கண்டதும் களித்ததும் பகுதி - 10 (புனே பயணக் கட்டுரைகள்)




அஷ்ட வினாயகர் ஆலயங்கள்
 ஸ்ரீவரத்வினாயகர் ஆலயம் , மஹத்(Mahad)


லென்யாத்ரி கிரிஜாத்மஜர் ஆலயத்திலிருந்து புறப்படும் போது காலை மணி ஒன்பதரையாகியிருந்தது. முந்தைய நாள் நள்ளிரவு வரை விழித்திருந்தது, முன்னூற்றைம்பது படிகள் மலையேறிய அசதி மற்றும் பசியில் அனைவரும் சோர்வாக உணர்ந்தோம். லென்யாத்ரியிலிருந்து புறப்பட்ட பேருந்து நுழைந்ததும் பக்கத்தில் உள்ள உணவு விடுதிக்குள் அனைவரும் காலை உணவுக்காகச் சுற்றுலா அமைப்பாளர் வழங்கிய சீட்டுடன் வரிசையில் நிற்கவும் உணவு வழங்கப்பட்டது. இங்கும் போகோ உப்புமா, மிஷால் பாவ் மற்றும் சூடான காபி அல்லது தேனீர் வழங்கப்பட்டது. சாப்பிட்ட அனைத்துமே சுவையாக இருந்தன. ஓரளவுக்கு நீண்ட பயணத்தின் சலிப்பு சற்றுக் குறைந்தது.


அடுத்து ஏழாவதாக எங்களை இட்டுச் சென்ற இடம் மஹத் (Mahad) ஸ்ரீவரத்வினாயகர்(Varadvinayagar) ஆலயம் காலாப்பூர் (Khalapur) தாலுக்காவில்ராய்காட்(Raigad) மாவட்டத்தைச் சேர்ந்த கர்ஜத் (Karjat) க்கும் கோபொலி (Khopoli) க்கும் அருகில் மஹத் (Mahad) கிராமம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தை 1725 ஆம் ஆண்டில் பேஷ்வா ஜென்ரல் ராம்ஜி மகாதேவ் பைவாக்கர் (Peshwa Ramji Mahadev Biwalkar) சீரமைத்துக் கட்டினார். உண்மையில் இந்த  இடம் புனே (Pune) மாவட்டத்தில் லோனாவாலா (Lonavala) விற்கருகில் உள்ளது. லோனாவாலாவில் நிலக்கடலையை அடிப்படையாக வைத்துப் பலவகையான மிட்டாய்கள் (Chikkies) தயாரிக்கப்படுகின்றன. அவற்றைப் பேருந்துகளில்  நம்முடன் சிறிது தூரம் பயணித்து உள்ளூர்வாசிகள் சிலர் வியாபாரம் செய்கின்றனர். வாங்குபவர்களுக்கு விலையில் 20 சதவீதம் தள்ளுபடி செய்கிறார்கள். நாங்களும் சில வகைக் கடலை மிட்டாய்கள் வாங்கிச் சுவைத்தோம். கடலைமிட்டாயின்  சுவை அருமையாக இருந்தது. 


கௌண்டின்யபுரத்தின் அரசன் பீமாவுக்குக் சந்தான பாக்கியம் இல்லை. காட்டில் தவமியற்ற வந்திருந்த விஸ்வாமித்திர முனிவரை அரசன் பீமாவும் அவனது மனைவியும் சந்தித்தனர். அவர்களின் குறையைப் போக்கும் ஏகஷர் கஜான (EKASHAR GAJANA) மந்திரத்தை உபதேசித்தார். ஏகஷர் கஜான மந்திரத்தை உச்சாடனம் செய்ய அவர்கள் வாரிசாக ராஜ குமாரன் ருக்மாங்கதன் பிறந்தான். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இளவரசன் ருக்மாங்கதன் அழகான வாலிபனாக வளர்ந்தான். 


