முடக்கு வாதமும் சைவ உணவுப் பழக்கமும்

தாவர அடிப்படையிலான சைவ உணவும் உங்கள் முடக்கு வாதத்தைக் (rheumatoid arthritis) குணப்படுத்தும் வாய்ப்பும்


ஆங்கிலத்தில் Rheumatoid arthritis, சுருக்கமாக RA என்றழைக்கப்படும் முடக்கு வாத நோய் காரணமாக ஏற்படும் வலி மற்றும் மூட்டு வீக்கத்திலிருந்து நல்ல நிவாரணம் பெற தாவர அடிப்படையிலான சைவ உணவுப் பழக்கத்தைக் கைக்கொள்வது சாலச் சிறந்தது என்று சமீபத்திய மதிப்பாய்வுகள் தெரிவிக்கின்றன.  .
இப் பரந்த பூவுலகின் மக்கட் தொகையில்  நூற்றில் ஒருவரைத் தாக்கி, மிகுந்த  வலியையும் வீங்கிய மூட்டுகளையும் ஏற்படுத்தும்  முடக்கு வாத நோயின் மூலமே தன்னத்தானே எதிர்க்கும் நம்முடலின் செயல்பாடுதான். இருப்பினும் இந்த நோய்க்கான நோய் காரணவியலில் (etiology) முன்னமே தீர்மானிக்கப்பட்ட மரபியல் பண்புகளும், வாழ்க்கை முறைக் காரணிகளும் பங்கு கொள்கின்றன. வாழ்க்கை முறை என்பதில் தொற்றுகள் (infections), உணவு (diet) மற்றும் குடல் நுண்ணுயிர்ச்சூழகம் (gut microbiome) போன்ற காரணிகளும் அடங்கும்.
நமது உணவு எப்படி மூட்டுகளைப் பாதிக்கிறது?
உணவுக்காரணிகள் உணவு மூலக்கூறுகளை அனுமதிக்கும் குடலின் தடுப்பை பலமிழக்கச் செய்வதால் பாக்டீரியாக்கள் பாதுகாப்பு அமைப்பை உடைந்து குருதியோட்டத்துடன் கலக்கின்றன. இதனால் எதிர் வினையாக வீக்கம் உருவாகிறது என்கிறது ஒரு கொள்கை.  
பிறிதொரு இயங்கமைவுப்படி முடக்கு வாதத்தின் மீதான உணவின் தாக்கமானது,  முடக்கு வாதத்திற்காக எடுத்துக் கொள்ளப்படும் மருந்திற்கான உடலின் பதில் விளைவை அதிகமான உடற்பருமன் பெருமளவுக்குக் குறைத்து விடுகிறது என்பது நாம் அனைவரும் நன்கறிந்த உண்மை. இதனால் நோய் உடலில் நீங்காமல் இருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. இக்காரணத்தினாலேயே உணவுப் பழக்கத்தில் மாற்றம் என்பது முடக்கு வாதத்தைத் சமாளிப்பதற்கு  மிகவும் அவசியமாகிறது.
பல நேர்வுகளில் தாவரங்களை முதன்மையாகக் கொண்ட சைவ உணவே முடக்கு வாதத்தின் நோய் உணர்குறியைப் பெருமளவுக்குக் குறைக்கிறது  என்பதுதான் தற்போது மேற்கொள்ளப்பட்ட  அதிக அளவிலான சோதனை மதிப்பீடுகளும், கண்காணிப்பு ஆய்வுகளும் நம்மை இட்டுச் செல்லும் முடிவாகும். 
தாவர அடிப்படையிலான உணவு எவ்வாறு உதவுகிறது?
(1) குறைந்த அழற்சி:
2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளில் இரண்டு மாத காலத்திற்கு தாவர அடிப்படையிலான சைவ உணவு தரப்பட்டவர்களுக்கு அழற்சியின் அளவு விலங்கு இறைச்சி அடிப்படையிலான அசைவ உணவு மற்றும் கொழுப்பு செறிந்த உணவு எடுத்துக் கொண்டோரை விட மிகவும் குறைவாகவே இருந்தது.   
