நார்மன் ராபர்ட் போக்சன்
நேற்று விண்மீன்களின் பொலிவு குறித்த ஒரு காணொலி தயாரித்துக் கொண்டிருந்தேன். அப்போது விண்மீன்களின் தோற்றப் பொலிவெண் (Apparent magnitude) குறித்த தற்போது நடை முறையில் பயன்படுத்தப்படும் எண் மதிப்பு அளவீட்டு முறையை (magnitude scale) உருவாக்கிய நார்மன் ராபர்ட் போக்சன் (Norman Robert Pogson) சென்னையில் வாழ்ந்து மறைந்த ஆங்கிலேயர் என்ற விபரம் அவரைப் பற்றி இன்னும் அதிகமான விவரங்களை அறிந்து கொள்ள என்னைத் தூண்டியது. அதனால் இணையத்தளத்தில் அவர் குறித்துத் தேடிய போது ஆங்கிலத்தில் கிடைத்த தகவல்களைத் திரட்டித் தமிழில் தருகிறேன்.
நார்மன் ராபர்ட் போக்சன் (Norman Robert Pogson) இங்கிலாந்த்தில் நாட்டிங்காம் (Nottingham) என்ற இடத்தில் 1829 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை ஜார்ஜ் ஓவன் போக்சன் (George Owen Pogson) உள்ளாடைகள், சரிகை விற்பனையாளராகவும் மற்றும் தரகு முகவராகவும் தொழில் செய்து கொண்டிருந்தார். தங்களது பெரிய குடும்பத்தின் வருமானத்திற்கு உதவியாக இருக்கவும், தந்தையின் தொழிலைக் கவனிக்கவும் வேண்டி போக்சன் வணிகவியல் கற்றவே அனுப்பப்பட்டார். ஆனால் போக்சனின் மனமோ அறிவியலையும் கணிதத்தையும் நாடியது. அவரது கணிதத்தின் மீதான ஆர்வத்திற்கு அவரது தாயார் மேரி ஆன் (Mary Ann) ஆதரவாக இருந்து ஊக்கப் படுத்தினார்.
படம்: நார்மன் ராபர்ட் போக்சன் (1829 - 1891)
Picture Courtesy : Indian Institute of Astrophysics - archives
போக்சனின் தொடக்க காலக் கல்வி ஒன்றும் முறையானதாக இல்லை. தனது பதினாறாவது வயதில் கணிதம் போதிக்கும் எண்ணத்தில் பள்ளிப்படிப்பை விட்டு விட்டார். தனது பதினெட்டாம் வயதில் ராயல் வானியல் சங்கத்தின் (Royal Astronomical Society) ஜான் ரஸ்ஸல் ஹிண்ட் (John Russell Hind) உதவியுடன் வால்மீன்கள் (Comets) இரண்டின் சுற்றுப்பாதையைக் கணக்கிட்டார். இதன் பின்னர் 1846 ஆம் ஆண்டில் ஜார்ஜ் பிஷப் வானியல் ஆய்வுக் கூடம் (George Bishop Observatory) மூலம் வானியலுக்கு அறிமுகமானார். வால்மீன்கள் குறித்த ஆய்வுகளில் இவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. ஐசிஸ் (Isis)என்ற சிறு கோள் (Asteroid) குறித்து ஆய்வுகள் மேற் கொண்டார். இதற்கிடையில் அவரது இருபதாவது வயதில் 1849 ஆம் ஆண்டில் லண்டனில் எலிசபெத் ஜேன் ஆம்ப்ரோஸைத் (Elizabeth Jane Ambrose) திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குப் பதினோரு குழந்தைகள் பிறந்தன.
1852 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டின் ராட்கிளிஃப் வானியல் ஆய்வுக் கூடத்தில் (Radcliffe Observatory) உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். இங்கு அவருக்கு ஐஸிஸ் (Isis) என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தமைக்காக லாலான்ட் பதக்கம் (Lalande medal) வழங்கப்பட்டது. ஆக்ஸ்போர்டில் பணியாற்றிய காலத்தில் வழக்கமான ஆய்வுப் பணிகளுடன் பொலிவுமாறு விண்மீன்கள் (variable stars) குறித்தும் ஆய்வுகள் செய்தார். 1854 ஆம் ஆண்டில் ஜார்ஜ் ஏர்ரி (George Airy) யின் புவியின் அடர்த்தி காணும் சோதனைகளில் பங்கு கொண்டு உதவினார்.
