அறிவியல் பார்வையில் அமில - கார உணவுகள் பகுதி (1)

இப்போது நாம் உண்ணும் உணவை (Diet) அமிலத்தன்மை கொண்ட உணவுகள் (Acidic foods) என்றும் காரத்தன்மை கொண்ட உணவு (Alkaline foods) என்றும் பிரித்து வகைப்படுத்துகிறார்கள். அன்றாடம் உண்ணும் உணவை அமிலத்தை உருவாக்கும் உணவுகளுக்குப் பதிலாக காரத்தனமை கொண்ட உணவுகளுக்கு  மாற்றிக் கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடல் எடை குறைப்பது மட்டுமின்றி முடக்குவாதம், புற்று நோய் போன்ற கடுமையான நோய்களைக்கூட எதிர்க்கும் ஆற்றலைத் தருகிறது என்ற கருத்து, காரத் தன்மை கொண்ட உணவை ஆதரிப்பவர்களால் முன் வைக்கப்படுகிறது. பின்வரும் கட்டுரை இக்கருத்தை அறிவியல்பூர்வமாக அணுகுகிறது.

அமிலங்கள், காரங்கள் மற்றும் pH மதிப்பு :
முதலில் சில அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
பள்ளிக் கூடத்தில் அடிப்படை வேதியல் பாடத்தில் அமிலங்கள் மற்றும் காரங்கள் பற்றிப் படித்திருக்கலாம். லிட்மஸ் காகிதம் அல்லது கரைசல் போன்ற குறிகாட்டிகள் அமிலத்தன்மையுள்ள பொருட்களையும்  காரத்தன்மையுள்ள பொருட்களையும் இனம் பிரித்துக் காட்டும் என்றும் அமிலங்கள் நீல லிட்மசை சிவப்பாகவும்,காரங்கள் சிவப்பு லிட்மசை நீல நிறமாகவும் மாற்றும் என்றும் நாம் அறிந்திருக்கிறோம்.

கார உணவைப் பற்றி விவாதிக்கும்போது, pH மதிப்பு பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது. pH மதிப்பு ஒரு பொருளில் அமிலத்தன்மை அல்லது காரத்தன்மையை அளக்கும் ஒருவகை அளவீடு என்று சொல்லலாம். வேதியியலில் பொருட்களின் pH மதிப்பு 0 முதல் 14 வரை இருக்கும்.
அமிலத்தன்மையுடன் இருக்கும் பொருளுக்கு pH மதிப்பு 0 முதல் 6.9 வரையிலும், காரத்தன்மை கொண்ட பொருளுக்கு 7.1 முதல் 14 வரையிலும் நடுநிலைப் பொருளுக்கு pH மதிப்பு 7.0 ஆகவும் இருக்கும்.



அமில – கார உணவுகள் (Acid – Alkaline diet): 
நமது உடலில் வளர் சிதை மாற்றம் என்பது உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றும் உயிரியல் செயல்பாடு. இச் செயல் நெருப்புடன் ஒப்பிட்டுச் சொல்லப்படுகிறது. காரணம் நீராவி எஞ்சினில் நிலக்கரி எரிக்கப்பட்டுக் கிடைக்கும் ஆற்றல் இயக்க ஆற்றலாக மாற்றப்படுவது போல் இங்கு உணவு எரிக்கப்பட்டு ஆற்றல் பெறப்படுகிறது என்று சொல்லலாம். நமது உடலில் வேதி வினை  (Chemical reaction) வாயிலாக உணவுப் பொருள் எரிக்கப்படும் செயல் மெதுவாகவும் கட்டுப்படுத்தப்பட்டும் நிகழ்கிறது. பொருட்கள் எரிந்து முடித்தபின் எஞ்சுவது சாம்பல் (Ash) என்பது நாம் அறிந்ததுதான். அதேபோல நம் உடலில் நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் எரிக்கப்பட்டு வளர்சிதை மாற்றக் கழிவுகள் (metabolic waste) என்னும் எச்சத்தைச் சாம்பலாக (Ash) விட்டுச் செல்கின்றன. இவ்வாறு கிடைக்கும் வளர்சிதை மாற்ற கழிவு (metabolic waste - Ash)  கார, நடுநிலை அல்லது அமிலமாக இருக்கலாம்.

