உடுத் தொகுப்புகளின் குடும்பங்கள் (Constellation families)

உடுத் தொகுப்புகளின் பெயர்களுமே (Names of the Constellations), உடுக்களின் பெயர்களைப் (Names of the stars) போலவே, பலவிதமான மூலங்களிலிருந்து வந்தவை. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கதையும் பொருளும் கொண்டவை. பழைய உடுத் தொகுப்புகளின் பெயர்கள் பொதுவாகக் கிரேக்க புராணங்களிலிருந்து வந்தவை. அதே நேரத்தில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட உடுத் தொகுப்புகள் பெரும்பாலும் அறிவியல் கருவிகள் மற்றும் விலங்குகளைக் கொண்டு பெயரிடப்பட்டன. உடுக்களுடன் தொடர்புடைய கதைகள் ஒரு உடுத் தொகுப்பிற்கும் அடுத்த உடுத் தொகுப்பிற்கும் இடையிலேயே வேறுபடுவதால் பெயரிடுவதில் கண்டிப்பான விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.



இராசி உடுத் தொகுப்புகளைப் (zodiac constellations) போலவே கிரேக்க அல்லது ரோமானியத் தொன்மங்களில் சொல்லப்பட்டுள்ள கதாபாத்திரங்களைக் குறிக்கும் பல உடுத் தொகுப்புகளின் பெயர்கள் அநேகமாக நமக்கு நன்கு அறிமுகமானவைதான்.  இவை கிமு (BCE) இரண்டாம் (2) ஆம் நூற்றாண்டில் கிரேக்க வானியலாளர் தாலமியால் (Ptolemy)  உருவாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன.


கிளாடியஸ் தாலமி


எண்பத்தெட்டு (88) உடுத் தொகுப்புகளும் எட்டு (8) குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உடுத் தொகுப்பின் குடும்பங்கள் (Constellation families) என்பது வான் கோளத்தில் உடுத் தொகுப்புகளின் அண்மை (Proximity) , பொதுவான வரலாற்றுத் தோற்றம் (Common historical origin) அல்லது பொதுவான தொன்மக் கருப்பொருள் (common mythological theme) போன்ற சில வரையறுக்கப்பட்ட பண்புகளைப் பகிர்ந்து கொள்ளும் உடுத் தொகுதிகளின் தொகுப்பாகும்.

மேற்கத்திய பாரம்பரியத்தில், வடக்கு உடுத் தொகுப்புகளில் (Constellations) பெரும்பாலானவை தாலமியின் கணித மற்றும் வானவியல் நூலான அல்மாஜெஸ்டில் (Almagest) தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து கிளைத்தவையே என்றாலும் அதன் வேர்கள் மெசபட்டோமிய வானியல் வரை  செல்லுகின்றன. தூரக் தெற்கில் உள்ள பெரும்பாலான உடுக்கள் 16 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டுகளில் தெற்கில் பயணித்த மாலுமிகள் மற்றும் வானியலாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியாவிலும் சீனாவிலும் தனி மரபுகள் எழுந்தன.


1975 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் வானாய்வுக் கூடத்தின் (Harvard Observatory) இயக்குநரான டொனால்ட் எச். மென்செல் (Donald H. Menzel) பல பாரம்பரிய குழுக்களைத் தன்னுடைய பிரபலமான கணக்கில் சேகரித்து அவற்றை எ ஃபீல்ட் கைட் டு தி ஸ்டார்ஸ் அண்ட் பிளானட்ஸ் (A Field Guide to the Stars and Planets ) என்ற நூலில் சரிசெய்து ஒழுங்குபடுத்தினார். இதனால் 88 உடுத் தொகுப்புகளை 8 உடுத் தொகுப்புக் குடும்பங்களில் அடக்கி விட முடிந்தது.


படம் : உடுத் தொகுப்புக் குடும்பங்கள்

By Cmglee, Timwi, NASA - Own work, 
http://svs.gsfc.nasa.gov/vis/a000000/a003500/a003572, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=27881844

இந்த எட்டுக் குடும்பங்களில், முதலாவது இராசிக் குடும்பம் (Zodiac family). வானத்தை வடக்கு தெற்காகப் பிரிக்கும் கிரகணப் பாதையைக் (Ecliptic path) கடந்து செல்கிறது. கிரகணப் பாதை என்பது வானத்தில் ஆண்டு முழுவதும் சூரியன் இயங்குவதாகத் தோன்றும் பாதை. இராசிக் குடும்பத்தில் மேஷம் (Aries), ரிஷபம் (Taurus), மிதுனம் (Gemini), கடகம் (Cancer), சிம்மம் (Leo), கன்னி (Virgo), துலாம் (Libra), விருச்சிகம் (Scorpius), தனுசு (Sagittarius), மகரம் (Capricornus), கும்பம் (Aquarius), மீனம் (Pisces) ஆகிய  பனிரெண்டு உடுத் தொகுப்புகள் உள்ளன. கிரகணப் பாதை ஓபியுச்சஸ் விண்மீன் தொகுப்பின் (Ophiuchus constellation ) வழியாகவும் செல்கிறது என்றாலும் இது  இராசி உடுத் தொகுதிக் குடும்பத்துடன் அடையாளப் படுத்தப்படவில்லை.