1859 ஆம் ஆண்டில் ஜான் லீ (John Lee) க்குச் சொந்தமான ஹார்ட்வெல் வானியல் ஆய்வுக் கூடத்தின் (Hartwell observatory) இயக்குநராகப் பொறுப்பேற்றார். 1859 முதல் 1860 வரையில் பொலிவுமாறு விண்மீன்கள் (variable stars) மற்றும் சிறு கோள்கள் (asteroids) குறித்த 14 ஆய்வுக்கட்டுரைகளை ராயல் வானியல் ஆய்வுச் சங்கத்தின் மாதாந்திர அறிவிப்புகளில் (Monthly notices of Royal Astronomical Society) வெளியிட்டார். 1860 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் அரசாங்க வானியலாராகப் பணிபுரியும் பொருட்டு சர் சார்லஸ் உட் (Sir. Charles wood) இவரை நியமனம் செய்தார்.
1861 ஆண்டு சென்னைக்கு வந்த திரு. போக்சன் சென்னை வானியல் ஆய்வுக்கூடத்தில் ( Madras Observatory) பணிபுரியும் போது 67 ஏசியா
(67 Asia) உள்ளிட்ட ஐந்து சிறு கோள்களையும், ஏழு பொலிவு மாறு விண்மீன்களையும் அடுத்த ஏழு ஆண்டுகளில் தன் இடைவிடா உழைப்பால் கண்டு பிடித்தார்.
படம்: சென்னை வானியல் நிலையம்
சென்னையில் அமைந்த முதல் வானியல் ஆய்வு நிலையத்தின் எச்சங்களாக இன்றைக்கு மீதம் இருப்பது மேலே படத்தில் உள்ள பதினைந்து அடி உயரத் தூண் மட்டுமே.
https://www.thehindu.com/news/cities/chennai/the-origins-of-the-weatherman-in-madras/article5045891.ece
Photo credit : M. Vedhan
அடுத்து தொடர்ந்து வரும் பதிவுகளில் இது குறித்து விரிவாகக் காண்போம்.
படம் : 1880 ஆம் ஆண்டில் சென்னை வானியல் ஆய்வு நிலையம்
(Madras observatory - 1880)
நன்றி: ru:Погсон, Норман Роберт - http://prints.iiap.res.in/handle/2248/714
1831 முதல் 1842 வரையில் பணிபுரிந்த T.G. டெய்லர் (T.G.Taylor) 1831 ஆம் ஆண்டில் துவங்கி 1835 ஆம் ஆண்டில் வெளியிட்ட (Taylor’s Madras catalogue) டெய்லரின் மெட்ராஸ் அட்டவணை என்ற 11,015 விண்மீன்கள் குறித்த தகவல்களைக் கொண்ட அட்டவணையைக் கையில் எடுத்துக் கொண்ட போக்சன், 1887 ஆம் ஆண்டு வரையில் தொடர்ந்து 51,101 பதிவுகளை அதில் தன் பங்காகப் பதிவு செய்தார். 1891 ஆம் ஆண்டில் போக்சனின் இறப்புக்குப் பின் இந்த அட்டவணையை ஆர்தர் டவுனிங் (Arthur downing) சீரமைத்து 1901 ஆம் ஆண்டில் வெளியிட்டார். தாய் நாட்டை விட்டு இந்தியாவில் தனித்திருந்த போதிலும், அவர் தன் வாழ்நாளில் 134 விண்மீன்கள், 106 பொலிவுமாறு விண்மீன்கள், 21 பொலிவு மாறு விண்மீனாக இருக்க வாய்ப்புள்ள விண்மீன்கள் மற்றும் 7 சூப்பர் நோவா சாத்தியங்களைக் கண்டறிந்துள்ளார்.
1868 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் நாள் சூரிய கிரகணத்தை முன்னிட்டுச் சிறப்புப் பயணமாகப் போக்சன் மசூலிப் பட்டணத்திற்குச் சென்றார். அப்போது மேற்கொண்ட சூரிய நிறமாலை ஆய்வுகளின் போது புதிய நிறமாலை வரியைக் கண்டதைக் குறித்து பதிவு செய்திருந்தார். இந்த வரி ஹீலியம் தனிமத்தைச் சேர்ந்தது. அதே நேரத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜூல்ஸ் ஜான்சென் (Jules Janssen) குண்டூரில் மேற்கொண்ட நிறமாலை ஆய்வுகளின் பின்னரே ஹீலியம் (Helium) தனிமம் இருப்பது முதன் முதலாகத் தெரிய வந்தது . புதிய தனிமம் சூரியனில் இருப்பதால் சூரியன் (Helios) என்ற பொருள் படும் ஹீலியம் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிகழ்வுகளுக்குப் பின் அடுத்த ஆண்டில் அதாவது 1869 இல் அவரது மனைவி ஜேன் ஆம்ப்ரோஸ்காலமானார் .
