இந்திய வானியலாளர் - C. ரகூநாதச் சாரி



இதுதான் நம் நாட்டின் வரலாறு என்று பள்ளி, கல்லூரிப் பாடங்கள் வழியாக நமக்கு அறிமுகப் படுத்தப்பட்ட வரலாறு நம்மிடையில் வாழ்ந்த இந்திய அறிஞர்களை அதிகம் வெளிச்சமிட்டுக் காட்டவில்லை. மாறாக இந்தியாவிற்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காத யார்யாரையோ குறித்த பயனற்ற தகவல்களையே இதுகாறும் அரசுகள் வலிந்து திணித்து வந்துள்ளன என்பது என்னுடைய எண்ணம். என்னுடைய இந்தக் கருத்துடன் நீங்கள் மாறுபடலாம். சரி அதற்கான முழுச் சுதந்திரமும் உங்களுக்கு இருக்கிறது. இப்போது உங்களுக்கு ஒரு வினா. நம் நாட்டின் தன்னாட்சி பெற்ற முதல் வானியல் ஆய்வகம் (Observatory) எங்கு யாரால் ஏற்படுத்தப்பட்டது தெரியுமா? நிச்சயம் உங்களில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆக இந்தக் கட்டுரையின் அடிப்படை நோக்கமே சென்னயில் செயல்பட்ட இந்தியாவின் முதல் நவீன வானியல் ஆய்வுக்கூடம் குறித்த சில தகவல்களைப் பகிர்ந்து கொள்வதும் கூடவே  நாம் அறிந்திராத  அதிகம் பேசப்படாத இந்திய வானியல் அறிஞர் ஓருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதும்  தான். 



கி.பி.  9 மற்றும் 12 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் கேரளத்தில் பெருமாள் வம்சம் அல்லது மஹோதயபுரத்தின் சேரமான் பெருமாள் வம்சம் ஆட்சி செய்து வந்த்து. சேரமான் பெருமாள்களின் தலைநகரமான மாகோட்டை அல்லது மகோதயபுரம், மத்திய கேரளத்தின் இன்றைய கொடுங்கல்லூருடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், அவற்றின் செல்வாக்கு இன்றைய கொல்லத்திற்கும் (Kollam) கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள குயிலாண்டிக்கும்(Koyilandy) இடையிலான பகுதியிலேயே செயல்பட்டதாகவே அறியப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் வடக்கில் கேரளாவின் சந்திரகிரி நதியிலிருந்து தெற்கில் நாகர்கோயில் வரை நீட்டிக்கப்பட்டது. 



நம் நாட்டைப் பொறுத்தவரையில் ஒன்பதாம் நூற்றாண்டில் கேரளாவின் ஏற்படுத்தப்பட்ட மகோதயபுரம் (தற்போது கொடுங்கலூர்) வானியல் ஆய்வுக் கூடம்
(Mahodayapuram Observatory) தான் முதலாவது என்று சொல்லலாம். கி.பி. 844 - 883 ஆண்டுகளில் அப்போதைய சேர நாட்டின் அரசரான ரவி குலசேகரனின் அவையில் இடம் பெற்றிருந்தார் வானியலாளர் - கணிதவியலாளர் சங்கர நாராயணா.  இவரது காலம் கி.பி. 840 - கி.பி. 900 என்று அறியப்பட்டுள்ளது. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியக் கணிதவியலாளர் பாஸ்கரா-I எழுதிய நூல் லகு பாஸ்காரியா (Laghu Bhaskariya) கி.பி 869/870 ஆண்டில் லகு பாஸ்காரியாவிற்கு எழுதிய விரிவான விளக்கமான லகு பாஸ்கரியா விவரனா (Laghu Bhaskariya Vivarana /Vyakha) அல்லது வியாகா மூலம் சங்கர நாராயணா மிகவும் பிரபலமடைந்தவர். 