உணவுத்திட்ட கொழுப்புச் சத்து இலக்கை (இது முப்பது விழுக்காட்டிற்கும் குறைவான அல்லது சமமான கொழுப்புச் சத்து ஆற்றலாகும்) தாவரஅடிப்படையிலான சைவ உணவுகளின் வாயிலாக எளிதில் அடைந்து விட இயலும் என்பது ஒரு எளிதில் புலப்படும் காரணம். ஏனெனில் விலங்கு அடிப்படையிலான அசைவ உணவுகள் அதிகக் கொழுப்பு உடையவை. அழற்சியின் போது அதிக அளவில் சி – வினையாற்றும் புரதம் (C-reactive protein - CRP) மற்றும்  ட்யூமர் நெக்ரோஸிஸ் ஃபாக்டர் - α எனப்படும் வீக்கத்தை உண்டு பண்ணுவதற்குத் துணைபுரிகிற TNF- α  போன்ற வேதிப் பொருட்கள் அதிகக் கொழுப்பு நிறைந்த உணவு அல்லது பதப்படுத்தப்பட்ட மாமிச உணவு எடுத்துக் கொள்ளும் போது இருப்பதைக் குருதிச் சோதனைகளில் அறிய முடிகிறது. இவை நார் சத்து மிக்க தாவர அடிப்படையிலான சைவ உணவில் குறைவாகவே காணப்படுகின்றன.
(2) முடக்கு வாதம் - குறைந்த வலியும் வீக்கமும்:
குறிப்பிட்ட முறை ஏதுமின்றி சீரற்று ஒதுக்கப்பட்ட சற்றே மிதமான முதல் கடுமையான முடக்கு வாத நோயாளிகளிடம்  நடத்தப்பட்ட ஒரு சோதனையில், குறைந்த கொழுப்பு கொண்ட  தாவர உணவு தரப்பட்டது. நான்கு வார காலத்துக்குப் பின்னர் அவர்களின் காலை நேரத்து விறைப்பு, வலி, இளக்கம் மற்றும் வீக்கம் ஆகியன குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்திருந்தது. தாவர அடிப்படையிலான  குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச் சத்து உணவை எடுத்துக் கொள்ளுதல்  குறைந்த வலி, வீக்கம், குறைந்த சி – வினையாற்றும் புரதம் (C-reactive protein - CRP) மற்றும் குறைவான அழற்சிக்கு வழிவகுக்கும் என்பது சோதனையை மேற்கொண்ட ஆய்வாளர்கள் தரும் ஆலோசனையாகும்.
(3) குறைக்கப்பட்ட உடல் நிறைக் குறியீட்டு மதிப்பு (Reduced BMI) :
அதிக உடல் நிறை கொண்டவர்களுக்கு முடக்கு வாதம் வருவதற்கான கூடுதல் ஆபத்தும், குறைவான நோய் நிவர்த்தியாகும் வாய்ப்பும் உள்ளது. உயிரணுக்களில் (cells) மிக அதிகப்படியான கொழுப்பு காணப்படுதலின் விளைவாக அழற்சி வீதங்களும் (rates of inflammation) அதிகரிக்கும். உடல் எடையைத் தாங்கும் மூட்டுகளில் தரப்படும் அதிகப் படியான எடை காரணமாக அந்தப் பகுதிகளில் அழற்சியை மோசமாக்கும். 2018 ஆம் ஆண்டில் முடக்கு வாத நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றில்,  ஐந்து கிலோகிராமுக்கும் மேலாக உடல் நிறையை இழப்பவர், அதை விடக் குறைவான உடல் நிறையை இழப்பவரைக் காட்டிலும் மும்மடங்கு அல்லது அதற்கும் மேல் நோய் அறிகுறி மட்டுப்படுதலில் முன்னேற்றத்தைத் அடைவதற்கான வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தாவர அடிப்படையிலான சைவ உணவுண்போர் உடல் நிறை குறைய அதிகமான வாய்ப்பு உள்ளது. பதினெட்டு வயதில் அதிக உடல் பருமன் கொண்ட நபருக்கு பின்னாளில் முடக்கு வாதம் வரும் அபாயம் ஐம்பது விழுக்காடு(50%) அளவில் உள்ளது என்று பிறிதொரு ஆய்வில் தெரிய வருகிறது. உடல் எடைக் குறைப்பு, இயக்கு நீர் (hormonal) மற்றும் கொழுப்பு தொடர்பான நோய்த் தடுப்பு இயக்கத்தடைகளை அகற்றி நிலைப்படுத்துகிறது. உடல் எடைக் குறைப்பைத் தாவர அல்லது  மரக்கறி உணவின் வழியே அடைய முடியும்.
(4) ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர்ச்சூழகம் (Healthy gut microbiome):