வானியலில் அவரது மிக முக்கியமான பங்களிப்பு என்பது “போக்சன் விகிதம்” (Pogson’s ratio) என்பதுதான். ஹிப்பார்கஸ் (Hipparchus) விண்மீன்களின் தோற்றப் பொலிவில் (Apparent magnitude) ஏற்படுத்திய ஆறு படி நிலை அளவுகளில் இவர் செய்த மாற்றம் தான் அது. அதாவது முதல் படி நிலை அளவில் (First magnitude) உள்ள விண்மீனின் தோற்றப் பொலிவு 1 என்றால் ஆறாவது படிநிலையில் (Sixth magnitude) உள்ள விண்மீனின் தோற்றப் பொலிவு 1/100 என்பதே. அதாவது 5√100 அல்லது (100)1/5 = 2.521 மடங்குகளாக முதல் படி நிலையிலிருந்து ஒவ்வொரு படியாக நேர்த் திசையில் செல்ல பொலிவு குறையும். அதுவே எதிர்க்குறித் திசையில் செல்ல மதிப்பு அதிகரிக்கும். அடுத்தடுத்த எந்த இரு படிநிலைகளுக்கும் உள்ள விகிதம் மாறாத மதிப்புடையது அது 5√100 = (100)1/5 = 2.521. இது எதிர் லாகிரிதத் தன்மை (reverse logarithmic) கொண்டது. அதாவது படி நிலை எண் (magnitude) கூட பொலிவு (Brightness) மதிப்புக் குறையும் .
m1 : m6 = 1: 1/100.
m1- m2 = 2.5 log(L1/L2)
இதில் m என்பது விண்மீனின் படி நிலை அளவீடு (Apparent magnitude).
L என்பது சார்பிலாப் பொலிவு.
1868, 1871 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த இந்தியச் சூரிய கிரகணப் பயணங்களில் பங்கு கொண்டார். 1872 ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று எர்ன்ஸ்ட் ப்ரீட்ரிக் வில்ஹெல்ம் கிளிங்கர்பியூஸிடமிருந்து (Ernst Friedrich Wilhelm Klinkerfues) என்னும் ஜெர்மானிய வானியலாளரிடமிருந்து போக்சனுக்கு ஒரு தந்தி கிடைத்தது. அதில், “பீலா (Biela) 27 ஆம் தேதி பூமியைத் தொட்டது. தீட்டா செண்டூரிக்கு அருகில் தேடுங்கள்” என்று தகவல் இருந்தது. குறிப்பிட்ட பீலா ஒரு வால்மீன். துரதிர்ஷ்டவசமாக மெட்ராஸில் வானம் மேகமூட்டமாக இருந்தது வானம் தெளிவடையும் போது டிசம்பர் 2 ஆம் தேதி ஆகி விட்டது. அப்போது அவர் ஒரு பொருளைக் கண்டார் அதனை X/1872X1 எனப் பதிவுசெய்தார். இது பீலாவின் வால்மீனின் மறு வருகை என்று அவர் நம்பினார். ஆனால் பின்னர் அது வேறு ஒரு வான் பொருளாகக் கண்டறியப்பட்டது. அதுவே பின்னாளில் "போக்சனின் வால்மீன்" (Pogson’s Comet) என்று அழைக்கப்படுகிறது.
மனைவி ஜேன் ஆம்ப்ரோஸ் 1869 ஆண்டில் இறந்த பின்னர் பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் 1883 ஆம் ஆண்டு போக்சன் தனது ஐம்பத்து நான்காவது வயதில் மெட்ராஸில் அதாவது சென்னையில் பிரிட்டிஷ் படைப்பிரிவை சேர்ந்த சார்லஸ் டபிள்யூ. சிபிலியின் (Charles W. Sibley) மகளான எடித் லூயிசா ஸ்டாப்ஃபோர்டு சிபிலி (Edith Louisa Stopford Sibley) என்ற முப்பத்து மூன்று வயது விதவையைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு மேலும் மூன்று குழந்தைகள் பிறந்தனர். ஃபிரடெரிக் வேரி (Frederick Vere), எடித் வேரா (Edith Vera) மற்றும் எடித் கிளாடிஸ்(Edith Gladys). இதில் எடித் வேரா குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டார். 1885 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி போக்சனால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வேரா (Vera) என்ற சிறுகோள் அவரது இரண்டாவது மனைவி எடித்தின் பரிந்துரையின் பேரில் பெயரிடப்பட்டது.