கொடுங்கல்லூரில் மன்னர் ரவி குலசேகராவின் தர்பாரில் இயற்றப்பட்ட லாகு பாஸ்கரியா விவரணாவின் ஏழாம் அத்தியாயத்தில் இந்நூல் சக ஆண்டு 791  அதாவது கி.பி 869/70 இல் இயற்றப்பட்டதாகத் தெளிவாகக் கூறுகிறது. இந்த ஆண்டு மன்னர் ரவி குலசேகரரின் ஆட்சியின் வெள்ளி விழா ஆண்டு என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவரனாவின் இரண்டாவது வசனத்தில் சங்கர நாராயணன் கணிதத் துறையில் ஆரியபட்டா, வராகமிகிரர், பாஸ்கரா I, கோவிந்தா மற்றும் ஹரிதத்தா ஆகிய ஐந்து முக்கிய முன்னோடிகளையும் நினைவு கூர்ந்துள்ளார். இவர்களில்  கி.பி. 800 முதல் 860 வரையான காலத்தில் வாழ்ந்த கோவிந்தா  அவரது குருவாக இருந்திருக்கச் சாத்தியமுள்ளது. சங்கரா நாராயணா மத்திய கேரளாவின் கொடுங்கல்லூர் துறைமுகத்தில் ஒரு வானியல் ஆய்வகத்தை நிறுவியதாக அறியப்படுகிறது.


இன்றைக்குச் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக1786 ஆம் ஆண்டில் தற்போதைய சென்னை எழும்பூரில் மெட்ராஸ் ஆய்வகம் (The Madras Observatory) என்ற பெயரில் சிறியதோர் தனியார் வானியல் ஆய்வகம் மெட்ராஸ் அரசாங்கத்தின் உறுப்பினரும் தன்னார்வ வானியலாருமான வில்லியம் பெட்ரி (William Petrie) என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் நவீன வானியல் ஆய்வுக் கூடம் இதுதான்.  

மெட்ராஸ் வானியல் ஆய்வகத்தின் தொடர் அவதானிப்புகள் 1786 ஆம் ஆண்டில் வில்லியம் பெட்ரி யின் பெரும் முயற்சியால் தொடங்கியது. அப்போது மூன்று அங்குல நிறக்குலைவற்ற தொலைநோக்கிகள் (three-inch achromatic telescopes) இரண்டு, கூட்டு ஊசல்களுடன் கூடிய வானியல் கடிகாரங்கள் (astronomical clocks with compound pendulums) இரண்டு மற்றும் விண்மீன்களின் நிலையறியும் கருவி (Transit instrument) ஒன்று ஆகியவைதான் மெட்ராஸில் துவங்கப்பட்ட புதிய ஆய்வகத்தின் பயன்பாட்டுக் கருவிகளின் கருப்பொருட்கள் ஆக இருந்தன. ஆய்வகம் விரைவில் விண்மீன்கள், சந்திரன் மற்றும் வியாழனின் துணைக்கோள்களின் கிரகணங்கள் குறித்த தொடர்ச்சியான அவதானிப்புகளை தொடங்கியதுடன், தீர்க்கரேகையைத் துல்லியமாகத் தீர்மானிப்பதே அதன் முதல் நோக்கமாக இருந்தது.



பணி நிறைவுக்குப் பின்னர் இங்கிலாந்துக்குச் செல்லும் முன்பு பெட்ரி தனது கருவிகளை மெட்ராஸ் அரசுக்குப் பரிசளித்தார். இந்தியாவில் வானியல், புவியியல் மற்றும் வழிசெலுத்தல் பற்றிய அறிவை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக ஒரு அதிகாரப்பூர்வ ஆய்வகத்தை நிறுவ வேண்டும் என்ற பெட்ரியின் வேண்டுகோளை அப்போதைய மெட்ராஸின் ஆளுநர் சர் சார்லஸ் ஓக்லி (Sir Charles Oakeley,) ஏற்றுக்கொண்டார். 18 ஆம் நூற்றாண்டின் கடைசியில் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வானியல் (Astronomy), புவியியல் (Geography) மற்றும் வழிசெலுத்தல் (Navigation) பற்றிய அறிவை மேம்படுத்துவதற்காக மெட்ராஸில் (தற்போது சென்னை) ஒரு ஆய்வகத்தை நிறுவத் தீர்மானித்தது. ஆய்வகத்திற்கான கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 1792 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. பின்னர் 1792 முதல் இப்போது சென்னை என அழைக்கப்படும் மெட்ராஸில்  எழும்பூரிலிருந்த வானியல் ஆய்வு நிலையம் நுங்கம்பாக்கத்திற்கு இடம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் மாற்றப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. இந்தக் கட்டிடத்தை நுங்கம்பாக்கத்தில் கூவம் ஆற்றின் கரையில் மைக்கேல் டாப்பிங் (Michael Topping) வடிவமைத்தார். இக் கட்டிடம் 40 அடி நீளமும் 20 அடி அகலமும் 15 அடி உயரத்தில் கூரையையும் கொண்ட ஒரு அறை. விண்மீன்களின் நிலையறியும் சிறிய அசல் கருவி (Original Transit Instrument), பெரிய கருங்கல் தூணில் நிறுவப்பட்டு கப்பல் மூலம் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. அந்தத் தூணில் ஆங்கிலம், லத்தீன், தமிழ், தெலுங்கு மற்றும் இந்துஸ்தானி மொழிகளில் கல்வெட்டு உள்ளது.







