ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)
ரிஷப ராசியை பொறுத்தவரையில் முக்கியமாக நான் சொல்லப்போவது
(1) கார்த்திகை உடுக் கொத்து அல்லது நாள் மீன் கொத்து (PLEIADES STAR CLUSTER). அதன் பின்னர் (2) ரோகிணி உடு (ALDEBARAN STAR) இறுதியாக
(3) நண்டு நெபுலா ( CRAB NEBULA).
முதலில் கார்த்திகை உடுக் கொத்து பற்றிச் சிறிது அறிந்து கொள்வோம்.
கார்த்திகை நாள் மீன் அதாவது உடுவைச் சுட்டத் தமிழில் பல்வேறு சொற்கள் பயன் படுத்தப்பட்டது.
அங்கி, அளக்கர், அளகு, அறுவாய், ஆரல், இறால், எரிநாள் மற்றும் நாவிதன் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டது.
அதுவே கார்த்திகை மாதத்தைக் குறிக்க விருச்சிகம், தெறுகால், தேள் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டன.
இரவு வானில் யாராலும் எளிதாக அடையாளம் காணக் கூடிய உடுத் தொகுதி ஓரியன் என்ற பெரும் வேடன் (ORION). இந்த ஓரியன் தொகுப்பில் ஓரியன் இடுப்புக் கச்சில் (ORION BELT) முன்று உடுக்கள் வரிசையாகத் தெரியும். இந்த உடுக்களை கற்பனையில் நேர்கோட்டில் தென் கிழக்கில் நீட்டிப் பார்த்துக் கொண்டு வந்தால், சிரியஸ் (SIRIUS) உடு பொலிவாகத் தெரியும். அந்த நேர்கோட்டை வடகிழக்காக நீட்டிப் பார்த்துக் கொண்டு வர ரோகிணி உடுவும் அதைத் தாண்டி கார்த்திகை உடுக் கொத்தும் நன்கு கட்புலனாகும்.கார்த்திகை உடுக் கொத்து (PLEIADES STAR CLUSTER) வானத்தில் மிக எளிதாக அடையாளம் காண இயலக் கூடிய நட்சத்திரக் கொத்து ஆகும். முக்கியமாக அதன் பொலிவு மற்றும் அளவு காரணமாக, கார்த்திகை பல கலாச்சாரங்களில் மற்றும் புராணங்களில் நன்கு அறியப்பட்டிருந்தது. கார்த்திகை உடுக் கொத்தின் ஆரம்பகாலப் படங்கள் வெண்கல யுகத்திற்கு முந்தையவை.
கார்த்திகை உடுக் கொத்தில் 1,000 க்கும் மேற்பட்ட உடுக்கள் உள்ளன. இக் கொத்தில் 14 உடுக்கள் வரையில் இரு கண்ணோக்கி, வானியல் தொலை நோக்கி போன்ற புற உதவிக் கருவிகள் இல்லாத நிலையில் வெறும் கண்ணுக்கே தெரியும். உடுக் கொத்தின் மதிப்பிடப்பட்ட நிறை 800 சூரிய நிறைகளுக்குச் சமம். கார்த்திகை உடுக் கொத்தை மெஸ்ஸியர் 45 (MESSIER 45) என்று வானியலில் சொல்வது வழக்கம். பூமிக்கு அருகிலுள்ள நட்சத்திரக் கொத்துகளில் ஒன்றாகும். அதன் பிரகாசமான உடுக்கள் 390 முதல் 460 ஒளி ஆண்டுகள் வரையிலான தொலைவில் உள்ளன. இந்த உடுக்கொத்து (CLUSTER) பெரும்பாலும் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு கீழ் மதிப்பிடப்பட்ட வயதுடைய நிறமாலைப் பிரிவு (SPECTRAL CLASS) B க்கு உரியதான அதிக வெப்பமான, நீல நிறமாக அதிகப் பொலிவுடன் ஒளிரும் உடுக்களால் ஆனது.
கார்த்திகை உடுக் கொத்தின் வயது 75 முதல் 150 மில்லியன் ஆண்டுகள் வரை இருக்குமென்று மதிப்பிடப்படுகிறது. உடுக்கள் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டு ஓரியனின் கால்களின் திசையில் நகர்கின்றன.
