மாரடைப்பும் பெண்களும் (Heart attack and Females)


தொலைக் காட்சி அல்லது திரைப்படத்தில் ஒரு காட்சி. அதில் ஒரு வீட்டின் வரவேற்பறை நாற்காலியில் அமர்ந்து சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும் ஆண், பெரும்பாலும் காட்சியில் வருபவர் ஆணாக மட்டுமே இருப்பார் என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.  திடீரென்று தன் முன்னால் உள்ள மேசையோ அல்லது வேறு ஏதோ ஒன்றைத் தள்ளிவிட்டு தள்ளாடியபடி எழுந்திருப்பார். முகம்  பயங்கரமாக அஷ்ட கோணலாய் மாறும். கண்கள் நிலைக்குத்த உடம்பை விரைத்துக் கொண்டு கையால் மார்பைப் பிடித்தபடி வேரோடு சாய்ந்த  மரம் போல் தரையில் தலைகுப்புற தொப்பென்று விழுவார். மாரடைப்பால் ஒருவர் மரணமடையும்  காட்சி எல்லாத் தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் இப்படித்தான் காலகாலமாகச் சித்தரிக்கப் படுகிறது. உண்மையில் மாரடைப்பு எல்லோருக்கும் இதுபோல் ஒரே மாதிரி வருவது இல்லை. நமது ஆரோக்கியத்தில்  மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மாரடைப்பைப் பற்றி நம்மில் நிறையப் பேர் சரியாகவே அறிந்து கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும்.

முதலில் நான் சொல்லப் போகும் தகவல் நம்புவதற்குச் சிறிது கடினமாகத்தான் இருக்கும். உண்மை (Truth) என்பது புனைவை (Fiction) விட வினோதமாக இருக்கும் என்று ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு.  பிராட் என். கிரீன் வுட் (Brad N. Greenwood) செத் கார்நஹன் (Seth Carnahan) மற்றும் லாராஹாங்க் (Laura Huang) ஆகிய ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் கடந்த 2018 ஜனவரி மாதம் வெளியானது. இந்த ஆய்வின் முடிவும் அப்படி வினோதமான ஒன்றாவே உள்ளது. அதன்படி ஆண்களை விடப் பெண்களே அதிகம் மாரடைப்பால் மரணமடைகின்றனர். அதிலும் குறிப்பாக மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிப் பெண் அவசர சிகிச்சை அறையில் மருத்துவர் பெண்ணாக இல்லாமல் ஆணாக இருக்கும் போது உயிரிழப்பது அதிகமாக உள்ளது. இது தொடர்பான கட்டுரை ஒன்று சையின்டிபிக் அமெரிக்கன் பத்திரிக்கையில் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி வெளிவந்துள்ளது.

இது நாள் வரையில் மாரடைப்பு குறித்த பொதுச் சித்திரம், அதனை ஏதோ ஆண்களுக்கான நோயாகவே சித்தரித்தாலும், நிஜத்தில் இதய நோய் அபாயம் இருபாலருக்குமே அச்சுறுத்தல் தரக் கூடியதே. ஆனால் ஆணுக்கு கண்டுணரப்படும் மாரடைப்பிலிருந்து பெண்ணுக்கு கண்டுணரப்படும் மாரடைப்பு நிறையவே வேறுபடுகிறது.
 (https://www.scientificamerican.com/article/women-die-more-from-heart-attacks-than-men-mdash-unless-the-er-doc-is-female/)

மருத்துவ உலகில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பெண்களில் இருபத்தியாறு விழுக்காடு (26%) நோயாளிகளும் ஆனால் அதே சமயம் ஆண்களில் பத்தொன்பது (19%) விழுக்காட்டினருமே மரணம் அடைகின்றனர் என்பது நீண்ட காலத்திற்கு முன்னரே அறியப்பட்டிருந்தது. இருப்பினும் இதற்கான காரணம் பிடிபடாமலே இருந்து வந்தது.

2001 ஆம் ஆண்டு தொடங்கி 2010 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டுக் காலத்தில் முன்னர் குறிப்பிட்ட பிராட் என். கிரீன் வுட்(Brad N. Greenwood) செத் கார்நஹன் (Seth Carnahan) மற்றும் லாராஹாங்க்(Laura Huang) ஆகிய ஆய்வாளர்கள் குழு, ஃப்ளாரிடாவில் ஐந்து இலட்சம் (500000) இதய நோயாளிகளைப் பாலின வாரியாகப் பிரித்தெடுத்துக் கொண்டனர்.  பின்னர் அவர்களைக் கீழே குறிப்பிட்டவாறு நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரித்தனர்.

1) ஆண் மருத்துவரால் சிகிச்சை தரப்பட்ட ஆண் நோயாளர்கள்
2) ஆண் மருத்துவரால் சிகிச்சை தரப்பட்ட பெண் நோயாளர்கள்
3) பெண் மருத்துவரால் சிகிச்சை தரப்பட்ட ஆண் நோயாளர்கள்
4) பெண் மருத்துவரால் சிகிச்சை தரப்பட்ட பெண் நோயாளர்கள்

அவசர சிகிச்சைப் பிரிவு அறையில் இப்படியாகப் பிரித்து ஆய்வு செய்தபோது  கற்பனையில் கூட நினைக்க முடியாத வித்தியாசமானதோர் முடிவு பெறப்பட்டது. முதல், மூன்றாம் மற்றும் நான்காம் பிரிவுகளில்  நோயாளிகளின் இறப்பு விழுக்காடு கிட்டத்தட்ட சமமாக இருக்க, இரண்டாவது பிரிவான ஆண்மருத்துவர்களால் கிகிச்சை தரப்பட்ட பெண் நோயாளிகளின் இறப்பு பன்னிரெண்டு (12%) விழுக்காடு மற்ற எல்லாப் பிரிவு நோயாளிகளின் இறப்பு விழுக்காட்டைக் காட்டிலும் அதிகமாக இருந்தது.

