பெரு முழு நிலா ( Super Moon) 7 ஏப்ரல் 2020
ஏப்ரல் மாத முழு நிலவை வட அமெரிக்காவில் இளஞ்சிவப்பு நிலா (Pink moon) புல் நிலா (Grass moon) மற்றும் முட்டை நிலா (Egg moon) என்றெல்லாம் செல்லமாக அழைப்பதுண்டு. இன்று அமெரிக்கா இருக்கும் நிலையில் இப்படி நிலாவை புஜ்ஜிம்மா, ஜாங்ரி, பூங்ரி என்றெல்லாம் சந்தானம் மாதிரிக் கொஞ்சிக் குலாவுவார்களா என்பது சந்தேகம் தான்.
இன்றைக்கு உதயமாகும் நிலவு 2020 ஆண்டின் இரண்டாம் பெரு முழு நிலா (Super moon). ஏற்கெனவே கடந்த மார்ச் 9 ஆம் தேதி முதல் பெரு முழு நிலவு வந்து விட்டது. அடுத்த நிகழ்வு வரும் மே மாதம் 7 ஆம் தேதி வர உள்ளது. புவியைச் சுற்றி வரும் நிலா இன்றைக்கு தன் நீள் வட்டச் சுற்றுப்பாதையில் புவியின் மையத்திற்கு மிக அருகில் இருக்கும். இந்த நிலையை பெரிஜி (Perigee) என்பர். இது புவி மையத்திலிருந்து 356500 கிமீ ஆக இருக்கும்.
நீள்வட்டப்பாதையில் நிலா புவியிலிருந்து மிக அதிகத் தொலைவில் இருக்கும் நிலையை அப்போஜி (Apogee) என்கிறோம். இது புவி மையத்திலிருந்து 406700 கிமீ தொலைவு. படத்தை பார்க்கவும். அப்போஜி நிலையில் நிலவு இருப்பின் அதை மீக்குறு நிலா (Micro moon) என்று சொல்கிறார்கள்.
இப்போது உங்களுக்கு ஒரு நியாயமான சந்தேகம் வரும். அதெப்படி ஒரு பெரிஜி தானே உள்ளது அப்புறம் எப்படி மூன்று சூப்பர் நிலவுகள் வர முடியும்?
இதற்கான வரையறையை 1979 ஆம் ஆண்டில் ரிச்சர்ட் நோலே( Richard Nolle) என்பவர் தந்தார். அதாவது குறைந்த பட்சத் தொலைவின் 90% தொலைவுக்குள் வரும் முழு நிலவுகள் எல்லாம் சூப்பர் மூன்களாகக் கருதப்படும்.
அதாவது 361,885 கிமீ அல்லது அதற்குக் குறைவான தொலைவில் முழு நிலவு அமையும் போதெல்லாம் அது பெரு முழு நிலவுதான் என்று தாராள மனதுடன் மனுஷன் வரையறை சொல்லி விட்டார். அதன்படி,
9 மார்ச் 2020 இல் 357,404 கிமீ தொலைவிலும்
7 ஏப்ரல் 2020 இல் 357,035 கிமீ தொலைவிலும்
அடுத்து வரும் 2020 மே 9 ஆம் தேதியில் 361,184 கிமீ தொலைவும்
இருப்பதால் மூன்று பெரு முழு நிலவுகள் என்று எடுத்துக் கொள்கிறோம். சரியா.
அதில் இப்போது இருக்கும் தொலைவுதான் மிகச் சிறியது. இன்று இரவு UTC நேரப்படி 18.08 மணிக்கு அதாவது இந்திய IST நேரப்படி இரவு 11.38 க்கு கொரோனா பற்றிய கவலையெல்லாம் இல்லாமல் புவியை மிக நெருங்கி 356,907கிமீ தொலைவில் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சில வானியலாளர்கள் இந்த சூப்பர் மூன் என்பதே தவறான பதப்பிரயோகம் என்று அடிக்க வருகிறார்கள். அவர்கள் இதை சூப்பர் மூன் ஹைப் (Super moon hype) என்று பெயரிட வேண்டும் என்று ஒரேயடியாக அடம் பிடித்தனர்.
ஆனால் இந்த நிகழ்வு ஒன்றும் ஹைப் பெல்லாம் இல்லை இது ஒரு சிறப்பு முழு நிலவு (Special full moon) ஆகவே வானியலில்(Astronomy) இதை பெரிஜியன் முழு நிலவு (Peregian full moon) என்றுதான் குறிப்பிடுகிறார்கள். இந்த விளம்பரத் தன்மை (Hype) மக்கள் சூப்பர் மூன் கண்ணுக்குப் பெரியதாகத் தெரியும் என்று நினைப்பதால் வந்த வினை. வெறும் கண்ணுக்கு நிலவு ஒன்றும் வழக்கத்தை விடப் பெரியதாகத் தெரியப் போவதில்லை. ஆனால் அனுபவம் வாய்ந்த ஆய்வாளர்களால் சிறிய அளவில் வேறுபாட்டை உணர முடியும்.
ஆனால் இதுவே சூப்பர் மூன் வழக்கமான முழு நிலவை விடப் பொலிவாக காணப்படுவதென்னவோ உண்மைதான். சராசரியான முழு நிலவை விட 7% கோண விட்டம் (Angular Diameter) சூப்பர் மூனுக்கு (Super Moon) அதிகம் என்பதே இதன் காரணம். அதனால் பரப்பில் சராசரி முழு நிலவை விட அதிகமாக இருப்பதால் அதன் பொலிவு 15% அதிகமாகவும். அதே சமயம் மைக்ரோ மூன்னை ( Micro Moon) விட 30% அதிகமாகவும் காணப்படும்.
ஆகவே இன்றைக்கு இரவில் மொட்டை மாடிக்குப் போறீங்க. சூப்பர் மூனை தரிசனம் பண்ணறீங்க.
ஓ.கே.
படம் : நன்றி Universal life tools.com
Comments
Post a Comment