கண்டதும் களித்ததும் பகுதி - 7 (புனே பயணக் கட்டுரைகள்)
ரஞ்சன்கான் (Ranjangaon) கணபதி ஆலயம்
அஷ்ட வினாயகர் திருத்தலங்களில்
ரஞ்சன்கான் (Ranjangaon) கணபதி ஆலயமும் ஒன்று. இந்த வினாயகர் திருவுருவம்
“கொல்லம் குடும்பம்”(Khollam family) என்றழைக்கப்படும்,
உள்ளூர் பொற்கொல்லர் குடும்பத்தால் கொடையாகத் தரப்பட்டு வழிபாடு துவங்கியது.
திருக்கோவில் ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்
கட்டப்பட்டது. ஆலயத்தின் முதன்மைப்பகுதி பேஷ்வாக்கள் காலத்தில்
கட்டப்பட்டது போன்ற தோற்றத்தைத் தருகிறது. நகர்கானா(Nagar
khana) முரசு கோவிலின் நுழைவுவாயிலின் மேல் வைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்திற்கு கிழக்கு நோக்கிய அழகான பெரிய நுழைவாயில் உள்ளது.
ரஞ்சன்கானில் மூர்த்தி மஹாகணபதியாக இருப்பதால் ஸ்ரீகணேசரின் சக்தி அளப்பரியது.
ரஞ்சன்கான் மஹாகணபதி ஆலயம் ஷிரூர் தாலுக்காவில் ஷிரூரிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும்,
புனேயிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
அஷ்ட வினாயகர் ஆலயப் புனிதப்பயண வரிசையில், இது
எட்டாவதாகத் தரிசிக்க வேண்டிய தலம். இருப்பினும் எங்கள் பயணத்
திட்டத்தில் பயணத்தின் வசதி காரணமாக தலத்தை நான்காவதாகத் தரிசிக்க அழைத்துச் செல்லப்பட்டோம்.
சிந்தாமணி வினாயகர் ஆலயத்திலிருந்து மாலை சுமார் 4.30 மணிக்குப் புறப்பட்ட நாங்கள் சுமார் 6.00 மணியளவில் ரஞ்சன்கான்
வந்தடைந்தோம். எங்களது பேருந்து புனே – அஹமது நகர் நெடுஞ்சாலையின் ஒருபுறம் தாழ்வான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
அங்கிருந்து சற்று மேடேறி நெடுஞ்சாலையக் கடந்து எதிர்ப்புறம்
சுமார் அரை கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து ஆலயத்தை அடைந்தோம். வேறெந்த ஆலயத்திலும்
கட்டணம் செலுத்திச் சிறப்பு தரிசனம் செய்யாவிட்டாலும், இங்கு
அதிகமான கூட்டம் தர்ம தரிசன வரிசையில் இருந்ததாலும், அடுத்த ஓசார்
(OZAR) ஆலயத்திற்கு இரவு 9.00 மணிக்குள் சென்றடைய
வேண்டியிருந்ததாலும் சுற்றுலா நடத்துனர் அறிவுரைப்படி ரூபாய் ஐம்பது செலுத்தி சிறப்பு
தரிசனம் செய்தோம். அப்படியும் தரிசனம் முடிந்து வெளியில் வர மணி
7.30 ஆகி விட்டிருந்தது. மறுபடி பரபரப்பான நெடுஞ்சாலையை
கடந்து பேருந்துக்கு வந்தால், பேருந்தின் பின்சக்கரங்களில் ஒன்றில் ஆணி
போன்ற கூரான பொருள் துளைத்துக் காற்று இறங்கி இருந்ததால், அதனைக் கழற்றி மாற்றுச் சக்கரம் பொருத்திக் கொண்டிருந்தனர்.
அதனால் இரவு 8.00 மணிக்குத்தான் ரஞ்சன்கானை விட்டு
ஓசார் கிளம்ப முடிந்தது. பயணத்திட்டப்படி இரவு 9.00 மணிக்கு ஒசாரை அடைந்திருக்க வேண்டிய நாங்கள் இரவு 10.00 மணிக்குத்தான் ஒசாரை அடைய முடிந்தது.
சரியான வெளிச்சம் மற்றும் கைபேசியில்
உள்ள மின்கலத்தில் சேமித்திருந்த மின்சாரம் அதிகம் செலவாகி விட்டதாலும் படங்கள் எடுக்க
முடியவில்லை. இந்தக் கட்டுரையைப் பொறுத்தவரை பகிர்ந்துள்ள படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்தே
எடுக்கப்பட்டவை.
படங்கள் நன்றி: tripadvisor.com,
ashtavinayak.in, myoksha.com, templeprohit.com
மஹா கணபதி தாமரை மலர் மீது தன் தேவியர் சித்தி ரித்தியுடன் அமைந்திருக்கிறார். பொதுவாக மஹாகணபதி பத்துத்
துதிக்கைகளுடனும் எட்டு , பத்து அல்லது பன்னிரு கரங்களுடன் சித்தரிக்கப்படுகிறார்.
