கண்டதும் களித்ததும் பகுதி - 3 (புனே பயணக் கட்டுரைகள்)


கட்டுரைத் தொடரின் சென்ற பகுதி - 2 ல் நாம் பார்த்த மோர்யா கோசாவி (MORYA GOSAVI) அல்லது மோராயா கோசாவி (MORRAYA GOSAVI) என்ற மோரோபா கோசாவி (MORABA GOSAVI) இந்து மதத்தின் காணாபத்யப் பிரிவில் அதிகமாக அறியப்பட்ட துறவியாவார். இவரது காலம் பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வரை என்று கணிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மோர்கான் கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற வினாயகர் ஆலயத்தில்தான் அவர் வழிபட்டு வந்தார் என்றும், ஆனால் வழிபாடுகள் செய்ய பல வகையான இடையூறுகள் ஏற்பட்டது பற்றியும் அறிந்து கொண்டோம். அதன் விளைவாக வினாயகர் தான் புனேவிற்கு மிக அருகில் அமைந்துள்ள சின்ச்வாட் (Chinchwad) க்கு வந்து விடுகிறேன் என்று கோசாவியிடம் சொன்னதால், அவரும் சின்ச்வாடில் ஒரு வினாயகர் ஆலயத்தை நிர்மாணித்து அங்கேயேசஞ்ஜீவன சமாதிஅடைந்தார். இன்றைக்கும் சின்ச்வாட்டில் அமைந்துள்ள அவரது ஜீவ சமாதி பல கணேச பக்தர்களை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.





Picture Courtesy : wikipedia

பிம்ரி- சின்ச்வாட் நகராட்சி (PIMPRI-CHINCHWAD MUNICIPAL CORPORATION) இவரது காலத்தை 1330 முதல் 1556 வரை என்று பதிவு செய்துள்ளது. இவரது திருமணம் 1470 இல் நடைபெற்றதாகவும் 1481 இல் மகன் பிறந்ததாகவும் சமாதியானது 1651 என்றும் சொல்லப்படுகின்றது. இவரை ஹுமாயூன் (1508 -1556), ஷாஜி (1594 -1665) மற்றும் ஷிவாஜி மஹராஜ் (1627 -1680) ஆகியவர்களுடன் தொடர்புபடுத்திப் பல கதைகள் கூறப்படுகின்றன . அவற்றில் சில சென்ற பகுதியில் சொல்லப்பட்டிருந்தது மோர்யா கோசாவியின் நினைவாலயத்தில் காணப்படும் கல்வெட்டுக் குறிப்புகளின் மூலம் ஆலயப்பணிகள் 1658 – 1659 இல் தொடங்கப்பட்டதாகத் தெரிகிறது. மோர்யா கோசாவியின் மகன் சிந்தாமணி, ஸ்ரீ கணேசரின் வாழும் அவதாரமாக வணங்கப்பட்டதாகவும்தேவ்” (DEV) என்று அழைக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது. சிந்தாமணிக்குப் பின்னர் அவரது வம்சாவளியில் தொடர்ந்து ஆறு தேவ்கள் இருந்ததாகவும் தெரிகிறது.


 காணாபத்யப் பிரிவினரின் முழு முதற்கடவுள் ஸ்ரீகணபதியே மற்றும் முதற் கோவில் மோர்கான் ஆலயமே. காணாபத்ய பிரிவினருக்குக்கான கணபதியின் மிக முக்கியமான மூன்று ஆலயங்களில் பூலோகத்தில் அமைந்திருப்பது மயூரபுரி என்ற மோர்கான் மட்டுமே. மற்ற இரண்டில் ஒன்று வானுலகில் கைலாசம் மற்றது ஆதி சேஷன் வாழும் பாதாள லோக அரண்மனை. அதாவது மோர்கான் தொடக்கமும் முடிவும் அற்ற காணாபத்ய ஆலயம். பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும் போது ஸ்ரீ கணேசர் இங்கு வந்து யோகநித்திரை கொள்வார் என்பது இப் பிரிவினரது நம்பிக்கை. ஆகவே இத்தலம் அவர்களுக்குக் காசியைப் போல் அத்தனை புனிதமானது. இத் திருத்தலம் பேஷ்வா அரசர்களாலும், மோர்யா கோசாவியின் சந்ததியினராலும் பேணிக் காக்கப்பட்டதுகட்டப்பட்ட காலம் சரியாகத் தெரியவில்லை. ஊரின் நடுவில் அமைந்த நான்கு வாயில்களைக் கொண்டு கருங்கல்லால் கட்டப்பட்ட இக் கோவில் பாமினி சுல்தான்கள் (BAHAMANI  REIGN) காலத்தைச் சேர்ந்தது என்றும் பீடார் சுல்தானின்(BIDAR SULTAN) அரசவையைச் சேர்ந்த கோலே (Gole) ன்பவரால் கட்டப்பட்டது என்ற வேறொரு கருத்தும் சொல்லப்படுகிறது. ஆலயத்தின் நாற்புறங்களிலும் நான்கு ஸ்தூபிகள் அமைந்து சற்றுத் தொலைவிலிருந்து நோக்க ஒரு மசூதியைப் போலவே காட்சியளிக்கிறது


இது முகலாயர் காலத்துப் படையெடுப்புகளின் போது தாக்கப்படாமல் இருப்பதற்காகச் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு. ஆலயத்தைச் சுற்றி ஐம்பது அடி உயர மதில் சுவரும் உள்ளது.

