ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (6)
ரோகிணி என்று இந்தியர்களால் குறிப்பிடப்படும் ஆல்டிபரான் (Aldeberan) வானத்து ரிஷபத்தின் (Taurus) வலது கண்ணையும், ஐன் (Ain), என்னும் எப்சிலன் டவ்ரி (ε Tauri) இடது கண்ணையும் குறிக்கிறது.
ரோகிணி பூமியிலிருந்து 65 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு ஆரஞ்சு ராட்சத நட்சத்திரமாகும். ஒளி நொடிக்கு மூன்று இலட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கும். அந்த வேகத்தில் ஒளி ஒரு ஆண்டுக் காலத்தில் கடக்கும் தொலைவே ஒரு ஒளியாண்டு. இரவு வானத்தின் பொலிவான உடுக்களில் 14 வது பொலிவான உடுவாகவும், ரிஷபராசி உடுத் தொகுப்பில் உள்ள உடுக்களிலேயே பொலிவான உடுவாகவும் ஆல்டிபரான் விளங்குகிறது.
ஆல்டெபரான் மொத்தத்தில் சூரியனை விடச் சுமார் 518 மடங்கு பொலிவுடனும், அதன் கட்புலனாகும் ஒளியைப் (Visible light) போல் 153 மடங்கு பொலிவு மிக்கதாகவும் உள்ளது. ஆல்டிபரான் என்ற பெயரின் மூலம் “பின்தொடர்பவர்”(follower) என்று பொருள் தரும் அரபி வார்த்தையான அல் – தபரன் (Al – Dabaran) ஆகும். கார்த்திகை உடுக் கொத்தை (Pleiades Star Cluster) வானத்தில் விடாமல் பின் தொடருகிறது ரோகிணி என்ற பொருளில் அவ்வாறு அரபி மொழியில் சொல்லப்பட்டுள்ளது.
விண்மீன்களின் வாழ்க்கைச் சுற்று அவற்றின் நிறையை அடிப்படையாகக் கொண்டமைகிறது. பின் வரும் படத்திலிருந்து அதை எளிதில் புரிந்து கொள்ள இயலும்.
ரோகிணி உடு முக்கிய வரிசைக் (Main Sequence) கட்டத்திலிருந்து தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியது. அதன் மையத்தில் ஹைட்ரஜன் அணுக்கருக்கள் இணைவதால் உருவாகும் கனமான ஹீலியம் சேகரமாகி விடும். இனிமேல் மையத்தில் அணுக்கரு இணைவுக்கான எரிபொருளான லேசான ஹைட்ரஜன் கிடைக்க வழியில்லை. ஆகவே இந்நிலையில் ஹீலியம் மையத்தைச் சுற்றி ஹைட்ரஜன் கூடு (Hydrogen shell) ஒன்று உருவாகி இணையத் துவங்கியது. இதன் விளைவாக, நட்சத்திரம் சூரியனை விட 44.2 மடங்கு ஆரம் வரை பிரகாசமாகி விரிவடைந்துள்ளது.
நமது சூரிய மண்டலத்தின் மையத்தில் சூரியனுக்குப் பதிலாக ரோகிணி உடுவைச் சூரியனாக மாற்றி அமைப்பதாகக் கொண்டால் நட்சத்திரத்தின் மேற்பரப்பு புதனின் சுற்றுப்பாதையில் பாதி வரைக்கும் நீண்டு, நமது வானத்தில் 20 டிகிரி வரை விரிவடையும்.
ஹீலியம் எரியும் நிலை பொதுவாக நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் அல்லது சூரியனுக்கு சமமான ஒரு நட்சத்திரத்திற்கு சுமார் 700 மில்லியன் ஆண்டுகள் வரை நீடிக்கும். ரோகிணி உடு 1.7 சூரிய நிறையைக் கொண்டுள்ளது.
