நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetic Nephropathy)

நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetic nephropathy)

நீரிழிவு சிறுநீரக் நோய் என்பது வகை1 மற்றும் வகை 2 நீரிழிவு நோய் காரணமாக ஏற்படும் சிறு நீரகம் தொடர்புள்ள தீவிரமான சிக்கலாகும். நமது உடலின் குறிப்பிடத்தக்க உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகத்தின் உள்ளே பல இலட்சக்கணக்கான தந்துகி இரத்தக் குழாய்கள் (Capillary blood vessels) இருக்கின்றன. இக்குழாய்கள் இரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வடிகட்டி சுத்திகரிக்கின்றன. சில சமயம் இந்தச் சுத்திகரிக்கும் அமைப்பு சிறுநீரக நோய்த் தாக்குதலால் செயலிழந்து விடும். நீரிழிவு நோய் காரணமாக
பத்திலிருந்து இருபது ஆண்டுகளுக்குக்குள் எந்த நேரத்திலும் இரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வடிகட்டும் திறனை சிறுநீரகம் இழக்கக் கூடும். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு ஐந்து இந்தியரில் ஒருவர் சிறுநீரகம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தவிரவும் ஐம்பது விழுக்காடு (50%) நீரிழிவு நோயாளிகள் தங்களது வாழ்நாளில் ஏதோ ஒரு வகையில் சிறுநீரகம் பழுதாகித் துன்பம் அடைகின்றனர்.

நெஃப்ரோபதி (Nephropathy) என்று பொதுப் பெயரில் அழைக்கப்படும் சிறுநீரகச் செயலிழப்பு ( Renal failure) ரிச்சாவிற்கு (Richa) ஏற்பட்டது போல நீண்டகால நீரிழிவு நோய் காரணமாக ஏற்படும் விளவாகவே பட்டியலிடப்படுகிறது.
ரிச்சா தனது ஆய்வகச் சோதனை முடிவுகளைக் கண்டு கலவரம் அடைந்தார். ரிச்சாவின் ஆய்வகச் சோதனை முடிவுகள் அவரது சிறுநீரில் கூடுதாலான அளவில் புரதம் இருப்பதாகத் தெரிவித்தன. இது சிறுநீரகப் பாதிப்பின் தொடக்க அறிகுறி. மருத்துவர் அவளது சிறுநீரகங்கள் நீரிழிவு நோய் காரணமாகவே பாதிப்புக்குள்ளாகி உள்ளது என்று தெரிவித்தார். ரிச்சாவின் தோழி நீத்து (Neetu) டயாலிசிஸ் (Dialysis) என்று சொல்லப்படும் இடைச் சவ்வூடு பரவல் முறையில் இரத்தத்திலிருந்து நச்சுப் பொருட்களைப் பிரித்தெடுக்கும் கூழ்மப் பிரிப்புச் சிகிச்சை எடுத்துக் கொள்கிறாள். மருத்துவமனைக்கு உள்ளேயும் வெளியிலும் அவளது வாழ்க்கை மிகக் கடினமாக இருப்பதாகத் தெரிந்தது. தனக்கும் அது போன்ற நிலை வந்து விடுமோ என்ற அச்சம் ரிச்சாவிற்கு உருவானது.


அவள் சுயமாக நிர்வகித்துத் தனது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைப்பதில் அத்தனை சிறப்பாகச் செயல் படவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அவளது HbA1c மதிப்பு 9.0 விற்கும் அதிகமாகவே இருந்தது. இது நீரிழிவு நோயின் தடத்தை பழைய நிலைக்கு மாற்றி சிறுநீரக மற்றும் சார்ந்த சிக்கல்களிலிருந்து விடுபடப் புதிய இலக்குகளை நிர்ணயம்
செய்ய அவளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. சிறுநீரகம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு இவற்றுக்கிடை யிலான தொடர்பை
அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அனைத்திற்கும் மேலாக இது நீரிழிவு காரணமான சிக்கல் என்பதை விட உயர் இரத்த குளுக்கோசால் ஏற்படும் சிக்கல் என்பதே பொருத்தமானது. நம்மால் ரிச்சாவிற்காக எப்படி உதவ முடியும் என்பதற்கான வழி கண்டறிய இப்போது தொடங்குவோம் , அது ஒருவேளை உங்களுக்கானதாகவும் இருக்கக் கூடும்.