 படங்கள்: https://www.rohinidevasher.com/old-madras-observatory-field-notes-1/






http://www.amsschennai.gov.in/aboutrmc.html

மேலே குறிப்பிட்ட 10 டன் கருங்கல் தூண், இங்கிலாந்தில் டிரொஃப்டனால் (Troughton) தயாரிக்கப்பட்ட 12 அங்குல திசைக் கோண வட்ட நிலையறியும் கருவியைத் (12-inch azimuth transit circle instrument) தாங்கிவாறு கட்டிடத்தின் மையத்தில் நிறுவப்பட்டது. இந்த ஆய்வகத்தை நிறுவுவதற்கான முக்கிய நோக்கம் அட்சரேகைகளைப் பதிவுசெய்து நேரத் தரவுகளைப் பராமரிப்பதன் மூலம் வழிசெலுத்தல் மற்றும் வரைபடத்திற்கு உதவுவதாகும். பிற்காலத்தில், ஆய்வகம் நட்சத்திரங்கள் மற்றும் புவி காந்தவியல் பற்றிய அவதானிப்புகளையும் மற்றும் ஒரு முக்கிய வேலையாக நட்சத்திரங்களின் விரிவான பட்டியலை தயாரிக்கும் பணியையும் மேற் கொண்டது. இந்த ஆய்வுக்கூடம் சுமார் 1792 முதல் 1931 வரை கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டது.





 Image Courtesy : 

The interpretive panel at the site of the original Madras Observatory building (http://www.rohinidevasher.com/old-madras-observatory-field-notes-1/img_20160901_115544/)



ஆய்வுக் கூடத்தின் முதல் வானியலாளராக மைக்கேல் டாப்பிங்1794 ஆண்டு வரையில் செயல்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 1794 ஆம் ஆண்டில் அவர் பெங்காலின் முதன்மை அளவீட்டாளராக (Chief Surveyor of Bengal) நியமிக்கப்பட்டாலும் 1795 ஆன்டு மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளில் பங்கு கொண்டிருக்கிறார் எனத் தெரிகிறது.

அவருக்குப் பின்னர் ஜான் கோல்டிங்ஹாம் (John Goldingham) 1804 வரையில் வானியலாளராக செயல்பட்டதாகத் தெரிகிறது. 1805 முதல் 1811 வரையில் ஜான் கோல்டிங்ஹாம் இங்கிலாந்திற்கு விடுப்பில் சென்றிருக்கிறார். பெட்ரியின் பரிந்துரையின் பேரில் அப்போது 33 வது காலாட்படையின் தலைவரான கேப்டன் ஜான் வாரனுக்கு வானியலாளர் பொறுப்பு தரப்பட்டது. ஜான் வாரன் வானியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநராகத் தொடரவே விரும்பினார். ஆனால் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகம் கம்பெனியைச் சேர்ந்த அலுவலரே வானியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநர் பொறுப்பை வகிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. ஆகவே வாரனைப் பொறுப்பிலிருந்து நீக்கியது. 