அதனால் ரோகிணி அடுத்த சில மில்லியன் ஆண்டுகளில் சுமார் 800 சூரியப் பொலிவை எட்டும். இறுதியில், அது அதன் வலுவான விண்மீன் காற்றின் காரணமாக அதன் தற்போதைய நிறையைப் பெருமளவில் இழந்து, தனது வெளிப்புற உறையை வெளித்தள்ளிக் கோள் நெபுலாவை உருவாக்கிப் பின்னர் ஒரு வெள்ளை குள்ளனை (White Dwarf) விட்டுச் செல்லும்.
ரோகிணி உடுவின் மேற்பரப்பு வெப்பநிலை 4,000 Kக்கும் குறைவாகவே இருக்கிறது . இதனைச் சூரியனின் 5,800 K உடன் ஒப்பிடும்போது சூரியனை விடக் குளிர்ந்த மேற்பரப்பு வெப்பநிலையை ரோகிணி கொண்டுள்ளது. இது மிகவும் மெதுவாகச் சுழலும் உடு. 643 நாட்களில் ஒரு சுழற்சியை நிறைவு செய்கிறது.
ரோகிணி உடுவை வானத்தில் மிக எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். இந்த உடுவைக் கண்டுபிடிக்க, ஓரியனின் (Orion) உடுத் தொகுப்பின் கச்சாக (Orion belt) அமைந்திருக்கும் மூன்று நட்சத்திரங்களால் வலதுபுறம் (வட வான் அரைக்கோளத்தில்) அல்லது இடதுபுறத்தில் (தெற்கு அரைக்கோளத்தில்) கற்பனையாக உருவாக்கப்பட்ட நீட்சியைப் பின்பற்றலாம். ரோகிணி அந்த வரிசையில் தோன்றும் முதலாவது பொலிவான உடு.
ரோகிணி உடு காண்பதற்கும் உற்று நோக்கவும் நவம்பர் பிற்பகுதியிலிருந்து டிசம்பர் தொடக்கத்தில், சூரியன் ரிஷபராசிக்கு எதிர்ப்பக்கத்தில் இருப்பது போலத் தெரியும். ஆகவே இரவு முழுவதும் தெளிவாகத் தெரியும். ஜனவரி மாதம் இரவு 9,00 மணிகெல்லாம் நன்றாகக் கட்புலனாகும். மார்ச் மாத இறுதியில், இது சூரிய அஸ்தமனத்தில் அஸ்தமித்து, மே முதல் ஜூலை வரை சூரியனின் கூசொளியின் பின்னால் முற்றிலும் மறைந்துவிடும்.
ரோகிணிக்கு அதாவது ஆல்டெபரனுக்கு (Aldebaran) அருகில் ஐந்து மங்கலான நட்சத்திரங்கள் தோன்றுகின்றன, ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ஒளியியல் துணைகள் (Optical companions) மட்டுமே. இந்த உடுக்களின் கண்டுபிடிப்பு வரிசையில் நட்சத்திரங்களுக்கு ஆல்டெபரன் B முதல் ஆல்டெபரான் F என்ற பெயர்கள் வழங்கப்பட்டன. முதன்மை நட்சத்திரமான ரோகிணி ஆல்டெபரன் A எனக் கொள்ளப்பட்டுள்ளது. தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது சில உடுக்கள் ஒன்றாகத் தோன்றும். ஆனால் உண்மையில் அவை ஒன்றோடு ஒன்று ஈர்ப்பு விசையுடன் பிணைக்கப்பட்டிருக்காது. மேலும் அவை நூற்றுக்கணக்கான பார்செக்குகள் (Parsec) அல்லது அதற்கு மேற்பட்ட தொலைவில் இருக்கும். இத்தகைய பார்வைக் கோட்டுச் சோடிகள் (Line of sight pairs) "ஒளியியல் சோடிகள்" (Optical pairs) என்று அழைக்கப்படுகின்றன. அவை உண்மையான இருமங்கள் (binaries) இல்லை.
