கண்டதும் களித்ததும் - பகுதி 11 ( புனே பயணக் கட்டுரைகள்)


பல்லால்லேஷ்வர்  என்றால் பல்லாலின் கடவுள் (Ballal's Lord) என்று பொருள். எட்டு அஷ்டவினாயகர் திருத்தலங்களில் இத்தலத்தில் மட்டும்தான் வினாயகரின் அவதாரம் பக்தனின் பெயரால்  வழங்கப்படுகிறது. வினாயகர், அந்தணரைப் போன்ற உடையலங்காரத்தில் காட்சியளிப்பதும் இங்கு மட்டுமே.  இத்திருத்தலம் ராஜ்காட்(Raigad) மாவட்டத்தில் கர்ஜாட்(Karjat)லிருந்து ஐம்பத்தெட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலி(Pali) என்னும் கிராமத்தில் சரஸ்காட்(Sarasgad fort) கோட்டைக்கும், அம்பா(Amba) நதிக்கும் நடுவில் அமைந்துள்ளது.



ஆலயத்தை 1640 ஆம் ஆண்டில் மோரேஷ்வர் விட்டல் சிந்த்கர் கட்டினார். இவர் சத்ரபதி சிவாஜியின் ஸ்வராஜ்யம் அமைக்கும் செயல்களில் நிறையப் பங்கு எடுத்துக் கொண்டவர். ஸ்ரீ கணபதியின் பக்தரான இவர் ஆலயத்தின் வளர்ச்சிக்கு அதிக அளவில்  நிதி கொடுத்துள்ளார். 

மரத்தாலான மூல ஆலயம் 1760 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் ஆலயம் மொரோதாபாத்தைச் (Moradabad) சேர்ந்த ஸ்ரீ ஃபட்னிஸ் (Shri Fadnis) என்பவரால் வடிவமைக்கப்பட்டு கல்லால் ஆன ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது.


சிமிண்டும் ஈயமும் கலந்து செய்யப்பட்ட கலவையால் ‘ வடமொழியின்
‘ஸ்ரீ ‘(श्री) எழுத்து வடிவில் ஆலயமானது கட்டப்பட்டுள்ளது. கிழக்குப் பார்த்த ஆலயத்தில், காலையில் சூரியன் உதிக்கும் போது கதிர்கள் நேரடியாக மூர்த்தியின் மீது விழுவது போன்று மிகவும் திறமையாகக் கட்டியுள்ளனர். ஆலயத்தில் கட்டப்பட்டுள்ள மணி, வசாய்(Vasai) மற்றும் சஸ்டி(Sasti) போர்களில் போர்த்துகீசியர்களை வென்ற பின்னர் சிம்மாஜி அப்பாவால் (Chimaji Appa) வழங்கப்பட்டது.




ஆலய வளாகத்திற்குள் இரண்டு திருக்குளங்கள் உள்ளன. அதில் வலது புறம் உள்ள திருக்குளம் ஆலயத்தின் பூசைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதேபோல இரண்டு சன்னதிகளும் உள்ளன. ஒன்று உள் சன்னதி மற்றது வெளிச்சன்னதி. இதில் வெளிச்சன்னதி பன்னிரெண்டு அடி உயரமானது. இதில் வினாயகனின் வாகனமான மூஷிகம் கணேசனைப் பார்த்தவாறு கையில் மோதகத்தைத் ஏந்தியபடி காணப்படுகிறது. உள் சன்னதி பதினைந்து அடி உயரம் கொண்டது. ஆலயத்தின் பிரதான கூடம் சைப்ரஸ் மரத்தைப் போன்ற வடிவில் அமைக்கப்பட்ட எட்டு தூண்களுடன் நாற்பது அடி நீளமும், இருபது அடி அகலமும்  கொண்டு விளங்குகிறது.  இதனை ஸ்ரீகிருஷ்ணாஜி ரிங்கி (Shri Krishnaji Ringe ) என்பவர் 1910 ஆண்டில் கட்டியுள்ளார். 



