ஹெப்பாடிட்டீஸ் C (hepatitis C) க்குத் தடுப்பூசிமருந்து சாத்தியமா?




ஹெப்பாடிட்டீஸ் A,B,C மற்றும் D ஆகியவை கல்லீரலைப் பாதிக்கும் தீநுண்கிருமி எனப்படும் வைரஸ் தொற்றுகள். ஹெப்பாடிட்டீஸ் A வகைக்கும் ஹெப்பாடிட்டீஸ் B வகைக்கும் நோய்த் தடுப்பு மருந்து (Vaccine) புழக்கத்தில் இருந்தாலும் ஹெப்பாடிட்டீஸ் C வகைக்கு நோய்த்தடுப்பு மருந்து (Vaccine) எதுவும் தற்சமயம் நம்மிடையே இல்லை. அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஹெப்பாடிட்டீஸ் C க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பான ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டபடியே உள்ளனர் என்றாலும் ஹெப்பாடிட்டீஸ் C நோய்க்கே உரித்தான குறிப்பிட்ட சில சவால்கள் ஆண்டாண்டு காலமாகத் தடுப்பு மருந்து உருவாக்குவதை கடினமாகவே வைத்துள்ளது.


ஹெப்பாடிட்டீஸ் C நோய்க்கான சிகிச்சை முறைகள் நோயைக் குணப்படுத்தும் என்றாலும் பலவாரகாலமும் அதிகப் பொருட் செலவும் பிடிக்கக் கூடியது. ஹெப்பாடிட்டீஸ் C க்கான வாக்ஸின் மூலம் கல்லீரல் பாதிப்பைத் தடுப்பது மட்டுமல்லாமல் வைரஸ் பரவுதலையும் கட்டுப்படுத்த இயலும்.  இக் கட்டுரை ஹெப்பாடிட்டீஸ் C க்கான நோய்த்தடுப்புச்சத்து மருந்து (vaccine) கண்டுபிடிப்பதில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும், நோய்க்கான சிகிச்சை முறைத் தேர்வுகளையும் விவரிக்கிறது.

ஹெப்பாடிட்டீஸ் C க்கான நோய்த்தடுப்பு மருந்து (Vaccine) தயாரிப்பில் முன்னேற்றம்



1980 களின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஹெப்பாடிட்டீஸ் C தீநுண்மக்கிருமி அல்லது வைரஸ், 2005 ஆம் ஆண்டு வாக்கில்தான் முதன்முதலாக உயிரணு வளர்த்தல் (cell culture) முறையில் வளர்க்கப்பட்டது. ஆகவே 2005 ஆம் ஆண்டுக்கு முன்னதாக வைரசுக்களின் மீது மருந்துகள் மற்றும் நோய்த்தடுப்புச்சத்து எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றறிய இயலவில்லை.


தவிரவும் ஒன்றிலிருந்து மற்றது எழுபது விழுக்காடு வரையிலும் வேறுபட்டுள்ள ஏழு விதமான மரபணு அம்சங்களைக் (genotypes) ஹெப்பாடிட்டீஸ் C வைரஸ் கொண்டிருக்கிறது. மேலும் இந்த வைரசுக்கள் எளிதில் மாற்றமடையக் கூடியவை (mutate) என்பதால் உடலின்  நோய் எதிர்ப்பு அமைப்பின் (Immune system) பணியான நோய்த் தடுப்பைக் கடினமாக்குகிறது.


இது போன்ற சவால்கள் தவிர, நோய்த்தடுப்பு மருந்தைப் பயன்படுத்தி எந்த அளவுக்கு அவற்றின் செயல்பாடு பயன்தரும்  என்பதைக் கண்டறியத் தோதான விலங்கு மாதிரியை ஆராய்ச்சியாளர்கள் இதுகாறும் அடையாளம் காணவில்லை. மனிதர்களிடம் நோய்த்தடுப்பு மருந்துகள் எந்த அளவுக்குப் பயன்தரும் என்பதை அளவிட, ஆராய்ச்சியாளர்கள் எலிகள் போன்ற கொறிப்பான்களையும், சிம்பன்சி மனிதக் குரங்குகளையும்  பரிசோதனைக்குப் பயன்படுத்தினர். இதில் சிக்கல் என்னவென்றால் இவ்விலங்குகளின் நோய் எதிர்ப்பு அமைப்பு (Immune system) ஹெப்பாடிட்டீஸ் C வைரஸ்களை அழித்து விடுகிறது. ஆகவே ஆய்வுகளில் கிடைக்கும் முடிவுகள் வாயிலாக வைரஸ்கள் அழிப்பானது, நோய்த்தடுப்புச்சத்து மருந்தாலா அன்றிப் பயன்படுத்திய ஆய்வகவிலங்குகளின் இயல்பான நோய் எதிர்ப்பு ஆற்றல் காரணமாகவா என்று பிரித்தறிய இயலவில்லை.



