நீரிழிவு நோயால் (Diabetes) கல்லீரல் (Liver) சேதமடையும் வாய்ப்பைக் குறைப்பதற்கு உதவும் சில வழிமுறைகள்


நீரிழிவு நோயால் (Diabetes) கல்லீரல் (Liver) சேதமடையும் வாய்ப்பைக் குறைப்பதற்கு உதவும் சில வழிமுறைகள்.
நீரிழிவு நோயாளிகளின் கல்லீரல் பாதிப்படைவதைக் குறைக்க
1) ஆரோக்கியமான உணவுப் பழக்கம்
2) தினசரி உடற்பயிற்சி
3) உடல் நிறைக் குறைப்பு மற்றும்
4) மத்தியதரைக்கடல் பகுதி உணவுமுறை (Mediterranean diet) ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன.

நீரிழிவு நோயாளர்களில் (Diabetes - type 2) இரண்டாம் வகைப் பிரிவினருக்கு NAFLD என்றழைக்கப்படும் மது சாரா கொழுப்பு மிகுந்த ஈரல் நோய் (Non Alcoholic Fatty Liver Disease) காரணமாக உடல் நலத்தில் பெரும் சிக்கல்கள் உருவாக அதிகம் வாய்ப்புள்ளது.
அது என்ன NAFLD? இதுவரை கேள்விப்படாத புது நோயாக இருக்கிறதே என்ற வினா நமக்குள் நிச்சயம் எழும்.

முதலில் கொழுப்புமிகு ஈரல் (Fatty Liver) என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். FLD என்று சுருக்கமாகச் சொல்லப்படும் கொழுப்புமிகு ஈரல் நோயானது (Fatty Liver Disease)  டிரைகிளிசரைடு கொழுப்பானது பெரும் நுண்குமிழிகளாகக் கல்லீரல் செல்களில் திரள்வதாகும். 

பல்வேறு காரணங்களினால் இந்தக் கொழுப்புமிகு ஈரல் நோய் (FLD) ஏற்பட்டாலும், இது ஒரே நோயாகவே கருதப்படுகின்றது. கொழுப்புமிகு ஈரல் தொடர்பான நோய்களை கீழ்க்கண்டவாறு இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1)  மது சார்ந்த கொழுப்பு மிகுந்த ஈரல் (Alcoholic Fatty Liver Disease)
பொதுவாகவே அதிகளவு மது அருந்துபவர்களிலும்
2) மது சாரா கொழுப்பு மிகுந்த ஈரல் (Non Alcoholic Fatty Liver Disease) இன்சுலின் எதிர்ப்புடனோ அல்லது இல்லாமலோ உடற்பருமன் அதிகமாக உள்ளவர்களிலும் உலகளாவிய அளவில் காணப்படுகிறது. உருவமைப்புப்படி மதுசார்ந்த கொழுப்புமிகு ஈரல் நோயையும், மதுசாரா கொழுப்புமிகு ஈரல் நோயையும் வேறுபடுத்தி அறிவது மிகவும் சிரமமானதாகும்.
கல்லீரல் (Liver )
மனித உடலில் சுமார் ஒரு கிலோ நிறை கொண்ட செம்பழுப்பு நிறமாகக் காணப்படும் கல்லீரலே மிக மென்மையான உறுப்பும் மிகப்பெரிய சுரப்பியும் ஆகும். கல்லீரல் நமது வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் கொழுப்புச் சத்துள்ள (Fat) உணவுப்பொருட்கள் செரிப்பதற்கு பித்தநீர் (Bile) மிகவும் அவசியமாகும். இந்தப் பித்தநீரை உற்பத்தி செய்வது கல்லீரல்தான்.

பொதுவாகக் கொழுப்புச் சத்துள்ள உணவுகள் சரிவரச் செரிமானம் ஆகாமல் இரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடையும் வழியில் இரத்தக் குழாய்களில் ஆங்காங்கே படிந்து விடும். முக்கியமாகக் கொழுப்பு இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தி விடும் போது இதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வதில்லை.  இதுவே மாரடைப்பு ஏற்படக் காரணமாகிறது. இந்தக் கொழுப்பை கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது கரைத்து விடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் இருக்கக் கல்லீரல் சரியான முறையில் செயல்படுவது அவசியமாகிறது.

