கண்டதும் களித்ததும் - பகுதி - 8 (புனே பயணக் கட்டுரைகள்)


அஷ்டவினாயகர் ஆலயம்
                                            விக்னேஷ்வரா ஆலயம் ஓசார்.



ஓசார் (Ozar) ஆலயத்தில் ஸ்ரீகணபதி விக்னேஷ்வரா(Vigneshwara) அல்லது விக்னஹரா (Vignahara) என்று அழைக்கப்படுகிறார். விக்னேஷ்வர் என்றால் தடைகளின் கடவுள் (Lord of obstacles) விக்னஹரா என்றால் தடைகளை அகற்றுபவர் (Remover of obstacles) என்றும் புராணக்கதைகளில் விக்னாசுரனை (demon of obstacles) அழித்ததால் விக்னஹர் என்றும் பலவிதமாகப் பொருள் சொல்லப்படுகிறது.



புனேயிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் புனே- நாசிக் நெடுஞ்சாலையில் நாராயண்கானுக்கு(Narayangaon) ஒன்பது கிலோமீட்டர் வடக்கில், மற்றொரு அஷ்ட வினாயகர் தலமான லென்யாத்ரிக்கு (Lenyadri) அருகில் அமைந்துள்ளது. புனே மாவட்டத்தின் ஜூனார் தாலுக்காவில் ஏடகான் (Yedagaon) அணைக்கட்டு கட்டப்பட்டுள்ள குக்கடி நதிக்கரையில் (Kukadi River) ஓசார் அமைந்துள்ளது.


பேஷ்வா பாஜிராவ் – I இன் சகோதரரும், படைத்தளபதியுமான சிம்மாஜி அப்பா போர்த்துகீசியரிடமிருந்து வசாய் (Vasai) கோட்டையைக் கைப்பற்றிய போது அங்கிருந்து எடுத்து வந்த தங்கத்தைக் கொண்டு இவ்வாலயத்தின் கூரான மேற்கூரையைப் பொன்னால் வேய்ந்தார். மீண்டும் 1967 இல் அப்பா சாஸ்திரி ஜோஷி என்ற கணேச பக்தர் ஆலயத்தைப் புதுப்பித்திருக்கிறார்.

அஷ்டவினாயகர் திருத்தல யாத்திரை வரிசையில் ஓசாரின் விக்ன விநாயகர் ஆலயம் ஏழாவது திருத்தலம். ஆனால் பக்தர்கள் தங்கள் பிரயாண வசதியை முன்னிட்டு இதனை ஆறாவது தலமாகவே கருதி  இங்கு வருவது வழக்கம்



முத்கல புராணம், ஸ்கந்தபுராணம் மற்றும் தமிழ் வினாயக புராணம் ஆகியவற்றில் விக்னவிநாயகர் தொடர்பான கதைப் பதிவுகள் காணப்படுகின்றன.


அபிநந்தனன் நடத்திய வேள்வியில் தேவலோகத்தின் அரசன் இந்திரனுக்கு அவிர்பாகம் தரவில்லை. இதனால் கோபமுற்ற இந்திரன் காலனை அனுப்பி வேள்வியை அழித்து வரக் கட்டளையிட்டான்காலன் விக்னாசுரனாக வடிவெடுத்து வேள்விக்குத் தடை ஏற்படுத்தி அதனை அழித்தொழித்தான். அத்துடன் நில்லாமல் பூவுலகில் முனிவர்களின் வேள்விகளுக்கும் மற்ற பிறர் செய்யும் நற்செயல்களுக்கும் தடை ஏற்படுத்தி அவற்றை அழிக்கவும் தொடங்கினான். முனிவர்கள் விக்னாசுரன் தரும் இன்னல்களுக்கு முடிவு கட்ட பிரம்மனையும், சிவனையும் வேண்டித் துதித்தனர்.