பொதுவாக எல்லா நாடுகளிலும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் நோய்த்தடுப்புச்சத்து (vaccines) மருந்துகளைச் சந்தைப்படுத்தும் முன்பு பலமுறை பரிசோதித்துப் பார்த்தல் அவசியம் என்பதால் மருந்தானது, மக்கள் மத்தியில் புழக்கத்திற்கு வர நீண்ட காலம் ஆகும். தவிரவும் நோய்த்தடுப்புச்சத்து மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் அதனைப் பயன்படுத்திய பெரும்பான்மையான  மக்களிடம் சரியான, சிறந்த பலனைத் தந்திருப்பதைக் கட்டாயம் நிரூபித்தாக வேண்டும். 


தற்போது இரு வகையான மருத்துவ பரிசோதனை முயற்சிகள் ஹெப்பாடிட்டீஸ் C வகைக்கான நோய்த்தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் நடைமுறையில் உள்ளன. இரண்டும் ஹெப்பாடிட்டீஸ் C பரவுதலைத் தடுத்தலில் முற்றிலும் வேறான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன. 


சோதனைகள் என்று முற்றுப் பெறுமென்றோ அல்லது சோதனைகளின் முடிவுகளோ இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்ற நிலையிலும் முயற்சிகள் தொடர்ந்து நடப்பது ஹெப்பாடிட்டீஸ் C வகைக்கான நோய்த்தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.


நோய் பரவுதலைத் தடுத்தல்


ஹெப்பாடிட்டீஸ் C யால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரின் குருதியுடன் நேரடிக் குருதித் தொடர்பு கொள்ளும் வேறொருவருக்கு நோய் கடத்தப்படுகிறது. இரண்டு நபர்களுக்கு நரம்பு வழியே மருந்துகளைச் செலுத்த ஒரே ஊசியைப் பயன்படுத்துதல் இந்த வைரஸ் பரவுதலுக்குப் பொதுவான காரணமாகிறது. இருப்பினும் 1992 ஆம் ஆண்டிற்கு முன் அமெரிக்க ஐக்கிய நாட்டில் நோயாளிகளுக்குச் செலுத்தப்படும் இரத்தத்தில் ஹெப்பாடிட்டீஸ் C வைரஸ் இருக்கிறதா என்று அறியும் இரத்தப் பரிசோதனை மேற்கொள்வதை மருத்துவர்கள் வழக்கமாகக் கொள்ளவில்லை என்பதால் நிறையப்பேர் குருதி மாற்றம் வழியாக இந்த நோய்க்கு ஆளாக நேரிட்டது. பாலுறவு மூலமும் ஹெப்பாடிட்டீஸ் C வைரஸ் பரவும் என்றாலும் பொதுவாக இத்தகைய நேர்வு மிகக் குறைவே. 



ஹெப்பாடிட்டீஸ் C தடுத்தல்



மருந்து செலுத்தப்பயன்படும் ஊசிகளையோ அல்லது குருதியில் சர்க்கரை அளவை மதிப்பிடப் பயன்படுத்தும் ஊசியையோ பிறருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது. பச்சை குத்திக் கொள்ளும் சமயம் பயன்படுத்தும் ஊசி முதலான தோலைத் துளைக்கும் அனைத்துக் கருவிகளிலும் நுண்ணுயிர்கள் அழிக்கப்பட்டு தொற்று நோய்க் கிருமிகளுக்கு எதிரான பாதுகாப்புடன் இருக்க வேண்டும். ஹெப்பாடிட்டீஸ் C எதிர்க்குறியாக இருந்தாலும் பலருடன் உறவு கொள்ளும் நபர்கள் மற்றும் அவர்களுடன் உறவு கொள்ளும் நபர்களும் ஆணுறையைச் சரியாகவும், தொடர்ந்தும் பயன்படுத்துதல் வேண்டும்.
சுகாதார அமைப்புகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகளை அப்புறப்படுத்துவது மற்றும் கையுறைகள் அணிவது போன்ற நோய்த் தொற்றுவதைத் தடுக்கும் வழிமுறைகளைக் கையாளுகின்றன. 



