கண்டதும் களித்ததும் பகுதி - 4 (புனே பயணக் கட்டுரைகள்)
சித்தடெக் (Siddhatek) - சித்திவினாயக் ஆலயம், வேழமுகத்தோன் ஞானக்கடவுள்
வினாயகனுக்கானதோர் அழகான திருக்கோவில். மகாராஷ்டிர மாநிலத்தின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ஒரே
அஷ்ட வினாயகர் திருக் கோவில் இது மட்டும் தான். நாங்கள் அஷ்ட வினாயகர் புனிதப்பயண
வரிசையில் மோர்கான் - மயூரேஷ்வர்க்கு (Moregaon - Mayareshwar) அடுத்து இரண்டாவதாகச்
சென்றது இத் திருத்தலத்திற்கே.
பீமா (Bhima) நதியின் வடகரையில் அகமது நகர் மாவட்டத்தின்
கர்ஜெட் (Karjat) தாலுகாவில் உள்ள சித்தடெக் கிராமத்தில்
இவ்வாலயம் அமைந்துள்ளது. ஆலயத்திலிருந்து பத்தொன்பது கிலோமீட்டர் தொலைவில் டோண்ட் (Daund) ரயில் நிலையம் உள்ளது. பீமா நதியின் தென்கரையில் அமைந்துள்ள புனே
மாவட்டத்தின் கிராமமான ஷிராபூரிலிருந்து (Shirapur) புதியதாகக் கட்டப்பட்ட பாலத்தின் மூலமாகவோ
அல்லது படகு மூலமாக பீமா ஆற்றின் குறுக்காகப் பயணித்தோ ஆலயத்தை அடைய முடியும்.
கிராமத்தின் மையப்பகுதியிலிருந்து சுமார்
ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கருவேல மரக்காடு சூழ்ந்துள்ள இவ்வாலயம் சிறு குன்றின்
மீது அமைந்துள்ளது.
இத்தலத்தின் வினாயகரைத்
திருப்திப்படுத்தி மனங்குளிரச் செய்ய, வினாயகரை வழிபடும்
பக்தர்கள் சரியான பாதை இல்லாத முட்புதர் மண்டியிருக்கும் பாதையில் ஏழு முறை குன்றைச் சுற்றிக்
கிரிவலம் வந்து பிரார்த்திப்பது வழக்கம்.
பேருந்து நிற்கும் இடத்திலிருந்து ஆலயம்
செல்லும் வழி முழுவதும் கூரையுடன் கூடியஅருமையான சிமெண்ட் பாதை போடப்பட்டுள்ளது. பாதையின் தொடக்கத்திலிருந்து வழி
முழுவதும் நிறைய யாசகர்கள். சித்திடெக்கை, மோர்கானுக்கு அடுத்து இரண்டாவது திருத்தலமாக தரிசிக்க
வேண்டும் என்றாலும் புனிதப்பயணம் மேற்கொள்ளும் பெரும்பாலான யாத்ரீகர்கள் பயணத்தின்
வசதி கருதி மூன்றாவதாகச் செல்ல வேண்டிய தேயுர் (Theur) க்கு மோர்கானுக்குப் பின்
இரண்டாவதாக வந்து விட்டு, அப்புறம் சித்தடெக்கிற்கு வருவது வழக்கம். ஆனால் நாங்கள் சென்ற பேருந்து புனிதப் பயண
ஐதிகப்படியான வரிசைக்கிரமத்தைக் கடைப்பிடித்தது மகிழ்ச்சியளித்தது.
எங்கள் பேருந்தில் பயண வழிகாட்டியாக
தினேஷ் என்ற இளைஞர் வந்திருந்தார். பேருந்தின் நாற்பது பயணிகளில் நாங்கள் ஐவர் மட்டுமே
ஹிந்தியோ, மராத்தியோ அறியாதவர்கள். முடிந்த அளவு எங்களுக்குப் புரியும்
வண்ணம் எளிமையான குறைந்தபட்ச ஆங்கிலச் சொற்களால் தலங்களைப் பற்றிய விளக்கம்
அளித்தார்.