அவர்கள் கணபதியைத் தொழுவது ஒன்றே இதற்குத் தீர்வாக அமையும் என்று அறிவுரை கூறினர். துறவிகளின் பிரார்த்தனையைச் செவிமடுத்த கணேசன், விக்னாசுரனுடன் போரில் இறங்கினார். போர் துவங்கிய சிறிது நேரத்திலேயே தன்னால் வினாயகனை வெல்ல முடியாதென்ற உண்மையை அறிந்து கொண்ட அசுரன், சரணடைந்தான். இனிமேல் பூவுலகில் யாரையும் பயமுறுத்துவது இல்லை என்றும், கணேசனை வணங்காமல் அல்லது கணேசனை வழிபடாத இடத்தை மட்டுமே விக்னா(obstacle) தனது வசிப்பிடமாகக் கொள்வதாக வாக்களித்தான்


பிறிதொரு கதையில் விக்னா, ஸ்ரீகணேசனின் ஏவலனாகச் செயல்படுவதாகவும், கணபதியை வணங்காமல் செய்யும் காரியங்களுக்கு தடைகளை ஏற்படுத்துவேன் என்றும், மேலும் தன்னையும், நடந்த நிகழ்ச்சியையும் நினைவு படுத்தும் வகையில் கணபதி விக்னேஷ்வரர்(The Lord of Vigna / obstacles)  என்ற நாமத்தைச் சூடிக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தான். விக்னாசுரனின் பிடியிலிருந்து விடுபட்ட சாதுக்கள் ஓசார் ஆலயத்தில் கணேசனை வினேஷ்வராகக் குடமுழுக்கு செய்தனர்

கிழக்குப் பார்த்த ஆலயத்திற்குச் சிறப்புகள் நிறைய உள்ளன. திருக்கோவில் பரந்த முற்றமும், சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்டமான நுழைவாயிலும், சுதை வேலைப்பாடுகள் நிறைந்த சுவர்களும் கொண்டுள்ளது. மதில் சுவருடன் கூடிய நுழைவாயிலில் இரண்டு கல்லாலான துவாரகபாலர்கள் காணப்படுகின்றனர்









நிலைப்படிக்கு மேல் நான்கு இசைக் கலைஞர்களின் சிற்பம்.  அதற்குக் கீழ் இருபுறமும் முனிவர்கள் இருவர். சற்றே கூர்ந்து நோக்க மரத்தில் குரங்குகளும், கிளிகளும் சூழ்ந்திருக்க இருபுறமும் கஜங்கள் தாமரை மலர் தாங்க, வாஸ்து புருஷ் என்ற அசுரன் தலைக்குக் கீழே, நடுவில் சேஷ நாகம் குடைபிடிக்க வினாயகர் வீற்றிருக்கிறார்


வாயிலுக்கு அருகில் உள்ள ஏழு வளைந்த கூரான முனைகள் கொண்ட வளைவுகளைக் கொண்ட தாழ்வாரத்திற்கருகில் அழகான இரண்டு தீபமாலா எனப்படும்  விளக்குத் தூண்கள் அமைந்துள்ளன


மதில் சுவற்றில் ஏறிப் பார்த்தால் சத்ரபதி சிவாஜி மகராஜின் ஷிவனெரிக் கோட்டையையும்(Shivneri Fort), லென்யாத்ரி மலைக் கோவிலும்(Lenyadri shrine) கண்ணுக்குப் புலனாகும்.

நுழைவாயிலின் இருபுறமும் தியானம் செய்வதற்கான சிறு சிறு அறைகள் உள்ளன. முற்றத்தின் தளம் முழுவதும் ஓடு பதிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆலயத்திற்கு மூன்று நுழைவாயில்கள் உள்ளன. அனைத்து வாயில்களும் சிற்பவேலைப்பாட்டுடன் கூடிய பக்கத் தூண்களையும் உத்திரத்தையும் கொண்டுள்ளன.




