மரணத்தின் அழகு - பகுதி (3) - கலீல் ஜிப்ரான்







 எச்சங்கள்


என்னை மூடியுள்ள வெண்நிற முரட்டுச் சவத் துணி களைந்து
மல்லி, அல்லி இதழ்களால் எனக்கு ஆடை சூட்டுங்கள்.
 
தந்தப் பேழையிலிருந்து என்னுடலை எடுத்து
அது நரந்தப் பூவணை மேல் கிடத்தப்படட்டும்.

என் மறைவுக்குப் புலம்பாமல்
இளமையையும் மகிழ்ச்சியையும் போற்றிப் பாடுங்கள்.
எனக்காக அழுது கண்ணீர் சிந்தாமல்
அறுவடையையும் திராட்சை ரசம் பிழிந்தெடுப்பதையும் பாடுங்கள்.

வேதனைப் பெருமூச்சு விடாமல் எல்லோரும்
என் முகம் மீது உங்கள் விரல் கொண்டு
அன்பின், மகிழ்ச்சியின் சின்னங்களை வரையுங்கள்.

காற்றின் அமைதியை அழிக்கும்
ஆன்ம சாந்தி ஆராதனையோ, இரங்கற்பண்ணோ இன்றி
என்னுடன் சேர்ந்து மானசீகமாக உங்கள் இதயம்
நித்தியமான வாழ்வுக்குக்குரிய பாடல்களைப் பாடட்டும்.

கருப்பு உடை அணிந்து துக்கம் அனுசரிக்காமல்
வண்ண ஆடை உடுத்தி என்னுடன் களிப்பெய்துங்கள்.

என் பிரிவை நெஞ்சத்தில் ஏக்கத்துடன் பேச வேண்டாம்
கண்களை மூடிக் கொண்டாலே நான் உங்களுடன்
இருப்பதை இனி எப்போதும் காண முடியும்.



என்னை இலைக் கொத்துக்கள் மீது கிடத்தி,
உங்களது நட்பான தோள்களில் சுமந்து,
மெல்ல நடந்து ஆளரவமற்ற வனாந்திரத்திற்குச் செல்லுங்கள்.

எலும்புகளும் கபாலங்களும் கடகடக்கும் ஓசையில்
என் துயில் கலையாதிருக்க நெரிசல் மிக்க
இடுகாட்டை நோக்கி என்னை இட்டுச் செல்ல வேண்டாம்.

வயலட்டும் பாப்பியும் ஒன்றின் நிழலில் மற்றது வளராத
புன்னை மரக் காட்டில் எனக்குப் புதைகுழி தோண்டுங்கள்.

திறந்த பள்ளத்தாக்கிற்கு என் எலும்புகளை வெள்ளம்
அடித்துச் செல்லாதிருக்க என் கல்லறை ஆழமாக இருக்கட்டும்.

அந்திப் பொழுதின் ஒளி வந்தென்னருகே அமர வசதியாக
என் கல்லறை பரந்திருக்கட்டும்.




என் மீதிருக்கும் மண்ணுலக ஆடைகளைக் களைந்து
கவனமாக பூமித் தாயின் மார் மீது என்னை ஆழக் கிடத்துங்கள்.

மல்லிகை, அல்லி மற்றும் கதலி விதைகள் கலந்த
கைப்பிடி மென் மணலால் எனை மூடுங்கள்.

அவை என் மீது முளைக்கும் போது உரமாய்
என்னுடல் உண்டு, செழித்து விண்வெளியில்
என் இதயத்தின் சுகந்தத்தை மணம் பரப்பட்டும்.

காற்றுடன் பயணித்து வழிப்போக்கர்களுக்கு இதமளித்து
கதிரவனும் அறியச் செய்யட்டும் எனது அமைதியின் இரகசியத்தை.




இப்போது என்னை விட்டு நீங்கலாம் , நண்பர்களே,
வெறிச்சோடிய பள்ளத்தாக்கில் மௌனத்தின் நடையாக
ஓசை எழுப்பாமல் புறப்படுங்கள்.

பாதாம், ஆப்பிள் பூக்கள் நிசன் பருவத்தின் இளங்காற்றில்
சிதறிப்பரவுவது போல் கடவுளிடம் என்னை விட்டு விட்டு
மெல்ல நீங்கள் கலைந்து செல்லுங்கள்.

உங்கள் மகிழ்ச்சியான வாழ்விடத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள்,
அங்கே என்னிடமிருந்தோ அன்றி உங்களிடமிருந்தோ
மரணத்தை நீக்க இயலாதென்பதை உணருங்கள்.

நீங்கள் இவ்விடத்தை விட்டு அகலுங்கள்.
இங்கே நீங்கள் காண்பதன் மெய்ப்பொருள்
பூவுலகிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.
என்னை விட்டு நீங்குங்கள்.

கலீல் கிப்ரான்.


தமிழாக்கம் : வெ.சுப்ரமணியன்

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)