 
அடுத்து வரும் ஹெர்குலஸ் குடும்பம் (Hercules Family) மிகப் பெரியது. ஹெர்குலஸ் குடும்பம் வடக்கு மற்றும் தெற்கு வான் கோளங்களில் கிட்டத்தட்ட சமமான பகுதிகளைக் கொண்டுள்ளது. இது சரிவு (Declination) + 60  முதல் −70 ° வரை நீண்டுள்ளது. இக்குடும்பத்தில் மட்டும் இருபது (20) உறுப்பினர்கள். வான் கோளத்தில் உடுத் தொகுப்புகளின் அண்மையின் அடிப்படையில் இக் குடும்பத்தினர் இணைக்கப் பட்டுள்ளனர். ஹெர்குலஸ் (Hercules), சஜிட்டா (Sagitta), அக்விலா (Aquila), லைரா (Lyra), சிக்னஸ் (Cygnus), ஹைட்ரா (Hydra), கிரேட்டர் (Crater), கோர்வஸ் (Corvus), ஓபியுச்சஸ் (Ophiuchus), செர்பன்ஸ் (Serpens) , சென்டாரஸ் (Centaurus), லூபஸ் (Lupus), கொரோனா ஆஸ்ட்ரேலிஸ் (Corona Australis), வல்பெக்குலா (Vulpecula), ஸ்கட்டம் (Scutum), டிரையாங்குலம் ஆஸ்ட்ரேலி (Triangulum Australe), க்ரக்ஸ் (Crux), செக்ஸ்டன்ஸ் (Sextans) மற்றும் ஆரா (Ara) ஆகிய உடுத் தொகுப்புகள்  அடங்கும். 





மூன்றாவதாக உர்சா மேஜருக்கு அதாவது பெருங்கரடி உடுக் கூட்டத்திற்கு அருகிலுள்ள பத்து (10) வடக்கு வான் அரைக் கோள உடுத் தொகுதிகளை  உள்ளடக்கியது  உர்சா மேஜர் குடும்பம் (Ursa Major Family). இந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் உர்சா மேஜர் (Ursa Major), உர்சா மைனர் (Ursa Minor), டிராகோ (Draco), கேன்ஸ் வெனாட்டி (Canes Venatici), போய்ட்ஸ் (Boötes), கோமா பெரனிசஸ் (Coma Berenices), கொரோனா பொரியாலிஸ் (Corona Borealis), கேமலோபார்டலிஸ் (Camelopardalis), லின்க்ஸ் (Lynx) மற்றும் லியோ மைனர் (Leo Minor). உர்சா மேஜர் என்ற பெயரிடப்பட்ட உடுத் தொகுப்பில்தான் புகழ்பெற்ற பிக் டிப்பர் (Big Dipper) உள்ளது.


நான்காவதாக வருவது பெர்சியஸ் குடும்பம் (Perseus Family). பெர்சியஸ் குடும்பத்தில் (Perseus Family) பெர்சியஸுடன் தொடர்புடைய தொன்மக் கதாபாத்திரங்களின் பெயர்களைக் கொண்ட ஆறு (6) உடுத் தொகுதிகளைக் கொண்டது. பெர்சியஸ் குடும்பம் தொன்மக் கதாபாத்திரங்களுடன் தொடர்புடைய காசியோபியா (Cassiopeia), செபியஸ் (Cepheus), ஆண்ட்ரோமெடா (Andromeda), பெர்சியஸ் (Perseus), பெகாசஸ் (Pegasus)  மற்றும்  செட்டஸ்  (Cetus) ஆகியவற்றையும் தொன்மக் கதாபாத்திரங்களுடன் தொடர்பற்ற ஆரிகா (Auriga), லாசெர்டா (Lacerta)  மற்றும் டிரையாங்குலம் (Triangulum) போன்ற  மூன்று (3) அருகில் உள்ள உடுக் கூட்டங்களையும் உள்ளடக்கியது. இவற்றில் செட்டஸைத் தவிர்த்து  மற்ற  உடுக் தொகுப்புகள் அனைத்தும் கிரகணப் பாதைக்கு வடக்கில் அமைந்துள்ளன. செட்டஸ் மட்டுமே கிரகணப் பாதைக்குத் தெற்கில் அமைந்துள்ளது.  இந்தப் பெர்ஸியஸ் குடும்பம் வட வான் அரைக் கோளத்தின்  துருவத்திற்கு அருகில் இருந்து அதாவது சரிவு -90° முதல் - 30°  வரை பரவியுள்ளது.