சாதாரணமாக சிவாலயங்களில் சன்னதிக்கு முன்பாக நந்தி இருப்பது வழக்கம். ஆனால் இத்திருக்கோவில் வாசலில் பெரிய நந்தி காணப்படுகிறது. ஏதோ ஒரு சிவாலயத்திற்கு வண்டியில் நந்தி தேவர் சிலையை ஏற்றிச் செல்லும் வழியில் இந்த இடத்தில் வண்டி உடைந்து நந்தி சிலை இறக்கி வைக்கப்பட்டதுவண்டியை சரி செய்த பின்னர் நந்தியை மீண்டும் வண்டியில் ஏற்ற முயன்ற போது நந்தியை தற்சமயம் இருக்கும் இடத்தை விட்டு எடுக்கவே முடியாமல் போனது என்று சொல்லப்படுகிறது. வினாயகப் பெருமானுக்கான மூஞ்சுறு சற்றே பெரிய அளவில் நந்திக்கும் முன்பாக அமைந்துள்ளது.


படம்: ஸ்ரீ மயூரேஷ்வர் அல்லது மோரேஷ்வர்.
நன்றி: https://www.trawell.in
இவ்வாயத்தில் ஸ்ரீகணேச மூர்த்தி சிந்துராசுரனை வதம் செய்யும் பொருட்டு மயில் வாகனத்தில் மயூரேஷ்வர் ஆக அமர்ந்திருக்கிறார். மிதிலாவின் அரசன் சக்கரபாணிக்கும் உக்ராவிற்கும் பிறந்தவன் சிந்துராசுரன். உக்ரா சூரிய மந்திர உபதேசம் பெற்றவள். மகாபாரதத்தில் குந்தியைப்போல சூரிய பகவானின் சூரிய மந்திரத்தின் சக்தியை விளையாட்டுப் போக்கில் பரிட்சித்துப் பார்க்க நினைத்து உக்ரா மந்திரத்தை உச்சாடனம் செய்யவும் கருவுற்றாள். கருவின் வெம்மையைத் தாங்க முடியாமல் கருவை சமுத்திரத்தில் கை விட்டுச் சென்றாள். மரத்தை வைத்தவன் தண்ணீர் உற்ற வேண்டுமல்லவா? கைவிடப்பட்டு நிர்கதியாக இருந்த கருவுக்குத் தகப்பனான சூரியன் முழுவதும் அமிர்தம் நிரம்பிய கலசம் ஒன்றை வரமாக அளித்தான். சமுத்திரத்தில் பிறந்தவன் என்பதால் சிந்து என்று பெயரிட்டழைக்கப்பட்டான். அமிர்தக் கலசம்  எந்தச் சேதமும் அடையாமல் இருக்கும் வரையில் மட்டுமே சிந்து அல்லது சிந்துராசுரன் அதிலிருந்து அமிர்தத்தைப் பருக முடியும் தந்தையான சூரியன் எச்சரித்திருந்தான். கலசத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தால் சிந்துராசுரன் கலசத்தையே விழுங்கி விட்டான். வயிற்றில் அமிர்தக் கலசம் இருக்கும் தைரியத்தில் மூவுலகையும் பயமுறுத்தி தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தத் துவங்கினான். தேவர்களும் முனிவர்களும் ஸ்ரீகணேசரிடம் முறையிட, வினாயகர் சிந்துவின் படையுடன் போரிட்டு வென்றார். சிந்துராசுரனின் தளபதி கமலாசுரனை கொன்று மூன்று துண்டுகளாக்கி, சிந்துராசுரனின் வயிற்றைக் கிழித்து அமிர்த கலசத்தை வெளியில் எடுத்துக் காலி செய்து அவனைக் கொன்றார்.

வினாயகரின் துதிக்கை இடப்புறமாகத் திரும்பிய நிலையில் தலையைச் சுற்றித் தலைக்கு மேலாக நாகராஜன் குடை பிடித்திருக்க தேவியர்கள் சித்தியும் ரித்தியும் இருபுறங்களிலும் நின்றிருக்க அருள்பாலிக்கிறார். நம்மூரில் சித்தி, புத்தி என்று சொல்லப்படும் ஸ்ரீகணேசரின் தேவியர்களை இங்கு சித்தி, ரித்தி என்றழைகிறார்கள்.

பிரம்மாவால் உருவாக்கப்பட்ட வினாயகரின் அசல் மூர்த்தி சிறிய அளவிலானது. இம் மூர்த்திக்கு சிந்துராசுரனின் வதத்திற்கு முன்பும் பின்புமாக இரு முறை குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள்.  இது மண், இரும்பு, வைரம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது என்றும் அதனை இத்திருத் தலத்திற்கு வந்த பாண்டவர்கள் தாமிரத்தகட்டில் பொதிந்து தற்சமயம் வழிபடப்படும் வினாயகரின் மூர்த்திக்குப் பின்னால் வைத்துள்ளனர் என்று நம்பப்படுகிறது.
வளரும்











Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)