கண்டதும் களித்ததும். பகுதி - 1 (புனே பயணக் கட்டுரைகள்)


கண்டதும் களித்ததும்.
(புனே பயணக் கட்டுரைகள்)
பகுதி - 1
புனேயைச் சுற்றிலும் பல பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களும், சுற்றுலாத் தலங்களும் அமைந்துள்ளன. பல சரித்திரப் புகழ் பெற்ற கோட்டைகள் நமக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளன.
புனேயில் பல தனியார் நிறுவனங்கள், இவ்விடங்களுக்குச் சுற்றுலாப் பயணிகள் வசதியாகச் சென்று கண்டு களிக்க குளிரூட்டப்பட்ட பேருந்துகளையும் (AC BUS SERVICE), இரவு தங்குவதற்குக் குளிரூட்டப்பட்ட அறைகளையும் (AC ROOM ACCOMADATION) குறைந்த கட்டணத்தில் வழங்கிச் சேவை செய்து வருகின்றன.


நாங்கள் பர்ப்பிள்(PURPLE) என்ற பிரசன்ன பர்ப்பிள் டிராவல் சொல்யூஷன்ஸ் (PRASANNA PURPLE TRAVEL SOLUTIONS PRIVATE LIMITED) என்ற நிறுவனத்தின் பேருந்தில் இரண்டு நாள் பயணமாக அஷ்ட வினாயகர் ஆலயப் பயணம் மேற்கொண்டோம்.



குறிப்பிட்ட நிறுவனம் என் மகனின் அலுவலகத்தில் பணிபுரியும் சக உள்ளூர் நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்டது.  குளிரூட்டப்பட்ட அறை மற்றும் பேருந்து என்றால் இரண்டு நாள் பயணக் கட்டணம் ஒரு பயணிக்கு ரூபாய் 3700. இதில் பேருந்துக் கட்டணம் காலையில் காபி, டிபன், மதிய உணவு, மாலை காபி, இரவு உணவு மற்றும் தங்குமிடக் கட்டணங்கள் அடங்கும். சாதாரணப் பேருந்து,  அறை என்றால் இதுவே ரூபாய் 2700. ஆகிறது. என்னைப் பொருத்தவரை ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், செல்லும் இடங்கள் மலைப்பாங்கானவை என்பதாலும் குளிரூட்டப்பட்ட பேருந்தில் பயணிப்பதே வசதியாக இருக்கும் என்ற பரிந்துரையை உங்கள் முன் வைக்கிறேன்.



பொதுவாகப் பல கோவில்களிலும் தமிழ்நாட்டில் உள்ளது போல் சிறப்புக் கட்டண சேவை என்ற பெயரில் காசு பிடுங்குவது இல்லை. பக்தர்களுக்கும் தமிழ் நாட்டைப்போல் உடனடி (INSTANT) அர்ச்சனைச் சேவையும் கிடையாது. வெளியில் உள்ள அலுவலகத்தில் குறைந்த பட்சமாக ரூ 51/= செலுத்தினால், நாம் குறிப்பிடும் தினத்தில் அர்ச்சனையோ அல்லது அபிஷேகமோ செய்து தபாலில் பிரசாதம் அனுப்புகிறார்கள்.




பூசாரி தட்டில் காசு போடச் சொல்வது இல்லை. தீபஆரத்தித் தட்டும், பிரசாதத் தட்டும் சன்னதியின் படிக்கட்டில் உள்ளது. தீப ஆர்த்தியை கண்களில் ஒற்றிக் கொண்டு பிரசாதத் தட்டில் கொண்டு வந்த இனிப்பை தட்டில் பிரித்துக் கொட்டி விட்டு அதிலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொள்கிறார்கள். பிரசாதத் தட்டில் விருப்பமிருந்தால் பணம் போடலாம். யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை. கொல்கத்தா காளி கோவில், திருச்செந்தூர், பழனி  போன்ற கோவில்களில் ஏகப்பட்ட இடைதரகர்கள் இல்லை. கொல்கத்தா காளி கோவிலில் 100 ரூபாய் தட்சணை தரச் சொல்லி பூசாரி என்னைச் சிறைப் பிடித்ததும் அதிலிருந்து மீண்டு வந்த வீர வரலாறு எல்லாம் பின்னர் சொல்கிறேன்.