ஜான் கோல்டிங்ஹாம் (John Goldingham) மீண்டும் இரண்டாம் முறையாக 1812 ஆம் ஆண்டில் மெட்ராஸ் வானியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநராகப் பொறுப்பில் அமர்ந்தார். கோல்டிங்ஹாம் ஒரு கட்டுமானப் பொறியாளராக இருந்தாலும், அவர் கம்பெனியின் கட்டுமானத் துறையின் செயல்பாடுகளில் குறுக்கிடக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.1808 ஆம் ஆண்டில் பொருளாதாரக் காரணங்களுக்காக கிழக்கிந்தியக் கம்பெனி மெட்ராஸ் வானியல் ஆய்வகத்தை மூட முடிவு செய்தது. ஆனால் தனது ஆய்வுக்கூடக் கருவிகளை நன்கொடையாக அளித்த பெட்ரியின் விடாமுயற்சியால் இந்த முடிவு கைவிடப்பட்டது. கோல்டிங்ஹாம் 1830 ஆம் ஆண்டு வரையில் வானியல் ஆய்வுக்கூடத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். 



Image courtesy : 
By Unknown author - Family album, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=47141820


“ரகூநாதச் சாரி” என்று சிலராலும் அல்லது “ரகுநாதாச் சாரி” என்று வேறு சிலராலும் பெயரிட்டு அழைக்கப்படும் சிந்தாமணி ரகூநாதச் சாரி  அவர்கள் 1840 ஆம் ஆண்டில் மெட்ராஸ் ஆய்வகத்தில் தன் பதினெட்டாம் வயதில் இளம் கூலித் தொழிலாளியாகவே T.G. டெய்லரின் கீழ் பணியில் சேர்ந்தார். அவர் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் அரசாங்க வானியலாளரின் முதல் மற்றும் தலைமை உதவியாளராக உயர்ந்தார். ரகுநாதச் சாரி வாழ்ந்த நுங்கம்பாக்கம் அன்றைய காலகட்டத்தில் ஒரு கிராமமாக மெட்ராஸ் ஆய்வகத்திற்கு அருகில் இருந்தது. இன்று அப்பகுதி சென்னையில் மிகப் பிரபலமான பெரும் பணம் படைத்தவர்கள் வசிக்குமிடமாக உள்ளது. 

இந்துக்களின் காலக்கணிப்பு முறை வாரம், திதி, கரணம், யோகம், நட்சத்திரம் என்று ஐந்து உறுப்புகளைக் கொண்டது. ஆகவே பஞ்ச அங்கம் அதாவது ஐந்து உறுப்புகள் என்ற பொருளில் பஞ்சாங்கம் அழைக்கப்படுகிறது. ரகூநாத சாரியின் முன்னோர்கள் பஞ்சாங்கம் தயாரிக்கும் இந்திய வானியலாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. ரகூநாதச் சாரி அவரது குழந்தைப் பருவத்திலேயே சிறப்பான வடமொழிக் கல்வியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் சித்தாந்த வானியல் நூல்களை பகுப்பாய்வு செய்திருக்க வேண்டும் என்றும் தெரிகிறது.

கூலியாக 1840 ஆம் ஆண்டு பணியைத் துவக்கிய ரகூநாதச் சாரி,  வானியலாளர் என்ற நிலையை இருபத்து நான்கு ஆண்டுப் பணிக்குப் பின்னர்தான் 1864 ஆம் ஆண்டில்தான் அடைய முடிந்தது  . அவர் தனது உயரதிகாரியான போக்சனுடன் ஆக்கபூர்வமான தொழில் உறவை ஏற்படுத்திக் கொண்டார். ஆய்வகத்தில், மெட்ராஸ் பட்டியலுக்காக (The Madras Catalogue) விண்மீன்களை அவதானித்து அவற்றின் நிலைகளைத் தீர்மானிப்பதே அவருக்குத் தரப்பட்ட முதன்மையான பொறுப்பாக இருந்தது. 


போக்சனின் உதவியாளராகப் பணி உயர்வு பெற்ற மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1867 ஆம் ஆண்டில், ஆர் ரெட்டிகுலி (R.Reticuli) என்ற பொலிவு மாறும் விண்மீனை ரகூநாதச் சாரி கண்டுபிடித்தார். இது குறித்து கனடாவின் ராயல் அஸ்ட்ரானோமிகல் சொசைட்டியின் (The Royal Astronomical Society of Canada) ஆய்விதழில் வெளியிடப்பட்ட 1991 ஆம் ஆண்டின் ஆய்வறிக்கையில், “1867 ஆம் ஆண்டில், போக்சனின் உதவியாளர் சி.ரகூநாதச் சாரி என்பவரின் பொலிவு மாறும் விண்மீனான ஆர். ரெட்டிகுலியின் (R.Reticuli) கண்டுபிடிப்பு, இந்தியர் ஒருவரின் முதல் வானியல் கண்டுபிடிப்பு என்பது நினைவில் கொள்ளத்தக்கது” என்று பதிவிட்டுள்ளது.


