ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (3)

1981 ஆண்டில் " The clash of Titans"  என்ற ஒரு ஹாலிவுட் ஆங்கிலப்படம் வெளி வந்தது. அப்புறம் 2010 இல் இது மறு உருவாக்கம் செய்யப்பட்டு அதே தலைப்பில் வெளியானது. 2012 ஆம் ஆண்டில் " The wrath of the Titans" என்று வேறொரு திரைப்படம் வெளியானது. அந்தப் படங்கள் எல்லாம் கிரேக்க தொன்மக் கடவுளர்களிடையில் நடந்த போர்கள் குறித்த புனைக்கதைகள். படத்தைப் பத்து நன்பர்களுடன் பார்த்தால் அவர்கள் ஆளாளுக்கு ஒரு கதை சொல்வார்கள். அதை விடக் கொடுமை அந்தக் கிரேக்கக் கடவுளர்களுக்கிடையிலான சிக்கலான உறவுகளைப்  புரிந்து கொள்வதுதான்.  இடியாப்பத்தின் சிக்கலை விடவும் மிகச் சிக்கலானது இந்த உறவுகள்.  இந்தப் பகுதியில் நாம் காணப்போவது  ரிஷப ராசி சார்ந்த சில கிரேக்க தொன்மக் கதைகள். அதற்கு சிறுதளவு கிரேக்கத்தொன்மக் கதைகளின் அடிப்படைக் கூறுகளை அறிந்து கொள்வது அவசியமானது.

கிமு 750 முதல் 650 வரை வாழ்ந்ததாக நம்பப்படும் கிரேக்க கவிஞரான ஹெசியோட் (Hesiod) எழுதிய காவியக் கவிதையின் பெயர் தியோகனி (Theogony) .  "தெய்வங்களின் பிறப்பு அல்லது பரம்பரை" என்பதே இதன் பொருள். ஹெசியோட், "இலியாட்"( Iliad) மற்றும் "ஒடிஸி"( Odyssey) ஆகியவற்றின் ஆசிரியரான ஹோமரின் (Homer) சமகாலத்தவர். ஹோமரின் படைப்புகளுடன், தியோகனியுமே பண்டைய கிரேக்கத்திலிருந்து அறியப்பட்ட மிகப் பழமையான இலக்கியப் படைப்பாகக் கருதப்படுகிறது. இங்கு ஹெசியோட் குறித்த தகவல்களை இங்கே தரப்போவதில்லை. காரணம் ஒன்று நான் மையக் கருத்தை விட்டு அதிகம் விலகிச் செல்லும் நிலை உருவாகிவிடும். இரண்டாவதாகக்  கட்டுரையின் இப் பகுதி தேவையில்லாமல் நீண்டு கொண்டு செல்லும்.

தியோகனி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வரிகளைக் கொண்டுள்ளது. ஹெசியோடின் மிக நீண்ட காலமாக எஞ்சியிருக்கும் படைப்பான இதில் பரம்பரை மற்றும் வரலாற்றின் கலவையாக காணப்படுகிறது. கவிதை முதலில் கடவுள்களின் தோற்றத்தை விவரிக்கிறது மற்றும் அவர்களின் பல சந்ததியினரைப் பட்டியலிடுகிறது. டைட்டனோமாச்சி (TITANOMACHY) என்ற, டைட்டன்கள் (Titans) மற்றும் முதல் ஒலிம்பியக் கடவுள்களுக்கு (Olympian gods) இடையிலான போர் உள்ளிட்ட பல்வேறு தலைமுறை அழியாதவர்களுக்கு (immortals) இடையிலான மோதல்களைக் குறித்தும் இது சொல்கிறது.

கவிதையில், ஹெசியோட் மனித வரலாற்றின் ஐந்து யுகங்களை விவரிக்கிறார். பொற்காலத்தில் (Golden Age), குரோனஸ் (CRONUS) அண்டத்தை ஆட்சி செய்தார், அப்போது மனிதர்கள்  வேதனையோ துக்கமோ இன்றி  மிக நீண்ட ஆயுளை அனுபவித்தனர். குரோனஸிடமிருந்து
ஜீயஸ் (Zeus ) அண்டத்தைக் கைப்பற்றிய பின்னர், பொற்காலம் முடிவுக்கு வந்து  வெள்ளி யுகத்திற்கு (Silver Age) வழிவகுத்தது. வெள்ளி யுகத்திற்குப் பிறகு முடிவற்ற போர்களுக்குப் பெயர் பெற்ற வெண்கல யுகம் (Bronze Age)ஹீரோக்களின் காலம் மற்றும் ட்ரோஜன் போர்(Trojan War) நடந்த  வீர யுகம் (Heroic Age ). இறுதியாகத் தற்போதைய நாள் ஊழல் நிறைந்த இரும்பு யுகம் (Iron Age).