நீரிழிவு சிறுநீரக நோயாளிகளின் மெய்யான எண்ணிக்கை (Actual Numbers of Diabetic Nephropathy):

உலகத்திலேயே அதிக எண்னிக்கையில் நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடு நமது இந்தியாதான். 2017 ஆம் ஆண்டில் 7.2 கோடி நீரிழிவு நோயாளிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2045 ஆண்டு வாக்கில் இந்த மதிப்பில் நாற்பத்தெட்டு விழுக்காடு (48%) அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. நீரிழிவு நோயுள்ளவர்கள் அனைவருக்குமே சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்படுவதில்லை.

சிறுநீரக நோய் வளர்ச்சியடையத் தூண்டும் காரணிகளாக இருப்பவற்றில் மரபியல்(Genetics), உயர் இரத்தச் சர்க்கரை (High Blood sugar), உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) ஆகியனவும் அடங்கும். எப்படி நீரிழிவு சிறுநீரக நோய்க்குக் காரணமாகிறது?


சிறுநீரகத்தில் உள்ள தந்துகி இரத்தக் குழாய்கள் வழியாக இரத்தம் பாயும் போது கழிவுப் பொருட்களும், நச்சுக்களும் கசக்கிப்பிழியப்படுகின்றன. இதுவே புரதம், இரத்தச் சிவப்பணுக்கள் போன்ற பயனுள்ள பொருட்கள் அளவில் மிகப் பெரிதாக இருப்பதால் வடிகட்டி வழியாகச் செல்ல இயலாமல் இரத்தத்திலிலேயே தங்கி விடுகின்றன. பிற பொருட்கள் வடிகட்டப்பட்டு சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகின்றன. நீரிழிவு நோய் இந்த அமைப்பைச் சீர்குலைக்கும், காரணம் இரத்தச் சர்க்கரை அளவு அதிகமிருந்தால் சிறுநீரகம் அதிகமான கனஅளவு இரத்தத்தை வடிகட்ட வேண்டியதிருக்கும்.

 இதனால் சிறுநீரக வடிகட்டிகள் அடைத்துக் கொண்டு பழுதடைவதால் இறுதியில் சிறுநீரில் சிறிய அளவில் புரதம் கசிவதில் (Albumin leak) வந்து முடியும். சிறிய அளவில் சிறுநீரில் புரதம் காணப்படுவதை மைக்ரோஅல்புமினுரியா (Micro albuminuria) என்று அழைக்கிறோம்.


வேறு வகையில் சொல்வதானால், சிறுநீரகத்தில் காணப்படும் வடிகுழல் முடிச்சு (Glomerulus) வழியாக புரதம் இயல்புக்கு மாறாக பெரும் ஊடுருவும் திறனைக் கொண்ட நிலை எனலாம். சிறுநீரில் (நாளொன்றுக்கு 300 மில்லிகிராமிற்கு மேல்) அதிகமாகப் புரதம் காணப்படுவதே மைக்ரோ அல்புமினுரியா. மைக்ரோஅல்புமினுரியா (Microalbuminuria) இருக்கும் போது, ஆரம்பத்திலேயே சிறுநீரக நோய் கண்டறியப்பட்டால், சிறுநீரக நோய் மோசமடையாமல் தடுக்க நிறையச் சிகிச்சைகள் உள்ளன. மைக்ரோஅல்புமினுரியாவின் பிற்பகுதிகளில் சிறுநீரக நோய் கண்டறியப்பட்டால், அடுத்துத் தொடர்வது சிறுநீரக நோயின் இறுதிக் கட்டம்தான்.


உயர்த்தப்பட்ட இரத்த குளுக்கோஸ் அளவுகள் காரணமாக சிறுநீரகத்தின் வடிகுழல் முடிச்சுகளில் உள்ள புரதங்கள் இணைக்கப்படுகின்றன. இவ்வாறு புரதங்கள் இணைக்கப்படும் போது சிறுநீரகத்தின் உள்ளே வடுக்களை (scars) உருவாக்கும். வடிகுழல்முடிச்சுகளில் வடுக்கள் உருவானால், அது கடின வடிகுழல் முடிச்சு (Glomerulosclerosis) நிலையாகும். அதாவது வடிகட்டும் குழல் கடினமாக கெட்டிப்பட்டு விடும் நிலை. இந்த நிலையை அடையப் பல ஆண்டு காலமாகும் என்றாலும், வடுக்கள் உருவான திசுக்கள் படிப்படியாகச் சிறுநீரகம் முழுவதையும், அனைத்துத் திசுக்களையும் கைப்பற்றி விடும். இது நிகழ்ந்த பின்னர் சிறுநீரகம் செயலிழந்து, உடலின் கழிவுப் பொருட்களை
அகற்ற இயலாமல் போய்விடும்.


நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பின் அறிகுறிகள் (Symptoms of Chronic Renal failure):

சிறுநீரகச் செயலிழப்பின் தொடக்கக் கட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு எந்தவிதமான வேறுபாடும் தெரிவதில்லை. ஆரம்ப நிலையில் நீரிழிவு சிறுநீரக நோய் அறிகுறிகள் எதுவுமே பெரும்பாலும் தெரிவதில்லை. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால் அறிகுறிகள் வெளிப்படலாம். கீழ்க்கண்ட அறிகுறிகளும் அதில் அடங்கும்.

1) கைகள், பாதம் அல்லது கணுக்கால்கள், முகம் ஆகியவற்றில் வீக்கம்.
2) தூங்குவதில் சிக்கல் அல்லது கவனக் குறைபாடு
3) பசியின்மை
4) குமட்டல்
5) பலவீனம்
6) அரிப்பு மற்றும் வறண்ட தோல் (கடைசி நிலை)
7) தூக்க மயக்க நிலை (கடைசி நிலை)
8) அதிகரித்த பொட்டாசியத்தின் அளவால் இதயத்தின் இயல்பான தாளத்திற்கு (Heart Regular Rhythm) மாறான சீரற்ற நிலை
9) தசைகள் வெட்டியிழுத்துக் (twitching) கொள்ளுதல்
அறிகுறிகள் தென்படாமை , நோய் கண்டுணர்தல் மற்றும் ஆரம்ப கட்ட சிகிச்சை

மேற்கொள்ளுதலுக்கு வருடாந்திர முதல் கட்ட ஆய்வு (Yearly Screening Test)
அவசியமாகிறது. பாதியளவு அதாவது 50% சிறுநீரகச் செயல் இழப்பு ஏற்பட்ட பின்னரும் கூட அது பற்றி அறியாமலே இருக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் சிறுநீரில் புரதம் அதிகம் இருப்பது சிறுநீரை நுரைக்கச் செய்யும்.
நீரிழிவு நோய் உங்களுடைய சிறுநீரகத்தைச் சேதப்படுத்துவதைத் தவிர்க்க நீங்கள் என்ன செய்யலாம்?

இந்தியாவில் நீரிழிவு நோய் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், சிறுநீரக நோய் பாதிப்புள்ளதாகக் கண்டறியப்பட்ட நபர்களில் பெரும்பாலானோர் அவர்களுக்கு சிறுநீரக நோய் இருப்பது அறியப்படும் முன்பு எந்தச் சிறுநீரகச் செயல்பாடுச் சோதனைகளுக்கும் உட்படுத்தப்படவில்லை என்பதுதான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
இயல்புக்கதிகமாகச் சிறுநீரில் புரதம் (albuminuria) உள்ளதா இல்லையா என்பதை அறியும் முதல்கட்ட சோதனைகளுக்குப் பின்னர், சிறுநீரில் புரதம் தொடர்ந்து இருப்பது அறியப்படுமானால், ரெனின்-ஆஞ்சியோடென்சின்-அல்டோஸ்டிரோன் முறையைச் (Renin – Angiotensin – Aldosterone System - RAAS) செயல்பாட்டைக் குறைக்கும் மருந்துகளால் தரப்படும் சிகிச்சை , நீரிழிவு நோய் கொண்ட நபர்களிடம் நாள்பட்ட சிறுநீரக நோய் வளர்ச்சி அடைவதையும் மற்றும் தொடர விடாமல் தடுப்பதிலும் மிகச்
செயல்திறமுள்ளதாக விளங்குகிறது.


இத்தகைய சிறுநீரக நோயாளிகளில் பலருக்குத் தற்செயலாகவோ அல்லது நோய் முற்றிய கடைசிக் கட்டத்திலோதான் நோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் பொதுமக்களிடம் சிறுநீரக நோய்க்கான காரணங்கள் குறித்த விழிப்புணர்வுக்
குறைவும், தாமதமாகக் கண்டறியப்படுவதன் தாக்கத்தை அறியாமல் இருப்பதுதான். சிறுநீரகங்களுக்கான வருடாந்திரச் சோதனை:
இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள் நோய் கண்டறியப்பட்டது முதல் ஆண்டுக்கொரு முறையும், முதலாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு நோய் கண்டறியப்பட்டது முதல் ஐந்தாண்டுகளுக்குப் பின்னரும் சிறுநீரில் புரதம் (Albuminuria) உள்ளதைக் கண்டறியும் சோதனையைக் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும்.


