05.06.2020 , 04.07.2020 சந்திர கிரகணங்கள் மற்றும் 21.06. 2020 சூரிய கிரகணம்

2020 ஆம் ஆண்டில் மொத்தம் ஆறு கிரகணங்கள்  ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு சந்திர கிரகணங்கள் (Lunar Eclipses),  இரண்டு சூரிய கிரகணங்கள் (Solar Eclipses). அதில் இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த ஜனவரி மாதம் 10 தேதியில் நிகழ்ந்து விட்டது. 

ஆகவே இவ்வாண்டில் அடுத்து இன்னும் மூன்று சந்திர கிரகணங்களும்  இரண்டு சூரிய கிரகணங்களும் நிகழ உள்ளன. வரும் ஜூன் 5,6 , ஜூலை 4, 5 மற்றும் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் மேற் சொன்ன மூன்று சந்திர கிரகணங்களும், சூரிய கிரகணங்கள் ஜூன் 21 மற்றும் டிசம்பர் 14 ஆகிய தேதிகளில் நிகழ இருக்கின்றன
.


சந்திர கிரகணம் எப்போதுமே பௌர்ணமி நாளில் மட்டுமே நடை பெறும். அதே போல சூரிய கிரகணம் அமாவாசை நாளில் மட்டுமே நிகழும். கிரகணம் என்பது சூரியனின் ஒளி மறைக்கப்படும் நிகழ்வு. இங்கு சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியன நம்மிடம் உள்ளன. இதில் நேரடியாக ஒளியைத் தருவது சூரியன்.  சந்திரன் சூரிய ஒளியை எதிரொளிக்க மட்டுமே  செய்கிறது.  அதாவது சூரிய ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ புவி மீது படாமல் சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வந்து மறைக்குமானால் அது சூரிய கிரகணம். அதுவே சூரியனின் ஒளி சந்திரன் மீது படாமல் பூமி இடையில் வந்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைத்தால் அது சந்திர கிரகணம்.  நடக்கும் 2020 ஆண்டில்  டிசம்பர் 14 அன்று நடைபெறப் போகும் சூரியகிரகணம் முழு சூரிய கிரகணம் (Total solar eclipse). அதுவே ஜூன் 21 அன்று நடைபெறப் போவது  வளைய சூரிய கிரகணம் (Annular solar eclipse) . சூரிய கிரகணத்தில் மொத்தம் நான்கு வகைகள் உண்டு. அது போலவே சந்திர கிரகணத்தில் மூன்று வகைகள் உண்டு. 
அவை 1) புறநிழல் சந்திர கிரகணம் (Penumbral lunar eclipse)
2) முழுச் சந்திர கிரகணம் (Total lunar eclipse) மற்றும் 
3) பகுதிச் சந்திரகிரகணம் (Partial lunar eclipse)

பூமியின் நிழல் இரண்டு பகுதிகளைக் கொண்டது. அக நிழற்பகுதி (Umbra) மற்றும் புற நிழற்பகுதி (Penumbra). அக நிழற் பகுதி  இருளடர்ந்த பகுதியாகும். புற நிழற் பகுதி  இருள் குறைந்த பகுதியாகவும் இருக்கும்.




சந்திரன் செல்லும் பாதை எப்படி உள்ளது என்பதைப் பொறுத்தே எந்த வகையான கிரகணம் உண்டாகும் என்பதைச் சொல்ல முடியும். சந்திரன் கடக்கும் பாதையில் முழுவதுமாக அக நிழற் பகுதியில் இருக்குமானால் அப்போது முழுச் சந்திரகிரகணம் (Total lunar eclipse) உண்டாகும். அடுத்து அதன் பாதையில் ஒரு பகுதி அக நிழற் பகுதியிலும் மற்றொரு பகுதி புற நிழற் பகுதியிலும் அமையமானால் பகுதிச் சந்திர கிரகணம் (Partial lunar eclipse) உண்டாகும். சந்திரனின் பாதை முழுவதுமே புற நிழற் பகுதியில் அமைந்தால் அப்போது உருவாவதுதான் புற நிழற் சந்திர கிரகணம் (Penumbral lunar eclipse).  இந்த ஆண்டின் நான்கு சந்திர கிரகணங்களுமே புற நிழல் சந்திர கிரகணங்களாகவே அமைந்துள்ளன.

சென்னையைப் பொறுத்தவரையில் ஜூன் 5 ஆம் தேதி 23.15. 51 மணிக்குப் புறநிழல் கிரகணம் தொடங்குகிறது. கிரகணத்தின் உச்சக் கட்டம் மறுநாள் அதாவது ஜூன் 6 ஆம் தேதி 00.54. 55 மணி. அதன் பின்னர் ஜூன் 6 ஆம் தேதி 02.34.03 மணிக்குக் கிரகணம் முழுமையாக நீங்கி மறுபடியும் சந்திரன் இயல்பான பொலிவுடன் தெரியத் துவங்கும். 