பல மத மரபுகளின் கடவுள்களைப் போலல்லாமல், கிரேக்க கடவுளர்கள் அண்டத்தை உருவாக்கவில்லை. உண்மையில், அண்டம் அவர்களுக்கு முந்தியே இருந்துள்ளது. தோன்றிய முதற் பொருள் கேயாஸ் (CHAOS) ஆகும், இது ஒரு இருண்ட வெற்றிடமாகவும், அமைதியாகவும், அதற்குள் எதுவும் வாழவில்லை. காலப்போக்கில், முதல் கடவுளர்கள் வெற்றிடத்திலிருந்து தோன்றினர்.


ஆக கிரேக்க ஆதித் தெய்வங்களில் கேயாஸ்  (Chaos) தான் முதன்மையானவர். கேயாஸ் என்பது கிரேக்கத் தொன்மங்களில் பிரபஞ்சம் அல்லது பிரபஞ்சத்தை உருவாக்குவதற்கு முந்தைய வெற்றிட நிலையை குறிப்பதாகவோ அல்லது வானத்தையும் பூமியையும் அசலாகப் பிரித்து  உருவாக்கப்பட்ட  ஆரம்ப "இடைவெளியை" (Gap) குறிப்பதாகவோ கொள்ளலாம். ஆகவே
 அப்போது அண்டத்திற்குள் குழப்பம் (confusion), வெறுமையின் வெற்றிடத்தை (void of emptiness) ஆட்சி செய்த அனைத்து கடவுள்களிலும் அல்லது தெய்வங்களிலும் கேயாஸே முதன்மையானவர்.

இந்த முதல் ஆதித் தெய்வங்களான (Pre primordial Gods) கேயாஸ் (Chaos) மூலம் உருவாக்கப்பட்ட ஐந்து முக்கியமான அடுத்த ஆதித் தெய்வங்கள்
1) கியா (Gaia) என்ற பூமி, 2) டார்டரஸ் (Tartarus) பாதாள உலகம்  அல்லது நரகம், 3) ஈராஸ் (Eros) என்ற காதலும் காமமும், 4) எரிபஸ் (Erebus) என்ற இருள் மற்றும் 5) நைக்ஸ் (Nyx) என்ற இரவு ஆகியவர்கள் உருவானார்கள்.

இதில் கியாவிற்கு மூன்று ஆண் சந்ததிகள் தந்தை இல்லாமலே உருவானார்கள் . அவர்கள் 1) யுரேனஸ் (Uranus) என்ற ஆகாயம், 2) ஊரா (Ourea) என்ற மலை மற்றும் போண்டஸ் (Pontus) என்ற கடல், யூரேனஸ்  கியாவின் மகனும் மட்டுமல்லாமல் கணவனும் கூட.







யூரேனஸ்  கியாவின் இணைவில் பிறந்தவர்கள் ஆறு ஆண்கள் மற்றும் ஆறு பெண்களஎன்று மொத்தம் பன்னிரெண்டு  டைட்டன்கள்(Titans).

ஆறு ஆண் பிள்ளைகள்
1)ஓஷனஸ் (OCEANUS), 2) ஹைப்பெரியன்(HYPERION), 3) கோயஸ் (COEUS),
4) குரோனஸ் (CRONUS), 5) க்ரையஸ் (CRIUS), 6) ஐபெட்டஸ் (IAPETUS) ஆகியோர்.

ஆறு பெண் பிள்ளைகள்
1) டெத்தியஸ் (TETHYS) 2) தியா (THEIA), 3) ஃபோபி (PHOEBE), 4) ரியா (RHEA), 5) தெமிஸ் (THEMIS ), 6) நிமோஸைன் (MNEMOSYNE ).

கிரேக்க தொன்மங்களில் உடன் பிறந்தவர்களையே மணம் செய்து கொள்ளும் வழக்கம் இருந்து வந்துள்ளது. அந்தவகையில் ஓஷனஸ் தன் உடன்பிறந்த டெத்தியஸுடன் இணைந்து ஓஷனிட்ஸ் (OCEANIDS)என்ற மூவாயிரம் கடற்கன்னிகளை (SEA _NYMPHS) பெற்றெடுத்தனர். அதில் ஒர் கடல் கன்னி ஓஷனிட் - ஆசியா (OCEANIDS - ASIA).

ஐபெட்டஸ் (IAPETUS) டைட்டனும், ஓஷனிட் - ஆசியா (OCEANIDS- ASIA ) என்னும்  கிலைமினிக்கும் (KLYMENE) பிறந்தவன் நமது அட்லஸ் (ATLAS).