இன்னும் 250 மில்லியன் ஆண்டுகள் வரையில் கார்த்திகை உடுக் கொத்து (MESSIER 45) இருக்கும். அதன் பிறகு மற்ற உடுக்கள், மூலக்கூறு மேகங்கள் மற்றும் பால்வெளி உடுத்திரளின் சுழல் கரங்களுடனான தொடர்பு ஆகியவற்றின் விளைவாகக் கார்த்திகை உடுக் கொத்தின் உடுக்கள் கலைந்து சென்று விடும்.
கார்த்திகை உடுக் கொத்து அல்லது மெஸ்ஸியர் 45 (MESSIER 45) ஒரு திறந்த உடுக் கொத்து. திறந்த கொத்துகள் சில நூறு முதல் சில ஆயிரம் உடுக்களின் குழுக்களாக இருப்பவை. இப்போது அது என்ன திறந்த உடுக் கொத்து? என்ற வினா உங்களுக்குள் கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும்.
உடுக் கொத்துகள்(CLUSTERS) என்பன உடுக்களின் சிறிய குழுக்கள். ஒரு உடுக்கொத்து ஒரு உடுத் திரளை (GALAXY) விட அளவில் மிகச் சிறியது.
உடுக் கொத்துகள் இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
திறந்த கொத்துகள் (OPEN CLUSTERS) மற்றும் கோளகக் கொத்துகள்(GLOBULAR CLUSTERS). இரண்டு வகைகளிலும் உள்ள உடுக்கள் ஈர்ப்பு விசையால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளன.
திறந்த கொத்துகள் எண்ணிக்கையில் சிலநூறு உடுக்களைக் கொண்டவை. கொத்து ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும். பால்வழி (MILKYWAY) மற்றும் பிற சுருள் வடிவ (SPIRAL) உடுத்திரள்களின் கைகளில் காணப்படும். இவை பெரும்பாலும் ஒரே நெபுலா (NEBULA) விலிருந்து உருவானவை. நீல நிறத்தில் ஒளிரும் வாயு மற்றும் தூசியைக் கொண்டிருக்கின்றன. திறந்த கொத்துக்களில் உள்ள உடுக்களும் கிட்டத்தட்ட ஒரே வயதுள்ள பிறந்து சிறிது காலமே ஆன இளம் உடுக்கள். இவை பால்வழித்திரளின் கைகளில் தொடர்ந்து உருவாகின்றன.
கோளகக்கொத்துகள் எண்ணிக்கையில் பத்தாயிரம் முதல் நூறாயிரம் உடுக்களைக் கொண்ட குழுக்கள். ஈர்ப்பு இந்த நட்சத்திரங்களை இறுக்கமாக ஒன்றாக வைத்திருக்கிறது. கோளகக்கொத்துகள் ஒரு திட்டவட்டமான, கோள வடிவத்தைக் கொண்டுள்ளன. இவை உடுத்திரளின் மையப்பகுதிக்கு அருகில் காணப்படும். அவற்றில் பெரும்பாலும் வயதான, சிவப்பு நிற உடுக்களே உள்ளன. கோளகக்கொத்துகளின் மையத்திற்கு அருகில், உடுக்கள் ஒன்றாக நெருக்கமாக உள்ளன. கோளகக்கொத்து M 13 இன் இதயப் பகுதி நூறாயிரக்கணக்கான உடுக்களைக் கொண்டுள்ளது. இவை நமது பால்வழி உடுத்திரளில் புதியதாக உருவாவதில்லை.
பொதுவான செயல்பாட்டுக் கோட்பாடு என்னவென்றால், திறந்த கொத்துகள் என்பது உடுவின் உருவாக்கத்தின் போது ஏற்பட்ட வெடிப்புகளின் எச்சங்கள், அதே நேரத்தில் கோளகக்கொத்துகள் பால்வீதியால் (MILKY WAY) உண்ணப்படும் சிறிய விண்மீன் திரள்களின் (GALAXIES CORE) உள்ளகத்தின் எச்சங்கள் (REMNANTS) ஆகும்.
