கண்டதும் களித்ததும். பகுதி - 2 (புனே பயணக் கட்டுரைகள்)


அஷ்ட வினாயகர் என்பது எட்டு கணேச மூர்த்திகளைக் குறிக்கிறது. அஷ்ட வினாயகர் யாத்திரை என்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமது நகர்,ரைய்காட் மற்றும் புனே மாவட்டத்தைச் சுற்றியுள்ள எட்டு பழமை வாய்ந்த வினாயகர் திருக் கோவில்களுக்கு மேற் கொள்ளும் புனிதப் பயணம் ஆகும். 
(1) மோரேஷ்வர் ஆலயம், மோர்கான்.
ஸ்ரீ மோரேஷ்வர் ஆலயம், மஹராஷ்ட்ரா மாநிலம் புனேமாவட்டத்தின் பாராமதி தாலுக்காவில் உள்ள மோர்கான் கிராமத்தில் கார்ஹா நதியை அடுத்து அமைந்துள்ளது. புனே நகரிலிருந்து சுமார் ஐம்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது. மராத்தி மொழியில் மோர்(MORE) என்றால் மயில், கான்(GAON) என்றால் கிராமம்.  முன்னொரு காலத்தில் இக் கிராமத்தில் மயில்கள் நிறைய இருந்ததாகவும் அதனால் இப் பெயர் பெற்றதாகச் சிலராலும், இக் கிராமத்தின் நில அமைப்பு மயிலைப் போன்று இருந்ததாகவும்  அதனால் இத் தலம் மோர்கான் என்ற பெயர் பெற்றதாகச் சிலராலும் இருவிதமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது இங்கு மயில்கள் எதுவும் காணப்படுவதில்லை.
அஷ்ட வினாயகர் புனிதப் பயணம் இவ் வாலயத்தில் துவங்கி பிற ஆலயங்களில் வழிபாடு செய்து முடித்த பின்னர் கடைசியாக இங்கு வந்தே நிறைவு செய்யப்படுகிறது. புனிதத் தல யாத்திரையில் இத் தலம் மிக முக்கியமானது. இந்த ஆலயம் காணாபத்யத் துறவி மோர்யா கோசாவியுடன் தொடர்புடையது.



Picture courtesy : wikipedia

ஷண்மதம் என்றால் சமஸ்கிரத்தில் ஆறு பிரிவுகள் என்று பொருள். சிவன், விஷ்ணு, சக்தி, கணபதி,ஸ்கந்தன் மற்றும் சூரியனை முழு முதற் கடவுளாக வழிபடும் தனித்தனியான பிரிவுகளே இவை. எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் தனது அத்வைதத் தத்துவக்கருத்தைப் பரப்பி  மேற் சொன்ன ஆறு பிரிவுகளிலும் உள்ளே உறைந்திருப்பது ஒரே பரம்பொருள் பிரம்மம்தான் என்ற அடிப்படையில் இவற்றை ஒன்றிணைத்தார். இந்த ஆறு பிரிவுகளுமே பிரம்மத்தின் ஆறு வகையான புற வெளிப்பாடுகளே என்பது அவரது சித்தாந்தம். இக்கருத்தை ஏற்று வழி நடப்பவர்கள் ஸ்மார்த்தர்கள்.

மோர்யா கோசாவியினைப் பற்றிப் பேசப்படும் சில தகவல்களைக் காண்போம்.

மோர்யாவின் பிறப்பு வளர்ப்பு பற்றிய கதைகளுக்கும் பஞ்சமில்லை.
ஒரு கதைப்படி மோர்யா கர்நாடக மாநிலம் பீடாரில் பிறந்தவரென்றும், குடும்பத்திற்கு ஆகாதவன் என்று அவரது தந்தையார் கருதியதால் குடும்பத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்டார். அதனால் அவர் பக்கத்து மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள மோர்கானுக்கு வந்தடைந்தார். மோர்கானில் உள்ள கணபதியால் கவரப்பட்டார். பின்னர் மோர்கானிலிருந்து எண்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள சின்ச்வாடில் குடியேறினார் என்று சொல்லப்படுகிறது.


வேறு ஒரு கதைப்படி புனேயைச் சேர்ந்த பக்தி மிக்க ஏழை தம்பதியின் மகன் என்றும், சந்தான பாக்கியம் இல்லாத தம்பதி ஸ்ரீ கணபதியை வேண்டியதால் கணபதியின் அருளால் பிறந்தவர் என்றும், மோர்யா பிறந்த பின்னர் அக் குடும்பம் சின்ச்வாட்டிலிருந்து நாற்பது மைல் தூரத்தில் உள்ள பிம்பிள் (PIMPLE) என்ற இடத்திற்குக் குடிபோனதாகவும், பெற்றோரின் மறைவுக்குப் பின்னர் மோர்யா சின்ச்வாட் அருகில் உள்ள தத்தவாடே(TATHAVADE) க்குச் சென்றார் என்றும் சொல்லப்படுகிறது இருப்பினும் இரண்டு கதைகளிலும் பொதுவான அம்சம் அவர் ஸ்ரீ கணபதியை வணங்கும் பொருட்டு மோர்கான் ஆலயத்திற்குத் தவறாமல் செல்பவர் என்பதுதான்.