பல இடங்களில் அனைவருக்கும் தர்ம தரிசன சேவைதான். ஆனால் அனாவசியமாக யாருமே கோவிலில் சன்னதி முன்பு நெடு நேரம் நின்று கடுப்படிப்பது இல்லை. எல்லா இடங்களிலும் வரிசை வேகமாகவே நகர்ந்தது. வினாயகருக்குச் சல்லிசாக 10 ரூபாய்க்கு நீளமான மெல்லிய நூலில் நாலு செப்பருத்திப் பூக்கள், இரண்டு அருகம் புல் கட்டுகள், நான்கைந்து காட்டுப் பூக்கள் தொடுத்துக் கட்டிய மாலை கிடைக்கிறது. தவிர எல்லோரும் இனிப்புகள் நிவேதனமாக வாங்கிச் செல்கிறார்கள். மாம்பழச் சுவையுடன் கூடிய கடினமான ஒரு வகை  மினியேச்சர் கொழுக்கட்டை மாதிரியான அமைப்புடைய இனிப்பே அநேகமாகப் பலராலும் விரும்பி வாங்கப் படுகிறது. அது கோவில்களில் பிரசாதக் கடைகளில் 50 முதல் 60 ரூபாய் விலையில் கிடைக்கிறது. ஒரு வேளை அந்த மோதகம் தான் மராட்டியத்தில் பிரசித்தமானதோ என்னவோ.
சன்னதியில்வாங்கி வந்த மாலையைச் சம்ர்ப்பித்தால் அர்ச்சகர்  அதை சுவாமியின் காலடியில் சேர்க்கிறார். படிக்கட்டில் தலைவைத்து வணங்கி, வாங்கி வந்த இனிப்பை பூசாரியின் தட்டில் சிலர் கொட்டி விடுகின்றனர். அதிலிருந்தே மற்றவர்களும் பிரசாதம் எடுத்துக் கொள்கின்றனர். தேங்காய் உடைக்கும் வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. பலரும் முதல் கோவிலில் படைத்த உடைக்காத தேங்காயையே எல்லாக் கோவில்களிலும் படைத்து வணங்குகின்றனர். வணங்கி முடித்ததும் இடத்தைக் காலி செய்து விடுகின்றனர். ஆக தரிசன வரிசை நகர்ந்து கொண்டே இருக்கிறது. சிறிய நுழைவாயில் கொண்ட சன்னதிகளில் மட்டுமே சிறிது நேரம் தேக்கம் ஏற்படுகிறது.
காலணிகளைக் கோவில் நுழை வாயில் அருகேயோ அல்லது பூசைப் பொருள் வாங்கும் கடைகள் அருகிலோ விட்டுச் செல்ல முடிகிறது. சில ஆலயங்களில் இரும்பில் செய்யப்பட்ட காலணிகள் வைக்கும் அடுக்கு வரிசைகள் உள்ளன. இவற்றிலும் காலணி வைக்கக் கட்டணம் யாரும் வசூலிப்பது இல்லை. அதே நேரம் பாதுகாக்கவும் யாரும் இல்லை. எந்த ஒரு கோவிலிலும் அனாதையாக விடப்பட்ட ஆயிரக்கணக்கான காலணிகளில் ஒண்று கூடத் திருடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகாவில் ஹொரநாடு அன்னபூரணி ஆலயத்தில் ஆலயம் செல்ல சுமார் 25 முதல் 30 படிகள் சாலையிலிருந்து மேலே ஏறிச் செல்ல வேண்டும். அங்கும் இரவு முழுவதும் கீழே சாலையில் விடப்பட்ட காலணிகள் களவு போகாமல் ஒரு இம்மி கூட நகராமல் போட்ட இட்த்திலேயே இருந்தன.
இந்த நிலை ஏன் தமிழ்நாட்டுக் கோவில் இல்லை? இலவச  காலணிகள் பாதுகாக்கும் இடம் என்றும், காலணிகள் பாதுகாப்பிற்குக் காசு தர வேண்டாம் என்றும் கொட்டை எழுத்தில் அறிவிப்பு என்னவோ இருக்கும். இந்த விஷயத்தில் விதிவிலக்காகப் படு சுத்தமாக இயங்குவது ஸ்ரீரங்கம் மட்டும்தான். எண்கள் ஒட்டப்பட்ட வண்ண அழகான பிளாஸ்டிக் பெட்டிகளில் வைத்து உண்மையிலேயே இலவசமாகப் பாதுகாத்துத் தருகிறார்கள்.ஆனால் பல திருக்கோவில்களில் ஒரு சோடிக் காலணிக்கு ஐந்து ரூபாய் வாய் கூசாமல் கேட்டு வாங்குவார்கள். எல்லாம் அந்த அண்ணாமலையானுக்கே வெளிச்சம்.
வளரும்




Comments

  1. Real picture depicted along with your agony for real worshipping in Tamil nadu
    My Sister and her son settled in Pune. Your writing kindles my desire to stay and visits temples in Pune

    ReplyDelete
  2. I am not unknown. I am N Swaminathan

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)