இரத்தக்கறை படிந்த துணிகளைச் சலவை செய்து உலர்த்திச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஹெப்பாடிட்டீஸ் C வைரஸ் உள்ள காய்ந்து போன இரத்தத்துடன் ஒருவர் தொடர்பு பெறும் போதும் கூட நோய் தொற்றிக் கொள்ள முடியும். ஆகவே பிறரின் தனிப்பட்ட முகச்சவர சாதனம்(Shaving kit) , பல்துலக்கி(Tooth Brush) போன்ற குருதித் துளி ஒட்டியிருக்க வாய்ப்புள்ள பராமரிப்புக் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் நலம். மற்றவரது குருதியுடன் குருதித் தொடர்பு ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் அனைவருமே மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது.



தற்போது நடைமுறையில் தரப்படும் சிகிச்சைகள்
மருத்துவர்கள் ஹெப் C தடுப்புச் சத்து மருந்தாக நேரடியாகச் செயல்படும் எதிர்
ரெட்ரோவைரல்களையே (direct-acting antiretrovirals) பரிந்துரைக்கின்றனர். இந்த மருந்துகள் ஹெப்பாடிட்டீஸ் C வைரஸ் படியெடுத்துக் கொள்வதைத் தடுத்து முடிவில் அவற்றை முற்றிலும் அழித்து விடுகின்றன. இருப்பினும் ஹெப்பாடிட்டீஸ் C வைரஸ் நிறைய மரபணு வகைகளைக் கொண்டுள்ளதால் எல்லாச் சிகிச்சை முறையும் எல்லாருக்கும் பலனளிப்பது இல்லை. ஆகவே மருத்துவர் எந்த வகையான சிகிச்சை ஒருவருக்கு நல்ல பலனளிக்கும் என்பதை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். 


ஹெப்பாடிட்டீஸ் C க்கான சிகிச்சை பெறும் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிகிச்சைகளைக் கூட மேற்கொள்ளத் தேவை இருக்கலாம். ஒவ்வொரு சிகிச்சையும் உடலில் செயல்பட எட்டு முதல் பத்து வார காலம் பிடிக்கும். மேலும் சிகிச்சைகள் சில நேர்வுகளில் ஒரு இலட்சம் அமெரிக்க டாலருக்கும் மேலாகப் பெருஞ்செலவு பிடிக்கக் கூடியவையாக உள்ளது. மருந்து உதவி கிடைக்கும் பட்சத்தில் சில மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் சிகிச்சைக்குப் பணம் வழங்குவதால் நோய்த்தடுப்பில் குறிப்பிடத்தக்க அளவுக்குச் செலவு குறைகிறது. 


மருத்துவர்கள் ஹெப்பாடிட்டீஸ் C க்கான சிகிச்சை மருந்து உட்கொள்வது நீங்கலாக, கல்லீரலை அதிகம் பணி செய்ய வைக்கும் பிற மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல், மது அருந்துதல் போன்றவற்றைத் தவிர்க்கவும் அறிவுறுத்துகின்றனர். 



ஹெப்பாடிட்டீஸ் C க்கான சிகிச்சைகள் பல இருக்கின்றன என்றபோதிலும் இந்நோய்க்கான வாக்சின் கண்டுபிக்கப்பட்டால் மட்டுமே மனித இனத்திற்கு பெரும் சுமையாக உள்ள இந்நோயிலிருந்து விடுபட முடியும் என்பதால் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பே முன்னுரிமை பெற்றுள்ளது.
எந்த வகையான ஹெப்பாடிட்டீஸால் பாதிக்கப்பட்டுட்டிருக்கும் எவரொருவரும் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைத் தேர்வு பற்றி மருத்துவரைக் கலந்து பேசுவது மிக அவசியம். 


மேற்கண்ட கட்டுரை ஹெல்த் கேர் ஆகஸ்ட் 2019 மாத இதழில் வெளியாகியுள்ளது.




 

Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)