மனிதனின் ஆரோக்கியம் மற்றும் நோய் ஆகியவற்றுக்கும் குடல் நுண்ணுயிர் சுற்றுச் சூழலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. இதுவே உணவுக் கலவையின் குறிப்பிடத்தக்க மாறுபாடுகளுக்குக் காரணமாக அமைந்து தாவர அடிப்படைச் சைவ உணவு மற்றும் விலங்கு அடிப்படை அசைவ உணவுக்கு ஏற்ப மாற்றப்பட்ட எண்ணிக்கையில் வெவ்வேறான இனங்களைத் தருகிறது. தாவர அடிப்படையிலான செறிவான நார்ச்சத்து மிக்கதொரு உணவானது அதிக வீதத்தில் சில நுண்ணுயிர் இனங்களையும் மற்றும் பன்முகத்தன்மை (Diversity)  எனப்படும் ஒட்டு மொத்த நுண்ணுயிர் இனங்களின் எண்ணிக்கையும்  அதிகரிக்கச் செய்கிறது. பொதுவாக இந்நிலை முடக்கு வாத நோயாளிகளிடம் குறைவாகவே காணப்படுகிறது. இந்நிலையில் மாற்றம் எற்படுமானால் அது முடக்கு வாத நோயும் அழற்சியும் குறைவதற்குச் சாதகமானதாக அமையும். மறுபுறம் நார்ச்சத்துணவு குடல் நுண்ணுயிரிகளால் உடைக்கப்பட்டு , குடல் செல்களுக்கு நன்மை செய்யும் குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள் (short-chain fatty acids - SCFAs) உட்பட்ட ஏராளமான பயனுள்ள விளைபொருட்களைத் தருகின்றன.
மரபுசார் ஒவ்வாமை (atopy)யுடன் தாவர மற்றும் விலங்கு உணவு உணர்தன்மையும் பிறபொருள் எதிரியாக்கிகளும் (antigens) முடக்குவாத நோயாளர்களுக்கு ஒரு பிரச்சினையே. அடிப்படை உணவு முறைக்குச் சாதகமாக இவற்றை நீக்குதல் குறிப்பிடத்தக்க அளவுச் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இம் மாற்றங்கள் மறுபடி சாதரணமான உணவுக்குத் திரும்பும் போது மறைந்து விடும். 
ஆராய்ச்சியாளர் ஹனா கஹ்லியோவாவின் (Hana Kahleova) கூற்றுப்படி, “இந்த ஆய்வு உணவுப் பட்டியலில் செய்யப்படும் சிறியதோர் மாற்றத்தால் மூட்டு வலி, வீக்கம் மற்றும் இதர வலி மிக்க அறிகுறிகள் குறையும் முன்னேற்றத்தை அல்லது முற்றிலுமாக மறைந்து விடும் சாத்தியத்திற்கான நம்பிக்கையைத் தருகிறது. பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் உள்ளடக்கிய தாவர அடிப்படையிலான உணவு முடக்கு வாத நோயாளிகளுக்கு வியக்கத்தக்க அளவுக்குப் பயனுள்ளதாயிருக்கும்”.
இது மட்டுமல்லாமல் தாவர அடிப்படையிலான சைவ உணவின் மூலம் தைராய்டுப் பிறழ்ச்சி(thyroid dysfunction), உடலின் திசுக்களை உணர்விழக்கச் செய்யும்  தண்டுவட மரப்பு நோய் என்ற (multiple sclerosis) மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் மற்றும் அளவுக்கு அதிகமான தைராய்டின் செயல்பாடு(overactive thyroid) ஆகியவற்றையும் தடுக்கலாம்.
டாக்டர் லிஜி தாமஸ் எம். டி அவர்களின் இந்த ஆய்வுக் கட்டுரை ஃப்ராண்டியர் இன் நியூட்ரிஷன் (Frontier in Nutrution) இதழில் 13.09.2019 அன்று வெளியானது.
கட்டுரை 2019 அக்டோபர் ஹெல்த் கேர்  (தமிழ்) மாத இதழில் வெளிவந்துள்ளது.
நன்றி: ஆசிரியர், ஹெல்த் கேர்.

Comments

  1. Very good information about health/arthritis, always good to be a vegetarian

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)