அறிவியல் பார்வையில் அமில - கார உணவுகள் பகுதி (2)

பகுதி (1) இன் தொடர்ச்சி

கட்டுரையின் முதல் பகுதிக்குச் செல்ல
https://weyes57.blogspot.com/2020/05/blog-post.html

(2) உணவின் அமிலத்தன்மையும் ஆஸ்டியோபோரொசிஸ் எலும்பு நோயும்:

 
எலும்புத் தாதுப்பொருள் குறைவதால் அதிகரிக்கும் எலும்பு நோயாக ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வகைப்படுத்தப்படுகிறது.
மாதவிடாய் ஏற்படும் பருவத்தைக் கடந்த பேரிளம் பெண்களிடையே இது மிகவும் பொதுவான நோய். இந் நோய் எலும்பு முறிவு அபாயத்தை மிகக் கடுமையாக அதிகரிக்கச் செய்யும். இரத்தத்தின் pH மதிப்பை நிலையாகப் பராமரிக்க, உடலானது எலும்புகளில் இருந்து கால்சியம் போன்ற காரத் தாதுக்களை எடுத்துக்கொள்வதன் மூலம் அமிலத்தை உருவாக்கும் உணவுகளிலிருந்து பெறப்படும் அமிலங்களின் வினை வேகத்தை மட்டுப்படுத்துகிறது.

"ஆஸ்டியோபோரோசிஸின் அமில - சாம்பல் கருதுகோள்"( acid-ash hypothesis of osteoporosis) கோட்பாட்டின் படி, படித்தரமான மேற்கத்திய உணவு (Standard Western Diet) போன்ற அமிலத்தை உருவாக்கும் உணவுகள் எலும்புத் தாது அடர்த்தியில் (Bone mineral density) இழப்பை ஏற்படுத்தும். இந்தக் கோட்பாடு சிறுநீரகங்களின் செயல்பாட்டை  முற்றிலுமாகப் புறக்கணிக்கிறது. அமிலங்களை அகற்றுவதிலும், உடலின் இரத்த pH மதிப்பைச் சீராக வைத்திருப்பதிலும் சிறுநீரகங்களின் பணி அடிப்படையானதொன்றாகும். சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள அமிலங்களை நடுநிலையாக்கும் பைகார்பனேட் (HCO3) எதிர் அயனிகளை உருவாக்குவதன் வாயிலாக உடலின் இரத்த pH ஐ சரியான மதிப்பிற்கு மிக நெருக்கமாக நிர்வகிக்க உதவுகிறது. 

சுவாச மண்டலஅமைப்பும் இரத்த pH ஐ கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. உங்கள் சிறுநீரகத்திலிருந்து வரும் பைகார்பனேட் அயனிகள் இரத்தத்தில் உள்ள அமிலங்களுடன் இணையும் போது, அவை கார்பன் டை ஆக்சைடையும் நீரையும் உருவாக்குகின்றன. கார்பன் டை ஆக்சைடு சுவாசித்தல் மூலமும் நீர் சிறுநீர் வழியாகவும் வெளியேற்றப்படுகின்றன.
ஆஸ்டியோபோரோசிஸின் முக்கிய இயக்கிகளில் ஒன்றான எலும்பிலிருந்து புரத கொலாஜன் (protein collagen) இழப்பை அமில - சாம்பல் கருதுகோள்  புறந்தள்ளி விடுகிறது. நாம் உண்ணும் உணவில் ஆர்த்தோசிலிசிக் அமிலம் (Ortho Silicic acid) மற்றும் அஸ்கார்பிக் அமிலம் (Ascorbic acid) என்னும் வைட்டமின் சி (Vitamin C) ஆகிய இரு அமிலங்களின் குறைபாட்டுடன் கொலாஜனின் இழப்பானது வலுவாகத் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. இது அமில - சாம்பல் கருதுகோளுடன் முரண்படுகிறது.