கல்லீரலில் கொழுப்பு தேங்குவது, இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்றும், அதிக அளவு கொழுப்பு காணப்படுவதால் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களை உருவாக்குகிறது என்றும் அறியப்பட்டுள்ளது.
அதிகமாக மது அருந்தும் அனைவருக்கும் (90%-100%) ஈரலில் கொழுப்பு நிச்சயமாகத் தேக்கமடையும். தொடர்ந்து மிக அதிகமாக மது அருந்துபவர்கள் மட்டுமின்றி, குறுகிய காலத்திற்கு அதீதமாக மது அருந்துபவர்களுக்குமே ஈரலில் கொழுப்பு தேக்கமடையக்கூடும். ஆகவே மதுவைத் தவிர்ப்பது மட்டுமே இத்தகைய நிலைமைக்குத் தீர்வாக அமையும்.

அதீத உடல் நிறை (obesity)
அதீத உடல் நிறை ஒரு கொள்ளை நோயாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்கர்களைப் பொறுத்தவரையில் வளைச்சியடைந்தவர்களில் சுமார் 30 முதல் 40 விழுக்காட்டினர் அதீத உடல் நிறை உடையவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்கர்களின் உடல் ஆரோக்கியத்தில் அலைஅலையாகத் தொடர்ச்சியான வேறு பல நோய்கள் பாதிக்கும் கூடுதல் அபாயத்தை அதீத உடல் நிறை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் மொத்த மக்கள் தொகையில் 30 விழுக்காடு மக்கள் அதீத உடல் நிறை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நாம் பேசிக்கொண்டிருக்கும் மது சாரா கொழுப்பு மிகுந்த ஈரல் நோய் (Non Alcoholic Fatty Lliver Disease)  என்பது நாள்பட்ட நிலையில் கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கோ (Cirrhosis) அல்லது ஈரல் புற்று நோய்க்கோ (cancer), சில நேர்வுகளில் கல்லீரல் செயல் இழப்பிற்கோ (liver failure) காரணமாக அமைகிறது. அதிக உடல் நிறை, உயர் இரத்த அழுத்தம், இரண்டாம் வகை  நீரிழிவு நோய் மற்றும் இயல்பிற்கு அதிகமான குருதிக் கொழுப்பு ஆகியவற்றுடன் எந்த அளவுக்குத் தொடர்புடையது என்று ஆய்வுகள் நடந்து வருகின்றன. தற்போது வெளியாகியுள்ள புதிய கண்டுபிடிப்புகள் NAFLD பாதிப்புள்ள, இரண்டாம் வகை  நீரிழிவு நோயாளிகள் கல்லீரல் சார்ந்த சிக்கல்களுக்கு ஆளாகும் தீவிர அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. அதீத உடல் நிறையும், இரண்டாம் வகை நீரிழிவு நோயும் உலகளாவிய நிலையில் அதிகரித்து வரும் நிலையில் ஆரம்ப சுகாதார மருத்துவர்களின் கவனத்தை மது சாரா கொழுப்பு மிகுந்த ஈரல் நோய்க்கான மேம்பட்ட சிகிச்சையளித்தல், தடுத்தல், விழிப்புணர்வு ஊட்டுதல் ஆகியவற்றின் மீது குவியச் செய்வது அவசியமாகிறது.

அதீத உடல் நிறையும் கல்லீரலில் கொழுப்பு அதிகரித்தலும்
கல்லீரலில் சேருவதற்குக் காரணமான மது சாரா கொழுப்பு மிகுந்த ஈரல் நோய் (NAFLD) இரண்டு வகைப்படும். அதிகப்படியான கொழுப்பு கொண்ட கொழுத்த கல்லீரல் இருப்பினும் கல்லீரல் செல்களில் சேதமோ அல்லது வீக்கமோ அற்ற சாதாரணமான முதல் வகையே பெரும்பாலானவர்களிடம் காணப்படுகிறது. பொதுவாக எந்த அறிகுறியும் காட்டாத இந்த வகை இரத்தப் பரிசோதனைகளிலிருந்து பெறப்படும் இயல்பிற்கு மாறான முடிவுகள் மூலமாகவே வெளிப்படுகிறது. இது முதல் நிலை (Stage - I) என்றும் சொல்லப்படுகிறது.