கார உணவை (Alkaline diet) அமில-கார உணவு (Acid – Alkaline diet) அல்லது காரச் சாம்பல் உணவு (Alkaline Ash diet) என்றும் அழைக்கிறார்கள்.
அமில-சாம்பல் (Acid Ash) கருதுகோளின் படி, அமில சாம்பல் ஒருவருக்கு உடல்நலத்தைக் குன்றச் செய்து நோய்களால் எளிதாகப் பாதிப்பை உருவாக்கக் கூடும் என்றும் அதேசமயம் கார சாம்பல் (Alkaline Ash) பாதுகாப்பாக கருதப்படுகிறது. அதிகமான கார உணவுகளைத் (Alkaline diet) தேர்ந்தெடுப்பதன் மூலம்,  நமது உடலை காரமாக்கிக் ( alkalize) கொண்டு நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது.

நமது உடலின் pH மதிப்பை உணவால் மாற்றி விட முடியும் என்பதே இதன் அடிப்படையான கருதுகோள்.  வளர்சிதை மாற்றக் கழிவுகள் நமது உடலின் pH மதிப்பை நேரடியாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. வேறு வகையில் கூறுவதானால், அமில சாம்பலை (Acid Ash) எச்சமாகத் தரும் உணவுகளை உண்ணும் போது அது நமது இரத்தத்தை அதிக அமிலமாக்குகிறது. காரச் சாம்பலை (Alkaline Ash) வெளியேற்றும் உணவுகளை நாம் சாப்பிட்டால், அது நம் இரத்தத்தை அதிகக் காரமாக்குகிறது என்று கூறலாம்.


அமில மற்றும் கார உணவுப் பொருட்கள்:
நாம் உண்ணும் உணவுகளில் அமிலச் சாம்பலை தரும் உணவு கூறுகளில் புரதம், பாஸ்பேட் மற்றும் கந்தகம் ஆகியவை அடங்கும், அதே நேரத்தில் காரச் சாம்பலைத் தரும் கூறுகளில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை அடங்கும்.




அமில உணவுப் பொருட்கள்: இறைச்சி, கோழி, மீன், பால், முட்டை, தானியங்கள், ஆல்கஹால் ஆகியன முக்கியமானவை.
நடுநிலையான உணவுப் பொருட்கள்: இயற்கை கொழுப்புகள், மாவுச்சத்து மற்றும் சர்க்கரைகள் போன்றவை.



கார உணவுப் பொருட்கள்: பழங்கள், கொட்டைகள், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் ஆகியன.
உடலில் உணவுகள் எரிக்கப்பட்டு ஆற்றல் பெறப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் வளர்சிதை மாற்றக் கழிவுகள் அல்லது சாம்பல் உடலின் அமிலத்தன்மை அல்லது காரத்தன்மையை நேரடியாக பாதிக்கும் என்பது கார உணவை (Alkaline diet) ஆதரிப்போரின் கருத்தாக உள்ளது.


மனித உடலும் pH மதிப்பும்:
நமது உடலுக்குள் pH மதிப்பு பெரிதும் மாறுபடுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உடலின் சில பாகங்கள் அமிலத்தன்மை கொண்டவை, மற்றவை காரத்தன்மை கொண்டவை. நமது உடலுக்கு ஒரு குறித்த pH மதிப்பு நிலை இல்லை. வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தால் pH மதிப்பு 2 முதல் 3.5 வரை இருக்கும். இது மிகுந்த அமிலத்தன்மை கொண்டது. உண்ணும் உணவை உடைக்க அமிலத்தன்மை கட்டாயமாகத் தேவைப்படுகிறது.  மனித இரத்தத்தின் pH 7.36 முதல் 7.44 வரையில் மதிப்பு கொண்டதால் சற்று காரத்தன்மை உடையதாகவே காணப்படுகிறது. இரத்தத்தின் இயல்பான pH வரம்பிலிருந்து மாற்றம் அடைந்தால் அதற்கான சிகிச்சை உடனே தரப்பட வேண்டும். சிகிச்சை தரப்படாத நிலையில் அது உயிராபத்தை (fatal) உண்டாக்கக் கூடும். இருப்பினும் இத்தகைய நோய்நிலையான கீட்டோ அசிடோசிஸ் (Keto acidosis) மது அருந்துதல்(Alcohol usage), நீரிழிவு நோய் (Diabetes), பட்டினியாக இருத்தல்(Fasting) போன்றவற்றால் ஏற்படக் கூடும்.