பொதுவாக ஸ்ரீ கணேசரின் துதிக்கை
இடப்புறமாகவே திரும்பி இருக்கும். அதாவது பெரும்பாலும் இடம்புரி வினாயகராகவே காட்சியளிப்பார். அஷ்ட வினாயகர் தலங்களில் இந்த ஒரு
தலத்தில் மட்டுமே வினாயகர் வலம்புரி வினாயகனாக அமர்ந்திருக்கிறார். வலம்புரி வினாயகரை “ஸித்தி” வினாயகர் என்று அழைப்பது ஐதிகம். வலம்புரி வினாயகரை வழிபாட்டில்
திருப்திப்படுத்துவது மிகவும் கடினம் என்பார்கள். அவ்வாறு அவர் திருப்தி அடையும்படி பணிந்து
வணங்கி வருபவர்களுக்கு நிச்சயமாகச் “ஸித்தி”
அளிப்பார். அதாவது எதிலும் வெற்றியைத்தந்து சாதனை
படைக்கும் அமானுஷ்ய வல்லமையை வழங்குவார். மிகச் சக்தி பொருந்திய தெய்வம் உறைவதால் இத்தலம்
கவனப்படுத்தும் அல்லது விழிப்பூட்டும் தலம் என்ற பொருளில் ஜாக்ருத் ஷேத்ரா (jagrut kshetra) என்றழைக்கப்படுகிறது.
முத்கல புராணத்தில் (Mudgala
Purana) படைப்பின் தொடக்கம் குறித்துச்
சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீ மகாவிஷ்ணு பாற்கடலில் யோக
நித்திரையில் இருக்கும்போது அவரது நாபியிலிருந்து கிளைத்து வந்த தாமரையில்
படைப்புக் கடவுள் பிரம்மன் அவதரித்தான். பிரம்மன் அண்ட சராசரத்தைப் படைக்கத் தொடங்கியதும், மகாவிஷ்ணுவின்
காதுகளின் அழுக்கிலிருந்து மது, கைடபர் என்ற இரண்டு
அசுரர்கள் புறப்பட்டுப் பிரம்மனின் படைப்புத் தொழிலைச் செய்ய விடாமல் தொந்தரவு
செய்யத் தொடங்கினர்.
யோக நித்திரையிலிருந்து மஹா விஷ்ணுவை
இவ்விரு அசுரர்களும் எழுப்பி விடவும் எரிச்சலடைந்த மஹா விஷ்ணு அசுரர்களுடன்
போரிட்டார். இருப்பினும் மது, கைடபரை
வெல்ல முடியவில்லை. அசுரர்களை வெல்ல இயலாமைக்கான காரணத்தை
சிவபெருமானிடம் வினவ, சிவ பெருமான் விக்னங்களை நீக்கும்
விக்னேஷ்வரை பிரார்த்திக்காமல் போரைத் துவங்கியதே முழுமுதற் காரணம் என்று பதில்
அளித்தார். தன் தவற்றை உணர்ந்த மஹாவிஷ்ணு சித்திடெக்கில்
பரிகாரம் செய்தார். மஹா மந்திரமான “ ஓம்
ஸ்ரீ கணேஷாய நமஹ” சொல்லி கணபதியைத் துதிக்க, மனம் குளிர்ந்த கணேசரும் மஹா விஷ்ணுவுக்கு அருள்பாலித்து பல ஸித்திகளை
அதாவது வெல்லும் வல்லமையை வழங்கினார். வல்லமை ஸித்திக்கப்
பெற்ற விஷ்ணு அசுரர்களுடன் போர் புரிந்து அழித்தார். மஹாவிஷ்ணு
ஸித்திகள் கைவரப் பெற்ற இத்தலம் அதன் பின்னர் “சித்திடெக்” என்றழைக்கப்படலாயிற்று.
இது கருங்கல்லால் கட்டப்பட்ட வடக்குப் பார்த்த ஆலயம். கருங்கல்லால் கட்டப்பட்ட சபா மண்டபம் பிற்காலத்தில் ஆலய விரிவாக்கத்தின்
போது கட்டப்பட்டது. பிரதான சன்னதியின் படிக்கட்டின் மேல்
சிறிய அசுரத்தலை சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. முரசுக் கூடமும்
(Nagarkhana) ஆலயத்தில் உள்ளது.கர்ப்பக்கிரகம் 15 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்டது. ஆலயம் குவிமாடக்
(DOME) கூரையை உடையது. எல்லா அஷ்ட வினாயகர் தலங்களைப் போலவே
இத்தலத்திலும் வினாயக மூர்த்தி சுயம்பு மூர்த்தியே. கர்ப்பக்கிரகத்திற்குப்
பக்கவாட்டில் பித்தளையால் செய்யப்பட்ட சிற்பங்களாக மஹாவிஷ்ணு இருப்பிடமான
வைகுண்டத்தின் துவாரபாலகர்களான ஜய – விஜயர்
மையத்தில் உள்ள வினாயகருக்குக் காவலிருக்கின்றனர். மைய மூர்த்தி வினாயகர் ஸித்தியுடன் குறுக்குக்கால்
போட்டுக் கொண்டு அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
பெரும்பாலும் செந்தூரப்பசை பூசப்பட்ட
ஸித்தியின் உருவம் மலர் மாலைகளுக்குள் மறைந்தவாறே காணப்படுகிறது.
