கோள்கள் நேர் கோட்டில் அமையுமா?
நண்பர்அன்பழகன் அவர்கள் முக நூலில் என்னிடம், "என்னவோ இன்றைக்கு இரவு ஒன்பது மணிக்கு ஒன்பது கோள்களும் வானில் ஒரே கோட்டில் வருகிறது என்கிறார்களே. நீங்கள் அது பற்றி அறிவியல் பூர்வமாக எழுத முடியுமா" என்று கேட்டிருந்தார்.
நான்அதற்குப் பதிலளிக்கையில் வானியல் கட்டுரைகள் பெருமளவில் வரவேற்பைப் பெறுவதில்லை. அதனால் எனக்கும் அது பற்றி எழுத அதிகம் ஆர்வமில்லை, இருந்தாலும் உங்களுக்காக சிறிய கட்டுரை ஒன்றை எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன்.
சூரியமண்டலத்தின் எட்டு முக்கிய கோள்கள் அவற்றின் சுற்றுப்பாதைகளின் நோக்குநிலை (orientation) மற்றும் சுற்றுப்பாதைகளின் சாய்வின் (tilt of their orbits) காரணமாக, ஒருபோதும் சரியான ஒருங்கமைப்புக்கு வர வாய்ப்பில்லை. வானில் ஒரு பகுதியில் ஒரே நேரத்தில் நேர்கோட்டில் அமையாமல் கட்புலனாகலாம். அது போன்று சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கி.பி 949 ஆம் ஆண்டில், வானத்தின் ஒரு பகுதியில் அவை கடைசியாகத் தோன்றியுள்ளன. அதே போல, அவை வானில் ஒரு பகுதியில் மீண்டும் 6 மே 2492 வரை தோன்ற வாய்ப்பேயில்லை.
2020 ஆம் ஆண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், வானத்தில் நான்கு கிரகங்களைக் காணும் வாய்ப்பை இந்தியர்கள் பெறுகிறார்கள். வானத்தில், அதி காலையில் வீனஸையும், இரவுவானத்தில், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை மார்ச் 18 அன்று இயற்கையாகவே உருவாக்கும்
இணைப்பாக வரிசையில் அமைவதைக் காணலாம், அப்போது அவை தனுசு விண்மீன் தொகுப்பில் காணப்படும்.
ஒரிரு ஆண்டுகளுக்கு முன் புவிக்கு வெகு அருகில் செவ்வாய்க் கோள் வந்தது. சொல்லப்போனால் மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் பிரகாசமாகச் செவ்வாயைக் காண முடிந்தது. மாலையில் அப்போது செவ்வாய், வியாழன், சனி, நிலா மற்றும் வீனஸ் ஆகியன தென் கிழக்கிலிருந்து தெரிந்தன. இதுபற்றி முகநூலில்
பதிவுகளும் இட்டிருந்தேன்.
(2018 ஆகஸ்ட் 17 அன்று என்னுடைய முகநூல் பதிவைப் பார்க்கவும்).அதிர்ஷ்டவசமாக, ஏறக்குறைய ஒவ்வொரு அரை நூற்றாண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தில் பொலிவான கோள்கள் இரவு வானத்தில் காணப்படும் நிலைகள், அவை சற்றேறக் குறைய ஒரு நேர் கோட்டில் இருப்பது
போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன. கடைசியாக அப்படியானதோர் காட்சி ஏப்ரல் 2002 இல், வியாழன், சனி, செவ்வாய், வீனஸ் மற்றும் புதன் ஆகியவை மேற்கு அடிவானத்திற்கு மேலே ஒரு வான நெக்லஸ் (celestial necklace) போல காட்சியளித்தன, பிறை நிலவு அதன் ஆபரண மையமாக
இருந்தது.
இனிமேல் 2040 ஆண்டில்தான் இதேபோன்ற அமைப்பை இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் செப்டம்பர் 8 ஆம் தேதியில்தான் காண முடியும்.அத்தகைய அமைப்பின் ஈர்ப்பு விளைவுகளைப் பற்றி நாம் அவ்வளவாகக் கவலைப்படத் தேவையில்லை. காரணம் பூமியின் மீதான கூடுதல் இழுப்பு மிகக் குறைவாகவே இருக்கும்.
இருப்பினும், சில ஒருங்கமைவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. 1970 களில், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களின் ஒருங்கமைவை அல்லது சிறப்பு சீரமைப்பை நாசா விண்வெளி ஆய்வுக்
கலங்களை குறைந்தபட்ச முயற்சியுடன் அனுப்பும் ‘பிரம்மாண்டமான சுற்றுப்பயணத்தில்’ (Grand Tour) முயற்சிக்குப் பயன்படுத்திக் கொண்டது. அத்தகைய சீரமைப்பு 175 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழ்கிறது. அதிர்ஷ்டவசமாக, நாசா விஞ்ஞானிகள் அதை எவ்வாறு பயன்படுத்துவது
என்பதை அறிந்து கொண்ட பின்னரே 1970 ஆம் ஆண்டில் இத்தகைய ஒருங்கமைவு வந்தது.
படம்:
நன்றி Sciencefocus.com
Comments
Post a Comment