1) மைக்ரோஅல்புமின் அல்லது அல்புமின்/கிரியாட்டினின் விகிதம் (Albumin/ Creatinine Ratio) சுருக்கமாக ACR சிறுநீர்ச் சோதனையில் மதிப்பு 30 க்கும் குறைவாக இருப்பது இயல்பான மதிப்பென்று கொள்ளப்படுகிறது.

2) குளோமரூலர் வடிகட்டும் வீதம் (Glomerular Filtration Rate) சோதனையில்
மதிப்பிடப்படும் குளோமரூலர் வடிகட்டும் வீதம் (estimated Glomerular Filtration Rate)
சுருக்கமாக e GFR அதிக அளவில் சிறுநீரகச் சீர்குலைவுகளைக் கண்டறிவதில்

பயன்படுத்தப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 60 மில்லி லிட்டருக்கும் குறைவான மதிப்பு சிறுநீரக நோய்க்கான சைகையாகக் கொள்ளலாம்.
நீரிழிவு நோயால் சிறுநீரகங்கள் பாதிப்பைத் தவிர்க்கும் பிற நடவடிக்கைகள்:
1) இரத்த சர்க்கரை அளவை இலக்கு வீச்சுக்குள் (Target Range) வைத்திருத்தல்

2) புகைப்பிடிப்பதைக் கைவிடுதல். புகைப்பிடிப்பது இரத்த ஓட்டத்தில் சீர்குலைவை ஏற்படுத்துகிறது. நிகோட்டின் (Nicotine) இரத்த ஓட்டத்தில் உள்ள ஆக்சிஜனுடன் இணைந்து, ஆக்சிஜன் உடல் திசுக்களுக்கு கிடப்பதைத் தடுக்கும்.

3) இரத்த அழுத்தத்தைக் (Blood Pressure) கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். 130/80 மிமீ (Hg) க்கும் குறைவான இரத்த அழுத்தம் நீரிழிவு நோயாளிகளுக்கான இலக்கு இரத்த அழுத்தமாகும்.

4) இரத்தக் கொழுப்பு (Blood Cholesterol) அளவைக் கட்டுப்பாடில் வைக்க வேண்டும்.

5) சுறுசுறுப்பாக இருத்தல்

6) ஆரோக்கியமான உணவை உண்ணுதல்

7) சிறுநீரகங்களைப் பாதிக்கும் மருந்துகள் பயன்பாட்டைத் தவிர்த்தல்.


ரிச்சா (Richa) விற்கு என்ன ஆனது? சிறுநீரில் அதிகமாகப் புரதம் காணப்படும் நிலையான மைக்ரோ அல்புமினுரியாவை (Micro albuminuria) மருத்துவர் இனம் கண்ட பின்னர், மேலும் சிறுநீரகங்களின் பாதிப்பு மோசமாகாமல் தடுக்கச் சிகிச்சைகளைப் பரிந்துரைக்கக் கூடும். நோய் முற்றி “மைக்ரோ அல்புமினுரியா” ஆக நிலைமை மோசமடையும் வரை காத்திருக்காமல், ரிச்சா அவராகவே சுயமாக அவரது நிலையை நிர்வகித்துக் கொள்ள வேண்டும்.

மேற்கோள்கள் ( References):

1) World kidney Day: hypertension and diabetes. Retrieved from:
https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/world-kidney-day-
hypertension-and-diabetes-two-major-causes-of-kidney-diseases-1477841-2019-03-14
2) Diabetes and Renal failure everything you need to know. Retrieved from:
https://www.thediabetescouncil.com/diabetes-and-renal-failure-everything-you-need-to-
know/
3) IDF. Retrieved from: https://idf.org/our-activities/care-prevention/diabetes-and-the-
kidney.html
****************************************************************************************************


இக் கட்டுரை 2020 மே மாத ஹெல்த்கேர் (தமிழ்) மருத்துவ மாத இதழில் வெளியானது. நன்றி:  ஆசிரியர், ஹெல்த் கேர்.









Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)