வடிவமைப்பாளர் குழந்தைகள் (Designer Babies)


இது வடிவமைப்பாளர் (designer babies)  குழந்தைகள் பற்றிப் பேசும் காலகட்டம்
புதிய தொழில்நுட்பத்தால் வடிவமைப்பாளர் குழந்தைகள் (designer babies) விரைவிலேயே மெய்யாகும் எதிர் கொள்ள நாம் தயாரா?
நுண்ணறிவுத்திறன் மரபியல்  (Genetics of intelligence) என்ற அறிவியல் பிரிவைக் காட்டிலும் இன்னும் அதிகமான சர்ச்சைக்குரிய அறிவியல் பிரிவு எதாவது உள்ளதா என்ற சிந்தனையே கடினமானது. ஆனால் அத்தகைய சர்ச்சைக்குரிய மரபியல் சார்ந்த பிரிவொன்று அதிவிரைவாகச் செயல்வடிவம் பெற்று வருகிறது.
   
பன்னெடுங்காலமாகவே நடந்து வரும் டி.என். (DNA) சோதனைகள் வாயிலாக ஒருவரின் நுண்ணறிவு எண்(Intelligent Quotient) குறித்தோ அல்லது பலமரபணுக்கூறுகளின் (Multiple Genes) தாக்கத்தால் ஏற்படும் பண்புக்கூறுகளின் (traits) பாதிப்பையோ, எடுத்துக்காட்டாக சர்க்கரை நோய், கேன்சர் நோய்கள் அபாயம் போன்றவை குறித்து எந்த விதமான பயனுள்ள தகவலையும் பெற இயலவில்லை.
ஆனால் தற்போது புதியதாக மேற்கொள்ளப்படும்பாலிஜெனிக்” (Polygenic techniques) தொழில்நுட்பம் மூலம் பல மரபணுப் பகுதிகளை (Genetic regions) ஏககாலத்தில் பகுப்பாய்வு செய்தல் இதனைச் சாத்தியமாகி உள்ளது.
முதன்முதலாகத் தற்போது ஒரு நிறுவனம் செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவமனைகளுக்கு உதவியாக, செயற்கையாகக் கருத்தரிக்கச் செய்யப்பட்ட கருமுட்டைகளை (IVF embryos) வரிக்கண்ணோட்ட முறை (Scan) மூலம் சோதித்து நோய் தாக்கும் அபாயம்(disease risk) மற்றும் நுண்ணறிவுத்திறன் குறைபாடு (Lower IQ) ஆகியவற்றைக் கண்டறிந்து தர முன்வந்துள்ளது.

மேலே குறிப்பிட்ட செய்தி உலகின் எங்கோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு மருத்துவமனை இதே போன்ற அணுகுமுறையைக் கையாண்டு தங்களிடம் சிகிச்சைக்காக வரும் பெற்றோருக்கு, மரபணுரீதியாக அதிக நுண்ணறிவுத்திறன் கொண்ட கருமுட்டையை அவர்களுக்குத் தெரிவு செய்து தந்து செயற்கையாக கருத்தரிக்கும் சேவையை அளிப்பதற்கு இன்னும் அதிக காலம் பிடிக்காது என்பதையே உணர்த்துகிறது.

இது ஒன்றும் சர்ச்சைக்குரிய பொருளல்ல மாறாக புதியதோர் தொடக்கமே. பலமரபணுக்களால் (Multiple genes) நிர்ணயம் செய்யப்படும் பண்புக்கூறுகளை (traits) அறித்து கொள்ளும் நமது திறன் வளரும் போது கருமுட்டைகளைச் ஆய்வுக்குட்படுத்தி அவற்றின் பாலியல் பண்புகள் (Sexuality), மன இறுக்கம் (Autism), மனச்சோர்வால் பீடிக்கப்படுதல் (Depression) போன்ற பல்வேறு பிற அம்சங்களின் பாதிப்பை மதிப்பிடுதலும் சாத்தியமாகும்.
 
இன்றைக்கு நாம் வாழும் உலகத்தில் இருக்கும் பெரும் செல்வந்த்த் தனிமனிதர்கள் கருவுறுதல் தொடர்பான சிக்கல் நிறைந்த ஆய்வுச் செயல்பாடுகளில் எல்லை மீறிச் செலவு செய்யவும் தயாராக உள்ளனர்.” எடுத்துக்காட்டாக ஜோர்டானியப் பெற்றோருக்கு மெக்ஸிகோவில் பணிபுரியும் மூன்று அறிவியலாளர்கள் உதவியுடன்மூன்று பெற்றோர்”(three-parents) என்ற உத்தி மூலமாக உருவாக்கப்பட்ட முதல் குழந்தை பிறந்து இரண்டாண்டுகள் முடிந்து விட்டது.

