது உங்கள் இரத்தத்தின் திரவ பகுதியான பிளாஸ்மா (Plasma) உறைவதற்கு எடுக்கும் நேரத்தை அளவிடும் இரத்தப் பரிசோதனை ஆகும்.


I) முழு இரத்தப் பரிசோதனை (Complete Blood Count)

ஒரு முழுமையான இரத்த எண்ணிக்கைச் சோதனை (சிபிசி) என்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கும் இரத்த சோகை, தொற்று மற்றும் ரத்த புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான கோளாறுகளைக் கண்டறியவும் பயன்படுத்தப்படும் இரத்த பரிசோதனையாகும். ஒரு முழுமையான இரத்த எண்ணிக்கை சோதனை  இரத்தத்தின் பல கூறுகளையும் அம்சங்களையும் அளவிடுகிறது, அவற்றுள்:


சிவப்பு இரத்த அணுக்கள் இவை ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கின்றன

வெள்ளை இரத்த அணுக்கள் இவை தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்றன

ஹீமோகுளோபின், சிவப்பு இரத்த அணுக்களில் ஆக்ஸிஜனைச் சுமக்கும் புரதம்

ஹீமாடோக்ரிட்,  இரத்தத்தில் உள்ள இரத்தக் கூறுகளின் விகிதம் அல்லது பிளாஸ்மாவுக்கும் சிவப்பு இரத்த அணுக்களும் உள்ள விகிதம்

பிளேட்லெட்டுகள், இவை இரத்த உறைவுக்கு உதவுகிறது.

அறுவைச் சிகிச்சைக்கு முன் ஒருமுறை மேற் கொள்ளப்படும் இந்த முழு இரத்த எண்ணிக்கைக் சோதனை அறுவைச் சிகிச்சைக்குப் பின் நோயாளியின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அறியும் பொருட்டு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பல முறை செய்யப்படும்.

J) தைராய்ட் சுரப்பியைத் தூண்டும் இயக்குநீர் சோதனைகள்  (Thyroid stimulating Harmon tests - TSH)

தைராய்டைத் தூண்டும் இயக்குநீர்ச் (டி.எஸ்.எச்) சோதனை இரத்தத்தில் உள்ள டி.எஸ்.எச் அளவை அளவிடுகிறது. உங்கள் மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள பிட்யூட்டரி சுரப்பியால் இந்த இயக்குநீர் தயாரிக்கப்படுகிறது. தைராய்டுச் சுரப்பி வெளியிடும்  இயக்குநீர்களின் அளவைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு இந்த இயக்குநீருக்கு உண்டு.

தைராய்டுச் சுரப்பி கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள சிறிய, பட்டாம்பூச்சி வடிவச் சுரப்பி ஆகும். இச் சுரப்பி மூன்று முக்கியமான இயக்குநீர்களை சுரக்கிறது. அவை

(1) ட்ரியோடோதைரோனைன் - டி3 (triiodothyronine  - T3)

(2) தைராக்ஸின் - டி4 (thyroxine - T4)

(3) கால்சிட்டோனின் (calcitonin)

இந்த மூன்று இயக்குநீர்களையும் வெளியிடுவதன் வாயிலாக வளர்சிதை மாற்றம் (metabolism) மற்றும் வளர்ச்சி (growth)  உள்ளிட்ட பல்வேறு உடற் செயல்பாடுகளை தைராய்டுச் சுரப்பி கட்டுப்படுத்துகிறது.

H) நுரையீரல் செயல்பாட்டுச் சோதனை (Pulmonary function test - PFT)



படம் : நுரையீரல் செயல்பாட்டுச் சோதனைக் கருவி

நுரையீரல் செயல்பாட்டுச் சோதனைகள் PFT (பி.எஃப்.டி) நுரையீரல் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் காட்டும் உடலின் தோலை ஊடுருவித் துளையிடவோ (pierce), கீறலிடவோ (incision) அவசிமற்ற சோதனைகள் (non invasive test). சோதனைகள் நுரையீரல் அளவு, திறன், ஓட்ட விகிதங்கள் மற்றும் வாயு பரிமாற்றம் ஆகியவற்றை அளவிடுகின்றன. அறுவைசிகிச்சைக்கு முன்னர் நுரையீரலின் செயல்பாட்டை சரிபார்க்க பி.எஃப்.டி (PFT) பயன்படுத்தப்படலாம்.  நுரையீரல், இதய பிரச்சினைகள் உள்ளவர்கள், புகைபிடிப்பவர்கள் அல்லது பிற சுகாதாரப் பிரச்சினைகளைக் கொண்ட நோயாளிகளுக்கான செய்முறைகளுக்களுக்காக (Procedures)  பி.எஃப்.டி (PFT) பயன்படுத்தப்படலாம். PFT களின் மற்றொரு பயன்பாடு ஆஸ்துமா(asthma), எம்பிஸிமா (emphysema) மற்றும் பிற நாள்பட்ட நுரையீரல் பிரச்சினைகளுக்காகத் தரப்படும் சிகிச்சையை  மதிப்பிடுவதற்கும் (assessment of treatment) பி.எஃப்.டி(PFT) சோதனை பயன்படுத்தப்படுகிறது.

கடைசியாக மருத்துவர் நோயாளியின் கால்களைப் பரிசோதிப்பார். கீழ் இடது காலில் இருந்து மேலோட்டமான சிரை இரத்தக் குழாயை (superficial vein) எடுத்து அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டும் என்பதால் அந்த இரத்தக் குழாய் வீங்கிச் சுருண்ட சிரைப் புடைப்பு (vericose vein) இன்றி நல்ல நிலையில் உள்ளதா என்று  தெரிந்துகொள்வார்.

எனக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறும் நாள் காலையில் இரத்த மாதிரி எடுக்கப்பட்டு,

சோடியம்(சீரம்), யூரியா (சீரம்/ பிளாஸ்மா), கிரியாட்டினின் (சீரம்/பிளாஸ்மா), பொட்டாசியம் (சீரம்/பிளாஸ்மா)

மொத்த  லூக்கோசைட்ஸ் எண்ணிக்கைக் சோதனையில்

வெள்ளைளை அணுக்களின் எண்ணிக்கை (WBC count)

வகைவாரி லூக்கோசையிட்ஸ் எண்ணிக்கையில்

நியூட்ரோஃபில்ஸ் எண்ணிக்கை

ஈஸினோஃபில்ஸ் எண்ணிக்கை

லிம்ஃபோசைட்ஸ்கள் எண்ணிக்கை

மோனோசைட்ஸ்கள் எண்ணிக்கை ஆகியன காணப்பட்டன.



தொடரும்...

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)