NAFLD பாதிப்புடையவர்களில் சுமார் 20 விழுக்காடு நோயாளிகள் மட்டுமே NASH என்றழைக்கப்படும் நான் ஆல்கஹாலிக் ஸ்டெதோஹெபடைடிஸ் (Non Alcoholic Steato Hepatitis) பாதிப்புடையவர்கள். இவர்களுக்கு கல்லீரல் விக்கம், அழற்சி மற்றும் கல்லீரல் சேதம் இருக்கும். NASH பாதிப்பு நிலை இரண்டாம் நிலை (Stage - I I)  என்றும், இதன் அடுத்த நிலை சிரொசிஸ் (cirrhosis) என்ற கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கோ அல்லது கல்லீரல் புற்றுநோய்க்கோ இட்டுச் செல்லுகிறது.  
டாக்டர் மாயா பாகிருஷ்ணன் உதவிப் பேராசிரியர் (மருந்து மற்றும் இரப்பைக் குடலியல்) பேலோர் மருத்துவக் கல்லூரி (Baylor college of medicine – Houston, Texas), ஹூஸ்டன், டெக்சஸ் அவர்களின் கூற்றுப்படி NAFLD இருப்பவருக்கு அதை விட இன்னும் தீவிரமான பிரச்சனையோ அல்லது NASH இருப்பதற்கான அபாய எச்சரிக்கைகளை உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, வயோதிகம், வளர்சிதை மாற்ற நோய்க் குறி மற்றும் அதிகரிப்படைந்த கல்லீரல் நொதிகள் (elevated liver enzyme test) சோதனை போன்றவை நிறையவே தருகின்றன. இருந்த போதிலும் மருத்துவர்கள் இரத்தப் பரிசோதனைகள் (blood tests), மருத்துவ நிழலுருவப்படச் சோதனைகள் (medical imaging tests)  இன்னும் சில நேர்வுகளில்  கல்லீரல் உயிர்த்திசு மாதிரிச் சோதனை (liver biopsy) களின் வாயிலாகவே NAFLD நோயாஅல்லது NASH நோயா என்று ஆய்வுறுதி செய்து கொள்ள வேண்டும்.    
கல்லீரல் நோய்கள் தொடர்பான அதிகமான விழிப்புணர்வின் அவசியம்
ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி போன்றவற்றை சிறு வயதிலிருந்தே கடைப்பிடித்தல் கல்லீரல் நோய்களைத் தவிர்க்கச் சிறப்பான வாய்ப்பைத் தருகின்றன. பிரிட்டனைச் சேர்ந்த பி.எம்.சி மெடிசின் (BMC Medicine) இம் மாதம் நடத்திய ஆய்வுகள் கீழ்க்கண்ட முடிவுகளைத் தருகின்றன.
1) நிறைய நோயாளிகள் NAFLD அல்லது NASH பாதிப்புக்கு ஆளாகி  இருப்பது துரதிருஷ்ட வசமாக நோய் முற்றிய கடைசி நிலையில் தான் பெரும்பாலும் கண்டறியப்படுகிறது.
2) ஆரம்ப சுகாதார நிலையங்களால் கண்டறியப்பட்ட NAFLD அல்லது NASH நோயாளிகளின் எண்ணிக்கை எதிர்பார்ப்பை விடவும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பது.
3) இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு கல்லீரல் தொடர்பான சிக்கல்களான கல்லீரல் இழைநார் வளர்ச்சி அல்லது கல்லீரல் புற்றுநோய் போன்ற NASH நோய்கள் தாக்கும் அபாயம் மிகமிக அதிகம்.     
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் NAFLD குறித்த அதிகமான விழிப்புணர்வு, ஆரம்ப கட்டத்திலேயே நோயறிதலை ஏற்படுத்தக் கூடும் என்பதால் கொடுக்கப்படும் சிகிச்சையும் மிகவும் செயல்திறமுள்ளதாக அமையும் என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதே கருத்தை கெக் மருத்துவப்பள்ளி (Keck School of Medicine), லாஸ் ஏஞ்சலீஸ் பேராசிரியர் டாக்டர் ஹூகோ ரோசென்னும் (Dr. Hugo Rosen) பிரதிபலிக்கிறார். டாக்டர் மாயா பாலகிருஷ்னன் குறிப்பிடுகையில் நீரிழிவு நோய் கல்லீரல் நோய் மட்டுமல்லாமல் சிறுநீரக நோய்கள் பக்கவாதம், பாதம் தொடர்பான சிக்கல்கள் என்று  பல் வேறு உடல் பிரச்சனைகளுக்குமான மிக முக்கியக் காரணியாக அமைகிறது. ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்வதும் தவறாமல் உடற்பயிற்சி மேற் கொள்ளுதலும் இத்தகைய நோய் அபாயங்களை வெகுவாகக் குறைக்க இயலும். 
கல்லீரல் பிரச்சனைகளுக்கு நீரிழிவு மட்டுமின்றி அதீத உடல் நிறையுமே மற்றொரு பெரிய அபாயக் காரணியாக உள்ளது. அதீத உடல் நிறைக்கான அறுவைச் சிகிச்சை மேற் கொள்வோரில் தொண்ணூறு  விழுக்காட்டினருக்கும் அதிகமானோருக்கு மது சாராக் கல்லீரல் கொழுப்பு நோய் இருப்பது சிலஆய்வுகளிலிருந்து அறியப்பட்டுள்ளது.
ஆக ஒட்டு மொத்த அதீத உடல் நிறை  மது சாராக் கல்லீரல் கொழுப்பு நோய் (NAFLD) அபாயத்திற்கான மிகப் பொதுவான பதிவு செய்யப்பட்ட பெரியதோர் காரணி. NAFLD அல்லது NASH க்காக இதுவரை எந்த மருந்தும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் (lifestyle changes) கல்லீரல் தொடர்புடைய சிக்கல்கள் உருவாவதைக் குறைக்கக் கூடும்.
தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு உடல் நிறையைக் குறைப்பதே உண்மையில் சிறந்த சிகிச்சையாக இருக்கும் என்று ஆலோசனை வழங்குவதாக டாக்டர் பாலகிருஷ்ணன் தெரிவிக்கிறார். மேலும் நோயாளி தன் நிறையில் குறைந்தது ஐந்து விழுக்காடு அளவுக்கு குறைப்பதால் மட்டுமே கல்லீரல் கொழுப்புக் குறைவதை அறிய முடியும் என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக அவர் கூறுகிறார். அதாவது 90 கிலோகிராம் நிறையுள்ள ஒருவர் தன் உடல் நிறையில் குறைந்தது 4.5 கிலோகிராம் குறைப்பது அவசியம். NAFLD அல்லது NASH பாதிப்பு இருப்பதாக மருத்துவர் கருதும் படசத்தில் இதுவே 7 முதல் 10 விழுக்காடு அளவுக்கு நிறைக்குறைப்பு என்பதைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். இந்தக் கூடுதல் நிறைக்குறைப்பு NASH பாதிப்பு காரணமாகத் கல்லீரல் திசுக்களில் ஏற்படும் வீக்கத்தையும் வடுக்களையும் குறைக்கத் தேவைப்படுகிறது.

