பால்வழி விண்மீன் திரளில் (Milky way Galaxy) நான்கு சுழல் கரங்கள் உள்ளன. இவற்றில்  இரண்டு முக்கியமான பெரிய கரங்களான (Major arms) ஸ்கட்டம் – சென்டாரஸ் (Scutum – Centaurus) மற்றும் பெர்சியஸ் (Perseus). இவை ஒரு தடிமனான மையப் பட்டியின் (Central bar) முனைகளில் இணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அவற்றுக்குக் கீழே இறக்கப்பட்ட நிலையில் இரண்டு சிறிய கரங்களான (Minor arms)  நார்மா (Norma) மற்றும் சஜிட்டேரியஸ் (Sagittarius) குறைந்த தெளிவுடன் முக்கியக் கரங்களுக்கு இடையில் அமைந்துள்ளன.

முக்கியக் கரங்களில் இளம் மற்றும் வயதான விண்மீன்கள் செறிந்து அடர்த்தியாக உள்ளன. சிறிய கரங்கள் அடிப்படையில் வாயுவாலும் மற்றும் புதிய விண்மீன்களை உருவாக்கும் சிறு சிறு பகுதிகளாலும் நிரப்பப்பட்டுள்ளன.
நமது சூரியன் நார்மா (Norma) மற்றும் சஜிட்டேரியஸ் (Sagittarius) சிறு கரங்களுக்கு இடையில் உள்ள ஓரியன் ஸ்பர் (Orion Spur) அல்லது ஓரியன் கரம் (Orion arm) என்று பெயரிடப்பட்டுள்ள மற்றொரு சிறிய கையில்  அமைந்துள்ளது. 
நமது பால் வழி விண்மீன் திரள், சுமார் 13 பில்லியன் அதாவது 1300 கோடி ஆண்டுகள் பழமையான சில பில்லியன் (Billion) விண்மீன்களைத் தன்னிடத்தே கொண்ட தண்டுள்ளசுருள் விண்மீன் திரள் (Barred spiral galaxy) ஆகும்.
பால் வழி விண்மீன் திரள் வட்டின் (Milky way Galactic disc) ஒரு முனையிலிருந்து குறுக்காக மறு முனைக்குச் செல்லச் சுமார் 100,000 ஒளி ஆண்டுகள் பிடிக்கும். மேலும் மையப்பட்டி (Central Bar) சுமார் 27,000 ஒளி ஆண்டுகள் நீளமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
படத்தின் இடப்புறக் காட்சி நேர்ப் பார்வையில் (Face – on – view) சுருள் வட்டின் சுழல் கட்டமைப்பைக் (Spiral structure) காட்டுகிறது. வாயு மற்றும் அண்ட தூசுகளின் பரவலான கலவையால் இடையிடையே குறுக்கிடப்படும் இங்குதான் பெரும்பாலான விண்மீன்கள் அமைந்துள்ளன. திரள் வட்டு குறுக்காகச் சுமார் ஒரு இலட்சம் (1,00,000) ஒளி ஆண்டுகள் என்று அளவிடப்படுகிறது. மேலும் நம் சூரியன் விண்மீன் திரளின் மையத்திற்கும் புறச்சுற்று எல்லைக்கும் இடையில் பாதியளவுத் தொலைவில் அமர்ந்துள்ளது.

படத்தின் வலதுபுறக் காட்சி, விளிம்புப் பார்வையில் (Edge – on – view) வட்டின் தட்டையான வடிவத்தைக் காடுகிறது. அவதானிப்புகள் ஒரு அடிக் கட்டமைப்பைச் சுட்டுகின்றன. சுமார் 3000 ஒளி ஆண்டுகள் உயரம் மற்றும் பழைய விண்மீங்களைக் கொண்ட தடிமனான வட்டினுள் சுமார் 700 ஒளி ஆண்டுகள் உயரமான ஒரு மெல்லிய வட்டு பதிக்கப்பட்டுள்ளது.

பால்வீதியின் மையப் பகுதியில் அமைந்துள்ள திரள் புடைப்பு (Galactic Bulge), பெரும்பாலும் பழைய மற்றும் சிவப்பு நிறம் கொண்ட சுமார் 10 பில்லியன் விண்மீன்களைத் தன்னுள் கொண்டுள்ள தகவலையும் விளிம்புப் பார்வை கூடுதலாகத் தருகிறது.   இடதுபுறப் நேர்ப்பார்வைப் படத்திலுமே திரள் புடைப்பைக் காணலாம்.  பாதி நீளம் சுமார் 10 000 ஒளி ஆண்டுகள் கொண்ட ஒட்டுமொத்தமாக நீட்டப்பட்ட இது வேர்க்கடலை வடிவை ஒத்த பட்டி போன்ற வடிவத்தைக் கொண்டுள்ளதால் பால்வழித் திரளை மையப் தண்டுள்ள சுழல் விண்மீன் திரளாக ஆக்குகிறது.

வட்டு மற்றும் மையப்புடைப்பிற்கு அப்பால் தோராயமாக 100 000 ஒளி ஆண்டுகள் ஆரம் கொண்ட விண்மீன் ஒளிவட்டம் (Stellar Halo) என்ற ஒரு கோள அமைப்புள்ளது. இப் பகுதி விண்மீன் திரளின் பெரிய, சிறிய, மிகப் பழமையான, தனித்த விண்மீன்களையும் (Isolated stars) மற்றும் பல கோளக விண்மீன் கொத்துகளையும் (Globular Clusters) கொண்டு கதம்பக் கூட்டமாகவே  உள்ளது.
பெரிய அளவில் நோக்கும் போது, பால்வீதி கண்ணுக்கு தெரியாத இருண்ட பொருளின் இன்னும் பெரிய ஒளிவட்டத்தில் பதிக்கப்பட்டுள்ளது.