உணவு அமிலத்துடன் எலும்பு அடர்த்தி அல்லது எலும்பு முறிவு அபாயத்தை இணைக்கும் அறிவியல் சான்றுகள் கலந்தே காணப்படுகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவதானிப்பு ஆய்வுகள் (observational studies) எந்த தொடர்பையும் இருப்பதாகக் கண்டுபிடிக்கவில்லை. மற்றவர்கள் ஒரு குறிப்பிடத்தக்க இணைப்பைக் கண்டறிந்துள்ளனர். மருத்துவச் சோதனைகள் (Clinical trials) மிகவும் துல்லியமானவை. அதன்படி கிடைத்த முடிவு, அமிலத்தை உருவாக்கும் உணவுகள் உடலில் உள்ள கால்சியம் அளவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதுதான்.
 
இந்த அமிலத்தை உருவாக்கும் உணவுகள் கால்சியம் தக்கவைப்பை அதிகரிப்பதன் மூலமும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன மற்றும்  ஐ.ஜி.எஃப் -1 ஹார்மோனை செயல்படுத்துவதன் மூலமும் தசை மற்றும் எலும்புகளை சரிசெய்வதைத் தூண்டுகிறது. அதன்படி அதிக புரதம், அமிலத்தை உருவாக்கும் உணவு எலும்பு பாதிப்புடன் இல்லாமல் சிறந்த எலும்பு ஆரோக்கியத்துடன் தொடர்பு படுத்தப்படலாம்.  
முடிவாகச் சொல்வதானால் சான்றுகள் ஆதரவாகவும் எதிராகவும் கலந்திருந்தாலும், அமிலத்தை உருவாக்கும் உணவுகள் உங்கள் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கோட்பாட்டை பெரும்பாலான ஆராய்ச்சி முடிவுகள் ஆதரிக்கவில்லை. புரோட்டீன், ஒரு அமில ஊட்டச்சத்தாக இருந்த போதிலும் கூட நன்மையே பயக்கும் என்று தெரிகிறது.

(3) அமிலத் தன்மையும் புற்று நோயும்:
புற்றுநோய் அமிலச் சூழலில் மட்டுமே வளர்கிறது அதனால் புற்றுநோயைக் கார உணவைக் கொண்டு குணப்படுத்தவோ அல்லது சிகிச்சையளிக்கவோ முடியும் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. எது எப்படியாயினும்,
உண்ணும் உணவினால் தூண்டப்பட்ட அமிலத்தன்மை அதாவது உணவின் காரணமாக அதிகரித்த இரத்த அமிலத்தன்மை மற்றும் புற்றுநோய் ஆகியவற்றுக்கு இடையிலான உறவு குறித்த விரிவான மதிப்புரைகள்அவை இரண்டுக்கும் இடையில் எவ்விதமான நேரடி தொடர்பு இல்லை என்று முடிவையே அளிக்கின்றன. 
முதலாவதாக, உணவு இரத்தத்தின் pH மதிப்பை அதிக அளவில் பாதிக்காது. இரண்டாவதாக உணவு இரத்தத்தின் அல்லது பிற திசுக்களின் pH மதிப்பை வியத்தகு முறையில் மாற்றக்கூடும் என்று எடுத்துக் கொண்டாலுமே கூட, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அமில சூழலுடன் (acidic environment) மட்டுமே பொருத்திப் பார்க்க இயலாது. சொல்லப் போனால் pH 7.4 (கார) கொண்ட சாதாரண உடல் திசுக்களிலும் புற்றுநோய் செல்கள் வளர்கின்றன. பல சோதனைகளில் கார சூழலிலுமே (alkaline environment) வெற்றிகரமாக புற்றுநோய் செல்கள் வளர்த்துக் காட்டப்பட்டுள்ளன.
அமில சூழலில் கட்டிகள் வேகமாக வளரும்போது, கட்டிகள் தாமாகவே அமிலத்தன்மையை (acidity) உருவாக்கிக் கொள்கின்றன. அமிலச் சூழலில் புற்றுநோய் செல்கள் உருவாவதில்லை. மாறாக புற்றுநோய் செல்கள் அமில சூழலை உருவாக்குகின்றன. அமிலத்தை உருவாக்கும் உணவுக்கும் புற்றுநோய்க்கும் எந்த தொடர்பும் இல்லை. புற்றுநோய் செல்கள் காரச் சூழல்களிலும் வளர்கின்றன.

