துத்தநாகத் தாதுப் பயன்பாட்டின் - நன்மைகளும் தீமைகளும்

துத்தநாகம் என்னும் உலோகம் நம் அனைவருக்குமே பள்ளிக்கூட நாட்களிலேயே அறிமுகமானதுதான். பள்ளியில் வோல்டா, லெக்லாஞ்சி மற்றும் டேனியல் ஆகிய முதன்மை மின்கலங்களின்அமைப்பு மற்றும் செயல்பாடு குறித்துப் படித்திருப்போம். அவற்றில் எல்லாம் எதிர் மின்வாயாகத் துத்தநாக உலோகத்தண்டு செயல்படுகிறதென்றும் அறிந்திருப்போம். அதனால் துத்தநாகம் பள்ளி நாட்களிலேயே நமக்கு அறிமுகமான உலோகம்தான். சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற பல உலோகத் தாதுப்பொருட்கள் மனித உடலின் சீரான இயக்கத்திற்கு இன்றியமையாதவை. மேற் சொன்னவற்றைப் போலவே துத்தநாகமும் இன்றியமையாத ஒரு உலோகத் தாதுப்பொருளாகும்.

நம்முடைய இந்தக் கட்டுரையில் துத்தநாகம் குறித்த பல்வேறு தகவல்கள் தரப்பட்டுள்ளன. முதலில் துத்தநாகத்தாதுடன் தொடர்புடைய உடற் செயல்பாடுகள் என்னென்ன என்பது குறித்துக் காணலாம்.

1) மரபணு வெளிப்பாடு (Gene expression), 2) நொதிசார்ந்த எதிர்வினைகள் (Enzymatic reactions), 3) நோயெதிர்ப்புச் செயல்பாடுகள் (Immune function), 4) புரதம் தொகுத்தல் (Protein synthesis), 5) டி.என்.ஏ தொகுத்தல் (DNA synthesis), 6) காயங்களை ஆற்றுதல் (Wound healing) மற்றும் 7) வளர்ச்சி மற்றும் உருப்பெறுதல் (Growth and development) ஆகிய உடற் செயல்பாடுகள், துத்தநாகத்தாதுவுடன் தொடர்புடையவை.
துத்தநாக உலோகத்தாதுப் பொருளை (Zinc mineral) நமது உடலால் இயற்கையாக உற்பத்தி செய்து கொள்ளவோ அன்றிச் சேமித்து வைத்துக் கொள்ளவோ இயலாது. ஆகையால் உடலுக்குத் தேவைப்படும் துத்தநாகத் தாதுப் பொருள் சீராக கிடைப்பது உண்ணும் உணவு அல்லது வேறுவகையில்  உணவுடன் கூடுதலாக எடுத்துக் கொள்ளும் பொருட்கள் மூலமாகவே கிடைக்கிறது. துத்தநாகம் பலவகையான உணவுகளில் உள்ளது என்றாலும் பாஸ்பரஸின் முக்கிய சேமிப்பு வடிவமான பைட்டேட்டுகள் (Phytates) துத்தநாகத்தைப் பிணைத்து அதன் உறிஞ்சுதலைத் தடுக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தானியங்கள், கொட்டைகள் மற்றும் பருப்பு வகைகள் போன்றவை உயர் பைட்டேட் உணவுகள். முழு தானிய ரொட்டி, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் பைட்டேட்டுகள் காணப்படுகின்றன. இதனால் தானியங்கள் மற்றும் தாவரங்களில் உள்ள துத்தநாகத்தாது கடல் உணவு மற்றும் இறைச்சியில் காணப்படும் துத்தநாகத்தைப் போல உறிஞ்சப்படுவதில்லை. இந்த இடத்தில் சைவ உணவுப் பொருட்களில் பூண்டு, வெங்காயம் போன்றவை தாவர உணவுகளிலிருந்து துத்தநாகத்தை உறிஞ்சுவதை அதிகரிக்கும் என்பது  கவனிக்கத்தக்கது.