நாம் வீடு (Home) என்றழைக்கும் சூரியக் குடும்பக் கோள்களின் அமைப்பு (Solar system of Planets) பால்வீதி விண்மீன் திரளின் (Milky way Galaxy) வெளிப்புற சுழல் கையில் (outer arm) அமைந்துள்ளது.
படம்(1)
நமது விண்மீன் சூரியன் மற்றும் ஈர்ப்பு விசையால் அதனுடன் பிணைக்கப்பட்டுள்ள பிற அனைத்தையும் கொண்டுள்ளதே நமது சூரிய குடும்பம். இதில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய எட்டு கோள்களும் புளூட்டோ போன்ற ஐந்து குறுங்கோள்களும், நூற்றுக்கணக்கான நிலவுகளும் மற்றும் மில்லியன் கணக்கான விண்கற்களும் , வால்மீன்களும் மற்றும் விண்கற்களும்அடங்கியுள்ளன.  நாசா தரும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இதுவரையில் 9,72,391 சிறு கோள்களும், 3,650 வால்மீன்களும் நம் சூரியக் குடும்பத்தில் உள்ளதாகத் தெரிகிறது.

சூரியக் குடும்பத்தின் மொத்த பொருண்மையில் அதாவது நிறையில் 99.85% சூரியனிலேயே செறிந்துள்ளது. சூரியனை உருவாக்கிய அதே வட்டுப் பொருளில் இருந்து சுருங்கி உருவான கோள்கள், சூரியக் குடும்பத்தின் நிறையில் 0.135% மட்டுமே உள்ளன. வியாழன் மற்ற அனைத்து கோள்களையும் விட இரண்டு மடங்குக்கும் அதிகமான பொருண்மையைக் கொண்டுள்ளது. கோள்கள் (Planets), வால்மீன்கள் (Comets), சிறுகோள்கள் (Asteroids), விண்கற்கள் (Meteorids), கோள்களின் துணைக்கோள்கள் (Satellites of the planets) மற்றும் கோள்களிடை ஊடகம் (Inter Planetary medium) ஆகியவற்றின் நிறை மீதமுள்ள 0.015% ஆகும். பின்வரும் அட்டவணை நமது சூரிய குடும்பத்தின் உறுப்பினர்களின் நிறை விநியோகத்தின் பட்டியல்.
சூரியன் (Sun):                                                              99.8500000%
கோள்கள் (Planets):                                                     00.1350000%
வால்மீன்கள் (Comets):                                              00.0100000%
துணைக்கோள்கள் (Satellites):                                 00.0000500%
சிறு கோள்கள் (Asteroids):                                          00.0000002%
விண்கற்கள் (Meteorids):                                             00.0000001%
கோள்களிடை ஊடகம் (Inter Planetary Medium):  00.0000001%
சூரியக் குடும்பத்தில் உள்ள புதன் (Mercury), வெள்ளி (Venus), பூமி (Earth) மற்றும் செவ்வாய் (Mars) ஆகிய நான்கு உள் கிரகங்கள் பூமியைப் போன்ற இறுகிய பாறை மேற்பரப்பைக் கொண்டிருப்பதால் நிலப் பரப்புக் கோள்கள்(Terrestrial Planets) எனப்படுகின்றன. வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் கோள்களில் குறிப்பிடத்தக்க அளவில் வளிமண்டலங்கள் (Atmospheres) உள்ளன ஆனால் புதனில் எதுவும் இல்லை. 
வியாழன் (Jupiter), சனி (Saturn), யுரேனஸ் (uranus) மற்றும் நெப்டியூன் (Neptune) ஆகியவை ஜோவியன் கோள்கள்(Jovian Planets) அதாவது வியாழன் போன்ற கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனென்றால் அவை அனைத்தும் பூமியுடன் ஒப்பிடும்போது அளவில் மிகப்பெரியவை. மேலும் அவை வியாழன் போன்ற ஒரு வாயு தன்மையைக் கொண்டுள்ளன. ஜோவியன் கோள்கள் வாயு ராட்சதர்கள் (Gas Giants) என்றும் குறிப்பிடப்படுகின்றன, இருப்பினும் அவற்றில் சில அல்லது அனைத்திலும் சிறிய திட உள்ளகங்கள் (Cores) இருக்கலாம்.
சூரியக் குடும்பம் கன அளவில் கிட்டத்தட்ட ஒன்றுமில்லாமல் வெற்றுமையாக வெற்றிடமாகவே தோன்றுகிறது. இந்த "வான்வெளி” (Space) என்ற வெற்றிடம், கோள்களிடை ஊடகத்தைக் கொண்டது. இது பல்வேறு வகையான ஆற்றல் மற்றும் குறைந்தது இரண்டு பொருட் கூறுகளை உள்ளடக்கியது. கோள்களிடைத் தூசு (Inter Planetary Dust) மற்றும் கோள்களிடை வாயு (Inter Planetary Gas). கோள்களிடைத் தூசு நுண்ணிய திட துகள்களைக் கொண்டுள்ளது. கோள்களிடை வாயு என்பது வாயு மற்றும் மின்னூட்டம் கொண்ட துகள்களைக்  (Charged Particles) கொண்டது. பெரும்பாலும் புரோட்டான்கள் (Protons) எலக்ட்ரான்கள் (Electrons) மற்றும் சூரியக் காற்று என்று அழைக்கப்படும் சூரியனில் இருந்து வெளிப்படும் பிளாஸ்மா. 



Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)