வறுமைக்கும் உடற் பருமனுக்கும் என்ன தொடர்பு?


உயர் வருவாய் நாடுகளில் அதிக உடற்பருமன் வீதங்கள் (rates of obesity) நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் நாடுகளில் காணப்படுவதை விட அதிகமாக உள்ளது. பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் சீனா இந்தியா போன்ற நாடுகளில் அதிக உடற்பருமனும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
செல்வம் பெருகும் நாடுகளில் அதிக உடற்பருமனும் கூடவே பெருகி வருகிறது. 
அதிகமான வளம், அதிக உடற்பருமன் என்ற போக்கே உலக நாடுகளில் காணப்படுகிறது.


அதிகம் செல்வம் கொழிக்கும் நாடுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளும் ஒன்றென்பதை நாமறிவோம். ஆனால் அங்குதான் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் அதிக உடற்பருமன் (obesity) கொண்டோராகவும் மற்றொரு மூன்றில் ஒரு பங்கினர் அதிக உடல் எடை (overweight) கொண்டோராகவும் காணப்படுகின்றனர். நிலைமை இன்னும் மோசமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குழந்தைப் பருவ அதீத உடற்பருமன் (childhood obesity) வீதம் தொடர்ந்து அதிகரித்து நிலைமை மிகவும் மோசமாகும் என்றும் புள்ளிவிவரங்கள் முன்னெச்சரிக்கை செய்கின்றன.


 மரபியல் மாற்றங்கள் மற்றும் நடத்தை போன்ற தனிப்பட்ட காரணிகள் வாழ்நாள் முழுவதற்கான உடல் எடை அதிகரிப்பதில் முக்கியமானவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அதிக உடற்பருமன் மீதான சுற்றுச் சூழல் தன்மையின் தாக்கம் குறித்த சான்றுகள் எதுவுமே தெளிவாக இல்லை. 
குடும்ப வருமானக் கணக்கெடுப்பின் தரவுகள், 2010 ஆம் ஆண்டில் 15.1 விழுக்காடு அமெரிக்கர்கள் வறுமையில் வாழ்ந்தனர் என்றும், ஆனால் பொருளாதாரச் சரிவுக்குப் பின்னர் கடந்த 50 ஆண்டுக் காலத்தில் இல்லாத அளவுக்கு, வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை, மிக அதிகமாக நான்கு கோடியே அறுபது இலட்சம் அளவுக்கு உயர்ந்துள்ளதாகத்  தெரிவிக்கின்றன.


வறுமையும் அதிக உடற்பருமனும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா? அமெரிக்காவின் 3139 மாவட்டங்களில் (counties) அதிக உடற்பருமன் குறித்து மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. உலகளாவிய போக்கிற்கு முரண்பட்டு, வறுமையில் வாழும் மக்களடர்த்தி அதிகமுள்ள அமெரிக்க மாவட்டங்களில், மக்கள் அதிக உடற்பருமன் பாதிப்புக்கு ஆளாகும் நிலை உள்ளது அறியப்பட்டது (படம்1A). 


 

வறுமை வீதம் (Poverty rate) 35 விழுக்காடுக்கும் அதிகமான மாவட்ட மக்களை, வளமான மாவட்ட மக்களோடு ஒப்பிடும் போது உடற்பருமன் வீதத்தைக் காட்டிலும் 145 விழுக்காடு கூடுதலாக இருப்பது  தெரிய வந்தது.


எவ்வாறு வறுமையுடன் அதிக உடற்பருமனைத் தொடர்பு படுத்தலாம்?
வறியவர்கள் வசிக்கும் பகுதிகளில் வாழும் மனிதனுக்குப் புதிய உணவு கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. வறியமக்களின் அடர்த்தி மிகுந்த பகுதிகள் “உணவுப் பாலைவனங்கள்” என்றே பெரும்பாலான நேர்வுகளில் குறிப்பிடப்படுகின்றன, காரணம் அவ்விடங்களில் புதியதாய் சமைத்த உணவு கிட்டுதல் குறைவாகவே இருக்கிறது.