துதிக்கை வலப்புறம் திரும்பிய
வினாயகரின் உருவச்சிலைக்குப் பித்தளைக் கவசம் அணிவிக்கப்பட்டு
உள்ளது. கருவறையில் சிவ பஞ்சாயாதனம் ஏற்பாடு காணப்படுகிறது. சிவ பஞ்சாயாதனம்
என்பது இந்து மதத்தின் நான்கு பெரிய சம்பிரதாய பூஜா முறைகளில் ஒன்று. இது ஸ்மார்த்த
சம்பிரதாய பூஜா முறையாகும். பூஜா பீடத்தில் படைக்காயில் (DICE) ஐந்தாம் எண் போல் சிவபெருமானை
நடுவில் கொண்டு சுற்றி நான்கு மூலைகளிலும் இஷ்ட தெய்வம் அல்லது கணேசர்அல்லது கார்த்திகேயன்,
மஹா விஷ்ணு, பார்வதிதேவி மற்றும் சூரியன் ஆகிய மூர்த்திகளை வைத்துப் பூஜிக்கும் முறை.
கோவிலில் அம்பாளுக்கும் சன்னதி உள்ளது.
மஹாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்ட மூல ஆலயம்
காலப்போக்கில் அழிந்துவிட்டதாகவும், பின்னாளில் இடையர் ஒருவருக்கு பழைய ஆலயமும் ஸித்தி
வினாயகரின் மூர்த்தமும் கண்ணுக்குப் புலப்பட்டதாம். வினாயக மூர்த்தியை அந்த இடையர்
வணங்கி வர, அதனை அறிந்த பிறரும் அங்கு வந்து வழிபடத் துவங்கினார்கள் என்று சொல்லப்படுகிறது.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த “இந்தோரின்
தத்துவ அரசி” (Philosopher Queen of Indore) என்ற அகல்யாபாய் ஹோல்கர் (Akalya bai
Holkar) பல புதிய இந்து ஆலயங்களைக் கட்டியும்,
பழமையான ஆலயங்களைப் புணரமைத்தும் திருப்பணிகள் செய்து வந்தார். நாம் தற்போது காணும்
இக் கோவிலையும் அவரேதான் கட்டியுள்ளார்.
பேஷ்வா ஆட்சியாளர்களின் படையில் இருந்த அதிகாரி,
சர்தார் ஹரிபந்த் பட்கே (Sardar Haripant
Phadke) ஆலயத்தை தினமும் இருபதோரு முறை இருபத்தோரு தினங்கள் வலம் வந்து வினாயகனை
வேண்டித் துதித்து, இழந்த தலைமை தளபதி பொறுப்பை மீண்டும் அடைந்தாராம்.பிரார்த்தனை நிறைவேறிய
காரணத்தால் முரசுகளை(Nagaras) வைக்க ஒரு கூடத்தையும், ஆலயத்தின் முக்கிய நுழைவாயிலுக்குப்
பாதையும் அமைத்ததாகத் தெரிகிறது. பரோடாவைச் சேர்ந்த நிலக்கிழார் மைரல்(Mairal) கட்டிய
ஆலயத்தின் வெளிச் சபா மண்டபம் 1939 ஆம் ஆண்டில் சிதிலமடைந்தது.
இது 1970 ஆம் ஆண்டில்
திரும்பக் கட்டப்பட்டது. வெளிச் சபாமண்டபத்தை அடையச் சில படிகள் ஏறி உள்ளே செல்ல வேண்டும். தரிசனத்திற்கு அதிகம் சிரமப்படவில்லை. மோரேஷ்வர்
தரிசனம் முடித்துப் பயணித்து சித்தடெக்கை அடையும் போது நண்பகல் ஒரு மணி ஆகி இருந்தது.
ஸித்தி வினாயகரை தரிசித்து விட்டு மதிய உணவுக்குப் பின்னர் தேயூர்(THEUR) சிந்தாமணி
வினாயகரைக் காணப் பயணத்தைத் தொடர்ந்தோம்.
வளரும்…
தரிசித்தோம்.
ReplyDeleteநமது குல தெய்வம் சித்தி விநாயகர்.
ஓம் மஹா கணபதியே நமஹ.
Delete