ஒரு நாள் காட்டில் வேட்டைக்கு வந்த இளவரசன் ருக்மாங்கதன், ரிஷி வாசக்னவி (Vachaknavi) யின் ஆசிரமத்தை அடைந்தான். ரிஷியின் மனைவி முகுந்தா (Mukunda) அழகான இளவரசன் மீது மையல் கொண்டாள். ருக்மாங்கதனை தன்னுடன் சுகிக்க அழைத்தாள். ரிஷி பத்தினியின் தவறான என்ணத்தைக் கண்டித்த ருக்மாங்கதன் கோபத்துடன் அவ்விடத்தை விட்டு நீங்கினான். முகுந்தாவின் ஆசையை அறிந்து கொண்ட தேவேந்திரன், ருக்மாங்கதனைப் போல் வடிவெடுத்து முகுந்தாவுடன்  உறவு கொண்டான். அதன் காரணத்தால் கறுவுற்று கிருட்ஸமதா(Gritsamada) என்ற ஆண் மகவைப் பெற்றெடுத்தாள்.


காலப்போக்கில் தான் பிறந்த சூழ்நிலையை அறிந்து கொண்ட கிருட்ஸமதா தன் தாய்க்கு எவராலும் விரும்பப்படாத முள் மரமாக வடிவம் கொள்ளச் சாபம் கொடுத்தான். பதிலுக்கு முகுந்தாவும் கொடும் அரக்கர்கள் கிருட்ஸமதாவின் மூலம் பிறக்க எதிர்ச் சாபமிட்டாள்.  அப்போது வானிலிருந்து அசிரீரி “கிருட்ஸமதா இந்திரனின் மகன்” என்று ஒலித்தது. அசிரீரியைக் செவியுற்ற இருவருமே அதிர்ச்சியடைந்தனர். தாங்கள் ஒருவருக்கொருவர் அளித்த சாபத்தைத் திரும்பப்பெறவோ அல்லது மாற்றவோ காலம் கடந்து விட்ட நிலையில் முகுந்தா முள்ளுச் செடியாக மாறிப் போனாள். ஆத்திரப்பட்டுத் தவறு செய்து செய்து விட்டதால் அவமானமாக உணர்ந்த கிரிட்ஸமதா, புஷ்பக்(Pushpak) காட்டுக்குள் ஸ்ரீ கணபதியை பாபவிமோசனம் வேண்டித் தவமியற்ற ஆரம்பித்தார்.


கிரிட்ஸமதாவின் தவத்தில் மகிழ்ந்த ஸ்ரீ கணேசர், சங்கரனைத் தவிர வேறு எவராலுமே வெல்ல இயலாத மகனை வரமாக அளித்தார். கிரிட்ஸமதா வனத்தை கணேசன் ஆசிர்வதிக்கவும். அங்கு வரும் பக்தர்கள் வெற்றியடையவும் வேண்டினார். மேலும் ஸ்ரீ கணேசரை நிரந்தரமாக அங்கு தங்கியிருக்கவும், பிரம்மத்தை அறியும் ஞானத்தையும் யாசித்தார். இன்று பாத்ரகா(Bhadraka) என்று அழைக்கப்படும் இவ்வனப்பகுதியில் கணேசனின் சிலையைப் பிரதிஷ்டை செய்து ஆலயம் ஒன்றைக் கிரிட்ஸமதா நிர்மாணித்தார்.


ரிஷி கிரிட்ஸமதா தும்மிய போது உருவானவன் திரிபுராசுரன். அவன் கதையை ரஞ்சன்கான் திருத்தலம் பற்றி கண்டதும் களித்ததும் பகுதி - 7 (புனே பயணக் கட்டுரைகள்) எழுதியுள்ளேன்.


திருக்கோவிலில் மகி சதுர்த்தியன்று தரப்படும் தேங்காய்ப் பிரசாதத்தை உண்பவர்களுக்கு நிச்சயமாக புத்ரபாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. எதனால் மகி உற்சவம் நடைபெறும் காலங்களில் ஆலயம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.


வரத் வினாயகர் ஆலயத்தின் மூர்த்தியும் சுயப்பு மூர்த்தியே. அருகில் உள்ள ஏரியில் மூழ்கியிருந்த சிலை கி பி 1690 ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டது. 1690 ஆம் ஆண்டில் ஸ்ரீ டோண்டு பட்கர் இந்த வரத வினாயகரின் சுயம்பு விக்ரஹத்தை அருகில் உள்ள திருக் குளத்திலிருந்து கண்டெடுத்தார். கண்டெடுக்கப்பட்ட விக்ரஹம் சில காலம் அருகில் உள்ள அம்மன் ஆலயத்தில் வைத்து வழிபடப்பட்டது. ஆலயத்தின் அடிப்படை கட்டமைப்பு சாதாரண வீட்டைப் போன்றுள்ளது.