உணவுப் பாதுகாப்பற்ற அதாவது அடுத்த வேளை உணவுக்கான உத்திரவாதமின்மை அல்லது தேவைப்படும் அளவு உணவு கிடைக்கப்பெறாத 43 விழுக்காடு குடும்பங்களின் வருவாய் வறுமைக் கோட்டிற்குக் (ஆண்டிற்கு 21,756 டாலர்)  கீழுள்ளது. அதன்படி 14 விழுக்காடு  மாட்டங்களில் வசிக்கும் மக்களில் ஐந்து நபர்களில்  ஒருவர் துணை ஊட்டச்சத்து உதவித் திட்டத்தைப் பயன்படுத்துகிறார்.


இந்த திட்டத்தின் மாவட்டவாரியான பயன்பாடு (utility) எதிர்பார்த்தது போல மாவட்டவாரியான வறுமை வீதங்களுடன் (poverty rates) ஒத்துச் செல்கிறது.     ( r = 0.81).

ஆக, வறுமை நிறைந்த பகுதிகளில் ஒருபுறம் மக்கள் பட்டினியுடனும், பணமிருந்தும் ஆரோக்கியமான உணவு கிடைக்க வழியின்றியும் உள்ளனர். இருபுறமும் கூரான கத்தி போலப் பட்டினியும் ஆரோக்கியமான உணவு இல்லாத சூழலும் இருந்தாலும், இவை மட்டுமே வறுமையும்  அதிக உடற்பருமனும் இணங்கிச் செல்வதற்கான ஒரே காரணமாக இருக்கச் சாத்தியமில்லை. 

நிலையமர்வாக (sedentary) ஒரே இடத்தில் இருத்தலுக்கும் ஆரோக்கியக் குறைவு, அதிக உடற்பருமன், சர்க்கரை நோய், இதர வளர்சிதை நோய்கள் மற்றும் முதிர்வுக்கு முன்பே இறந்து போதல் போன்றவற்றிற்கும் தொடர்பிருப்பதற்கான சான்றுகள் உள்ளன.

நிலையமர்வாக (sedentary) ஒரே இடத்தில் இருக்கும் நபர் சுறுசுறுப்பான (Active) நபரை விட நாளொன்றுக்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே இயங்குவதால் குறைவான ஆற்றலையே செலவிடுகிறார். இதுவே உடற்பருமன், நாள்பட்ட வளர்சிதை மாற்ற நோய்கள் மற்றும் இதய நாளம் சம்பந்தப்பட்ட இறப்பு (cardiovascular death) போன்றவற்றுக்குச் சாதகமாக ஆகிறது.   
மாவட்டத்திற்கு மாவட்டம் காணப்படும்  உடற்பருமன் வேறுபாட்டை, பாதிக்கு மேல் நிலையமர்வு வேறுபாட்டின் காரணமாகக் கூறலாம். 

(படம் 1B) ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது ஏழை மாவட்ட மக்கள் அதிகம் நிலையமர்வாக இருப்பது தெரிய வருகிறது.(படம்1C)  



ஏழை மாவட்டங்களில் வாழும் மக்கள் சுறுசுறுப்பின்றி நிலையமர்வாக இருப்பதை நிறையக் காரணங்கள் விளக்கிடக் கூடும். அதில் ஒன்று வறுமையின் தடத்தை அடியொற்றி வரும் வன்முறை. வன்முறை வீட்டுக்கு வெளியே மக்கள் இயக்கத்தைத் தடுக்கிறது.

அதுபோல ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடங்களும் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளன. ஏழை மக்கள் அடர்ந்த பகுதிகளில் வசிப்போர் உடற்பயிற்சி செய்யத் தேவையான கருவிகளைச் சொந்தமாக வாங்கிப் பயன்படுத்தவோ அல்லது கட்டணம் செலுத்திப் உடற்பயிற்சிக் கூடங்களில் உறுப்பினராகச் சேரவோ, விளையாட்டுப் பயிற்சிக்குரிய ஆடைகள் வாங்கும் அளவுக்கோ பண வசதி உடையவர்களாக இருக்கக் குறைவான வாய்ப்பே உள்ளது.
எதனால் வறுமை நிறைந்த மாவட்டங்களில், மக்கள் அதிக இயக்கமற்றிருக்கிறார்கள் என்பதன் வாயிலாக, மக்கள் உடற்பருமன் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்  என்பதைப் பலதரப்பட்ட தனிப்பட்ட மற்றும் சுற்றுச்சூழல் காரணங்கள் விளக்கக் கூடும். ஆனால் வறுமையை ஒழிப்பதால் இயக்கமின்மையும், உடற்பருமனும் எந்த அளவுக்கு ஒழிந்து விடும் என்று தெரியவில்லை.  