 உடல் நிறைக் குறியீடு (Body Mass Index)
இதுவரை அதீத உடல் நிறை பற்றிக் குறிப்பிட்டோம் அல்லவா. ஒரு மனிதனின் உடல் நிறையைப் பொறுத்து எவ்வாறு வகைப்படுத்துவது என்ற விணாவிற்குச் சுருக்கமாக BMI என்றழைக்கப்படும்  உடல் நிறைக் குறியீடு (Body Mass Index) பயன்படுத்தப்படுகிறது. குறைவான நிறையா, இயல்பான நிறையா, அதிக நிறையா அல்லது அதீத நிறையா என்பதை BMI வாயிலாக கணிக்கலாம். இதன்படி ஒரு மனிதனின் நிறையை (கிலோகிராமில்) அவனது உயரத்தின் (மீட்டரில்) வர்க்கத்தால் வகுக்கக் கிடைப்பதாகும். எடுத்துக் காட்டாக ஒருவரது நிறை 66.5 கிலோகிராம் அவரது உயரம் 1.6 மீட்டர் என்றால் அவரது BMI கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.
கீழ்க்காணும் BMI அட்டவணைப்படி மேற்கண்ட நபர் முன் அதிக நிறையினர் பிரிவின் கீழ் வருவார். இம் முறையின் நம்பகத்தன்மை குறித்து கருத்து வேறுபாடுகளும் மருத்துவர்களிடையே காணப்படுகிறது. 