ரோகிணி உடு கிரகணப் பாதைக்கு மிக அருகில் உள்ளது. கிரகணப்பாதை என்பது வானில் சூரியன், சந்திரன் மற்றும் கிரகங்கள் முழுமைக்குமான தோற்றப் பாதை. இதனால் ரோகிணி பெரும்பாலும் சந்திரனால் அடிக்கடி மறைக்கப்படுகிறது. அவ்வாறு மறைக்கப்படும் நேரத்தில் மூடப்பட்ட நேரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு வெவ்வேறு இடங்களிலிருந்து பார்ப்பதன் மூலம் உடுவின் அளவை மதிப்பிடுவது எளிதாக உள்ளது.
இது திருவாதிரை(Betelgeuse), சுவாதி (Arcturus)ஆகியவற்றை விடவுமே மங்கலானது.
ரோகிணி உடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் பல பெயர்களால் அறியப்பட்டது. பாரசீக நோக்கர்கள் இதை டாஷெட்டர் (Tascheter) என்று அறிந்தார்கள். பண்டைய பெர்சியாவின் (Persia) நான்கு அரச உடுக்களில் (Royal Stars) ரிஷப உடுத் தொகுப்பின் ரோகிணி (Aldeberan) சிம்ம (Leo) உடுத் தொகுப்பில் மகம் (Regulus), விருச்சிக (Scorpious) உடுத் தொகுப்பில் கேட்டை (Antares) மற்றும் பிஸ்சிஸ் ஆஸ்ட்ரினஸில் (Piscis Austrinus) உடுத் தொகுப்பின் ஃபோமல்ஹாட்(Fomalhaut) ஆகியன அடங்கும். இதில் ரோகிணி கிழக்கு அரச உடுவாகக் (Eastern Royal Star) கருதப்பட்டது. ரோகிணி புத்தரின் நட்சத்திரம் (Buddha’s Star), கடவுளின் கண் (God’s Eye) அல்லது வெளிச்சத்தின் உடு (Star of Illumination) என்றும் அழைக்கப்படுகிறது.
சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, நட்சத்திரத்தின் உயர்வு வசந்த சம இரவு நாளையும் (vernol equinox) பாபிலோனிய புத்தாண்டின் தொடக்கத்தையும் குறித்தது.
பண்டைய ரோமானியர்கள் ரோகிணி உடுவை பாலிலிசியம் (Palilicium) என்று அழைத்தனர். இந்தப் பெயர் பாலிலியா அல்லது பரிலியாவிலிருந்து (Palilia or Parilia) பெறப்பட்டது. இது பான் (Pan) என்னும் தெய்வத்தின் பெண்பால் வடிவமான பேலஸின் (Pales) விருந்தைக் குறிக்கிறது.
இடைக்காலத்தில், ஆல்டெபரான் மத்திய காலங்களில் லத்தீன் மொழியில் கோர் டாவ்ரி (Cor tauri) அதாவது “ரிஷபத்தின் இதயம்” (Heart of the Bull) என்ற பொருளில் அழைக்கப்பட்டது.
இந்து புராணங்களில், நட்சத்திரம் ரோகிணி என்று அழைக்கப்படுகிறது, சந்திரனுக்கு மனைவியாக வழங்கப்பட்ட தட்சண் 27 மகள்களில் ஒருவர். சந்திரன் அவனுடைய மற்ற மனைவிகளைப் புறக்கணித்து ரோகிணியை மிக விருப்பத்துடன் காதலித்து, அவளுடனே முழு நேரத்தையும் கழித்தான். இதனால் கோபமடைந்த தட்சண், சந்திரனைக் காசநோய் பிடிக்கச் சபித்தார். இந்தச் சாப விவகாரத்தில் பிற கடவுளர்களின் தலையீடு காரணமாக சாபத்தின் கடுமை குறைக்கப்பட்டுச் சந்திரன் மாதத்தில் 15 நாட்களுக்கு காசநோயால் பாதிக்கப்பட்டும் அடுத்த 15 நாட்களுக்குக் குணமடைகிறான். இவ்வாறு இந்துக்களின் புராணம் சந்திர கட்டங்களை (Phases) விளக்குகிறது.