அடுத்து ஜூன் 5 மற்றும் 6 தேதிகளில் நிகழவிருக்கும் மூன்றாவது புற நிழல்  சந்திர கிரகணம் ஐரோப்பாவின் பெரும் பகுதி, ஆசியாவின் பெரும் பகுதி, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, தென்னமெரிக்காவின் தெற்கு/ கிழக்குப் பகுதிகள், பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகள், அண்டார்ட்டிகா ஆகிய இடங்களில் தெரியும்.

சென்னையைப் பொறுத்தவரையில் ஜூலை 4 மற்றும் 5 ஆம் தேதி  நிகழவுள்ள மூன்றாம் புற நிழல் சந்திர கிரகணம் தெரியாது. 

தெற்கு/ மேற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் பெரும் பகுதி, வட அமெரிக்காவின் பெரும் பகுதி, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மர்றும் அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் மட்டுமே தெரியும். இந்தியாவில் தெரியாது.


பொதுவாகவே சந்திர கிரகணங்களில் மூன்றில் ஒரு பங்கு புற நிழல் சந்திர கிரகணங்களாகவே இருக்கும். பூமி சூரியன் சந்திரன் ஆகிய மூன்றும் சற்று ஏறு மாறாக அமையும் போது புற நிழல் சந்திர கிரகணம் நிகழும். பூமியின் இருளடர்ந்த அக நிழற் பகுதியை விடப் புற நிழற் பகுதி மிகவும் கருமை குன்றிக் காணப்படும். ஆகவே வெறும் கண்களால் புறநிழல் கிரகணத்தை அறிய முடியாது.

புற நிழல் அளவு (Penumbral magnitude) என்பது பூமியின் புற நிழலால் மூடப்பட்டிருக்கும் சந்திரனின் விட்டம் எனப்படுகிறது. புறநிழல் பகுதி (Penumbra) பூமியின் நிழலின் இருள் குறைந்த பகுதி. மொத்த சந்திர கிரகணத்தின் புறநிழல் அளவு (Penumbral magnitude) பொதுவாக 2 ஐ விட அதிகமாக இருக்கும், அதே சமயம் பகுதிச் சந்திர கிரகணத்தின்  (Partial eclipse) புறநிழல் அளவு  எப்போதும் 1 ஐ விட அதிகமாகவும் 2 ஐ விடச் சிறியதாகவும் இருக்கும்.




ஒரு கிரகணத்தின் புற நிழல் அளவு 1 க்கும் குறைவாக இருக்கும்போது, சந்திரனின் விட்டத்தில் ஒரு சிறிய பகுதி மட்டுமே பூமியின் நிழலின் இருள் குறைந்த பகுதியால் மூடப்பட்டிருக்கும். புறநிழல் சந்திர கிரகணத்தின் போது இது நிகழ்கிறது. இத்தகைய கிரகணங்களை பூமியில் பார்வையாளர்கள் பார்ப்பது மிகவும் கடினம். சொல்லப்போனால் பொதுவாகவே 0.60 க்கும் குறைவான புறநிழல் அளவைக் கொண்ட புறநிழல் கிரகணங்களைப் வெறும் கண்ணால் கண்டறிய இயலாது .

நாளையும் அதற்குப் பின்னரும் நடைபெறப் போகும் சந்திர கிரகணங்கள் முன்னர் சொன்னது போல புற நிழல் கிரகணங்களே. 




சூரிய கிரகணத்தில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன்  வரும் போது ஏற்படும். அப்போது  சந்திரனின் அக நிழற் பகுதியில் பூமி  மேல் படத்தில் காட்டியபடி அமையுமெனில் முழுக் கிரகணம் உண்டாகிறது.



அதுவே  பூமி நடுப்படத்தில் காட்டியவாறு வரும் நிலையில் வளையச் சூரியக் கிரகணம் உண்டாகும். இந்த ஆண்டு வரவிருக்கும் இரண்டு சூரிய கிரகணங்களுமே வளையச் சூரிய கிரகணங்கள் தான்.









கலப்புச் சூரிய கிரகணம் (Hybrid Solar Eclipse) என்பது நாம் சொன்ன நான்கு வகையான சூரிய கிரகணத்தில் ஒரு சிறப்பு வகை.  இது புவியில் பார்வையாளரின் இருப்பிடத்தையும் சந்திரனின் மத்திய கிரகண பாதையையும் பொறுத்து வளைய சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) அல்லது முழுச் சூரிய கிரகணமாகத் (Total Solar Eclipse)  தெரிகிறது.