நீண்ட காலமாக போக்சனின் உதவியாளராகப் பணியாற்றிய சிந்தாமணி ரகுநாதச்சாரி பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், இங்கிலாந்தில் இருந்தவாறு அவருடன் கூட்டுப் பணியாற்றுபவர்களுடனும், இந்தியாவின் அப்போதைய ஆட்சியாளர்களிடமும் பிரச்சனைகள் அதிகரித்ததும், மற்றும் ஒரு காலகட்டத்தில் அவருக்கு மிக ஆதரவாகச் செயல்பட்ட ஜார்ஜ் ஏர்ரி (George Airy) ஆதரவளிக்காமல் செயல்பட்டதும் மன் ரீதியாக அவரைப் பெரிதும் பாதித்தது. அரசாங்கத்திடம் உதவி கோரிய அவரது விண்ணப்பங்களை ஜார்ஜ் ஏர்ரி நிராகரித்தது மட்டுமல்லாமல் அவர் மீண்டும் இங்கிலாந்து திரும்ப வேண்டிச் செய்திருந்த விண்ணப்பத்தையும் நிராகரித்தார். மனமுடைந்து போன போக்சனின் உடல் நிலை மோசமானது. 1891 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் நாள் காலமானார். அவரது உடல் சென்னை, புனித ஜார்ஜின் கதீட்ரலில் (St. George's Cathedral), நல்லடக்கம் செய்யப்பட்டது. மெட்ராஸில் அதாவது சென்னையில் முப்பது ஆண்டுகள் பணிபுரிந்த போக்சன் பணிக்காலத்தில் ஒரு நாள் கூட விடுப்பு எடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. போக்சனின் இறப்பிற்குப் பின்னர் இங்கிலாந்துக்குச் சென்று விம்பிள்டன்னில் வாழ்க்கையைக் கழித்த அவரது மனைவி எடித் 1946 ஆம் ஆண்டு காலமானார்.
இவரது நினைவை போற்றும் வகையில் சிறுகோள் 1830 போக்சன் (Asteroid 1830 Pogson), நிலாவின் போக்சன் குழிப்பள்ளமும் (Pogson Crater in Moon), சிறுகோள் 42 ஐஸிஸ் (Asteroid 42 Isis) இவரது மகள் எலிசபத் ஐஸிஸ் போக்சன்
நினைவாகவும் பெயரிடப்பட்டுள்ளது.
42 ஐஸிஸ் (42 Isis) - 23 மே 1856
43 அரியட்னே (43 Ariadne) - 15 ஏப்ரல் 1857
46 ஹெஸ்தியா (46 Hestia) - 16 ஆகஸ்ட் 1857
67 ஆசியா (67 Asia) - 17 ஏப்ரல் 1861
89 சப்போ (80 Sappho) - 2 மே 1864
87 சில்வியா (87 Sylvia) - 16 மே 1866
107 கமீலா (107 Camilla) - 17 நவம்பர் 1868
245 வேரா (245 Vera) - 6 பிப்ரவரி 1885 ஆகியன அவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை.
போக்சனின் மகள் எலிசபெத் ஐசிஸ் போக்சன் (Elizabeth Isis Pogson) 1873 முதல் 1881 வரை மெட்ராஸ் வானியல் ஆய்வகத்தில்( Madras Observatory), தனது தந்தையின் உதவியாளராகப் பணியாற்றினார். பின்னர் மெட்ராஸின் வானிலை நிருபராக மாறினார். 1886 ஆம் ஆண்டில் ராயல் வானியல் சங்கத்தில் (Royal Astronomical Society) அங்கத்தினராக அவரைச் சேர்த்துக் கொள்ள அவர் பெயர் முன்மொழியப்பட்டது. ஆனால் சங்கத்தின் சில சட்ட விதிமுறைகள் பெண்களை உறுப்பினர்களாகச் சேர்க்க அனுமதிக்கவில்லை. முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு சட்ட விதிகள் மாற்றம் செய்த பின்னர், எலிசபெத் ஐசிஸ் போக்சனை 1920 ஆண்டில் இணைத்துக் கொண்டு கௌரவப் படுத்தியது.
Thank you sir. Super
ReplyDeleteThanks a lot.
ReplyDeleteDetailed description about Bokson, even though I hear it for the first time about him,his contribution is enormous, ofcourse can't understand fully, appreciate your efforts and writings, Hats off to you
ReplyDeleteThank you very much friend. There are so many unsung heros. I have mentioned just one. Soon I am going to publish a write-up about one more poor Indian (Tamilian) astronomer.
Deleteஇராபர்ட் போக்சன் பற்றிய தகவல் சிறப்பாக உள்ளது போக்சன் பற்றிய ஆராய்ச்சி கட்டுரை போலவே உள்ளது.
ReplyDeleteநன்றி முத்துக்குமார். தொடர்ந்து ஊக்கமும் ஆதரவும் அளிப்பதற்கு மிக்க மகிழ்ச்சி.
Delete