நாம் இருக்கும் வடக்கு அரைக்கோளத்தில் (NORTHERN HEMISPHERE) குளிர்காலத்தில் அதாவது நவம்பர் மாதத்தின் பிற்பகுதி முதல் மார்ச் மாதம் இறுதிவரையில் ரிஷப ராசியையும் கார்த்திகை உடுக் கொத்தையும் காண முடியும்.
அக்டோபர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் ஏழு சகோதரிகள் மிக முக்கியமானவர்கள். நவம்பர் தொடக்கத்தில், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கிழக்கில் உடுக்கொத்து உயர்கிறது. ஜனவரி மாதம் இரவு 9.00 மணிக்கு நன்கு கட்புலனாகும். பிப்ரவரியில் அது மாலையில் தலைக்கு மேலாகக் காணப்படும். மே மாதத்தில், இது ஓரியன் மறைவதற்கு முன்னதாகவே சூரியன் மறையும் போதே மறைந்து விடுகிறது. கொத்து வானத்தின் குறுக்கே சூரியன் செல்வதாகத் தோன்றும் பாதைக்கு (ECLIPTIC PATH) அருகில் இருப்பதால் மே மற்றும் ஜூன் மாதங்களில் இதைக் காண முடியாது. அப்போது ரிஷபராசி சூரியனுக்கு மிக அருகில் இருப்பதே காரணம் . கார்த்திகை உடுக் கொத்தையும் ரோகிணி உடுவையும் நேரடியாக தலைக்கு மேலாக இருக்கும்போது, ஓரியனின் கச்சிலிருந்து (ORION BELT) வரையப்படும் கற்பனை நேர் கோட்டைப் பின்பற்றுவதன் மூலம் காணலாம்.
கார்த்திகை உடுக் கொத்தில் 1,000 க்கும் மேற்பட்ட உடுக்கள் உள்ளன. இக் கொத்தில் 14 உடுக்கள் வரையில் இரு கண்ணோக்கி, வானியல் தொலை நோக்கி போன்ற புற உதவிக் கருவிகள் இல்லாத நிலையில் வெறும் கண்ணுக்கே தெரியும். உடுக் கொத்தின் மதிப்பிடப்பட்ட நிறை 800 சூரிய நிறைகளுக்குச் சமம்.
மெஸ்ஸியர் 45 (MESSIER 45) என்ற கார்த்திகை உடுக் கொத்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பழுப்பு குள்ளர்களையும் (BROWN DWARF) கொண்டுள்ளது. அவை கொத்தில் உள்ள மொத்த உடுக்களின் எண்ணிக்கையில் சுமார் 25 சதவிகிதம் வரை இருக்கும் என்று நம்பப்படுகிறது, ஆனால் பழுப்புக் குள்ளர்கள் பொதுவாகவே சூரியனின் நிறையில் 8 விழுக்காட்டிற்கும் குறைவாக இருப்பதால்,கார்த்திகை உடுக் கொத்தில் உள்ள பழுப்பு குள்ளர்களின் மொத்த நிறையானது கொத்தின் மொத்த நிறையில் 2 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கும்.
கொத்து சுமார் 43 ஒளி ஆண்டுகள் அலை ஆரம் (TIDAL RADIUS) கொண்டது, மற்றும் மைய ஆரம் (CORE RADIUS) சுமார் 8 ஒளி ஆண்டுகள் ஆகும். கார்த்திகை உடுக் கொத்தில் உள்ள பொலிவான உடுக்கள் மியா நெபுலா (MAIA NEBULA) என்னும் மங்கலான பிரதிபலிப்பு நெபுலாவால் (FAINT REFLECTION NEBULA) சூழப்பட்டுள்ளன.
இலக்கியத்தில் கார்த்திகை
இலக்கியத்தில் கார்த்திகை
சங்கத் தமிழ் இலக்கிய நூல்களில் எட்டுத் தொகையும் ஒன்று. எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் திரட்டில் கார்த்திகை உடுக் கொத்து குறித்து பதிவு காணப்படுகிறது. 11 வது பாடலில் கார்த்திகை உடுக் கொத்து பெண்கள் காதில் அணியும் மகரக் குழை அதாவது தற்காலத்தில் "ஜிமிக்கி கம்மல்" என்று சொல்லப்படும் ஆபரணம் போல இருப்பதாக வர்ணிக்கப்படுகிறது.