அதேபோல குரொனஸ் டைட்டன் தன் உடன்பிறந்த தியா வுடன் இணைந்து பெற்ற மகன் ஜீயஸ் (ZEUS). குரோனஸ் தன் தந்தை யூரேனஸைத் தூக்கி எறிந்துவிட்டு அரசனாக ஆனது போலவே குரோனஸைத் தூக்கி யடித்து விட்டு கடவுள்களின் அரசனானான்.
அட்லஸ் (ATLAS), ஜீயஸ் (ZEUS) ஆகியவர்கள் ஒலிம்பியக் கடவுள்(OLYMPIAN GODS). ஒலிம்பியக் கடவுள்களுக்கு முந்தைய தலைமுறைக் கடவுள்கள் டைட்டன் கடவுள்கள் (TITAN GODS).

கியா மற்றும் யுரேனஸுக்கு பன்னிரண்டு டைட்டன்கள் தவிர நிறையக் குழந்தைகள் இருந்தனர். அவர்களில் ஐம்பது தலைகள் மற்றும் நூறு கைகள் கொண்ட மனிதர்களான மூன்று ஹெகடான்சீர்களும் (HECATONCHEIRES) மற்றும்  ஒற்றைக் கண் பூதங்களான மூன்று சைக்ளோப்களும் (CYCLOPES) அடக்கம் . யுரேனஸ்,  ஹெகடான்சீர்கலையும் மற்றும் சைக்ளோப்களையும் அடியோடு வெறுத்தார், இதனால் அவர்களை பாதாள உலகமும், நரகமுமான டார்டரஸில் வைத்துப் பூட்டினார், இது கியாவிற்குப் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தை ஏற்படுத்தியது.




கியா ஒரு கல் அரிவாள் செய்து, யுரேனஸுக்கு எதிராக தனக்கு உதவுமாறு டைட்டன்களிடம் கெஞ்சினார். தனது தந்தையின் சிம்மாசனத்தை தனதாக்கிக் கொள்ள விரும்பிய குரோனஸ் மட்டுமே, அரிவாளைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டார். சண்டை சச்சரவுகளை விரும்பாத ஓசியனஸைத் தவிர, குரோனஸின் பிற சகோதரர்கள் உதவ ஒப்புக்கொண்டனர். அவர்கள் நான்கு பேரும் யுரேனஸைப் பிடித்து கீழே தள்ளினர் . குரோனஸ் கல் அரிவாளால் யுரேனஸின் ஆண்குறியை அறுத்து நீக்கிக் கடலில் வீசி எறிந்தார். இதன் பின்னர் குரோனஸ் டைட்டன்களின் தலைவராகவும், ரியா அவரது மனைவியாகவும் ஆனார்.

ஒரு ஆட்சியாளராக, குரோனஸ் யுரேனஸை விடக் கண்டிப்பாகச் சிறந்தவர் இல்லை.  அவர் சைக்ளோப்ஸ் மற்றும் ஹெகடோகோனியர்ஸை மீண்டும் சிறையில் அடைத்தார்.  குரோனஸ், தன் தந்தை யுரேனஸைத் தூக்கி எறிந்தது அரசனானது போலவே குரோனஸும் தனது மகன்களில் ஒருவரால்   தூக்கி எறியப்படுவார் என்ற  யுரேனஸின் சாபத்தை அறிந்ததும், அவரும் ரியாவும் பெற்ற அனைத்துக் குழந்தையையும் அகற்ற முடிவு செய்தார். காலப்போக்கில்,  அவர்கள் இருவரும் ஹெஸ்டியா (HESTIA), ஹேடஸ் (HADES), டிமீட்டர் (DEMETER), போஸிடான் (POSEIDON), ஹெரா (HERA) மற்றும் ஜீயஸ் (ZEUS) என்ற ஆறு குழந்தைகளைப் பெற்றனர்.




Picture courtesy:  https://commons.wikimedia.org/wiki/File:Rh%C3%A9a_pr%C3%A9sentant_une_pierre_emmaillot%C3%A9e_%C3%A0_Cronos_dessin_du_bas-relief_d%27un_autel_romain.jpg

ஒவ்வொரு குழந்தையும் பிறந்த உடனேயே விழுங்கி விடுவதைக் குரோனஸ் வழக்கமாகக் கொண்டிருந்தார். ரியா தனது ஆறாவது குழந்தையான ஜீயஸைக் கர்ப்பம் தரித்தவுடன்,  தப்பி ஓடி ரகசியமாகப் பெற்றெடுத்தார். அவள்  ஜீயஸைக் கியா (Gaia) அல்லது தன்னுடைய நடனப் பெண்டிர்களான குரேட்டுகளின் (Curetes) பொறுப்பில் கொடுத்து மறைத்து வைத்திருந்தாள். குரோனஸுக்கு விழுங்குவதற்கு  ஒரு பெரிய கல்லைப் போர்வையில் சுற்றிக் குழந்தை என்று கொடுத்தாள்.

தொடர்ச்சி நாளை













Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)