ஆனால் இங்கு கணநாதனின் சிலை பத்துத் துதிக்கைகளுடனும் இருபது கரங்களுடனும்
சித்தரிக்கப்படுவதால் மஹோட்கட்(Mahotkat) என்றழைக்கப்படுகிறார்.
மஹாகணபதியின் இந்த வடிவம் , சிவபெருமான் தானே வினாயக
ரூபமெடுத்து திரிபுராசுரனை முறியடித்ததால் திரிபுரைவாடே மஹாகணபதி(Tripurarivade
Mahaganpati) என்றும் வழங்கப்படுகிறார். ரஞ்சங்கானில்,
சிவபெருமான் ஸ்ரீ மஹா கணபதியின் துணையுடன் திரிபுராசுரனை வென்றதாக நம்பப் படுகிறது.
ரஞ்சன்கான் இந்த அசுர வதம் நடக்கும் முன்னர் மணிப்பூர் என்று அழைக்கப்பட்டதாகத்
தெரிகிறது.
ஆலயம் அதிகாலை ஐந்து மணி முதல் இரவு பத்து மணி வரையில் இடைவெளியின்றி பக்தர்கள்
தரிசனத்துக்காகத் திறந்துள்ளது.
இந்து புராணக் கதையில்
போற்றுதலுக்குரிய கிருட்ஸ்மதா ரிஷி (Rishi
Gritsamada) தும்மிய போது உருவானவனே திரிபுராசுரன். திரிபுராசுரன் தன் தந்தையிடமிருந்து கணேச மந்திரத்தைக் கற்றுக் கொண்டு
அதனை உச்சாடனம் செய்து துதித்துத் தன் முன் கணேசனைத் தோன்றச் செய்தான். கணேசனும் அவனது தவத்தில் மகிழ்ந்து சிவ பெருமானைத் தவிர வேறு எவராலும்
அழிக்கப்பட முடியாத வல்லமையும், சிவனால் சம்காரம்
செய்யப்பட்ட பின் முக்தியடைய வரமளித்தார்.
வரம் கைவரப் பெற்ற
திரிபுராசுரன் தான் செல்லும் இடங்களில்
எல்லாம் வீணாக வம்பு வளர்த்து அழிவை உண்டாக்கினான். முதலில் பாதாள
உலகத்தைக் கைப்பற்றியவன், அடுத்து தேவலோகத்தையும், இந்திரலோகத்தையும் தன் பிடிக்குள் கொண்டு வந்தான். பெற்ற
வரத்தின் வலிமையால் சக்தி வாய்ந்த எந்தக் கடவுளாலும் அவனை வெல்ல முடியவில்லை.
தந்திரமாக சிவபிரானையே ஏமாற்றிக் கைலாயத்தையே தன் ஆளுகைக்குக் கீழ்
கொண்டு வந்தான். இறுதியாக பூவுலகத்தையே முடக்கி, முப்புரத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால்,
தானே மாபெரும் ஆற்றல் கொண்டவன் என்று,
அடுத்ததாகத் தன்னைப் போல் ஒரு சிலை செய்து வழிபடத் துவங்கினான். திரிபுராசுரனால் பயந்து போன தேவர்கள்
நாரதரிடம் வழிகாட்ட வேண்டி முறையிட, அவரும் இத்தனை வலிமையைத் திரிபுராசுரன்
பெற்றதே கஜானனர் தந்த வரத்தால் என்பதால் அவரைப் பிரார்த்திப்பதே சரியானது என்று அறிவுரை
வழங்கினார். அதன்படி
நாரதர் அவர்களுக்கு உபதேசித்த எட்டு கணேச துதிகளை(stotras)
அவர்கள் சொல்லத் துவங்கினர். இந்த எட்டுத் துதிகள்
“சங்கடநாச ஸ்தோத்திரம்”( Sankatnashan
stotra) என்றழைக்கப்படுகின்றன.
எட்டு கணேச துதிகளையும் மனமுருகித் துதித்த தேவர்கள் முன் தோன்றி,
எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பாக எவர் ஒருவர் இந்த சங்கடநாசத் துதியைச்
கூறிய பின் துவங்குகிறாரோ, அவருக்கு அச் செயலைச் செய்ய தடைகள்
ஏதும் ஏற்படாது என்றும் எடுத்த காரியத்தில் முழு வெற்றி உண்டாகும் என்று ஸ்ரீ கணபதி
அருளிச் செய்தார்.
வினாயகர் அளித்த வரத்தின்படி, சிவபெருமானின் கையால் மட்டுமே திரிபுராசுரனுக்கு மரணம் சம்பவிக்கும் என்பதால், திரிபுராசுரனை அழிப்பது சிவபெருமானால் மட்டுமே நடக்கும். ஆகவே அடுத்து தேவர்கள் சிவபெருமானை இது குறித்து வேண்ட, அவரும் அசுரனை அழிக்கப் போரிட்டார். ஆனாலும் சங்கடநாசத் துதியைச் சொல்ல மறந்து போரைத் துவங்கியதால் தோல்வியைத் தழுவினார். தன் தவற்றை உணர்ந்து சங்கடநாசத் துதியைச் சொல்லத் துவங்க, கணபதியிடமிருந்து அதி சிறப்பான சக்தி கொண்ட பீஜ மந்திரத்தைக் கணபதியிடமிருந்து கை வரப்பெற்றார்.
