கொரோனாவிலிருந்து மீண்ட பின் வாழ்க்கை ... பகுதி(1)
நம் நாட்டில் பெரும்பாலானவர்களால் “கொரோனா” என்றே கோவிட் -19 நோய் அழைக்கப்படுகிறது. சரியாகச் சொன்னால் கொரொனா வைரஸ் என்பது பல வகையான வைரஸ்களை உள்ளடக்கிய பெரிய வைரஸ் குடும்பத்தைக் குறிக்கும் ஒரு பொதுப்படையான சொற்றொடர்.
கோவிட் -19 என்பது நோய் (Disease). சார்ஸ் – கோவ் -2 (SARS – CoV 2 Severe Acute Respiratory Syndrome – Corona Virus -2) என்பது நோய்க்குக் காரணமான ஒரு குறிப்பிட்ட வைரஸ். CoViD -19 என்பதில் Co - Corona வையும் Vi -Virus என்பதையும் D - Disease என்பதையும் 19 - 2019 அதாவது இந்த வைரஸ் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டையும் குறிக்கிறது. ஆகவே இந்தக் கட்டுரையில் சார்ஸ் – கோவி 2 என்றால் அது வைரசையும், கோவிட் -19 என்றால் நோயையும் குறிக்கும் என்பதைத் தெளிவுபடுத்தவே மேற்கண்ட விளக்கம் தரப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோவிட் -19 (covid -19) நோயால் தாக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் சுய உதவிக் குழுவொன்று (Self help group) ஃபேஸ்புக் (Face Book) சமூக வலைத் தளத்தில் கொரோனா வைரஸ் உயிர் பிழைத்தோர் படை (Corona Virus Survivor Crops) என்ற பெயரில் இயங்கி வருகிறது. இக் குழுவில் அவர்கள் முதன்மை நோய்த்தொற்றின் இருமல் மற்றும் காய்ச்சலிலிருந்து மீண்ட பிறகு தங்களிடம் காணப்படும் முடக்கிப் போடும் சோர்வு அல்லது செயலிழப்பு, மூளையின் தெளிவற்ற அல்லது குழப்பமான செயல்பாடு, மது போதை போன்ற மயக்க நிலை, மூட்டு வலி மற்றும் ஆழ்ந்த எலும்பு வலி, மார்பு வலி, இதயத் துடிப்பு, தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் தூக்கமின்மை போன்ற அறிகுறிகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
மேற்கண்ட அறிகுறிகள் பல வாரங்கள் முதல் பல மாதங்கள் வரையில் கூட நீடிப்பதால் கோவிட் -19 நோயின் நீண்டகால விளைவுகள் குறித்த கவலை அதிகரித்து வருகிறது. கோவிட் -19 நோயிலிருந்து தப்பிப்பிழைத்தவர்கள் இந்தத் துன்பங்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். கோவிட் -19 உடன் கணிசமான அளவு நுரையீரல் தொடர்பான இடையூறுகள் காணப்பட்டாலும் அவற்றின் நீண்டகால விளைவுகள் குறித்து இன்னும் அறியப்படவில்லை. இந்தப் பிரச்சனைகள் பிற்காலத்தில் எப்போதாவது முற்றிலுமாக விலகிவிடலாம் என்றாலும், அது வரையிலும் அடுத்தது என்ன மாதிரியான பிரச்சனைகள் வரக் கூடும் என்பது குறித்துச் சொல்ல முடியவில்லை.
கூட்டு தனிமைப்படுத்தலே (collective quarantine) என்பது இனி நிரந்தரமோ என்ற எண்ணம் நமக்கு ஏற்படலாம். கோவிட் -19, கடந்த ஆறு மாதங்களாக மனிதர்களில் மட்டுமே காணப்படும் ஒரு புதிய நோயாகவே பார்க்கப்படுகிறது. சார்ஸ் - கோவி -2 (SARS - CoV -2) வைரஸ் மற்றும் தொடர்ந்து வரும் அடுத்தடுத்த தொற்றுகள் குறித்த ஆய்வுகள் இன்னும் மழலைப் பருவத்தில்தான் உள்ளன. வல்லுநர்கள் பிற வைரஸ் நோய்களுடன் ஒப்பிடுவதன் மூலம் கோவிட் -19 நோயிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களின் வாழ்க்கைப் பயணம் அடுத்த ஒன்று முதல் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு எவ்வாறு இருக்கக்கூடும் என்பதைக் கணிக்க முயற்சிக்கலாம். கோவிட் -19 குறித்த மருத்துவர்களின் கண்ணோட்டங்களை இனி காண்போம்.
நுரையீரல்
மருத்துவர்களுக்குக் கவலை தருவதில் முதலிடத்தில் இருக்கும் பிரச்சனையே கோவிட்- 19 போன்ற சுவாச நோய்த்தொற்றுக்குப் பிறகு நுரையீரலின் செயல்பாடு நிரந்தரமாகவே மாற்றத்திற்குள்ளாகுமா என்பதுதான்.