ஐந்தாவதாக ஓரியன் குடும்பம் (Orion Family) வருகிறது.  ஓரியன் குடும்பம், எட்டு குழுக்களில் மிகச் சிறியது, ஓரியனின் தொன்மக்கதையுடன் தொடர்புடைய ஐந்து  (5) உடுத் தொகுப்புகளைக் கொண்டுள்ளது. இது வானில் ஹெர்குலஸ் குடும்பத்திற்கு  எதிர் பக்கத்தில் உள்ளது. ஓரியன் குடும்பத்தில் ஓரியன் (Orion), கேனிஸ் மேஜர் (Canis Major), கேனிஸ் மைனர் (Canis Minor), லெபஸ் (Lepus) மற்றும் மோனோசெரோஸ் (Monoceros) ஆகியவை அடங்கும். 


இந்த உடுக் குழுக்கள் கிரேக்க புராணங்களிலிருந்து உருவாகின்றன, வேட்டைக்காரர் (ஓரியன்) மற்றும் அவரது இரண்டு நாய்கள் (கேனிஸ் மேஜர் மற்றும் கேனிஸ் மைனர்) முயலைத் (லெபஸ்) துரத்துகின்றன.மோனோசெரோஸ் என்னும் யூனிகார்ன், தொன்மத்துடன் தொடர்புடையது அல்ல. யூனிக்கார்ன் உடுத் தொகுப்பு மற்ற நான்கு உடுத் தொகுப்புகளுக்கும் இடையில் அமைந்துள்ளது என்பதால் மென்செல் (Menzel) முழுமைக்காக  இந்தக் குழுவில் சேர்த்துள்ளார், 


ஆகாய நீர்கள் குடும்பம் (Heavenly Waters) ஆறாவது உடுத் தொகுப்புக் குடும்பம். இந்தக் குடும்பத்தில் ஒன்பது (9) உறுப்பினர்கள் உள்ளனர். இந்தக் குடும்பமானது மெசொபடோமியப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது.  தனுசிற்கும் (Sagittarius)  ஓரியனுக்கும் (Orion) இடையில் உள்ள மங்கலான வானத்தின் பகுதியை மெசொபடோமியப் பாரம்பரியத்தின் நீர் கடவுளான ஈ (Ea) யை அல்லது என்கா (Enka) வை பாதாளத்தின் நீர்களுடன் (Waters of the Abyss) தொடர்புபடுத்துகிறது. 


ஈ (Ea) யை அல்லது என்கா (Enka) 


கும்பம் (அக்வாரிஸ்) மற்றும் மகரம்  (காப்பிரிகார்னஸ்) ஆகிய இரண்டு உடுத் தொகுப்புகளும் மெசொபடோமிய பாரம்பரியத்தின் வழிவந்தவை. இவை இரண்டும்  இராசிக்  குடும்பத்தில் (Zodiac family) இல்லாமலிருந்தால், இயற்கையாகவே இந்த ஆகாய நீர்கள் குடும்பத்தில் உறுப்பினர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் ஏற்கனவே அவைகள் இராசிக் குடும்பத்தில் இணைக்கப்பட்டுள்ளதால் அவைகளுக்கு மாற்றாக மென்செல் இப்பகுதியை வேறு வகையில் விரிவுபடுத்தினார். 

ஏதோவொரு வடிவத்தில் தண்ணீருடன் தொடர்புடைய  உடுத் தொகுப்புகளான டெல்ஃபினஸ் (Delphinus), ஈக்விலியஸ் (Equuleus), எரிடனஸ் (Eridanus), பிஸ்கிஸ் ஆஸ்ட்ரினஸ் (Piscis Austrinus), கரினா (Carina), பப்பிஸ் (Puppis), வேலா (Vela), பிக்ஸிஸ் (Pyxis) மற்றும் கொலம்பா (Columba) ஆகியவற்றை  ஒன்றிணைத்து ஆகாய நீர்கள் (Heavenly Waters) குடும்பத்தை அவர் உருவாக்கினார். கரினா, பப்பிஸ் மற்றும் வேலா ஆகியன வரலாற்று ரீதியாக முன்னாள் உடுத் தொகுப்பான ஆர்கோ நாவிஸின் (Argo Navis) ஒரு பகுதியாக இருந்தவை.  கிரேக்க பாரம்பரியத்தின்படி ஜேசனின் கப்பலைக் (ship of Jason) இது  குறிக்கிறது.