இயற்கையாகவே பல்வேறு வகையான தாவர மற்றும் விலங்கு உணவுப் பொருட்களில் துத்தநாகம் காணப்படுகிறது. இயற்கையில் துத்தநாகத் தாதுப்பொருளைக் கொண்டிராத உணவுப் பொருட்கள் துத்தநாகத்தாதுவின் செயற்கை வடிவங்களைக் (Artificial forms) கொண்டே பெரும்பாலும் செறிவூட்டப்படுகின்றன. 

பைடிக் அமிலம் (Phytic acid) அல்லது பைட்டேட் தாவர விதைகளில் காணப்படுகிறது. இது விதைகளில் பாஸ்பரஸின் முக்கிய சேமிப்பு வடிவமாகச் செயல்படுகிறது. விதைகள் முளைக்கும்போது, பைட்டேட் சிதைந்து, இளம் தாவரத்தால் பயன்படுத்தப் பாஸ்பரஸ் வெளியிடப்படுகிறது. பைடிக் அமிலம் துத்தநாகம் மட்டுமல்லாமல் இரும்பு, மற்றும் கால்சியம் உறிஞ்சப்படுவதையுமே குறைத்துத் தாதுப் பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்யும். சைவ உணவு உண்பவர்களே துத்தநாகக் குறைபாடுக்கு அதிகம்ஆளாகும் ஆபத்து  உள்ளவர்கள். ஏனெனில் அவர்கள் இறைச்சி அல்லது கடல் உணவை உண்பதில்லை. பைட்டேட்டுகள் இருப்பதால் குறைக்கப்பட்ட துத்தநாக உறிஞ்சுதலுக்காக அவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அன்றாட அளவைக் காட்டிலும் ஐம்பது விழுக்காடு (50%) அளவு வரை துத்தநாகம் கூடுதலாகத் தேவைப்படலாம். 

தாவர அடிப்படையிலான உணவுகளிலிருந்து துத்தநாகத்தின் உடலுக்குக் கிடைக்கும் தன்மையை அதிகரிப்பதில் பீன்ஸ், விதைகள் மற்றும் தானியங்களைச் சமைப்பதற்கு முன் பல மணி நேரம் ஊறவைத்தல், முளை கட்டிய தானியங்களை உண்ணுதல், புளிக்க வைக்கப்படாத தானிய மாவுத் தயாரிப்புகளை விட, ரொட்டி போன்ற புளித்த தானிய தயாரிப்புகளை உண்ணுதல் ஆகியன அதிகம் பயன் தரும்.

உடலுக்குத் தேவையான துத்தநாகத்தை பல்லூட்டச்சத்து நிரப்பிகள் (Multi nutrient suppliments) மற்றும் துத்தநாகத் தாதுக் குறைநிரப்பிகள் (Zinc suppliments)  மூலமாகவும் எடுத்துக் கொள்ளலாம். துத்தநாகக் குறை நிரப்பிகளில் துத்தநாக அசிடேட், துத்தநாக குளுக்கோனேட் அல்லது துத்தநாக சல்பேட் போன்றவை உள்ளன. அவை கொண்டிருக்கும் அடிப்படை துத்தநாகத்தின் அளவு உப்புக்களைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக, துத்தநாக சல்பேட்டில் 23% அடிப்படை துத்தநாகம் உள்ளது, எனவே துத்தநாக சல்பேட்டின் 220mg காப்ஸ்யூலில் 50mg அடிப்படை துத்தநாகம் இருக்கும். நாசிக்குள் (Intranasal)  துத்தநாகச் சத்து மருந்துகளைப் பயன்படுத்துவதால் அனோஸ்மியா 
( Anosmia) என்னும் வாசனை இழப்பு ஏற்படுவது குறித்து ஏராளமான அறிக்கைகள் உள்ளன. ஆகவே நாசிக்குள்  துத்தநாகச் சத்து மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது.

