கண்டதும் களித்ததும் பகுதி - 5 (புனே பயணக் கட்டுரைகள்)



தேயூர் சிந்தாமணி வினாயகர் ஆலயம் புனே நகரத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புனே மாவட்டத்தின் ஹவேலி(Haveli) தாலுக்காவில் பீமா(Bhima) நதியும் அதன் துணை நதி மூல முத்தாவும்(Mula – Mutha) சங்கமிக்கும் இடத்திற்கருகில் அமைந்துள்ளது. அஷ்டவினாயகர் திருத்தல பயணத்தில் செல்ல வேண்டிய மூன்றாவது திருத்தலம்.




Picture courtesy : wikipedia

கபிலமுனிவருக்கு  (Kapila) எப்படி கேட்டதைக் கொடுக்கும்  சிந்தாமணிக் கல்லைப் பேராசை பிடித்த அரசன் கணா(Gana)விடமிருந்து மீட்டுத் தந்தார் என்பதையும், நிம்மதியின்றித் தவித்த படைப்புக் கடவுள் பிரம்மன் தன்னை நோக்கித் தவமியற்றிய போது அவரது மனத்தை எப்படிச் சாந்தப்படுத்தினார் என்பதையும் திருக் கோவிலின் வரலாறு தெரிவிக்கிறது.

முன் பகுதிகளின் குறிப்பிட்டது போல் இவ்வாலயம் காணபத்யா பிரிவின் துறவி மோர்யா கோசாவியுடன் தொடர்புடையது. ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்தது என்ற போதிலும் தற்போதுள்ள ஆலயக் கட்டடம் மோர்யா கோசாவி மற்றும் அவரது வழித் தோன்றல்களாலும் உருவாகப்பட்டதே. அனைத்து பேஷ்வா ஆட்சியாளர்களையும் ஈர்க்கும் ஆன்மீக காந்தமாக இவ்வாலயம் இருந்து வந்துள்ளது. அதிலும் குறிப்பாக 1745 முதல் 1772 வரையில் ஆட்சி புரிந்த மாதவராவ் – I, சிந்தாமணி வினாயகரால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, ஆலயத்தைப் புதிப்பித்து விரிவாக்கமும் செய்துள்ளார்.

அஷ்டவினாயகர் ஆலயங்களின் தரிசனக் கிரமப்படி இவ்வாலயம் ஐந்தாவது தலமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பயண அனுகூலங்களைக் கருத்தில் கொண்டு பல யாத்ரீகர்கள் முதலில் மோர்கானில் மயூரேஷ்வர் தரிசனம் செய்த பின்னர் இரண்டாவதாக தேயூர் சிந்தாமணி வினாயகரைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எங்கள் அஷ்ட வினாயகர் யாத்திரைப் பயணத்திலும் இது போலச் சிறு மாற்றம் இருந்தது. நாங்களும் கிரமப்படி ஐந்தாவதாகத் தரிசிக்க வேண்டிய சிந்தாமணி வினாயகரை மூன்றாவதாகத் தரிசித்தோம்.


அஷ்ட வினாயகர் ஆலயங்களில் மிகப் பிரசித்தி பெற்ற ஆலயம் தேயூர். இதன் முதன்மை நுழைவாயில் வடக்கு நோக்கியுள்ளது. ஆலயத்துடன் பரிமாணத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது நுழைவாயில் மிகவும் சிறியது. ஆலயத்தில் சிந்தாமணி வினாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். ஆலயத்தின் வெளியில் காணப்படும் சபா மண்டபம் மரத்தாலானது. சபா மண்டபம் மாதவராவால் கட்டப்பட்டது. சபா மண்டபத்தில் தரிசன வரிசைக்கான தடுப்புகள் போடப்பட்டு உள்ளன. மண்டபத்தில் கருங்கல்லாலான நீருற்று ஒன்று உள்ளது.




ஆலயத்தின் மூலவர் ஸ்ரீ கணபதி என்றாலும் சிவா, விஷ்ணு, லட்சுமி, ஹனுமான் ஆகிய தெய்வங்களுக்கும் சிறு சிறு சன்னதிகள் உள்ளன. கோவிலின் பின்புறம் பேஷ்வா வாடா என்பபடும் பேஷ்வாவின் அரண்மனை உள்ளது. இது ஒரு காலத்தில் மாதவராவின் வசிப்பிடமாகவும் தற்போது ஆலயத்தின் அன்றாடப் பணிகளைக் கவனிக்கும் அலுவலகமாகச் செயல்படுகிறது.  
பிற அஷ்டவினாயகர் சிலாரூபங்களைப் போலவே, சிந்தாமணி வினாயகரும் வலஞ்சுழி சுயம்பு மூர்த்தியே. வேழ முகமும் ஒளிவீசும் கற்கள் பதிக்கப்பட்ட கண்களும் மட்டுமே நம் கண்களுக்குத் தெளிவாகப் புலனாகிறது. சாதாரணமாக தரிசத்திற்குச் சுமார் முப்பது முதல் நாற்பது நிமிடம் காத்திருக்க வேண்டியுள்ளது. இருப்பினும் வெளிவரும் வழியாகச் சென்று தரிசனம் செய்ய உடல் நலம் குன்றிய மூத்த குடிமக்களை மனிதாபிமான அடிப்படையில் காவலர்கள் அனுமதிகிறார்கள். சிந்தாமணி வினாயகர் திருமேனி முழுவதும் சிந்தூரம் பூசப்பட்டுக் காட்சி தருகிறார்.