மூன்றாவதாக அறியப்படும் கதையில் மோர்யாவின் தந்தை பட் ஷாலிக்கிராமும் (BHAT SHALIGRAM), அவரது மனைவியும் பீடாரிலிருந்து மோர்கானுக்குக் குடியேறினர். அவர்கள் மோர்கான் கணபதியை வேண்ட, கணபதி அருளால் மோர்யா பிறந்தார். சில காலத்திற்குப் பின் மோர்யா உடல் நலம் மோசமாகப் பாதிக்கப்பட மீண்டும் அவர்கள் கணேசனைத் துதிக்கவும், நாராயண் பாரதி (NARAYAN BHARATI) என்றகோசாவி (அர்ச்சகர்/பூசாரி) மருந்து தந்து குணப்படுத்தி உபதேசமும் செய்வித்தார். அந்த நன்றிக்கடனுக்காக ஷாலிக்கிராம்பட் டின் குடும்பம் கோசாவி என்ற பெயரைத் தங்கள் குடும்பப் பெயராக வரித்துக் கொண்டனர். இதனாலேயே மோர்யாவும் மோர்யா கோசாவி என்று அழைக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.

மோர்யா கோசாவியைப் பற்றிப் பல கதைகள் சொல்லப்படுகிறது. அத்தகைய கதை ஒன்றில் வினாயக சதுர்த்தியன்று மோர்கான் ஆலயத்தில் கூட்டம் உள்ளூர்மக்களாலும் மற்றும் பணம்படைத்த பிங்க்ளே குடும்பத்தாராலும் நிரம்பி வழிந்தது. மோர்யா கோசாவியால் ஆலயத்துக்குள் நுழைய இயலவில்லை. ஆகவே தன் காணிக்கையை ஆலயத்தின் அருகில் இருந்த மரத்தடியில் வைத்துச் சென்றுவிட்டார். ஏதோ அற்புதம் நிகழ்ந்து கோவிலில் இருந்த உள்ளூர் மக்களின் காணிக்கைகளும்,மரத்தடியில் இருந்த கோசாவியின் காணிக்கைகளும் இடம் மாறி இருந்தன. உள்ளூர்வாசிகள் கோசாவியை சூனியக்கார மந்திரவாதி என்று குற்றம் சுமத்திக் கோவிலில் நுழையத் தடை விதித்தனர். பிங்க்ளேயின் கனவில் தோன்றிய வினாயகர், தன் பக்தன் மோர்யாவை அவமரியாதை செய்தது மனவேதனையை அளிப்பதாகத் தெரிவித்தார். மோர்யாவிடம் பொருத்தருளக் கோரிய பிங்க்ளே, அவரை மீண்டும் மோர்கான் வரும்படி வேண்டினார். மோர்யா அதனை மறுத்து விட்டார்




Picture courtesy : wikipedia

வினாயகர் மோர்யாவுக்குக் காட்சி தந்து தானும் மோர்யாவுடன் சின்ச்வாட்டிற்கே வந்து விடுவதாகத் தெரிவித்தார். அதன்படி ஆற்றில் மோர்யா நீராடும் போது மோர்கானில் தான் வழிபட்ட உருவச்சிலைப் போன்ற ஒன்றைக் கண்டெடுத்தார். அச் சிலையை பிரதிஷ்டை செய்து , சிறியதோர் சன்னதி அமைத்து வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. இங்கு தமிழ் நாட்டில் அரசன் கணிகண்ணனைக் காஞ்சியை விட்டு நீங்குமாறு ஆணையிட்டதும், “நீயும் உன் பைநாகப் பாய் சுருட்டிக் கொள்என்ற பக்தனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு மாலவனும் காஞ்சியை விட்டு நீங்கிப் பாலாற்றங்கரை ஓரிக்கையில் தங்கிய கதையே உடனே என் நினைவுக்கு வந்தது.