குழந்தைகளுக்குத் துத்தநாகக் குறைபாட்டின் ஆபத்து குறைவாகவே இருப்பதும், அவர்களுக்குத் துத்தநாக நச்சுத்தன்மை எளிதில் உருவாகலாம் என்பதாலும் குழந்தைகளுக்குத் துத்தநாகக் குறைநிரப்பிகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆகவே குழந்தைகளுக்குத் துத்தநாகக் குறைநிரப்பிகள் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையின் கீழ் மட்டுமே வழங்கப்பட வேண்டும். நீண்ட காலப் பயன்பாட்டில் மற்றவர்களுக்கு அதிகபட்சமாக பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் இருக்கக்கூடாது.

மருத்துவரின் அறிவுரையின் அடிப்படையில் மட்டுமே கூடுதல் துத்தநாகத்தைத் தரும் துத்தநாக குறைநிரப்பிகள் (Zinc suppliments) அல்லது பல ஊட்டச்சத்து குறை நிரப்பிகளையும் (multi nutrient suppliments) நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நம் உடலில் துத்தநாகத்தாதுவைச் சேமிக்கும் சிறப்பு அமைப்பு எதுவும் இல்லை என்பதால் ஒவ்வொரு நாளும் அதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியத்தால் (Food and Nutrition Board) பரிந்துரைக்கப்பட்ட துத்தநாகத்திற்கான அன்றாட அனுமதிக்கப்பட்ட அளவுகள் (Recommended Daily Allowances - RDA) கீழே தரப்பட்டுள்ளது. 

(அ) கைக்குழந்தைகள்
பிறப்பு முதல் 6 மாதங்கள் வரை: 2 மி.கி (அதிகபட்சம் 4 மி.கி)
7 மாதங்கள் முதல் 3 வயது வரை 3 மி.கி 
12 மாதங்கள் வரை (அதிகபட்சம் 5 மி.கி)
1 வயது முதல் 3 வயது வரை (அதிகபட்சம் 7 மி.கி)
(ஆ) குழந்தைகள்
4 முதல் 8 வயது வரை: 5 மி.கி (அதிகபட்சம் 12 மி.கி)
9 முதல் 13 வயது வரை: 8 மி.கி (அதிகபட்சம் 23 மி.கி)
(இ) பதின்பருவத்தினர்
14 முதல் 18 வயது வரை (சிறுமிகள்): 9 மி.கி (அதிகபட்சம் 34 மி.கி)
14 முதல் 18 வயது வரை (சிறுவர்கள்): 11 மி.கி (அதிகபட்சம் 34 மி.கி)
 (ஈ) பெரியவர்கள் 
18 வயதுக்கு மேல் (பெண்கள்): 8 மி.கி (அதிகபட்சம் 40 மி.கி)
18 வயதுக்கு மேல் (ஆண்கள்): 11 மி.கி (அதிகபட்சம் 40 மி.கி)
(உ) கறுவுற்ற மகளிர்
பதின்பருவத்தினர் 12 மி.கி (அதிகபட்சம் 34 மி.கி)
18 வதுக்கு மேல் 11 மி.கி (அதிகபட்சம் 40 மி.கி)
(ஊ) பாலூட்டும் மகளிர்
பதின்பருவத்தினர்: 13 மி.கி (அதிகபட்சம் 34 மி.கி)
18 வதுக்கு மேல்: 12 மி.கி (அதிகபட்சம் 40 மி.கி).

நமது உடல் எண்ணற்ற வழிகளில் பயன்படுத்தும் முக்கிய கனிமங்களில் துத்தநாகமும் ஒன்று. சொல்லப்போனால், இரும்புக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவில் நமது உடலில் காணப்படும் தடத் தாது (Trace mineral) துத்தநாகம். தடத் தாதுக்களை நுண் தாதுக்கள் (micro minerals) என்றும் அழைப்பதுண்டு. நுண் தாதுக்கள் மனித உடல், உணவில் இருந்து பெற வேண்டிய இன்றியமையாத தாதுக்கள். ஆனால் இவை பெரும் தாதுக்களைப் (macro minerals) போலன்றி, நமக்கு மிகக் குறைந்த அளவில் மட்டுமே தேவைப்படுகின்றன. தடத் தாதுக்கள் சிறிய அளவுகளில் தேவைப்பட்டாலும் கூட அவை நம் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதவை. துத்தநாக நுண் தாது அனைத்து உயிரணுக்களிலும் (Cell) காணப்படுவதாகத் தெரிகிறது.