(1) உணவின் அமிலத்தன்மையும் இரத்தம் மற்றும் சிறுநீரின் pH மதிப்பும்:
கார உணவை (Alkaline diet) ஆதரிப்பவர்கள், தனி நபர் ஒவ்வொருவரும் தங்களின் சிறுநீரின் pH மதிப்பைக் கண்காணிக்க வேண்டும் என்று பரிந்துரைகின்றனர். சிறுநீரின் pH  மதிப்பு 7.0 க்கு அதிகமாக இருந்து காரத்தன்மையுடனிருப்பதை அல்லது pH  மதிப்பு 7.0 க்குக் குறைவாக இல்லாமல் அமிலத்தன்மை இன்றியுள்ளதை உறுதிப்படுத்தக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

இரத்தத்தின் pH மாறாமல் இருப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும்  அவசியம் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தோம். இயல்பான வரம்புக்கு வெளியில் இரத்தத்தின் pH போய்விடும் பட்சத்தில் உயிரணுக்கள் (Cells) தங்கள் செயல்பாட்டை நிறுத்திவிடும். சிகிச்சை தரப்படாத நிலையில் மரணம் கூடச் சம்பவிக்கக் கூடும். உடலின் pH சமநிலையைத் திறம்பட நிர்வகித்துக் கட்டுப்படுத்தப் பல வழிமுறைகளை உடல் மேற்கொள்ளுகிறது. இது அமில - கார ஹோமியோஸ்டாஸிஸ் (acid-base homeostasis ) என்று அழைக்கப்படுகிறது. 

உணவின் மூலமாக இரத்தத்தின் pH மதிப்பை மாற்றுவது என்பது உண்மையில் சாத்தியமற்றது. இருந்தாலும் வரம்பிற்குட்பட்டு pH மதிப்பில் சிறிய ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். இரத்தத்தின் pH ஐ கட்டுப்படுத்தும் உடலின் முக்கிய வழிமுறைகளில் சிறுநீரின் வழியாக அமிலங்களை வெளியேற்றுதலும் ஒன்றாகும். உட்கொள்ளும் உணவால் சிறுநீரின் pH மதிப்பு வேறுபடலாம். அதிக அளவில் இறைச்சி உட்கொள்ளப்பட்டால் உடலுக்கு வளர்சிதை மாற்றக் கழிவுகளை அகற்ற நீண்ட நேரம் தேவைப்படும். ஆகவே இறைச்சி உண்ட  பல மணி நேரத்திற்குப் பின்னரும் சிறுநீர் அதிக அமிலத்தன்மை கொண்டதாகவே இருக்கும்.

ஆகையால், சிறுநீரின் pH என்பது ஒட்டுமொத்த உடலின் pH மற்றும் பொது ஆரோக்கியத்தின் சரியான குறிகாட்டியாகக் கொள்ள இயலாது. சிறுநீரின் pH உங்கள் உணவைத் தவிர வேறு காரணிகளாலும் பாதிக்கப்படலாம்.
பொதுவாகவே ஒருவரது உடலே இரத்தத்தின் pH அளவை இறுக்கமாகக் கட்டுப்படுத்துகிறது. ஆரோக்கியமான மனிதர்களைப் பொறுத்தவரையில் உட்கொள்ளும் உணவு இரத்தத்தின் pH மதிப்பை அதிகம் பாதிப்பதில்லை என்றாலும் சிறுநீரின் pH ஐ மாற்றக் கூடிய தன்மை கொண்டுள்ளது எனலாம்.


தொடரும்.......



 கட்டுரையின் முதல் பகுதி. இது ஜூன் 2020 ஹெல்த் கேர் (தமிழ்) மாத இதழில் வெளியாகியுள்ளது. அடுத்தபகுதி ஜூலை 2020 ஹெல்த் கேர் (தமிழ்) மாத இதழில் வெளிவரும்.
*****************************************************************************************************************

Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)