(4) மூதாதையர் உணவும் அமிலத்தன்மையும்:
அமில - காரக் கோட்பாட்டு குறித்துப் பரிணாம கண்ணோட்டத்தில் ஆராய்ந்தாலும் அல்லது விஞ்ஞான கண்ணோட்டத்தில் ஆராய்ந்தாலும் இரண்டுமே முரண்பாடுகளை வெளிப்படுத்துகிறது.
ஒரு ஆய்வு, விவசாயத்திற்கு முந்தைய மனிதர்களில் 87% கார உணவுகளை சாப்பிட்டதாகவும், நவீன கார உணவின் மைய வாதத்தை உருவாக்கியதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மிகச் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று விவசாயத்திற்கு முந்தைய மனிதர்களில் பாதிப் பேர் நிகர காரத்தை உருவாக்கும் உணவுகளை சாப்பிட்டதாகவும் தோராயமாக மதிப்பிடுகிறது. ஆகவே மீதமுள்ள பாதிப் பேர் நிகர அமிலத்தை உருவாக்கும் உணவுகளை சாப்பிட்டதாகக் குறிப்பிடுகிறது. தொலைதூரங்களில் வாழ்ந்த நம்  மூதாதையர்கள் மாறுபட்ட காலநிலைகளில் மாறுபட்ட உணவுகளை அணுகியே வாழ்ந்தனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உண்மையில் அமிலத்தை உருவாக்கும் மாமிச உணவுகள் வெப்பமண்டலத்திலிருந்து விலகி, பூமத்திய ரேகைக்கு வடக்கே நகர்ந்த மக்களிடையே மிகப் பொதுவானவையாகவே இருந்தன. காரணம் பயிர்த்  தொழில் செய்ய இயலாத குளிர் பிரதேசங்களில் வேட்டையாடுதலே அவர்களின் பிரதானமான வாழ்வாதாரமாக விளங்கியது. வேட்டையாடுபவர்களில் பாதிப்  பேர் நிகர அமிலத்தை உருவாக்கும் மாமிச உணவை உண்டாலும் கூட, அவர்கள் மத்தியில் நவீன நோய்கள் மிகவும் குறைவான அளவிலேயே பொதுவாகக் காணப்படுகின்றன என்று நம்பப்படுகிறது. 
மூதாதைய மக்களின் உணவுகளில் பாதி அமிலத்தை உருவாக்கும் உணவுகளே என்றும் அதிலும் குறிப்பாகப் பூமத்திய ரேகையிலிருந்து வெகு தொலைவில் வாழ்ந்த மக்களின் உணவுகள்அமிலத்தை உருவாக்குபவையே என்று தற்போதைய ஆய்வுகள் தெரிவிகின்றன. 

பதப்படுத்தப்பட்ட குப்பை உணவுகளை (Junk foods) உண்பதைத் தவிர்க்கச் செய்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான தாவர உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதை ஊக்குவிப்பதால் கார உணவு மிகவும் ஆரோக்கியமானது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ஆனாலும் நாம் உண்ணும் உணவு அதன் கார விளைவுகளால் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்ற கருத்து இன்றைய நிலையில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தவிரவும் இதுகாறும் நடத்தப்பட்ட எந்த நம்பகமான மனித ஆய்வுகளாலும் இக் கூற்றுக்கள் சரியானவையே நிரூபிக்கப்படவில்லை.
சில ஆய்வுகள் மக்கள்தொகையின் மிகச் சிறிய உட்குழுவில் (Subset) நேர்மறையான விளைவுகளைத் (Positive effects) தருவதாகத் தெரிவிகின்றன. குறிப்பிட்டுச் சொல்வதானால் நீண்டகால சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்த புரதத்துடன் கூடிய கார உணவு பயனளிக்கக் கூடும் என்று பரிந்துரைக்கிறது.

***********************************************************************************

கட்டுரையின் மூலம்:
https://www.healthline.com/nutrition/the-alkaline-diet-myth#ph
Written by Joe Leech, MS on September 25, 2019.



கட்டுரையின் இரண்டாம் பகுதியான இது  ஹெல்த் கேர் (தமிழ்) ஜூலை 2020 இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் பகுதி ஜூன் 2020 ஹெல்த் கேர் (தமிழ்) இதழில் வெளியாகியுள்ளது.





Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)