வளர்சிதை மாற்றம் (metabolism), செரிமானம் (digestion), நரம்புச் செயல்பாடு (nerve function) மற்றும் வேறுபல செயல்பாடுகளுக்கு உதவும் 300 க்கும் மேற்பட்ட நொதிகள் (Enzymes) செயலாற்ற துத்தநாகம் அவசியம். மேலும், நோயெதிர்ப்பு உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டில் துத்தநாகம் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது.
இந்தக் கனிமம் தோல் ஆரோக்கியம், டி.என்.ஏ தொகுப்பு மற்றும் புரத உற்பத்தி ஆகியவற்றிற்கும் அடிப்படையானது. தவிரவும், துத்தநாகத்திற்கு உயிரணுப்பிரிகை மற்றும் வளர்ச்சியில் (Cell division and growth)  பங்கிருப்பதால் உடல் வளர்ச்சி மற்றும் மேம்பாடு இதனைச் சார்ந்துள்ளதாகத் அறியப்பட்டுள்ளது.

சுவை மற்றும் வாசனை உணர்வுகளுக்குத் துத்தநாகம் தேவைப்படுகிறது. சரியான சுவை மற்றும் வாசனையை அறியத் தேவையான முக்கியமான என்சைம்களில் ஒன்று இந்த ஊட்டச்சத்தைச் சார்ந்துள்ளது என்பதால், துத்தநாகக் குறைபாடு இருந்தால் சுவை அல்லது வாசனை உணரும் திறன் குறையக் கூடும். 

துத்தநாகம் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பை (Immune system) வலுவாக வைத்திருக்க உதவுகிறது. ஏனெனில் இது நோயெதிர்ப்பு உயிரணுச் செயல்பாடு (Cell function) மற்றும் உயிரணுச் சைகைக்கு (Cell signaling) அவசியமாக இருப்பதால், துத்தநாகக் கனிமக் குறைபாடு பலவீனமான நோயெதிர்ப்பு எதிர்ச் செய்கைக்கு (weak immune reaction) வழிவகுக்கும். கூடுதல் துத்தநாகம் நோயெதிர்ப்பு உயிரணுக்களைத் தூண்டுகிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற இறுக்கத்தைக் (oxidative stress) குறைக்கிறது.

நோயெதிர்ப்புச் செயல்பாட்டில் துத்தநாகத்திற்குப் பங்கிருப்பதால், அது சில நாசித் தெளிப்பான்கள் (Nasal sprays), இருமல் தணிக்கும் இனிப்புச் சவை (Chewing) மாத்திரைகள்கள் (Lozenges) மற்றும் பிற இயற்கையான தடுமன் சிகிச்சைகளில் (Cold treatments) சேர்க்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, ஏழு ஆய்வுகளின் மீது மேற்கொள்ளப்பட்ட மறுஆய்வு ஒரு நாளைக்கு 80 - 92 மி.கி துத்தநாகம் எடுத்துக் கொள்வது  சாதாரணத் தடுமனின் (Common Cold) பாதிப்புக் காலத்தை முப்பத்து மூன்று விழுக்காடு (33%) வரை குறைக்கக்கூடும் என்பதை நிரூபித்தது. மேலும், துத்தநாகக் குறைநிரப்பிகள் (Zinc suppliments) வயதானவர்களிடம் நோயெதிர்ப்புச் எதிர்ச் செய்கையை (Immune interaction)  மேம்படுத்தி தொற்றுநோய்களின் அபாயத்தை கணிசமாகக் குறைப்பதாகத் தெரிகிறது. 