ஆலயம் இரு கூடங்களைக் கொண்டது. அதில் ஒன்று வடக்கிலும் தெற்கிலும் நுழைவாயிலுடன் இருபது அடி உயரம் கொண்டது. அதில் டுண்டிராஜ்(DUNDE RAJ GANAPATHI) கணபதியின் உருவம் உள்ளது. மற்றது 10 அடி உயரம் உடையது. இதில் சலவைக்கல்லால் ஆன ஸ்ரீகணேசனின் வாகனமான மூஷிகம் புறப்படத் தயாராக உள்ளது. ஆலயத்தின் கருவறையின் மேற்கூரை பொன்னால் வேயப்பட்டுள்ளது. தவிரவும் இரண்டு விசாலமான சுற்றுப்பிரகாரப் பாதைகள் (Prakarams) உள்ளன. எல்லா அஷ்டவினாயகர் தலங்களைப் போலவே இத்தலத்தின் மூலகணேச மூர்த்தமும் சுயம்பு மூர்த்தியே. அதாவது இயல்பாகவே வேழச்சிரசு போல அமைந்த கல்லால் ஆனது.மூலவர் கிழக்கு நோக்கி உள்ளார். மூலவரின் திருமேனிக்கு முன் இருபுறமும் பித்தளையால் ஆன சித்தியும், ரித்தியும் இருக்க உற்சவமூர்த்திஉள்ளார். மூலவரின் இடப்புறம் திரும்பிய துதிக்கை மீது செந்தூரம் பூசப்பட்டுள்ளது.வினாயகரின் கண்களில் மரகதக் (emerald) கற்களும், நாபியிலும், நெற்றியிலும் வைரக் (diamond) கற்களும் பதிக்கப்பட்டுள்ளது



ஆலயத்தில் வினாயகர் சதுர்த்தி, கணேஷ் ஜயந்தி தவிர ஐந்து நாள் உற்சவமும் கார்த்திக் பௌர்ணமியிலிருந்து தொடங்கி நடைபெறும். அப்போது தீபமாலாவில் விளக்குகள் ஏற்றப்படும். தரிசனம் முடிந்து இரவு உணவிற்குச் செல்லும் போது மணி பதினொன்று. நல்ல பசி.  இரவு உணவுக்குச் சப்பாத்தியும் பருப்பும், ஆலுகோபி சப்ஜி. கூடவே சாதம், சாம்பார், தயிர் மற்றும் மாங்காய் ஊறுகாய். சேமியாவில் செய்யப்பட்டிருந்த ஒருவகை இனிப்பு மிகவும் ருசியாக இருந்தது. திருப்தியாகச் சாப்பிட்டு விட்டு அவரவருக்கு தரப்பட்டிருந்த குளிரூட்டப்பட்ட அறைகளுக்குச் சென்றோம். இரவு நேரம் கழித்து உறங்கச் செல்வதால் மறுநாள் மெல்ல எழுந்து கிளம்பலாம் என்று நினைத்தால் சுற்றுலா அமைப்பாளர் காலை ஆறு மணிக்கெல்லாம் கிளம்பி விட வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார். ஆறு மணிக்குப் புறப்பட  வேண்டும் என்பதால் தங்கியிருந்த விடுதியில் காலை ஐந்து மணிக்கு அறைச்சேவைத்(Room service) தொலைபேசி மூலம் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு ஒரு முக்கியமான காரணமும் இருந்தது. அடுத்து நாங்கள் செல்ல வேண்டிய தலம் கிரிஜாத்மஜர் ஆலயம். இவ்வாலயம் லென்யாத்ரி மலை மீது உள்ளது. வெயிலுக்கு முன்னர் சென்றால்தான் அதிகம் களைப்படையாமல் மலையில் ஏற முடியும். கிட்டத்தட்ட முன்னூற்றைம்பது படிகள் ஏற வேண்டும் என்பதால் ஒரு கோப்பைக் காபி மட்டும் அருந்திவிட்டு துரிதமாகப் கிரிஜாத்மஜரைத் தரிசிக்கப் புறப்பட்டோம்.


ஓசார் ஆலயத்தில் தரிசனம் செய்யும் போது இரவு மணி 10.30. ஆகவே படங்கள் எதுவும் சரியாக வரவில்லை. இங்கு தரப்பட்டுள்ள படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்தே எடுக்கப்பட்டவை.

படங்கள் நன்றி: tripadvisor.com, ashtavinayak.in, myoksha.com, templeprohit.com




வளரும்.... 





Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)