காச நோய்க் கிருமியை அழிக்க ஒரு வருடத்திற்கு 200 கோடி தேவை




ஆண்டு தோறும் இரண்டு பில்லியன் (இருநூறு கோடிடாலர் முதலீடு செய்ய உலகநாடுகள் முன்வந்தால் வரும் 2045 ஆம் ஆண்டுக்குள் காச நோயை (Tuberculosis) முற்றிலுமாக ஒழித்துவிட  இயலும். 


வேறெந்த ஒரு தொற்று நோயைக் காட்டிலும் அதிகமானோர் இறப்பதற்குக் காரணமாக அமைவது காச நோயே. ஆண்டுதோறும் காச நோயால் உலகில் சுமார் 1.6 இலட்சம் மக்கள் பலியாகின்றனர் என்பது மிகவும் வேதனையான கவலை தரும் செய்தி. இருப்பினும் எதிர்உயிரி மருந்துகளால் காசநோயைக் குணப்படுத்த முடியும் என்பதும் தேவையான அளவு முயற்சி எடுக்கும் பட்சத்தில் நோய் பரவுதலைக் கட்டுக்குள் வைத்து மேற்கொண்டு சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கவும் முடியும் என்பது சற்றே ஆறுதல் தருகிறது.

பயனுள்ள சிகிச்சை முறைகள் மற்றும் நோய்த்தடுப்புச் செயல் திட்டங்களின் வாயிலாக இன்னும் முப்பதே ஆண்டுகளில் காசநோயை முற்றிலுமாக அழிக்க முடியும் என்று ஹவாய் பல்கலைக் கழகத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.




படம்: காச நோய்க் கிருமி


 இத்தகைய முயற்சிக்கான நிதித்தேவைகளுக்காகச் செய்யப்பட வேண்டிய ஒட்டு மொத்த முதலீடு ஆண்டொன்றிற்கு இரண்டு பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும்.  

காசநோய் அபாயகரமானது என்றாலும் குணப்படுத்தக் கூடியது.  
நுரையீரலைத்(Lung) தாக்கும் மைகோபாக்டீரியம் டியூபர்கொலாசிஸ் (Mycobacterium Tuberculosis) என்ற நுண்ணுயிரியால் (Bacteria) காசநோய் ஏற்படுகிறது. காற்றின் வழியாக இந்த நுண்ணுயிரி ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு மிக எளிதில் விரைவாகத் தொற்றக் கூடியது. அதுமட்டுமல்லாது முறையான சிகிச்சை அளிக்கப்பட்டாவிட்டால் இந்நோய் நோயாளியின் உயிரைப் பறித்து விடக் கூடிய பேராபத்தும் உண்டு. சிகிச்சையின் போது எதிர்உயிரி (Antibiotic) மருந்துகளை நீண்டகாலத்திற்கு பொதுவாக ஆறு மாத காலத்திற்கு உட்கொள்வதும் அவசியம்.
காசநோய்க்குக் காரணமான பாக்டீரியா பெரும்பாலும் நுரையீரலில் வளரும். அப்போது கீழ்க்கண்ட அறிகுறிகளை ஏற்படுத்தும்.
1) மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வார காலத்திற்கு மோசமான கடும் இருமல் தொடர்ந்து காணப்படுதல்
2) மார்பில் வலி
3) இருமும் போது எச்சிலில் இரத்தம் அல்லது சளிக்கோழை வெளிப்படுதல்
இவற்றைத் தவிர காணப்படும் பிற அறிகுறிகள்
1) பலவீனமும் சோர்வும்
2) உடல் நிறை குறைதல்
3) பசியின்மை
4) குளிர்தல்
5) காய்ச்சல்
6) இரவுநேரத்தில் வியர்த்தல்
மனோவா(Manoa) வில் அமைந்துள்ள ஹவாய்(Hawaii) பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரத்துறைப் பிரிவின் உதவிப் பேராசிரியரும், காச நோய் குறித்த உலகின் முன்ணணிப் பெண் நிபுணர்களில் ஒருவருமான விக்டோரியாஃபேன் (Victoria Fan), தேவையான அளவு கண்காணிக்கப்பட்டாலே இந்த தொற்றுநோயை முற்றிலுமாக ஒழித்து விட இயலும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரும் அவரது சகாக்களும் லான்செட் குளோபல் ஹெல்த்” (Lancet Global Health) என்ற பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் மேற்சொன்ன 2045 ஆம் ஆண்டிற்குள் காச நோய் ஒழிப்பு என்ற  இலக்கை அடைய உலக நாடுகளின் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை உரைத்துள்ளனர்.
புவிக்கோளத்தின் வளங்களை நேரடியாகப் பயன்படுத்தி காசநோய் தொற்றிய மக்களை குணப்படுத்துதல் மற்றும் காசநோய் பரவாமல் தடுத்தல் வாயிலாக நாளடைவில் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பதையும் மிக பெரும் பொருட்செலவையும் ஒருங்கே குறைக்க முடியும்.

பிரச்சனைக்கான சரியான தீர்வு என்பது ஆரம்ப கட்டத்திலேயே நோயைக் கண்டறிதலாகும். முறையான கண்டறிதலால் காச நோய் தாக்கிய நபர்களை காப்பாற்றும் வாய்ப்பு அதிகரிப்பது மட்டுமல்லாது நோய் தாக்காத நபர்கள் நோய் பாதிப்புக்கு உள்ளாவதையும் குறைக்க முடியும். இன்றைய தேதியில் உலகில் சுமார் முப்பத்தைந்து விழுக்காடு (35%) காச நோயாளிகள் கண்டறியப்படாமல் சிகிச்சை எதுவும் இன்றி இருப்பதாகத் தெரிகிறது.

ஆரம்ப கட்டத்தில் காச நோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல் பெரும் பொருட் செலவைத் தரும் என்றாலும் நோயைப் பரப்பும் இடங்கள் அறியப்பட்டு களையப்பட்ட பின்னர் செலவு பன்மடங்கு மிக வேகமாகக் குறைந்து விடும்.

காச நோயை ஒழிக்க எடுக்கப்படக் கூடிய முயற்சிகள் அதிக பொருட்செலவு பிடிப்பதாக இருந்தாலும் அத்தகைய செலவுக்கு உரிய பயனை நல்கக் கூடியதே. பொருளியல் கண்ணோட்டத்தில் இந்த காசநோய் ஒழிப்பை அணுகினாலும் கூட, நோயிலிருந்து மீட்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் அவரவர் துறை சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்குவார்கள் என்பது திண்ணம். காசநோய் குறித்த ஆய்வாளர்களின் கணிப்பின் அடிப்படையில் காச நோய் ஒழிப்பு குறித்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளில் செலவிடப்படும் ஒவ்வொரு டாலரும் அந்த நாட்டின் பொருளாதாரத்தில் பதினாறு டாலர்(16$) முதல் எண்பத்திரண்டு டாலர்(82$) லாபம் தரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது















இக் கட்டுரை 2019 ஜூன் மாத ஹெல்த் கேர் இதழில் வெளியானது.
நன்றி ஹெல்த் கேர்.





Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)