"கார்த்திகை காதில் கன மகர குண்டலம்போல்,
சீர்த்து விளங்கித் திருப் பூத்தல் அல்லது,
கோத்தை உண்டாமோ மதுரை-கொடித் தேரான்
வார்த்தை உண்டாகும் அளவு"?
(பரிபாடல் திரட்டு 11)
பத்துப்பாட்டு சங்க இலக்கிய நூல்களில் ஒன்று . பத்துப்பாட்டில் உள்ள நூல்களில் மலைபடுகடாம் உள்ளது. அதில்
"அகலிரு விசும்பின் ஆஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை"
(மலைபடுகடாம் - 10)
நிலத்தில் பூத்திருந்த முசுண்டைப் பூக்கள் கார்த்திகை விண்மீன் கூட்டம்போல் ஒளி நிறைந்ததாய் மலர்ந்திருந்தன என்று உவமையாகச் சொல்லப்படுகிறது.
மேற்கண்ட பாடலில் குறிக்கப்பட்டுள்ள ’ஆஅல்’ என்னும் சொல் கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் உடுக்கூட்டத்தைக் குறிப்பதாகும்.’அழல்’ என்னும் சொல்லும் கார்த்திகை என்பதனைக் குறித்து நிற்கின்றது என்பதை,
"ஆடு இயல் அழல் குட்டத்து"
(புறநானூறு 229)
என்ற புறநானூற்றுப் பாடலின் வரி உணர்த்துகிறது. மேற்கண்ட பாடலில் ஆடு எனக் குறிப்பிடப்படுவது மேஷ ராசியைக் குறிக்கும். இப்பாடல் அடி சித்திரை மாதத்தில் வரும் கார்த்திகை உடுவை அதாவது நாள்மீனைக் குறிப்பிடுகின்றது.
"கார்த்திகை யறுமீன் ஏற்றரியேகம்".
அதாவது இதன் பொருள், ஆறு விண்மீன்களைக் கொண்டகார்த்திகை உச்சத்தில் வரும்போது சிங்கராசி (கீழ்வானத்தில்) தோன்றி ஒரு நாழிகையாகி யிருக்கும் என்பதே.
எடுத்துக் காட்டாக ஐப்பசி மாதம் 22 ஆம் நாள் ஒருவர் தன் தலைக்கு மேல் கார்த்திகை உடுக் கொத்தைக் காண்பதாகக் கொள்ளலாம். ஒரு நாளுக்கு 60 நாழிகைகள் என்பதை நாம் அறிவோம். அதனால் ஒவ்வொரு ராசிக்கும் தலா
60 / 12 = 5 நாழிகைகள் என்று கொள்ளப்படுகிறது.
ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் இருக்கும். மாதத்தில் 22 நாட்கள் கடந்து விட்டது. ராசியைச் சூரியன் கிட்டத்தட்ட 2/3 மடங்கு கடந்து விட்ட நிலையில் மீதமுள்ள காலம் 5 X 1/3 ( ஒரு ராசிக்கு 5 நாழிகைக் காலம் என்பதால்).
துலாமுக்கு முன் ராசி கன்னி இதனைக் கடக்க 5 நாழிகை. சிம்மத்தில் ஒரு நாழிகை கடந்து விட்டதால் மீதம் 4 நாழிகைகள்.
ஆக மொத்தம் சூரியன் தொடு வானத்துக்கு வர இன்னும் ஆகும் காலம்
4 +5 + 5/3 = 10 2/3 நாழிகைகள் உள்ளன. ஒரு நாழிகை 24 நிமிடம். ஆக வே
32/3 X 24 = 256 நிமிடங்கள். அதாவது 4 மணி 16 நிமிடங்கள் உள்ளது. சூரியன் சரியாக 6.00 மணிக்கு உதிப்பதாக எடுத்துக் கொள்வோம். அவ்வாறானால் அப்போது நேரம் இரவு 1 மணி 44 நிமிடம் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம்.
சந்திப்போம்.
Comments
Post a Comment