பொதுவாகவே அனைத்துக் கோவில்களிலும் சன்னதிக்கு அருகிலேயே காணப்படும் அலுவலகத்தில்  அபிஷேகம்/ அர்ச்சனைக்கு சீட்டு விற்பனை தரப்படுகிறது. மராத்தியில் அல்லது ஹிந்தியில் பெயர், நட்சத்திரம், கோத்திரம், குடும்பப்பெயர் எழுதிக் கொடுத்தால், நாம் குறிப்பிடும் நாளில் அபிஷேகம் / அர்ச்சனை செய்யப்படுகிறது. நான் ஆங்கிலத்தில் எழுதித் த்ந்தேன். அதற்கான ரசீதை உடனே கணினி மூலம்  அச்செடுத்துத்
(Print out) தருகிறார்கள். பிரசாதத்தைத் தபாலில் அனுப்பி விடுவார்களாம்.

முத்கல புராணம் கணா என்ற குணாசுரன் பற்றிக் கூறுகிறது. அபிஜித்(ABIJITH) மன்னருக்கும் அவனது மனைவி குணவதி(GUNAVATHI)க்கும் பிறந்தவன் கணா. சிவபக்தனான கணா, போராசை பிடித்த  முன்கோபி. சிவபெருமானைக் குறித்துத் தவமியற்றி, அவரிடமிருந்து தேவ லோகம், பூலோகம் மற்றும் பாதாள லோகம் ஆகிய மூவுலகங்களையும் ஆளும் வரத்தையும், முக்குணங்களில் ஏதாவது ஒன்றைப் பெற்றிருக்கும் எந்த ஒன்றாலும் கொல்லப்பட முடியாத  வரத்தையும் பெற்றான்.

ஒருமுறை கபில முனிவரின் ஆசிரமத்திற்குத் தன் படை பட்டாளத்துடன்  இளவரசன் கணா வந்திருந்தான். கபில முனிவரிடம் கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணி  என்ற ஆபரணம் இருந்தது. அதன் மூலம் சுவையான உணவை இளவரசனுக்கும் அவனது படைக்கும் வழங்கினார். இதைக் கண்ணுற்ற பேராசை பிடித்த இளவரசன் குணா அதைத் தனக்குத் தருமாறு முனிவரைக் கோர, அவர் அக் கோரிக்கையை நிராகரித்து விட்டார். இருப்பினும் முனிவரிடமிருந்து சிந்தாமணியை அபகரித்துக் கொண்டான். கபில முனிவர் ஸ்ரீ கணேசரின் பக்தர். அவர் கணபதியிடம் சிந்தாமணியை மீட்டுத்தர வேண்டினார்.

 கணாசுரனின் கனவில் கணபதி தன் படையுடன் தோன்றினார். கணபதியின் படை வீரன் ஒருவன் கணாவின் சிரசைத் தன் வாளால் வெட்டுவதாகக் கனவு கண்டான். திடுக்கிட்டுக் கண் விழித்த கணா கபிலரை கொல்லும் எண்ணத்துடன் தன் படையுடன் அவரது ஆசிரமத்தை நோக்கிப் புறப்பட்டான். கணாவின் தந்தை அபிஜித் மகனை சமாதானம் செய்து, சிந்தாமணியை மீண்டும் முனிவரிடமே அளிக்கச் சொன்ன புத்திமதி எதுவுமே அவனுக்கு மண்டையில் ஏறவில்லை.