இதர பிற ஆய்வுகள் வாயிலாக அறியப்பட்ட முடிவுகளான பெண் மருத்துவர்கள் ஒட்டு மொத்தமாக (இதய மருத்துவர்கள் நீங்கலாக) சிறந்த விளைவுகளை அதிகமாகத் தருகிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாவிட்டாலும்  கூடப் பன்முகத்தன்மையுடன் மருத்துவத்துறையில் அதிகமாகப் பெண்மருத்துவர்கள் வருவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதையே இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.

மருத்துவத் துறையில் எண்ணிக்கை அடிப்படையில் ஆண் மருத்துவர்களில் 23.5 விழுக்காடும், பெண் மருத்துவர்களில் 10.8 விழுக்காட்டினருமே இருதய நோய் நிபுணர்களாக உள்ளனர் என்பது சற்றுக் கூடுதலாகவே அச்சமூட்டுகிறது. இதன் காரணமாகவே மகளிர்களுக்கு ஏற்படும் வித்தியாசமான மாரடைப்பு அறிகுறிகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்ன.

பொதுவாகவே மாரடைப்பு ஏற்படும் போது ஆண்களும் பெண்களும் அவரவர் நெஞ்சில் திடீரென பெரும் அழுத்தத்தை உணருகின்றனர். இருப்பினும் மூச்சுத்திணறல், தலைபாரம், தலை சுற்றல், தாடை வலி மற்றும் மேல் அடிவயிற்றுப் பகுதியில் வலி போன்ற பொதுவான அறிகுறிகளை ஆண்களை விட அதிகம் பெண்களே உணருகின்றனர்.


நியூயார்க் நகரில் உள்ள லெனாக்ஸ் ஹில் மருத்துவமனையில் உள்ள ஹார்ட் அண்ட் கார்டியோ-வாஸ்குலர் இன்ஸ்டியூட்டின்  (The Heart and Vascular Institute at Lenox Hill Hospital) இயக்குநர் டாக்டர் சூசன் ஸ்டீன்பாம் (Dr. Suzanne Steinbaum) அவர்கள் கூற்றுப்படி மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மூச்சுத் திணறல், குமட்டுதல் போன்ற அறிகுறிகள் நோயாளிக்கு ஏற்படும்.


அமெரிக்க இருதய சங்கத்திற்கு (American Heart Association) அளித்த பேட்டியில், “வழக்கமான சில செயல்பாடுகளை மேற்கொள்ளும் போது திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்படுமானால் அது எனக்கு அதிகம் கவலை தரக் கூடியதாகும்என்கிறார் டாக்டர். ஸ்டீன்பாம். அவரிடம் வந்த பெண் ஒருவர் திரெட்மில்லில் (treadmill) ஓடும் போதெல்லாம் தாடைவலி வந்ததாகவும், அதனால் பல் மருத்துவரை அணுகிப் பிரச்சனைக்குத் தீர்வு காண முயன்றுள்ளார். பின்னர் ஒருநாள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு ஏற்பட்ட பின் அவரைப் பரிசோதித்த டாக்டர். ஸ்டீன்பாம், இந்த இரு நிகழ்வுகளுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்று நினைவு கூர்ந்தார்.


மேலும் டாக்டர். ஸ்டீன்பாம் சொல்கிறார், “மாரடைப்பு வரும் சமயத்தில் பெண்கள் எல்லாருமே வலியில் தங்கள் மார்பை பிடித்துக் கொண்டு விழ வேண்டும் என்று கட்டாயம் இல்லை. என்ன மாதிரியான அறிகுறியாக இருந்தாலுமே அதை அவர்கள் தீவிர கவனத்துடன் உணர வேண்டும். பல பெண்கள் தங்களுக்கு நெஞ்சு வலி வரும் போது ஒரு ஆஸ்பிரின் மாத்திரையை விழுங்கி விடுவதை மட்டுமே செய்கின்றனர். அவசர சிகிச்சைக்கு மருத்துவரை உடன் தொலைபேசியில் அழைப்பதில்லை. மார்பு வலிக்கு ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வது மட்டும் இல்லாமல் அவசர மருத்துவ உதவியையும் அழையுங்கள். உங்களது உணர்வுகளை நம்புங்கள். அதிலும் ஒரு பெண் இருதய நோய் மருத்துவரை முன்னதாகவே தொடர்பு கொள்ள முடியுமானால் இன்னும் சிறந்தது.


நீங்களோ அல்லது உங்களுக்குப் பிரியமானவரோ மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்தால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள, "The Cardiac Recovery Handbook" என்ற
Michelle Seaton and Paul Kligfield, MD எழுதிய புத்தகம் நல்லதோர் தேர்வாக அமையும்.


இக்கட்டுரை Curiosity.com ல்  
Reuben westmass 04.10.2018 ல் எழுதிய Big differences between men's and women's heart attack  என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு தமிழில் தழுவி எழுதப்பட்டுள்ளது.


https://curiosity.com/topics/the-big-differences-between-mens-and-womens-heart-attacks-curiosity/
-----------------------------------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)