துத்தநாகம் காயங்கள் குணமடைவதைத் துரிதப்படுத்துகிறது. பொதுவாகவே மருத்துவமனைகளில் தீக்காயங்கள், சில புண்கள் மற்றும் பிற தோல் காயங்களுக்கான சிகிச்சையில் துத்தநாகம் பயன்படுத்தப்படுகிறது. கொலாஜன் தொகுப்பு (Collagen synthesis), நோயெதிர்ப்புச் செயல்பாடு மற்றும் அழற்சியின் எதிர் வினை ஆகியவற்றில் துத்தநாகம் முக்கிய பங்கு வகிப்பதால், சரியான சிகிச்சைக்கு இது மிகவும் அவசியம். 

உண்மையில்,  நம் உடலின் மொத்தத் துத்தநாக அளவில் சுமார் ஐந்து விழுக்காடு (5%) தோலில் உள்ளது. உடலின் பிற உறுப்புக்களுடன் ஒப்பிட்டால் இது மிக அதிகம். துத்தநாகக் குறைபாடு இருப்பின் காயம் குணமாவது தாமதமாகும் அதே வேளையில், துத்தநாகத்தைக் குறைநிரப்புவதால் (supplementing Zinc) நோயாளிகளின் காயங்கள் விரைவாகக் குணமடைகின்றன. எடுத்துக்காட்டாக, 12 வார காலம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் நீரிழிவு நோய் காரணமாகக் காலில் புண்கள் உள்ள அறுபது (60) பேருக்கு ஒரு நாளைக்கு 200 மி.கி துத்தநாகச் சத்து கூடுதலாகத் தரப்பட்டுச் சிகிச்சையளிக்கப்பட்டது. துத்தநாகக் குறைநிரப்பி மருந்து தரப்படாத  ஒரு மருந்துப்போலிக் குழுவோடு (Placebo group) ஒப்பிடும்போது புண்களின் அளவு கணிசமாகக் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது. 

துத்தநாகம் ஆக்ஸிஜனேற்ற இறுக்கத்திலிருந்து (oxidative stress) விடுபட பயனுள்ளதாக உள்ளது. டி-செல்கள் (T - Cells) மற்றும் இயற்கை கொலையாளி உயிரணுக்களின் (Natural killer cells) செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம். இயற்கை கொலையாளி உயிரணுக்கள் என்பவை ஆன்டிஜென்களின் தூண்டுதல் இல்லாமல் சில கட்டி உயிரனுக்கள் (tumour cells) மற்றும் வைரஸ் பாதிக்கப்பட்ட உயிரணுக்களுடன் பிணைக்கக்கூடிய ஒரு லிம்போசைட் (lymphocyte) ஆகும். இது செயல்திறன் கொண்ட துகள்களைச் (granules) செருகுவதன் மூலம் அவற்றைக் கொல்வதால் உடலைத் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. 


துத்தநாகம் முதுமை சார்ந்த சில நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம் நிமோனியா, தொற்று மற்றும் முதுமை சார்ந்த மாகுலர் சிதைவு (AMD) போன்ற வயது சார்ந்த நோய்கள் தாக்கும் அபாயத்தைத் துத்தநாகம் கணிசமாகக் குறைக்கலாம் . முதுமை சார்ந்த மாகுலர் சிதைவு (AMD) என்பது ஒரு கண் நோயாகும், இது காலப்போக்கில் மோசமடையக்கூடும். அறுபது(60) வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் கடுமையான, நிரந்தர பார்வை இழப்புக்கு இது முக்கிய காரணமாகும். துத்தநாகக் குறை நிரப்பிகளைப் (zinc suppliments) பயன்படுத்திய முதியவர்களிடம் மேம்பட்ட இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி எதிர்வினை (improved influenza vaccination response), நிமோனியாவின் அபாயம் குறைத்தல் மற்றும் மூளையின் செயல்திறனை அதிகரிப்பு ஆகியன காணப்பட்டது.  ஆய்வொன்றில் ஒரு நாளைக்கு 45 மி.கி துத்தநாகம் தரப்பட்டால், முதியவர்களிடையே தொற்று விகிதங்கள் கிட்டத்தட்ட 66% குறைக்கக்கூடும் என்று கூறுகிறது. 