மர்மமான முறையில் விக்ரஹம் கண்டெடுக்கப்பட்ட கிணறு ஆலயத்தின் பின்புறத்தில் காணப்படுகிறது. இது அனைவரையும் ஈர்க்கும் ஒரு முக்கியமான இடமாக உள்ளது. இவ்வாலயம் கி பி 1725 ஆம் ஆண்டில்  சுபேதார் ராம்ஜி மஹாதேவ் பைவாக்கர் என்பவரால் கட்டப்பட்டு மஹத் கிராமத்திற்குப் பரிசாக வழங்கப்பட்டது. ஆலயத்தின் ஒரு புறத்தில் அழகான குளம் ஒன்றுள்ளது. கணேசனின் சிலாரூபம் கிழக்கு நோக்கியும் துதிக்கை இடதுபுறம் திரும்பிய நிலையில் காணப்படுகிறது. ஆலயத்தின் கருவறையில் காணப்படும் தூங்காமணி விளக்கு 1892 ஆண்டு முதல் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆலயத்தில் மூஷிகம், நவகிரகங்கள் மற்றும் சிவலிங்கம் ஆகியவையும் காணப் படுகின்றன.


வரத் வினாயகர் ஆலயம் என்பதை விட இது அதிகம் மடமாகவே அறியப்பட்டுள்ளது. ஓடு வேய்ந்த இருபத்தைந்து அடி உயரக் குவிமாட மேற் கூரை,உச்சியில் பொன்னால் வேயப்பட்டுக் கூராக  முடிகிறது.  கோபுரக் கலசமும் பொன்னால் ஆனதே. அதில் நாகத்தின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ஆலயம் எட்டடிக்கு எட்டடி சதுரமான சிறு கூடமே. வரத் வினாயகரின் மூல விக்ரஹம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால் ஆலய நிர்வாகக் குழுவினர் அதனை வெளியே நீரில் மூழ்க வைத்து விட்டு பதிலாகப் புதிய விக்ரஹத்தை வைத்துக் குடமுழுக்கு செய்துள்ளனர். இச்செயல் சிலரால் எதிர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. வழக்கில் தீர்ப்பு இன்னும் சொல்லப்படவில்லை. இதனால் கருவறையில் ஒரு விக்ரஹமும், கருவறைக்கு வெளியில் மற்றொரு விக்ரஹமும் என்று இருப்பதைக் காணலாம். கருவறை கல்லால் கட்டப்பட்டு சுற்றிலும் அழகான யானைச் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. கோமுகம் ஆல்யத்தின் வடக்குப் பகுதியில் காணப்படுகிறது. இதிலிருந்து புனித நீர் வெளி வருகிறது.


ஸ்ரீ கணேசர் இங்கு வரத வினாயகராக இருப்பதால் கேட்ட வரத்தையும் வெற்றியையும் வாரி வழங்குபவராக  இருக்கிறார். கிழக்குப் பார்த்த அமர்ந்த நிலையில் ஸ்ரீகணேசரின் மூர்த்தம் துதிக்கை இடது புறம் திரும்பி இருக்க, இருபுறமும் கல்லால் ஆன சித்தி ரித்தி சிலாரூபங்களும் கருவறையில் காணப்படுகிறது. வரத வினாயகனாக ஸ்ரீ கணேசர் இருந்து நம் விருப்பங்களை நிறைவேற்றி வரங்களை அள்ளித் தந்த வண்ணம் இருந்து வருகிறார்.

இந்த அஷ்டவினாயகர் ஆலயத்தில் மட்டும் பக்தகோடிகள் அனைவருமே கருவறைக்குள் சென்று அவர்களாகவே வழிபாடு செய்ய முடியும். வருடம் முழுவதும் பக்தர்கள் வரத் வினாயகர் ஆலயத்திற்கு வருகை புரிகின்றனர் என்றாலும் மஹா சதுர்த்திக்கு ஏராளமான அடியார்கள் கூட்டத்தை ஆலயத்தில் காணலாம். 

படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது.
நன்றி: wikipedia, Trip advisor, Temple prohith 


Comments

  1. Thanks mama for sharing your experience you all are blessed

    ReplyDelete
    Replies
    1. Sure. My intention is to make the readers aware of the temples which not frequently discussed in our local spiritual magazines.Thank you very much for the compliment.

      Delete

Post a Comment

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)