அமெரிக்க நுரையீரல் கழகத்தின் தலைமை மருத்துவ அதிகாரியான (Chief Medical Officer of the American Lung Association) டாக்டர் ஆல்பர்ட் ரிஸோ எம்.டி. யின் (Albert Rizzo, MD), கூற்றுப்படி, நோயாளி வழக்கமான நிமோனியா, இன்ஃப்ளூயன்ஸா நிமோனியா அல்லது ஒரு கோவிட் நிமோனியா என்று எந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு அவசியம் இல்லாத நேர்வில் , நோய் தாக்கியவர் மீண்டும் நோய் தாக்குவதற்கு முன்னிருந்த நிலைக்கு மீள அனைத்துச் சாத்தியமும் உள்ளது. பெரும்பாலும் மிகவும் லேசான மற்றும் மிதமான நேர்வுகளில் நோயிலிருந்து மீண்டெழுந்த பின்னரும் எக்ஸ்ரே படத்தில் நுரையீரல் இயல்பு நிலையை அடைவதற்கு நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகக் கூடும். இருப்பினும் ஒருவரது அறிகுறிகள் ஒப்பீட்டளவில் லேசானவை மற்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றால் அவர் முற்றிலுமாகக் குணமடைவார் என்று நம்புவதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன என்பதே நல்லதொரு தகவலாகப் பார்க்கப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செயற்கைச் சுவாசம் தரப்பட்டவர்களுக்கு வடுக்களால் அதிகமான நிரந்தர நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக டாக்டர். ரிஸோ குறிப்பிடுகிறார். பல நேர்வுகளில் மீட்புக்கு பிந்தைய மார்பு எக்ஸ்ரே (Chest X – ray) மற்றும் மார்பு கேட் ஸ்கேன் (Chest CAT scan) ஆகியவை வடுக்கள் நிறைந்த பகுதிகளைக் காண்பிக்கும். அந்த வடுக்கள் ஒருபோதும் முழுமையாகக் குணமடையாது. இதனை நோய்க்கு முன்பு அவர்கள் கொண்டிருந்த நுரையீரல் செயல்பாட்டை அவர்களால் முற்றிலுமாகத் திரும்பப் பெற இயலாது என்பதற்குரிய அறிகுறிக்கான சாத்தியமாகவே கொள்ளப்பட வேண்டும். இது பெரும்பான்மையானவர்களுக்குப் பொருந்தாது என்று எடுத்துக் கொண்டாலும், பல வாரங்கள் மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு நிச்சயமாக வடுக்கள் பெருமளவுக்குக் குறைபாட்டை ஏற்படுத்தும்.
இதனை முன்னர் குறிப்பிட்டபடி, இந்த வைரஸ் குடும்பத்தின்
சார்ஸ் கோவ் -1 (SARS CoV -1) வைரஸிலிருந்து கிடைத்த சான்றுகள் வெளிப்படுத்துகின்றன. முன்னர் சார்ஸ் நோய் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுப் பிழைத்துக் கொண்ட நோயாளிகளைப் பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு மேற்கொண்டதில், மீட்கப்பட்ட முதல் ஆண்டில் பெரும்பாலான நோயாளிகளின் நுரையீரல் கணிசமாகக் குணமடைந்தது. ஆனால் அதன் பிறகு, உடல் மேம்பாடுகள் சரியத் தொடங்கின. சிலருக்கு நிரந்தரச் சேதம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட நாற்பது விழுக்காடு மக்கள் நுரையீரலுக்கும், இரத்தத்திற்கும் இடையில் நடக்கும் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு பரிமாற்றம் சம்பந்தப்பட்ட வேறு வகையான நுரையீரல் செயலிழப்பை அனுபவித்தனர். அந்தப் பிரச்சனை அவர்களுக்கு நீங்காமலே இருந்தது. இந்த வகைக் குறைபாடு கோவிட் -19 நோய்க்குமே பொதுவானதுதான். ஆனால் இந்த மாற்றங்கள் நிரந்தரமானவையா அல்லது நீங்கி விடுமா என்பதை மருத்துவர்களால் இன்றுவரையில் சொல்ல இயலவில்லை.
இதயம் (Heart)
கடந்த இரண்டு மாதங்களில், கோவிட் -19 இன் மிக மோசமான விளைவுகளில் ஒன்றாக இதயத்தின் மீதான தாக்கம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சில மதிப்பீடுகளின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகளில் இருபது விழுக்காடு முதல் முப்பது விழுக்காடு இதயம் தொடர்பான பிரச்சினைகளை அனுபவிக்கின்றனர். தவிரவும் இறப்புகளுக்கு இதயம் தொடர்பான சிக்கல்கள் நாற்பது விழுக்காடு அளவுக்குப் பங்களிக்கின்றன.