மற்றொரு பொலிவு மாறும் விண்மீனான ‘வி செஃபி’(V Cephei) அல்லது ‘யு செஃபி’ 
(U Cephei) கண்டுபிடிப்புமே இந்திய வானியலாளரான ரகூ நாத சாரிக்கு  உரியது என்று சிலர் கூறி வந்தாலும்,மெட்ராஸ் ஆய்வகம் (Madras Observatory) அத்தகவலை உறுதி செய்யவில்லை.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பாரம்பரிய இந்துக்கள் பயன்படுத்திய நாட்காட்டிகள் சரியாகக்  கணிக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. பாரம்பரிய பஞ்சாங்கத்தின் கணிப்புகள் மிகவும் துல்லியமற்றதாகக் காணப்பட்டதால் விண்மீன்களின் நிலையில் பிழைகள் இருந்தன மேலும், பழைய முறையில் கிரகணங்கள் நிகழாத போதும் தவறாக கிரகணங்களை முன்னறிவிப்புச் செய்தன. பம்பாயில் சத்ரே மற்றும் கேத்கர் ஆகியவர்கள் வாக்ய பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாக்கியப் பஞ்சாங்கக் கணக்கீடுகளை மாற்றுவதற்கு திருக்கணித பஞ்சாங்கத்தை முன்மொழிந்தனர். 



மதராஸ் மாகாணத்தில் புழக்கத்தில் இருந்த வாக்கியப் பஞ்சாங்கத்தை  மாற்றியமைத்து வெளியிடுவதற்கான இதே போன்ற முயற்சியை வெங்கடகிருஷ்ணா ராயா மற்றும் வானியலாளர் சிந்தாமணி ரகூநாதாச்சாரி ஆகியோரும் மேற்கொண்டார். பாரம்பரியவாதிகள் ரகூநாதாச்சாரியின் முயற்சிகளையும், அவரது அறிவியல் ஆர்வத்தையும் எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.  ரகூநாதச்சரியின் திருக்கணித பஞ்சாங்கம் பாரம்பரியமான ஐந்து நாட்காட்டிக் கூறுகளை வழங்கியது மட்டுமல்லாமல், ஆங்கில மாதங்கள் மற்றும் தேதிகளுடன் ஒத்திசைவையும் வழங்கியது. எனவே, இந்த பஞ்சாங்கம் மிகவும் நடைமுறை பயன்பாட்டுக்கு வசதியாக இருந்ததால் அரசாங்க நிறுவனங்களில் பணிபுரியும் உள்நாட்டு அதிகாரிகள் அல்லது அரசாங்கத் தொடர்பு கொண்ட செயல்பாடுகளைக்  கையாளுபவர்களுக்கு திருக்கணிதப் பஞ்சாங்கத்தைப் பயன்படுத்துவது எளிதாக இருந்தது. 




திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கும் வாக்கியப் பஞ்சாங்கத்திற்கும் இடையிலான சிக்கலைத் தீர்க்கும் பொருட்டு கும்பகோணத்தில் சங்கர மடத்தில் விவாதக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அறிவியல் ரீதியாகத் தன் பக்கத்து வாதங்களை முன் வைத்து திரு. ரகூநாதச் சாரி எதிப்பாளர்களுக்குப் பதிலளித்தார். கடுமையான விவாதங்களுக்குப் பின்னர் திருக்கணித முறை அல்லது திருக் (Drig) முறை ஏற்றுக் கொள்ளப்பட்டது. வருங்காலங்களில் புதிய பஞ்சாங்கங்கள் தயாரிக்கப்படும் போது திருக்கணித முறை காட்டும் நெறி முறையிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. அதன்படி, 1877 ஆம் ஆண்டில் மடத்தின் தலைவரான அப்போதிருந்த காஞ்சி சங்கராச்சாரியார், “திருக்” அமைப்புக்கு ஆதரவை உறுதிசெய்து ஆசீர்வாத செய்தி வெளியிட்டார். அன்று முதல் “ஸ்ரீ காஞ்சி மடத்தின் பஞ்சாங்கம்” (Sri Kanchi math almanac) என்ற பெயரில் மடத்தின் ஆதரவுடன்  திருக் (Drig) பஞ்சாங்கத்தை வெளியிடத் தொடங்கியது. 