 
16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெட்ரஸ் பிளான்சியஸால் (Petrus Plancius)  அறிமுகப்படுத்தப்பட்ட பல தென் ஊடுத் தொகுப்புகளை பேயர் குடும்பம் (Bayer Family) தன்னிடத்தில் கொண்டுள்ளது. 


பெட்ரஸ் பிளான்சியஸ்
1552  – 1622


அயல் விலங்குகளின் பெயர்களைக் கொண்ட உடுக்கள் 16 ஆம் நூற்றாண்டில் டச்சு மாலுமிகளான பீட்டர் டிர்க்ஸூன் கீசர் (Pieter Dirkszoon Keyser) மற்றும் ஃபிரடெரிக் டி ஹூட்மேன் (Frederick de Houtman) ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டன. 



இதில் முக்கியமாக ஜோஹான் பேயர் (Johann Bayer) குடும்பத்தைச் சேர்ந்த உடுக்களான டொராடோ (Dorado), க்ரஸ் (Grus), டுகானா (Tucana), கெமிலியன் (Chamaeleon), வோலன்ஸ் (Volans), ஏப்பஸ் (Apus), பாவோ (Pavo), பீனிக்ஸ் (Phoenix), ஹைட்ரஸ் (Hydrus), சிந்து (Indus), மற்றும் மஸ்கா (Musca) ஆகியவைகளே இடம் பெற்றுள்ளன. பேயர் மஸ்காவைத்  தேனீ (Apis) என்று பெயரிட்டார், ஆனால் காலப்போக்கில் அது மறுபடி பெயர் மாற்றம் பெற்றது. 

பேயரின் பன்னிரண்டாவது புதிய தெற்கு விண்மீன் டிரையாங்குலம் ஆஸ்ட்ரேல் (Triangulum Australe),  மென்செலால் இது ஹெர்குலஸ் குடும்பத்தில் வைக்கப்பட்டது. இந்த விண்மீன்கள் தொகுப்புகள் தொலைதூரத் தெற்கு வானத்தில் அமைந்திருப்பதால், அவற்றின் உடுக்களைப் பண்டைய கிரேக்கர்களுக்கும் ரோமானியர்களுக்கும் தெரிய வாய்ப்பின்றி இருந்தது.பேயர் குடும்பம் தெற்கு வான் துருவத்தை வட்டமிடும் ஒழுங்கற்ற ஆனால் தொடர்ச்சியான பட்டையை (Band) உருவாக்குகிறது. 


 லா கெய்ல் குடும்பம் (La Caille Family) 1756 ஆம் ஆண்டில்  நிக்கோலா லூயிஸ் டி லாகெயிலால் (Nicolas Louis de Lacaille) பெரும்பாலான விஞ்ஞான கருவிகளின் பெயரிடப்பட்ட உடுத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டன. விஞ்ஞான கருவிகளைக் குறிக்க  அவர் அறிமுகப்படுத்திய பதிமூன்று (13) உடுத் தொகுதிகளில் பனிரெண்டைக் (12) தன்னகத்தே கொண்டுள்ளது. 


தென்னாப்பிரிக்காவில் டேபிள் மவுண்டனில் (Mons Mensa)  தனது தொலைநோக்கியை அமைத்ததை அவர் நினைவு கூரும் வகையில் இவ்வாறு பெயரிட்டார் . இந்த லா கெய்ல் குடும்பத்தில் (La Caille Family)  நார்மா (Norma),  சர்க்கினஸ் (Circinus), டெலிஸ்கோப்பியம் (Telescopium), மைக்ரோஸ்கோபியம் (Microscopium), ஆக்டான்ஸ் (Octans) ஸ்கல்ப்சர் (Sculptor), ஃபோர்னாக்ஸ் (Fornax), கெய்லம் (Caelum), ஹொரோலஜியம் (Horologium), மென்சா (Mensa), ரெட்டிகுலம் (Reticulum), பிக்டர் (Pictor) மற்றும் ஆன்ட்லியா (Antlia) ஆகிய பனிரெண்டு உடுத் தொகுப்புகள் அடங்கும்.  மீதமிருந்த லாகெய்ல் கருவியான பிக்சிஸை (Pyxis) ஆகாய நீர்கள் குடும்பத்துடன் மென்செல் ((Menzel)   சேர்த்தார்.

இக்கட்டுரை 22.06.2020 அன்று vallamai.com இணையத் தளத்தில் வெளியாகி உள்ளது.

மீண்டும் சந்திப்போம்.











Comments

Post a Comment

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)