கோவிட் -19 இன் தாக்குதலால் உண்டாகும் இதய நோய்களில் பல்வேறு வெளிப்பாடுகள் (manifestations) உள்ளன என்பது தெளிவாகிறது என்று நான் நினைப்பதாகக் கூறுகிறார் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் தலைமை அறிவியல் மற்றும் மருத்துவ அதிகாரியான (Chief science and medical officer of the American Heart Association) டாக்டர்.மரியெல் ஜெசப், எம்.டி (Mariell Jessup, MD). "சிலருக்கு இந்த மாரடைப்பு (heart attack) போல் தோன்றும் நோய்க்குறி வருகிறது, சிலர் இதயத்தசை அழற்சி (myocarditis) வகையான நோய்க்குறியைப் பெறுகிறார்கள், மேலும் சிலர் நுரையீரல் பெரும் தொற்றுக்கு எதிர்வினையாக பொதுவான (garden-variety) இதய செயலிழப்பைப் (heart failure) பெறுகிறார்கள். ஆக எல்லா வகையான இதயப் பிரச்சனைகளுக்கும் இந்த வைரஸுடன் தொடர்பிருப்பதாகத் தெரிகிறது.
இந்த வெவ்வேறு இருதய இரத்தநாள நோய்களின் அறிகுறிகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை, அதாவது மருத்துவர்களால் இன்னும் போதுமான சிகிச்சையை அடையாளம் காண இயலவில்லை. சில நேர்வுகளில், கோவிட் -19 நோயுடன் இதயம் தொடர்பான பிரச்சினைகளை அனுபவிக்கும் நபர்களுக்கு ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் இருந்திருந்தது. ஆனால் வேறு சில நேர்வுகளில், நோயாளிக்கு அறியப்பட்ட ஆபத்து காரணிகள் எதுவுமே இல்லை. மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு மாரடைப்பு இருப்பது போல் தெரிகிறது, ஆனால் தமனியில் அடைப்பு இல்லை. அவர்களுக்கு உண்மையில் கோவிட் -19 நோய்த்தொற்றுகள் உள்ளன. மேலும் அந்த நோயாளிகள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து எதுவும் தெரியாது. இது போன்ற நேர்வில் எத்தகைய சிகிச்சை அவர்களுக்குச் சிறந்ததாக அமையும் என்பதும் மருத்துவர்களுக்குத் தெரியாது.
ஒரு நோயாளிக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான இயல்பான காரணம் இருந்தால், அவருக்கு கரோனரி தமனி அடைப்புடன் பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி இருப்பதாகக் கருத இடமுண்டு. அவ்வாறு ஊகித்துக் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கவும் மருத்துவர்களுக்குச் சிறப்பான முன்கணிப்பு இருக்க வேண்டும் என்றே தான் கருதுவதாக டாக்டர். ஜெசப் கூறுகிறார்.
இதயம் தொடர்பான சிக்கல்கள் கோவிட் -19 க்கு மட்டுமே தனித்துவமானவை என்று சொல்ல முடியாது. பல வைரஸ் தொற்றுகள் மாரடைப்பை ஏற்படுத்தக்கூடும். இதயத்தசை அழற்சியின் தொழில்நுட்ப பெயர் மயோர்கார்டிடிஸ் (myocarditis). இது பொதுவாக உடலின் அழற்சி நோயெதிர்ப்பு எதிர்வினையின் பக்க விளைவாகக் கருதப்படுகிறது. பெரும்பாலானோர் மயோர்கார்டிடிஸிலிருந்து தாமாகவே மீண்டு வருகிறார்கள் என்றாலும் சிலர் நிரந்தரமான இதய பாதிப்பை அனுபவிக்கிறார்கள்.
இதய நோய் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளுக்கு இடையில் அறியப்பட்ட தொடர்பு உள்ளது. காய்ச்சல் ஏற்பட்ட ஒரு மாதம் வரை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இரண்டு முதல் ஆறு மடங்கு அதிகரிக்கிறது. ஆபத்து முதல் வாரத்தில் மிக அதிகமாக உள்ளது. இரத்தம் உறைதல் கூட பிற வைரஸ்களுடன் அறியப்பட்டவையே. 2003 ஆம் ஆண்டு சார்ஸ் (SARS) பரவிய காலத்திலும் இத்தகைய இரத்த உறைவுக்கான ஆதாரங்களை மருத்துவர்கள் கண்டனர். ஆரம்பத்திலேயே இரத்த உறைவு தெரிய வந்தால், இந்தச் சிக்கல்களுக்கு மருந்துகள் மூலமாகவே சிகிச்சையளிக்க முடியும். இருப்பினும், மீட்கப்பட்ட சார்ஸ் நோயாளிகளின் மற்றொரு பின்தொடர்தல் ஆய்வில், நாற்பத்திநான்கு விழுக்காடு நோயாளிகளிடம் நோய்த்தொற்று ஏற்பட்ட பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் கூட அவர்களின் இதயம் இயல்புக்கு மாறான தன்மைகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
Super sir 👌
ReplyDeleteThank you very much Ruban.
Delete