கல்லால் ஆன கிழக்குப் பார்த்த இடம்புரி வினாயகமூர்த்திக்குப் பின்புலம் வெள்ளியால் ஆனது. மூர்த்தியின் கண்களிலும், தொப்புளிலும் வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. வெள்ளியாலான பின்புலத்தில் இருபுறமும் சித்தியும், ரித்தியும் ஸ்ரீ வினாயகனுக்குச் சாமரம் வீசுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.



பாலி கிராமத்தில் கல்யாண் என்ற பெயருடைய பெரிய வியாபாரி  தன் மனைவி இந்துமதியுடன் வசித்து வந்தார்.அவரது மகன் பல்லால்(Ballal) கிராமத்தில் உள்ள அவன் வயதொத்த சிறுவர்களுடன் சாதாரண துண்டுக்  கற்களைக் கடவுளாக வைத்து பூசை விளையாட்டு விளையாடுவது உண்டு. ஒரு நாள் ஊருக்கு வெளியில் பெரிய கல்லொன்றைக் கண்டனர். பல்லாலின் வற்புறுத்தல் காரணமாக சிறுவர்கள் அப்பெருங்கல்லை கணேசனாகக் கருதித் தொழுது வழிபட ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் பசி, தாகம், இரவு, பகல் எல்லாம் மறந்து போன நிலையில் வழிபாட்டில் மூழ்கிப்போய் விட்டனர்.



இதற்கிடையில் தங்கள் குழந்தைகளை எதிர்பார்த்து வீட்டில் காத்துக் கிடந்த பெற்றோர்கள் நெடு நேரமாகியும் பிள்ளைகள் வீடு திரும்பாத காரணத்தால் கலவரமடைந்து கல்யாணின் இல்லம் சென்று பல்லால் மீது புகார் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த கல்யாண், கையில் கம்பெடுத்துக் கொண்டு தேடப் புறப்பட்டார். தேடலில் கிராமத்திற்கு வெளியில், சிறுவர்கள் பல்லால் சொல்லிக் கொண்டிருந்த கணேச புராணத்தைச் செவிமடுத்த வண்ணம் இருப்பதைக் கண்ணுறார். பல்லாலின் தந்தை கோபத்தின் உச்சத்தில்  இருப்பதைக் கண்ட சிறுவர்கள் பயந்து, பல்லாலைத் தனியே விட்டுவிட்டு ஓடிப்போய்  விட்டனர். 



பக்தியில் முற்றாக மூழ்கிப்போய் விட்ட பல்லாலை இறுகப்பற்றிக் கொண்டு, உடைகள் இரத்தத்தில் நனைந்து போகும் வரை அடித்துத் துவைத்தார். பல்லாலை மரத்தில் இறுகக் கட்டி வைத்து, சிறுவர்கள் சேகரித்துப் பயன்படுத்திய பூசைப் பொருட்களைக் காலில் போட்டு மிதித்து நாசம் செய்தார். சிறுவர்கள் வினாயகனாகக் கருதி வழிபட்ட பெரிய கல்லை கீழே போட்டு  துண்டுதுண்டாக உடைத்து விட்டார். மரத்தில் கட்டப்பட்ட மகனைத் தனியாக விட்டுவிட்டு “செத்துப் போய்த் தொலை. இனி உன்னை எப்படி அந்தக் கணேசன் காப்பாற்றுவான் என்று பார்க்கிறேன்” என்று பல்லாலைப் பரிகசித்து விட்டு வீடு திரும்பினார்.