அப்போதைய மெட்ராஸ் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளருக்கு போக்சன் (Pogson) எழுதிய கடிதத்தில், “நன்கு கணக்கிடப்பட்ட சாரியின் கண்டுபிடிப்புகள், அறிவுறுத்துவதற்கும் அதே நேரத்தில் அறியாத பூர்வீக மக்களின் மூடநம்பிக்கைகளை அகற்றுவதற்கும், மேலும் புராணங்களிலிருந்து சுட்டிக்காட்டப்பட்ட மேற்கோள்களாலும் பிற கனமான வாதங்களாலும் கிரகணங்களை மிகவும் ஆபத்தானதாக மாற்றும் அபத்தமான கருத்துக்களை அவர்களின் சொந்த மதம் சார்ந்த எழுத்துக்களே அங்கீகரிக்கவில்லை என்பதைக் காட்டுகின்றன”என்று குறிப்பிடுகிறார்.

முக்கியமான அவரது பங்களிப்புகளில் குறிப்பிடத்தக்கது, முழுச் சூரிய கிரகணங்கள் (Total solar Eclipses) அல்லது சூரியனுக்கு மேல் கிரகங்களின் இயக்கம் (Transit of planets over the sun) போன்ற முக்கிய வான நிகழ்வுகளைப் பற்றிய அவரது அவதானிப்புகளைத் (observations) துண்டுப்பிரசுரங்களாக (pamphlets) வெளியிடுவது. அவ்வாறு வெளியிடும் துண்டுப் பிரசுரங்கள் வெறுமனே ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் பல இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டன. இந்தத் துண்டுப்பிரசுரங்களில், அவர் மேலே கூறப்பட்ட நிகழ்வுகளுக்கு அறிவியல் பூர்வ விளக்கம் தருவதுடன் கூடவே சிறப்பான தரவுகளுடன் நமது மண்ணின் வானியல் முறைகளையும் மற்றும் கணக்கீடுகளையும் எவ்வாறு மேம்படுத்துவது என்பதை விளக்குவார். உதாரணமாக, 1874 இல் வீனஸ் இயக்க நிகழ்வு  (Transit of Venus) குறித்த தனது துண்டுப்பிரசுரத்தில், அவர் இவ்வாறு கூறுகிறார், "இது வழக்கமான அறிவியல் பூர்வ வாசித்தலின் எந்தவொரு பயனையும் அடைய இயலாத எனது நாட்டு மக்கள் அறிந்து கொள்வதற்காகவே முக்கியமாக எழுதப்படுகிறது". 

எந்தப் பிரிவின் கீழ் வெள்ளிக் கோளின் இயக்க நிகழ்வு (Transit of Venus)  வருகின்றது என்பது இந்துமத வானியல் கட்டுரையில், குறிப்பாகச் சித்தாந்த சிரோமணியில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், சித்தாந்திகள் அல்லது இந்துமத வானியலாளர்கள் இது போன்ற விசித்திரமான மற்றும் அரிதான இடைவெளியில் நடக்கிற இந்த இயற்கை நிகழ்வின் தன்மையைச் சரிவர அறிந்திருக்கவில்லை. ஆகவே துல்லியமாக இல்லாவிட்டாலும் தோராயமான அணுகுமுறையில் கூடக் கணக்கிட்டு வெள்ளிக் கோளின் இயக்க நிகழ்வை (Transit of Venus) முன்னுரைக்க இயலவில்லை. வானியல் உண்மைகள் குறித்து 'இந்துப் பேராசிரியர்களுடன்' விவாதிப்பதிலிருந்து அவர் கற்றுக்கொண்ட உரையாடல் (சம்வதம்) வடிவத்தில் ஆங்கில பதிப்பை எழுதிய ரகூநாதச் சாரி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம், மராத்தி போன்ற பிற மொழிகளில் தனது படைப்புகளை எடுத்துரைக்க வெவ்வேறு உத்திகளைக் கையாண்டார்.