மெக்ஸிகோவில் உள்ள செரிஸ் (Seris) இன மக்கள் ஏழு கர்ப்பிணிப் பெண்களின் பிரசவத்திற்கு ஒளி தரும் உடுவாக ரோகிணியைக் கண்டனர். கார்த்திகை (ப்ளேயட்ஸ்) உடுக்கொத்து (Pleiades star cluster) அந்த ஏழு பெண்களைக் குறிப்பதாகக் கொண்டனர்.
அமெரிக்காவின் பூர்வப் பழங்குடியினரான டகோட்டா சியோக்ஸ் (The Dakota Sioux) இனத்தவர்களின் புராணக்கதைப்படி ரோகிணி அதாவது ஆல்டெபரன் பூமியில் விழுந்து ஒரு மிக நீண்ட பாம்பைக் கொன்றதால் உருவானதுதான் மிசிசிப்பி (Mississippi) நதி.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் (New South Wales) கிளியரன்ஸ் (Clearance River ) நதிப் பகுதியைச் சேர்ந்த அபோர்ஜினல் (Aboriginal culture) பழங்குடி கலாச்சாரத்தில், ஆல்டெபரானின் (Aldeberan) கரம்பல் (Karambal) என்று அழைக்கப்பட்ட மூதாதை வேறொருவரின் மனைவியைத் திருடிச் சென்று விட்டான். பின்னர் அந்தப் பெண்ணின் கணவரால் கண்டுபிடிக்கப்பட்டான். அவர் கரம்பால் ஒளிந்து கொண்டிருந்த மரத்தைத் தீயிட்டு எரித்தார். மரத்துடன் எரிந்த கரம்பல் பின்னர் புகையாக வானத்தில் உயர்ந்து ஆல்டெபரன் என்ற நட்சத்திரமாக ஆனார் என்று நம்பப்படுகிறது.
ரோகிணி உடுவில் பிறந்தவர்களின் கண்கள் கவர்ச்சிகரமானவை என்று சோதிடத்தில் சொல்லப்படுகிறது. இந்தச் சொல் ரோஹன் என்ற மூல சொல்லில் இருந்து உருவானது. ரோகிணியின் மற்றொரு பெயர் சுரவி (Suravi) அதாவது வானத்துப்பசு.
பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்த நட்சத்திரம் ரோகிணி. 27 நட்சத்திரங்களின் பட்டியலில் அவர் தனது அவதாரத்திற்கு ரோகிணி உடுவைத் தேர்ந்தெடுத்ததில் ஒரு முக்கியத்துவம் உள்ளதாகக் கருதப்படுகிறது.
பண்டைய தமிழர்கள் இரவில் காலம் அறிய விண்மீன்களைப் பயன்படுத்தியதை நாம் நன்கறிவோம். ரோகிணி உடுவைக் கொண்டு இரவில் காலம் அறிய
"ரோகிணி ஊற்றால் பன்னிரு மீனாம்
முரண்மிகு சிம்மம் மூன்றேகாலாம்"
என்னும் பழந்தமிழ் வாய்பாடு உள்ளது. இங்கு ரோகிணி பன்னிரு உடுக்களைக்கொண்டது என்று சொல்லும் இந்தச் செய்யுளின் கருத்து தற்கால அறிவியல் ரோகிணியைப்பற்றிக் தந்துள்ள தகவல்களுடன் ஒத்துப் போகவில்லை என்பதால் அதை விட்டு விடலாம். செய்யுளின் இரண்டாம் பாகத்தை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம். ரோகிணி உச்சத்திற்கு வரும்போது சிங்கராசி 3 .25 நாழிகையளவு தொடுவானத்திற்கு மேலே வந்திருக்கும் என்பது பாட்டின் கருத்து. இது சரியான கருத்துதானா என்பதை நாமே சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்.