மரத்தில் கட்டப்பட்ட பல்லால், பார்வதி மைந்தனாம் ஸ்ரீ கணேசரை மரியாதைக் குறைவாகப் பேசிய தன் தந்தைக்கு கண் குருடாகி காது செவிடாகி கூன் விழ சாபம் வழங்கினான். வலியும் பசிதாகமும் உடலை வாட்டினாலும் தொடர்ந்து இடைவிடாமல் கணேசனின் நாமத்தை உச்சரித்தவன் ஒரு கட்டத்தில் முழுவதும் சோர்வடைந்து மயக்கமடைந்தான். மயக்கம் தெளிந்து எழுந்தவன் தன்னைக் காப்பாற்றும்படி கணேசனைக் கதறிக் கெஞ்சினான். பல்லாலின் வேண்டுதலைச் செவிமடுத்த கணேசன், அவன் முன் ஒரு சாது வடிவம் கொண்டு தோன்றி மரத்தில் பிணைத்திருந்தவனின் கட்டுக்களை நீக்கி விடுவித்தார். கணேசனைக் கண்ட மாத்திரத்தில் பல்லாலின் உடல் காயங்கள் குணமாகியிருந்தன. பசி தாகம் களைப்பு எல்லாம் காணாமல் போய் , புது உற்சாகமும் தெம்பும் உடலில் ஏற்பட்டது. சாதுதான் ஸ்ரீகணேசன் என்பதை அறிந்து கொண்டவன் அவர் பாத கமலங்களில் விழுந்து சேவித்துத் துதிக்கத் துவங்கினான்.



கணேசன், பல்லாலின் பக்தியை மெச்சி ஆசிர்வதித்து என்ன வரம் வேண்டும் என்று வினவினார். அதற்கு பல்லால், “நான் என்றுமே உங்கள் அடியவனாக நீங்காத பக்தியுடன் விளங்க வேண்டும். கணேசன் நிரந்தரமாக இங்கு தங்கியிருந்து உன்னிடம் அபயம் கேட்டு வரும் பக்தர்களுக்கு துன்பங்கள் களைந்து ரட்சிக்க வேண்டும்”  என்று வரம் யாசித்தான்.



அதனை ஏற்றுக் கொண்ட கணேசன், “நீ விரும்பிய வண்ணம் நான் இங்கிருப்பேன். உன்னுடைய பெயர் என்னுடைய பெயருடன் சேர்ந்து என்னை அனைவரும் பல்லால் ஈஷ்வர்(Ballal Eshwar) என்றழைக்கட்டும்” என்று சொன்னவண்ணம் பல்லாலை ஆலிங்கனம் செய்து அருகிலிருந்த கல்லில் மறைந்து விட்டார். உடைந்து போன கல் மறுபடியும் ஒன்றாகி விட்டது.  அந்தக் கற் சிலையே பல்லாலேஷ்வர் என்றும், கல்யாண் உடைத்த கல் விக்ரகம் டுண்டி வினாயகர் (Dhundi Vinayak) என்றும் அழைக்கப்படுகிறது. டுண்டி வினாயகர் சுயம்பு மூர்த்தம். பல்லாலேஷ்வரரை வழிபடும் முன்பு டுண்டி வினாயகரை வழிபடுவது மரபாகும்.

இத் திருக்கோவில் காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பக்தர்கள் தரிசிக்கத் திறந்திருக்கிறது. சதுர்த்தி தினங்களில் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.


ஆலய நிர்வாகத்தால் நடத்தப்படும் பக்தி நிவாஸ் 1 என்ற தங்கும் விடுதியில்  ஒரு அறையில் ஐந்து நபர்கள் தங்கும்  10 அறைகள் உள்ளது. இதில் தங்க 250 ரூபாய் கட்டணம். பக்தி நிவாஸ் 2 என்ற தங்கும் விடுதியில் 300 ரூபாய் கட்டணத்தில் 14 அறைகள் உள்ளன. இது தவிர 10 நபர்கள் தங்கும் அளவுக்குப் பெரிய கூடங்கள் இரண்டு உள்ளது. 

ஆலய அலுவலகத்தில் பத்து ரூபாய் நன்கொடை அளித்து உணவுக்குச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

படங்கள்: அனைத்துப் படங்களும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.

நன்றி: wikipedia, ashtavinayak.in


Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)