வருங்காலத்தில் பெற்றோர் மேற் சொன்ன முறையில் தங்கள் குழந்தைகளை நுண் இசைவு (fine tune) செய்ய விரும்பாவிட்டாலும் கூட வடிவமைப்பாளர் குழந்தை என்ற கருத்தை ஒட்டி வரும் வேறு எந்த ஒரு கருத்தும் சிலருக்கு கவர்ச்சியும் ஆர்வமும் தரும் என்பதில் ஐயமில்லை.       அனைத்து பெற்றோருக்குமே வருங்காலத்தில் தங்கள் குழந்தைக்கு அதிகபட்ச நுண்ணறிவு, மனநலம்  மற்றும் அழகான உடற்கட்டு அமைய வேண்டும் என்ற அவா நிச்சயமாக இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்த ஆசை ஒன்றே இயற்கையாகக் கருவுறுதலில் எந்த விதமான சிக்கலும் இல்லாத பெற்றோர்களும், இத்தகைய அரிய வாய்ப்பொன்று கிடைக்கும் பட்சத்தில் அதனைத் தவற விடக் கூடாது என்று செயற்கை கருத்தரிப்பை தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளப் போதுமான அடிப்படைக் காரணியாக இருக்கும்.
புதிய சோதனைகள் வாயிலாக பெற்றோருக்கு அதிக நுண்ணறிவு எண் கொண்ட கரு முட்டைகளைத் (embryos) தேர்ந்தெடுக்க வாய்ப்பு நல்கும் மருத்துவமனைகள் முளைக்கும் சாத்தியம் இன்னும் அதிக நாள் தள்ளி இருப்பதாகத் தோன்றவில்லை. 

இதெல்லாம் நடப்பதற்கு சாத்தியம் இல்லை என்றே தோன்றினாலும், இனப் பெருக்க தொழில்நுட்பங்கள் (Reproduction Technologies) பிறக்கப் போகும் குழந்தைகளின் தவிர்க்கப் பட வேண்டிய மருத்துவ நிலைகளுக்காகவே வடிவமைக்கப் பட்டுள்ளன. இருப்பினும் இத்தகைய தொழில்நுட்பங்களைப் பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றி மேலதிகத் தகவல்களைப் பெறவும் இப்போது பயன்படுத்துத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக டௌன்ஸ் சிண்ட்ரோம் (Down’s Syndrome) என்ற குறைபாட்டை கருவுற்றிருக்கும் காலத்திலேயே அறிய உதவும் சோதனையை ஒருசில தனியார் மருத்துவமனைகள் கருவின் பாலினத்தை (fetus sex determination) பிரித்தறிய பயன்படுத்துகின்றனர். இது பெரும் கவலையளிக்கும் செயல் . கருவின் பாலினத்தை அறிந்து கொள்ளும் பெற்றோர் தங்கள் விரும்பாத பாலினமானால் கருவிலேயே அதனை அழிப்பதற்கு (abortion) வழி கோலும். அவ்வாறு கருவின் பாலினம் அறிய இந்தச் சோதனை பயன்படுத்தப் பட்டிருக்குமானால் இன்றுவரை எந்த அளவிற்கு பயன்படுத்தப்பட்டது என்பது நாம் அறியாதது. இந்திய மருத்துவமனைகளில் கருவிலேயே பாலினத்தை அறிந்து கொள்ளும் ஆய்வுகள் செய்வது தடை செய்யப்பட்டள்ளது மேலும் கடும்  தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.
பல்மரபணு செயற்கை கருத்தரிப்பு (Polygenic IVF screening) சோதனைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த தொலை நோக்குடனான பொது விவாதத்தை மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், கட்டுப்பாட்டாளர்கள், நீதியரசர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னெடுத்தலின் அவசியத்தையே மேற் குறிப்பிட்ட நிகழ்வு சுட்டுகிறது. கடந்த காலங்களில் டி.என்.ஏ சோதனை முடிவுகளிலிருந்து தனிநபரின் சிக்கலான பண்புக்கூறுகள் பற்றிய விவரங்கள் புரியாத புதிரென இருந்ததால் எந்த முடிவையும் நாம் எடுக்கத் தேவை இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று நிலை அப்படியில்லை என்பதால் விரைந்து முடிவெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இதுபற்றிப் பொதுவெளியில் அதிகம் விவாதிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. கருவிலேயே நோய் அபாயம் அறிதல் குறித்த சோதனைகள் முறைமையானதே. ஆனால் அதுவே பண்புக்கூறுகளை முன்னுரைத்தல் என்பது முறையான செயல் இல்லை. அடுத்து மன ஆரோக்கியம் மற்றும் மனஇறுக்கத்திற்கு முன்னதாகவே தீர்வு காணுதல் ஆகியவற்றை எப்படிக் கருதுவது? எது மிக முறைமையானது என்பதைத் தாங்களாகவே நாளைய பெற்றோர்  முடிவு செய்யலாமா அல்லது அந்த அதிகாரம் ஓட்டு மொத்த சமூகத்தின் வசம் இருக்க வேண்டுமா?
நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் கடினமான வாதப்பிரதிவாதங்கள் கொண்ட உரையாடல்கள் அவசியம் தேவைப்படுகிறது காரணம் இந்தத் தொழில் நுட்பங்கள் மெய்யாகப் போகும் நாளை நாம் மிகவேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே மறுக்க முடியாத உண்மை.

இக் கட்டுரை New Scientist ல்15.11.2018 அன்று வெளியான கட்டுரையின் அடிப்படையில் தமிழில் தழுவி எழுதப்பட்டது.

https://www.google.com/amp/s/www.newscientist.com/article/mg24032041-800-new-techniques-may-soon-make-designer-babies-a-reality-are-we-ready/amp/

---------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)