உடல்  பருமனைக் குறைத்தலுக்கான  அறுவைச் சிகிச்சைகள் (bariatric surgery) நோயாளிகளின் NAFLD மற்றும் NASH  நிலைகளில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துவதும் இதய இரத்தக் குழாய் நோய்களின் காரணமாக நோயாளிகள் மரணமடைவதைக் குறைப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது எங்கிறார் டாக்டர். ரோசென்.
ஆரோக்கியமான கல்லீரலும் மத்திய தரைக்கடல் வகை உணவும்அறுவைச் சிகிச்சை தவிர்த்த உணவுப்பழக்க மாற்றம் மற்றும் உடற் பயிற்சிகள் மூலமும்  உங்களால் இயலும் பட்சத்தில் உடல் நிறையை குறைக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியமான நிறைய உணவு முறைகள்  உங்களது உடல் நிறையைக் குறைக்கப் பயன்படுவதாக இருந்த போதிலும், சில உணவு முறைகள் கல்லீரலுக்குக் கூடுதலான நன்மைகளைத் தருகின்றன.

ஆய்வு முடிவுகள் அடிப்படையில் நோக்குங்கால், உடல் நிறைக் குறைக்கவும் அதே சமயம் கல்லீரலின் ஆரோக்கியத்திற்குமான மிகச் சிறந்த தேர்வாக   மத்தியதரைக்கடல் உணவு முறை விளங்குகிறது என்கிறார் டாக்டர். மாயா பாலகிருஷ்ணன். இம் முறையில் பல வகையான உணவு உட்கொள்ளுதல் வழிகள் சொல்லப்பட்டிருந்தாலும் பொதுவான பயன்படு பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன









மைய உணவாக முழுத்தான்யங்கள்,பழங்கள், காய்கறிகள், பயற்றினங்கள், மூலிகைகள்,கிராம்பு ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்கள், அக்ரூட்,பாதாம் போன்ற கொட்டை வகைகள், ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புப் பொருட்கள் ஆகியவை தினசரிப் பயன் பாட்டிலும்
வாரம் இருமுறை மீன் மற்றும் கடல் உணவுகளும்
மிதமான அளவிற்கு பால் உணவுப்பொருட்களும்
அரிதாக இறைச்சி மற்றும் இனிப்புகள் கொண்ட உணவு முறையே இந்த உணவு முறை.
இந்த உணவு முறை மத்திய தரைக்கடல் நாடுகளான கிரீஸ், க்ரோஷியா, இத்தாலி ஆகிய நாடுகளில் வாழும் மக்களின் முக்கிய உணவுப் பொருட்களை உள்ளடக்கிய இதயத்திற்கு ஆரோக்கியமான உணவு முறையாகும். இதில் தாவர அடிப்படையிலான உட்கொள்ளும் அணுகுமுறையுடன் ஆரோக்கியமான ஆலிவ் எண்ணெய் மற்றும் மீன்களிடமிருந்து பெறப்படும் ஒமேகா -3 கொழுப்பு எண்ணையைப் பயன்படுத்துதல் வலியுறுத்தப்படுகிறது. மேலும் இம்முறையில் இறைச்சி, சர்க்கரைப் பண்டங்கள், பால் பொருட்களின் (சிறு அளவில் தயிர் மற்றும் பாலாடைக்கட்டி பயன்படுத்திக் கொள்ளலாம்) பயன்பாட்டை அறவே தவிர்க்கவோ அல்லது கட்டுப்படுத்திக் கொள்ளவோ இயலும். மிதமான அளவில் சிவப்பு ஒயின் அருந்துதலும், ஆறு கோப்பை நீர் அருந்துதலும் இம் முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

எல்லா NAFLD நோயாளிகளும் தங்களது அன்றாட வாழ்வில் கண்டிப்பாக உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல் உடல் நிறைக் குறைப்பையும் தாண்டி கல்லீரலுக்கு  நிறைய நன்மைகளை அளிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மது அருந்தும் பழக்கத்தைக் கைவிடுதல் கல்லீரலுக்கு பெரிதும் உதவி செய்யும். சமீபத்திய ஆய்வு முடிவுகள் மிதமான மது அருந்துதல் கூட பாதிக்கப்பட்ட கல்லீரலின் நிலையை மேலும் மோசமடையச் செய்யும் என்று காட்டுகின்றன என்கிறார் டாக்டர்.ரோசென். 
*************************************************************************************
மேற்கண்ட கட்டுரை ஹெல்த் கேர் (தமிழ்) இதழில் பிப்ரவரி 2020 இதழில் வெளியானது.



Comments

Post a Comment

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)