ஒரு கலப்புச் சூரிய கிரகணத்தின் போது, பூமியின் வளைவுவானது (Earth's curvature) கிரகண பாதையின் சில பகுதிகளைச் சந்திரனின் அக நிழற்பகுதிக்குள் (Umbra) கொண்டு வருகிறது. அக  நிழற் பகுதி முழுச் சூரிய கிரகணத்தை உருவாக்கும்  இருண்ட நிழற் பகுதி. மற்ற பகுதிகள் அக நிழற் பகுதியின் எல்லைக்கு வெளியே இருக்கும்.  இதனால் அப்பகுதிகளில் வளையச் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஆகவே புவியில் சில பகுதிகளில் முழுச் சூரிய கிரகணமும் வேறு சில பகுதிகளில் வளையச் சூரிய கிரகணமும் எற்படுவதால் இதனை கலப்புச் சூரிய கிரகணம் என்கிறோம்.


எப்போதுமே ஒரு சூரிய கிரகணம் சந்திர கிரகணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரோ அல்லது அதற்கு பின்னரோ நிகழ்கிறது.
வழக்கமாக இரண்டு கிரகணங்கள் ஒரு வரிசையில் வரும். ஆனால் அபூர்வமாக, ஒரே கிரகணப் பருவத்தில் (Eclipse season) மூன்று கிரகணங்களும் வரக் கூடும். இப்போது அப்படியான ஒரு அபூர்வமான நிகழ்வு நடக்கப் போகிறது.


இந்தக் கிரகணப் பருவத்தில் ஜூன் 21 நடக்கவிருக்கும் சூரிய கிரகணம் இரண்டாவது கிரகணம் ஆகும். இந்தப் பருவத்தின் (season’s) முதல் கிரகணம் 5 ஜூன் 2020 அன்று நடக்கவிருக்கும் சந்திர கிரகணம் மூன்றாவது கிரகணம் மீண்டும் 5 ஜூலை 2020 நிகழவிருக்கும் சந்திர கிரகணம் ஆகும்.
ஜூன் 21 ஆம் தேதி நிகழவுள்ள சூரிய கிரகணமானது 
காங்கோவின் இம்போண்டோ, மத்திய ஆப்பிரிக்க குடியரசின் ஓபோ, எத்தியோப்பியாவின் லாலிபெலா, பாகிஸ்தானின் சுக்கூர், சிந்து, பனோ அகில், சிந்து, இந்தியாவின்  கர்சனா, ராஜஸ்தான், சிர்சா, ஹரியானா, டெஹ்ராடூன், உத்தரகண்ட், தெஹ்ரி, உத்தரகண்ட் மற்றும் சீனாவின் ஜியாமென், புஜியன் ஆகிய நகரங்களில் வளையச் சூரிய கிரகணமாகத் (Annular solar eclipse) தெரியும்
  

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் பாங்குய், தெற்கு சூடானின் ஜூபா, எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா, சூடானின் கார்ட்டூம்
ஏமனின் ஜிபூட்டி, ஜிபூட்டிஅஸ்மாரா, எரித்திரியா, சனா, 
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தோஹா, கத்தார், துபாய், துபாய், மஸ்கட், ஓமான் பாகிஸ்தானின், கராச்சி, சிந்து, இஸ்லாமாபாத், லாகூர், இந்தியாவின் புது தில்லி, டெல்லி, நேபாளத்தின் காத்மாண்டு,
 பூட்டானின் திம்பு, சீனாவின் சோங்கிங், சோங்கிங் நகராட்சி, ஹாங்காங், தைவானின் தைபே, ஹாக்டியா, குவாம் ஆகிய நகரங்களில் பகுதிச் சூரிய கிரகணமாகவும் (Partial solar eclipse)  தெரியும்.

ஜூன் 21 அன்று நடைபெற இருக்கும் சூரிய கிரகணம் சென்னையைப் பொறுத்தவரையில் பகுதிச் சூரிய கிரகணமாகவே இருக்கும். இது சென்னையில் காலை 10.22 மணிக்குத் துவங்கிப் பகல் 11.59 மணிக்குப் பெருமத்தை அடையும். பின்னர் மெல்ல கிரகணம் விலகத் துவங்கி பிற்பகல் 13.41 மணிக்கு முற்றிலுமாக விலகி விடும்.








Comments

  1. மிகவும் அருமை. வாழ்த்துக்கள் வி எஸ்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சிவநேசன். உங்கள் பாராட்டு எனக்கு உற்சாகமூட்டுகிறது.

      Delete
  2. Very much informative. Clearly explained with diagrams. Thank u so much sir.
    Mahalakshmi

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)