ஐப்பசி மாதம் 15 ஆம் நாள் இரவில் ரோகிணியை உச்சவட்டத்தில் பார்க்கும்போது நேரம் என்னவாக இருக்கும் என்று பாட்டின் இரண்டம் பாகத்தின் படி நாம் கணக்கிடலாம். ஐப்பசி மாதம் துலா ராசிக்குள் சூரியன் நுழைந்து 15 நாட்கள் ஆகியுள்ளது. அதனால் சூரியன் துலா ராசியில் அரை பாகத்தைக் கடந்திருக்கும். சிம்ம ராசி கீழ்த் தொடுவானத்தில் 3.25 நாழிகைகள் கடந்து விட்டது. இனி பாக்கி கடக்க வேண்டியது 1.75 நாழிகை. அனைத்துப் பனிரெண்டு (12) ராசிகளுக்குமான மொத்தக் காலம் அறுபது (60) நாழிகை என்பதால், ஒவ்வொரு ராசியிலும் சூரியன் ஒரு நாளில் கழிக்கும் காலம் 5 நாழிகை.
கீழ்த்தொடுவானத்தில் செய்யுளின் படிச் சிம்ம ராசியில் கடந்த 3.25 நாழிகை நீங்கலாகச் சிம்ம ராசியினுடைய மிகுதி 1 .75 நாழிகை கடக்க மீதமுள்ளது. அதற்குக் கீழே கன்னிராசியில் 5.0 நாழிகை. அடுத்துத் துலா ராசியில் 2.5 நாழிகை. ஐப்பசி மாதத்தில் பாதி நாட்கள் கடந்து விட்ட காரணத்தால் ராசிக்குரிய 5 நாழிகையில் பாதியான 2.5 நாழிகை எடுத்துக் கொள்ளப்படுகிறது. மூன்றும் சேர்ந்த காலம் தான் கீழ்த்தொடுவானத்திற்கும் சூரியனுக்கும் உள்ள இடச்சுழிக் காலம்.
அதாவது 1.75 + 5.0 + 2.5 = 9.25 நாழிகை.
9.25 X 24 = 222 நிமிடங்கள். (1 நாழிகை = 24 நிமிடங்கள்)
3 மணி 42 நிமிடங்கள். (60 நிமிடம் = 1 மணி)
இது இன்னும் இவ்வளவு நேரத்தில் சூரியன் கீழ்த்தொடுவானத்திற்கு வர இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. சூரிய உதயம் காலை 6 மணி என்று எடுத்துக் கொண்டால் அப்போது நேரம் தோராயமாக அதிகாலை 2.18 மணி என்று சொல்லலாம்.
சங்க காலம் முதலே ரோகிணி நட்சத்திரமும் சந்திரனும் கூடிய நன்னாளில் தமிழர்களின் திருமணங்கள் நடந்து வந்துள்ளன. குற்றம் குறையற்ற நல்ல நாளொன்றக் குறித்து அந்த நன்நாளில் திருமணம் செய்யும் வழக்கம் அன்றும் இருந்தது. இணைபிரியாத காதலர்களுக்கு சந்திரனையும், ரோகிணியையும் உவமித்து வடமொழி நூல்கள் குறிப்பிடுகின்றன. சங்கத் தமிழ் நூலான அகநானூறும் இதைக் குறிப்பிடுகிறது. திங்களும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நல்ல நாளில் திருமணங்கள் நடந்ததாக அகநாநூறின் 86, 136 ஆகிய பாடல்கள் கூறுகின்றன. இவ்விரு பாடல்களும் தமிழர்களின் திருமணச் சடங்குகளை மிக அழகாக வருணிக்கின்றன. நெடுநல்வாடையும் திங்கள் -ரோகிணி பற்றிக் குறிப்பிடுகிறது. கோவலன் கண்ணகி திருமண நிகழ்வை வர்ணிக்கும் போது சிலப்பதிகாரத்திலும் இளங்கோவடிகள் சந்திரனும், ரோகிணியும் கூடும் நாளன்று அவர்களின் மணவிழா நடந்ததாகக் குறிப்பிடுகிறார்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காஞ்சிபுரம் நகரத்தில் திருப்பாடகம் என்னும் இடத்தில் உள்ள பாண்டவதூதப் பெருமாள் ஆலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்ய அவர்களின் அனைத்துத் துன்பங்களும் விலகி விடும் என்பது நம்பிக்கை.
மிதுன ராசி உடுக்கள் குறித்த கட்டுரையில் விரைவில் சந்திப்போம்.
Comments
Post a Comment