அடுத்த கணமே ஒற்றை அம்பிலேயே திரிபுராசுரனைக் கொன்றார்.கோவிலின் அமைப்பு சூரியக் கதிர்கள் நேரடியாக கணபதி மீது விழுமாறு உள்ளது.
பேஷ்வா மாதவராவ் போருக்குச் செல்லும் வழியில் இவ்வாலயம் உள்ளதால்,
அவர் இங்கு தங்கி மஹாகணபதியைத் தரிசனம் செய்வது வழக்கம். கணபதியின் சிலையைப் பாதுகாப்பாக வைக்க ஆலயத்தின் கீழ்த்தளத்தில் (basement)
கருங்கல்லால் ஆன அறை ஒன்றையும், சுயம்பு மூர்த்திக்கு
ஒரு கருவறையும் கட்டியதாகத் தெரிகிறது. அனியபா தேவிற்கு
1790ஆம் ஆண்டில் மஹாகணபதியை ஆலயத்தில் பூசை செய்யும் பரம்பரை உரிமையை
வழங்கினார். ஆலயத்தின் கூடத்தை இந்தூரின் சர்தார் கிப் மற்றும்
ஓவாரிசும் (Sardar Kibe , Owaris), ஆலய மதில் சுவற்றை
உள்ளடக்கி சிறு சிறு அடுக்குமாடிக் கட்டடங்களை சர்தார் பவார் மற்றும் ஷிண்டேயும்
(Sardar Pawar , Shinde) கட்டியுள்ளனர். நமக்கு முன்னரே அறிமுகமான
காண்பத்யத் துறவி மோர்யா கோசாவி ஆலயத்திற்கான ஐம்பொன் உற்சவ மூர்த்திச் சிலையை அனியபா
தேவிற்கு வழங்கியுள்ளார். இந்த உற்சவ மூர்த்தியே பண்டிகை நாட்களில்
வீதியுலாவுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
வினாயகர்
சதுர்த்தி காலத்தில் ரஞ்சன்கான் மக்கள் நம்மைப் போல் களிமண் வினாயகர் சிலையை வாங்கி
வந்து வீட்டில் அதனை வைத்து வினாயகர்
சதுர்த்திக்கு வினாயகனை வழிபடுவதில்லை. மாறாக நேராக ஆலயத்திற்கே சென்றுதான்
வழிபடுகிறார்கள். பத்ரபாதா(Bhadrapada)
காலத்தில் கணேஷ் பூஜைக்கு ஊர்மக்கள் எல்லோருமே ஆலயத்திற்கு வருகை தருவது
வாடிக்கை. சற்றே வித்யாசமாக பத்ரபாதா இவ்வாலயத்தில் ஆறு
நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஐந்தாம் நாளில் மஹாபோக்(Mahabhog)
ஆலய மூர்த்திக்குப் படைக்கப்படுகிறது. இந்நாட்களில் உற்சவமூர்த்தி பூம்பல்லாக்கில் ஆலய எல்லையைச் சுற்றி
வீதியுலா வருவது வழக்கம். சாதாரண நாட்களைக் காட்டிலும் திருவிழாக்
காலங்களில் குழுக்களாகக் கூட்டம் பன்மடங்கு அதிகரித்துக் காணப்படும்.
தற்காலத்தில் குழுக்களுக்கிடையில் நிறைய மல்யுத்தப் போட்டிகள் நடத்தப்
படுவது தனிச் சிறப்புடையது. விழாவின் ஆறாவது நாள் பக்தர்கள் உற்சவரைத்
தரிசனம் செய்த பின்னர் மகாகணபதியை மீண்டும் மீண்டும் தரையில் விழுந்து நமஸ்கரித்து
கும்பிட்டவாறு (Lotangan) செல்வார்கள்.
நகர்கானா முரசு ஆலயத்தின் நுழைவாயிலின்
மேல் உள்ளது.
1997 ஆம் ஆண்டில் மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மனோஹர் ஜோஷி
நகராகானா முரசின் செயல்பாட்டைத் துவங்கி வைத்துள்ளார்.
ஆலயத்தின் பிரதானப் பகுதி பேஷ்வாகளின் காலத்திய ஆலயத்தைப் போல் அமைந்துள்ளது.
ஜய விஜய துவாரகபாலர்கள் இருபுறமும் கொண்டு பிரதான வாயில் பெரிதாகவும்
அழகாகவும் அமைந்துள்ளது.
இரவு 8.00 மணிக்கு மேல் புறப்பட்டு இரவு 10.00 மணிக்கு ஒசார் வந்து சேர்ந்தோம்.
Comments
Post a Comment