இது தவிர 4,200 க்கும் மேற்பட்டவர்களிடையில் நடத்தப்பட்ட பிறிதொரு பெரிய ஆய்வில்,  தினசரி எதிர் ஆக்ஸிஜனேற்றக் (antioxidant) குறைநிரப்பிகளான வைட்டமின் ஈ, வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவற்றுடன் 80 மி.கி துத்தநாகம் சேர்த்து வழங்கப்பட்ட போது பார்வை இழப்பு பெருமளவில் குறைந்து முற்றிய முதுமை சார்ந்த மாகுலர் சிதைவின் (AMD) அபாயத்தைக் கணிசமாகக் குறைத்தது.


துத்தநாகம் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்றால் ஆம் என்பதே நேர்மையான பதிலாக இருக்கும். துத்தநாகம் என்பது ஒரு சுவடுத் தாது (Trace mineral) என்று முன்னரே குறிப்பிட்டிருந்தோம். அதாவது ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தேவைப்படுகிறது, ஆனால் அதிக அளவு துத்தநாகக் குறை நிரப்பிகளை எடுத்துக்கொள்வது நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.
துத்தநாகத்தின் பக்கவிளைவுகளில் குமட்டல், வாந்தி, பசியின்மை, மோசமான சுவை மற்றும் வாசனை இழப்பு ஆகியவை அடங்கும். கூடுதல் அளவிலான துத்தநாகம்  வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு, தலைவலி மற்றும் குமட்டலை ஏற்படுத்தும்.
 
துத்தநாகக் குறை நிரப்பிகள் எதிர் நுண்ணுயிரிகள் (antibiotics), டையூரிடிக்ஸ்(diuretics) மற்றும் பென்சில்லாமைன் (penicillamine) போன்ற மருந்துகளுடன் இடைவினை (Interact) புரியக் கூடும். துத்தநாகச் சத்துக்கள் எதிர்நுண்ணுயிரிகளின் விளைவுகளை பலவீனப்படுத்தக்கூடும். மேலும் நமது உடலுக்கு துத்தநாகத்தைப் பயன்படுத்துவதை எதிர்நுண்ணுயிரிகள் கடினமாக்கும். கீல்வாதத்திற்கான பென்சில்லாமைன் போன்ற சில மருந்துகளை உறிஞ்சுவது உங்கள் உடலுக்கு கடினமாக்கும். துத்தநாகக் குறை நிரப்பிகளைப் பயன்படுத்தும் முன் உங்கள் மருத்துவரிடம் கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெறுதல் வேண்டும்.

துத்தநாகம் கொண்ட உணவுகளிலிருந்து நீங்கள் அதிகமாகத் துத்தநாகத்தைப் பெற முடியாது.
இது உங்கள் செல்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடத் தேவைப்படும் ஒரு கனிமமாகும். மேலும், உங்கள் உடலுக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைக் கூறும் டி.என்.ஏ எனப்படும் மரபணுப் பொருளை உருவாக்கத் துத்தநாகம் தேவை. இது காயங்களை குணப்படுத்தவும், வாசனை மற்றும் சுவை அறிய உங்கள் உணர்வுகளுக்கும் உதவுகிறது. மேலும் சிசுக்கள் மற்றும் குழந்தைகள் வளரும் போது துத்தநாகத் தாது முக்கியத்தும் பெறுகிறது.