ஆத்திரம் தலையில் குடிபுகும் போது அறிவு தலையை விட்டு அகலுவது இயல்பனது அல்லவா. தன் படையுடன் முனிவரின் ஆசிரமத்தை அழிக்கத் துவங்க, ஸ்ரீ கணேசரின் சக்தி ரூபமான ஸித்தி ஆயிரம் கரத்துடன் லக்ஷா(LAKSHA) என்ற வீர வடிவெடுத்து கணாவின் படை முழுவதையும் அழித்து விட, வினாயனால் ஆணவ இளவரசன் கணாசுரனின் சிரம் சீவப்பட்டது. சிந்தாமணிக் கல்லைஅவர் கபில முனியிடம் திருப்பித்தர அவரோ சிந்தாமணியை விட வினாயகன் எப்போதும் தன்னுடனேயே இருப்பதையே தான் விரும்புவதாகத் தெரிவித்தார். அதனை ஏற்றுக் கொண்ட ஸ்ரீ கணேசர் சிந்தாமணி விநாயகர் என்ற திருநாமத்துடன் தேயூரில் கபில முனிவருடன் தங்கி விட்டதாக முத்கல புராணம் தெரிவிக்கிறது.
தேயூர், நிலையான என்ற பொருளுடைய வடமொழிச் சொல்லான ஸ்தாவர் (sthavar) என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அமைதியின்றி அலைபாய்ந்தவாறு சஞ்சலத்துடன் இருந்த மனதை ஒருமுகப்படுத்தி நிலை நிறுத்த படைப்புக் கடவுளான பிரம்மன், வினாயகனை நோக்கித் தியானிக்க வினாயகன் ஆசியால் கவலைகள் என்ற பொருள் கொண்ட சிந்தாஸ்(chinthas) நீக்கியதால் சிந்தாமணி என்று பெயர் பெற்றதாகவும் மற்றொரு கதையில் கௌதம முனிவரால் அளிக்கப்பட்ட சாபம் நீங்க வேண்டி தேவேந்திரன் கதம்ப மரத்தடியில் வினாயகனைத் துதித்துச் சாப விமோசனம் அடைந்தான். அதனால் கதம்ப நகர் அதாவது கதம்ப மர நகரம் என்ற பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகிறது.

.
பண்டைக்காலத்திலிருந்தே தேயூர் காணாபத்யப் பிரிவினரின் முக்கியமான வழிபாட்டுத்தலமாக இருந்த போதிலும், தற்போதுள்ள ஆலயம் மோர்யா கோசாவியாலோ அல்லது அவரது வழித்தோன்றல் 

தரணீதராலோ (Dharanidhar) கட்டப்பட்டதுதான். ஆலயத்தின் சரியான காலம் தெரியவில்லை.

மோர்யா கோசாவி தன் சொந்த ஊரான சின்ச்வாட்க்கும்(Chinchwad) மோர்கானு(Morgaon)க்கும் பயணிக்கும் போதெல்லாம் இடையில் ஒவ்வொரு பௌர்ணமியை அடுத்த சதுர்த்திக்கும் தேயூருக்கு வருவது வழக்கம். .தன்னுடைய குருவின் கட்டளைப்படி மோர்யா 42 நாட்கள் தீவிர உண்ணாவிரத நோன்பிருந்து தெய்வீகச் சக்திகளைப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. கணபதி அவர் முன் புலி ரூபத்தில் தோன்றிஸித்திவழங்கியதாகச் சொல்லப்படுகிறது.
தேயூர் ஆலயத்தையும் பிற காணாபத்ய ஆலயங்களைப் போலவே பதினெட்டாம் நூற்றாண்டின் மராத்திய பேஷ்வா அரசர்கள் ஆதரித்தனர். பேஷ்வா அரசர்கள் குல தெய்வமாகக் கணபதியை வழிபட்டு வந்தனர். ஆகவே கணபதியின் ஆலயங்களுக்கு  அதிலும் குறிப்பாக மோர்கான் மற்றும் தேயூர் ஆலயங்களுக்கு நிறையப் பணமாகவும் நிலமாகவும் தானம் வழங்கி ஆலயங்களை விரிவுபடுத்தவும் செய்தனர்.

பேஷ்வா மாதவராவ் – I, ஒவ்வொரு போருக்கு முன்னரும் போரில் வென்ற பின்னர் நன்றி தெரிவிக்கும் பொருட்டும் ஆலயத்திற்கு வருகை புரிவது வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் தன் வாழ்நாளின் கடைசிக் கட்டத்தை கோவிலின் பிரகாரத்திலேயே கழித்தார். மிகவும் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் போது வினாயகனின் மனம் குளிர வருடம் முழுக்கப் பாலாபிஷேகம் செய்வித்தார். பேஷ்வா பாஜி ராவ் – I இன் சகோதரரும், படைத்தளபதியுமான சிம்மாஜி அப்பா(Chimaji appa), போர்த்துகீசியரிடமிருந்து வாசை கோட்டை (Vasai Fort) யைக் கைப்பற்றினார். போர்த்துகீசியருடனான போரில் தோவியடைந்த அவர்களிடமிருந்து கொள்ளைப் பொருளாகக் கைப்பற்றிய பெரிய ஐரோப்பிய மணி கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.  அதனை இன்றும் ஆலயத்தில் காணலாம். மாலை நான்கு மணி சுமாருக்கு தரிசனம் முடித்து விட்டு அடுத்த திருக்கோவிலை நோக்கி மன நிறைவுடன் பயணத்தைத் தொடர்ந்தோம்.








Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)