குழந்தைப் பருவ உடற்பருமனும் கூடவே வறுமையும் ஒன்றிணைந்து உயர்வது மிக அவசரமாக கவனிக்கப்பட வேண்டும். அதிக உடற்பருமனுக்கும்(Obesity), செயல்பாடின்றி இருப்பது (sedentariness) மற்றும் வறுமை (Poverty) இவற்றுக்கிடையிலான தொடர்புகளைப் புறந்தள்ள முடியாத அளவுக்கு உடற்பருமன் சார்ந்த நாள்பட்ட நோய்கள் (Chronic diseases) அமெரிக்காவின் சுகாதார செலவில் 70 விழுக்காடு அளவுக்கு உள்ளது. எடுத்துக்காட்டாக, அதிக வறுமை வீதமுள்ள மாவட்டங்கள் அதிக நீரிழிவு நோய் வீதத்தையும் பெற்றுள்ளன.(படம் 1D)

27 விழுக்காடு அமெரிக்க மக்களின் குடும்பச் செலவீனம் 25000 ஆண்டுக்கு டாலருக்கும் குறைவாக 2009 ஆம் ஆண்டில் இருந்தது. இந்தப் பிரிவு மக்கள் அரசு அல்லது தனியார் காப்பீடு எதுவுமின்றியே வாழ்ந்து வருவது அறியப்பட்டது. 


இந்த கோஹார்ட் (cohort) 5 மில்லியன் மக்கள் அதிக உடற்பருமனுடனும், ஒரு மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடனும் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்காவின் விரிவுபடுத்தப்பட்ட சுகாதாரத் திட்ட ஏற்பாடுகள் காரணமாக ஆண்டுதோறும் ஒன்பது பில்லியன் டாலர் நீரிழிவு நோயாளிகளுக்காக மட்டுமே கூடுதலாகச் செலவாகும் அல்லது ஒன்பதாயிரம் டாலர்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிய நிரிழிவு நோயாளிக்களுக்காகச் செலவிட வேண்டியதிருக்கும்.



விலை – பலன் சமன்பாட்டின் (cost-return equation) மீதான தாக்கத்திற்குக் கூடுதலாகப் பல பொருளியல் காரணிகளும் உள்ளன. அவை
(1) நீரிழிவு நோய்த் தடுப்பு சார்ந்த சாத்தியப்படும் சேமிப்பு
(2) வறியோர் அடர்ந்த பகுதிகளில் குறைந்த கட்டணத்தில் நீரிழிவு நோய்க்கான தரமான மருத்துவச் சேவையை  உருவாக்கும் வாய்ப்பு,
(3) ஆரோக்கியத்திற்கான செலவில், நீரிழிவு நோயாளர்களின்  மருத்துவச் சிக்கல்களைத்  தடுப்பது வாயிலாக செய்யப்படும் சேமிப்பு
(4) இயலாமையுடன் தொடர்புடைய, வரி வருவாயில் ஏற்படும் சாத்தியமான இழப்பு ஆகியன.


மேற்சொன்னவற்றின் செலவு மதிப்புகளுடன், இதர சுகாதாரச் செலவுகளான பிற நாள்பட்ட, உடற் பருமனுடன் தொடர்புடைய உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்தக் கொழுப்புகள், தூக்கம் தொடர்பான பிரச்சனைகள், மூட்டுவலி, இதய இரத்தநாள நோய்கள், ஆஸ்த்மா மற்றும் வறிய மக்களின் திட்டமிட்ட சுகாதாரச் செலவுகளின் உயர்வு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் தற்போதைய கொள்ளைநோயான டயபிஸிடி (Diabesity) அதாவது உடற்பருமனுடன் கூடிய நீரிழிவு நோயைத் தடுத்து நிறுத்தி, அதற்காகும் சுகாதாரச் செலவினத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு எடுத்து வைக்கப்படும் முதல் அடியானது கண்டிப்பாக வறுமை ஒழிப்பை நோக்கியே இருக்க வேண்டும்.




இக் கட்டுரை ஜனவரி 2020 தமிழ் ஹெல்த் கேர் தமிழ் மாத இதழில்  வெளியாகியுள்ளது.


Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)