ஆனால் உங்கள் வயிற்றில் அல்லது குடலில் அறுவை சிகிச்சை, தவறான மதுப் பயன்பாடு  மற்றும் புண்பட்ட பெருங்குடல் அழற்சி அல்லது கிரோன் நோய் (ulcerative colitis or Crohn’s disease) போன்ற செரிமான நோய்கள் உட்படப் பல காரணங்கள், துத்தநாகத்தை உங்கள் உடல் பயன்படுத்துவதைக் கடினமாக்கும். இறைச்சி அல்லது விலங்குகள் மூலம் பெறப்படும் பொருட்களை உண்ணாதவர்கள் உணவில் இருந்து போதுமான அளவில் துத்தநாகத்தைப் பெறுவது மிகவும் கடினமாகவே இருக்கும்.
துத்தநாகக் குறைபாடு குழந்தைகளை மெதுவாக வளரச் செய்யலாம் மற்றும் பதின்ம வயதினர் பருவமடைவதை தாமதப்படுத்தவும் கூடும். துத்தநாகம் குறைவாக இருக்கும் பெரியவர்களுக்கு முடி உதிர்தல், வயிற்றுப்போக்கு, கண்கள் மற்றும் தோலில் புண்கள் மற்றும் பசியின்மை ஏற்படலாம். 
துத்தநாகக் குறைபாடு ஒரு மனிதனின் பாலியல் விருப்பத்தையும் (Sexual desire) பாதிக்கக் கூடும். துத்தநாகக் குறைபாட்டைத் தவிர வேறு ஏதேனும் காரணங்களாலும் கூட இந்தப் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆகவே துத்தநாகக் குறை நிரப்பிகளைப் பயன்படுத்தும் முன் தவறாமல் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசனை செய்யுங்கள்.

அதிக அளவிலான துத்தநாகம் உடலில் தாமிரம் உறிஞ்சப்படுவதைத் தடுக்கலாம் என்பதால் தாமிரக் குறைபாடு மற்றும் இரத்த சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. துத்தநாகக் குறை நிரப்பிகளின் நீண்ட காலப் பயன்பாட்டால், மற்றொரு அத்தியாவசிய ஊட்டச்சத்தான தாமிரத்தின் அளவு குறையலாம். இதன் விளைவாகப் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் எச்.டி.எல் (HDL) என்னும் நல்ல கொழுப்பு (Good cholesterol) குறைதல் உருவாகலாம். உங்கள் மருத்துவர் பரிந்துரைக்காதவரையில் நாளொன்றுக்கு 40 மில்லிகிராமுக்கு மேல் கண்டிப்பாகத் துத்தநாகக் குறை நிரப்பிகள் வாயிலாகக் கூடுதல் துத்தநாகத்தைப் பெறக்கூடாது.  

இறுதியாக டி.என்.ஏ தொகுப்பு(DNA synthesis), நோயெதிர்ப்புச் செயல்பாடு (immune function), வளர்சிதை மாற்றம் மற்றும் வளர்ச்சிக்குத் (metabolism and growth) துத்தநாகம் தேவைப்படுகிறது. இது வீக்கத்தையும் வயது சார்ந்த சில நோய்களுக்கான ஆபத்தையும் குறைக்கலாம்.
பெரும்பாலான மக்கள், ஆண்களுக்கு 11 மில்லி கிராமும் பெண்களுக்கு 8 மில்லி கிராம் என்ற அனுமதிக்கப்பட்ட அன்றாட உட்கொள்ளல்  அளவை (Recommanded Daily Intake - RDI) உணவின் மூலம் அடைகிறார்கள். ஆனால் முதியவர்களுக்கும், துத்தநாக உறிஞ்சுதலைத் தடுக்கும் நோய்கள் உள்ளவர்களுக்கும் கூடுதலாகத் துத்தநாகம் தேவைப்படக் கூடும்.
அதிக அளவிலான துத்தநாகக் குறைநிரப்பிகள் ஆபத்தான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், மருத்துவரின் பரிந்துரைகளைக் கடைப்பிடித்து அதன்படி உட்கொளவது முக்கியம்.  தேவைப்படும்போது மட்டுமே கூடுதலாகத் துத்தநாகத் தாதுவைக் குறிப்பிட்ட அளவில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

ஹெல்த் கேர் (தமிழ்) இதழில் இக்கட்டுரை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வெளி வரும். முதல் பகுதி ஜூலை 2020 இதழில் வெளியாகியுள்ளது. இதன் இரண்டாம் பகுதி ஆகஸ்டு 2020 இதழில் வெளியாகும்.



                                                                 __________________

Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)