 Image Courtesy :The cover page of the Urdu version of Ragoonatha Charry’s booklet about the 1874 transit of Venus (Courtesy Kochhar 1991c: 87)

1868 ஆம் ஆண்டின் மொத்த சூரிய கிரகணத்தின்போது சூரியனின் தோற்ற இயக்கப் பாதையில் (Ecliptic path of the sun) உள்ள விண்மீன்கள் மறைக்கப்படுவதை அதாவது சூரிய கிரகணத்தில் ஏற்படுவது போன்று பார்வையாளரின் பார்வையில் இருந்து ஒரு வான் பொருள் மற்றொன்றின் முன்பாகச் செல்லும் போது மறைக்கப்படுவதையும் இன்ன பிறவற்றையும் முன்னுரைக்கும் அளவிற்குத் தனது கணித அறிவைப் போதுமான அளவு சுயகற்றல் வழியில் செழுமைப் படுத்திக் கொண்டவர். மெட்ராஸ் ஆய்வகத்தில் அரசாங்க வானியலாளராக இருந்த என். ஆர். போக்சன் இவரைக் குறித்து எழுதும் போது, “ரகூநாத சாரிகூடுதல் அவதானிப்புகளைச் செய்ய போதுமான திறமையும் ஆற்றலும் கொண்டவர். ஆய்வகத்தின் நற்பெயருக்கேற்ற தகுதி உடையவர் மற்றும் இவரது சேவை அறிவியலுக்கு நன்மை பயக்கும்.” என்று குறிப்பிடுகிறார். 



19 ஆம் நூற்றாண்டின் வானியலாளரான சிந்தமணி ரகூநாத சாரி, இந்தியாவில் நவீன வானியல் வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்தவர். ஆய்வுக் கட்டுரையை 'ராயல் வானியல் சங்கத்தின் மாதாந்திர அறிவிப்புகள்' வெளியீட்டில் வெளியிட்ட முதல் இந்திய வானியலாளர் ஆவார் மற்றும் 1872 ஜனவரி 12 அன்று ராயல் வானியல் சங்கத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர். 1864  ஆம் ஆண்டில் மெட்ராஸ் ஆய்வகத்தின் முதல் உதவியாளராக உயர்ந்த அவர், பயிற்சி மற்றும் கல்விக்காக ஒரு தன்னாட்சி பெற்ற நவீன இந்திய ஆய்வகத்தை நிறுவுவதில் 1880 ஆம் ஆண்டில் வெற்றிபெற்றார். வானியல் கணக்கீடுகளின் பாரம்பரிய முறைகளை மேலும் மேம்படுத்த நவீன அவதானிப்பு முறைகளைத் தூண்டினார் மற்றும் ஆர் ரெட்டிகுலி உட்பட இரண்டு மாறி நட்சத்திரங்களைக் கண்டுபிடித்தார். இதற்கிடையில், அவர் தன் சொந்த மண்ணில் இந்திய விண்வெளி ஆய்வகத்தை நிறுவியதன் மூலம் ஒரு செயல் வீரனாகவும் திகழ்ந்தார். 


1874 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதியன்று மெட்ராஸில் உள்ள பச்சையப்பன் மண்டப அரங்கத்தில் அவர் உரையாற்றும் போது கூறுகிறார், “இதுபோன்ற இடங்கள் [Observatories] ஐரோப்பாவில் நூற்றுக்கணக்கான இடங்களில் உள்ளன. ஆகவே அவற்றுக்கான தேவை இந்தியாவிற்கே  அதிகமாக உள்ளது. இதற்கொன்றும் அதிகம் நிதி வேண்டாம், சிறிது திட சித்தம், உறுதியான நோக்கம் ஆகியவற்றை இணைத்துக் கொண்டு  அறிவியலுக்கு மதிப்பளிப்பதன் வாயிலாக, விரைவில் தென்னிந்தியாவின் பெருநகரமானது ஒரு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டால் அதன் மூலமாக நாட்டிற்கே மரியாதை ஏற்படும்”. 

பச்சையப்பன் மண்டப அரங்கத்தில்  உரையை நிகழ்த்திய  ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து 
1880 பிப்ரவரி 5 அன்று காலமானார்.

















Comments

  1. நல்ல தகவல். பயனுள்ளதாக இருந்தது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)