மற்றோர் கதையில் மோர்கான் கிராமத்தின் தலைவர் மோர்யாவின் பக்தியால் ஈர்க்கப்பட்டு,  மோர்யா மோர்கனுக்கு வரும் போதெல்லாம் அவருக்குப் பால் தருவது வழக்கம். ஒரு முறை கிராமத்தலைவர் ஊரில் இல்லாதால், அவருக்குப் பதிலாக பார்வையற்ற ஒரு சிறுமி மோர்யாவிற்குப் பால் கொண்டு போனாள். மோர்யா தங்கியிருந்த வீட்டு வாசற்படியை மிதித்த அடுத்த கணமே அவளுக்குப் பார்வை கிடைத்தது. அவர் நிகழ்த்திய இந்த அதிசயம் மிகவும் பிரசித்தமானது

பின் நாளில் மராட்டியப் பேரரசை நிறுவிய சக்ரவர்த்தி சிவாஜியின் கண்களைக் குணமாக்கிய பெருமை அவருக்குக் கிடைத்தது. மக்கள் கூட்டத்திலிருந்து விலக வேண்டி மோர்யா தன் இருப்பிடத்தை சற்றுத் தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு மாற்றிக் கொண்டார். அதுவே தற்போதுள்ள சின்ச்வாட் நகரப் பகுதி. வயோதிகம் காரணமாக தினமும் மோர்கான் வர அவரால் முடியவில்லை. ஒரு சமயம் அவர் தாமதமாக வந்ததால் கோவில் நடை அடைக்கப்பட்டு விட்டது. கோவில் வாசலில் பசியாலும் சோர்வாலும் மயங்கி விழுந்துவிட்ட அவரது கனவில்  வினாயகர் தோன்றி, “ மோர்யா வருந்தாதே.  நீ தரிக்க வேண்டி ஆலயக் கதவைத் திறந்துள்ளேன். இப்போது என்னை வழக்க்கம் போல வழிபடு . இனிமேல் நான்  உன்னுடன் சின்ச்வாட்டில் வந்து வசிப்பேன். உனது பரம்பரையில் அடுத்துவரும் ஏழு தலைமுறை வாரிசுகளாக அவதரிக்கப் போகிறேன்என்று சொல்லி மறைந்தார்

Picture courtesy : TravAlok.
மோர்யா கண் விழித்துப் பார்க்க ஆலயம் திறந்திருக்கக் கண்டார். மஹாகணபதியை வழிபட்டு மகிழ்ந்தார். காலையில் ஆலயத்தின் கதவைத் திறந்த பூசாரிகள் ஆச்சரியத்தில் திகைத்துப் போனார்கள்.அவர்கள் முந்தினம் சாற்றிய வாடிய மலர் மாலைகளுக்குப் பதிலாகப் புத்தம் புது மலர் மாலைகளும் மலர்களும் ஸ்ரீகணபதியை அலங்கரித்திருந்தன. ஆனால் ஸ்ரீகணபதி கழுத்தில் அணிவித்திருந்த பொன்னாலான கழுத்தணியை காணவில்லை. காணாமல் போன கழுத்தணி மோர்யாவின் கழுத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மோர்யாவைச் சிறையில் அடைக்க மகாகணபதியின் உதவியுடன் வெளிவந்தார். மோர்யாவின் சின்ச்வாட் வீட்டில் கல் ஒன்று பூமியிலிருந்து ஒரு கூம்பு வடிவத்தில் வெளிப்பட்டது. அது ஸ்ரீ கணேசனின் சுயம்பு மூர்த்தி என்று அறிந்து கொண்ட மோர்யா அதற்காக ஆலயம் நிர்மாணித்தார்.

மற்றோர் கதையில் அவர் சிறைப்பிடிக்கப்பட்டது பற்றி எதுவும் கூறப்படவில்லை. மோர்கானில் இறை வழிபாட்டிற்கு நிறைய இடையூறுகள் உள்ளதை உணர்ந்து அவர் தத்தவாடே(TATHAVADE) அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு கணபதியை வழிபடச் சென்று விட்டார். ஒவ்வொரு பௌர்ணமியை அடுத்த சதுர்த்தி அன்றும் மோர்யா தேயூரில் (THEUR) சிந்தாமணி ஆலயத்திற்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். ஒரு முறை சின்ச்வாட்டிலிருந்து வந்திருந்த சிஷ்யகோடிகளின் கோரிக்கையை ஏற்று சின்ச்வாடிற்கு அருகில் உள்ள பாவனா (PAVANA RIVER) ஆற்றங்கரைக்குச் சென்றார். அங்கு தேயூரில் அவர் வழிபடும் சிந்தாமணி வினாயகர் தோன்றி மோர்யாவை திருமணம் செய்து கொள்ள ஆணையிட்டார். அதற்கிணங்க தேயூரில் வசித்து வந்த கோவிந்தராவ் குல்கர்ணியின் மகள் உமா அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார்.

மற்றோர் கதைப்படி, தன் குருவின் ஆணைப்படி மோர்யா நாற்பத்திரண்டு நாட்கள் தேயூரில் கடும் தவமிருந்தார். இக் காலகட்டத்தில்தான் அவரது தெய்வீகத் தன்மைகள் வெளிப்பட ஆரம்பித்தது என்று நம்பப்படுகிறது. தனது பெற்றோரின் மறைவுக்குப் பின்னர் மோர்கானிலிருந்து சின்ச்வாட்டிற்கு இடம் பெயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தேயூரில் தற்போதுள்ள கணநாதர் ஆலயம் மோர்யாவால் கட்டப்பட்டது.

வளரும்

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)