குடலுக்கும் மூளைக்குமான இணைப்பு எப்படிச் செயல்படுகிறது?
காதல் வயப்பட்டவர்களுக்கு நெஞ்சில் பட்டாம் பூச்சி பறக்குமாம்
கவிஞர்கள் சொல்லுகிறார்கள். கடும்பசியில் கண்கள் இருட்டிக் கொண்டு மயக்கம் வருவதற்கு முன் கண்ணில் பூச்சிகள்
பறப்பது போல் உணர்ந்திருப்போம்.
சில நேரங்களில் பயணம் செய்ய பேருந்தில் ஏறிய பின்னரே பணத்தை
வீட்டில் மறந்து விட்டு வந்து விட்டது நினைவுக்கு வரும். பயணச் சீட்டு
வாங்க கையில் சல்லிக் காசில்லாத நிலையில் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடலாம் என்றால்
பயணச் சீட்டு பரிசோதகர் அங்கு நிற்கிறார்.
இப்படியாக ஒரு எதிர்பாராத சிக்கலான தருணத்தில் வயிற்றில் சங்கடமான
உணர்வு அல்லது வயிற்றைக் கலக்கும். இதுமாதிரியான வயிற்றில் பட்டாம்
பூச்சிகள் பறக்கும் சங்கடமான உணர்வு உங்களுக்கு எப்போதாவது ஒரு முறையாவது ஏற்பட்டுள்ளதா?
எப்போதும் தீவனத்தைக்
குறித்தே பேசுபவனை கிண்டலாகக் குறிப்பிடும் போது, அவனது மூளை
வயிற்றில் இருக்கிறது என்று சொல்வது உண்டல்லவா. ஆனால் வயிற்றில்
அதாவது குடலில் மூளை இல்லாவிட்டாலும், மேற்குறிப்பிட்ட மனதுக்குச்
சங்கடமான சூழலில் நிகழ்வுகள் ஏற்படும் போது வயிற்றிலிருந்து வெளிப்படும் உணர்வுகள்
குடலும் மூளையும் இணைக்கப்பட்டுள்ளன என்ற எண்ணத்தை கட்டாயம் நமக்குத் தருகின்றன.
இது குறித்தான சமீபத்திய ஆய்வுகள் மேலதிகமாக, மூளை,
குடலின் ஆரோக்கியத்தை பாதிப்பது போல குடலுமே மூளையின் ஆரோக்கியத்தைப்
பாதிக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றன.
குடலுக்கும் மூளைக்கும் இடையிலான தகவல் தொடர்பை உருவாக்கும்
வலையமைப்பு குடல் - மூளை அச்சு (gut-brain
axis) என்று பெயரிட்டழைக்கப்படுகிறது. இந்தக் கட்டுரை
நாம் குடல் – மூளை அச்சு பற்றித் தெரிந்து கொண்டு அதன் ஆரோக்கியத்திற்கு
ஏற்ற உணவுகள் எவை என்பது பற்றியும் அறிந்து கொள்ள வழிவகை செய்கிறது.
குடல் - மூளை எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது?
குடல் – மூளை அச்சு என்ற பதம் குடல் , மூளை இரண்டையும் தொடர்புபடுத்தும் வலைப் பின்னலைக் குறிக்கும் சொல்லாகும் (1,2,3). இவ்விரு உடல் உறுப்புகளும் உடல் ரீதியாகவும்
உயிர் வேதியியல் ரீதியாகவும் பலவிதங்களில் இணைக்கப்பட்டுள்ளன.
வேகாஸ் நரம்பும் நரம்பு மண்டலமும்.
நமது உடலில்
காணப்படும் உயிரணுக்கள் நியூரான்கள். மைய நரம்பு மண்டலமே நம் உடல் எவ்வாறு
இயங்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. மனித மூளையில் தோராயமாக100
பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) நியூரான்கள் உள்ளது (4).
நமது குடல் பகுதியில் உள்ள சுமார் 500 மில்லியன்
(1மில்லியன் = 10 இலட்சம்) நியூரான்கள் மூளையில் உள்ள நியூரான்களுடன் நரம்பு மண்டலம் வாயிலாக இணைக்கப்பட்டுள்ளன
(5).
வேகாஸ் நரம்பு குடலையும் மூளையையும்
இணைக்கும் பெரிய நரம்புகளில் ஒன்றாகும்.
வேகாஸ் நரம்பு குடலில் இருந்து மூளைக்கும் மூளையில் இருந்து குடலுக்கும்
ஆக இரு திசைகளிலும் சைகைகளை அனுப்ப வல்லது (6,7).
ஏடுத்துக்காட்டாக, விலங்குகள்
குறித்தான ஆய்வுகளில் வேகாஸ் நரம்பு மூலம் அனுப்பப்படும் சைகைகள் மன அழுத்தம் காரணமாகத்
தடுக்கப்பட்டு விடுவதால் இரைப்பையில் பிரச்சனைகள் தோன்றுவதாக அறியப்பட்டுள்ளது (8).
அதுபோலவே மனிதர்களிடம் நடத்தப்பட்ட
ஆய்வு ஒன்று குடல் எரிச்சல் நோய்க்குறி அல்லது க்ரோன்’ஸ் நோய்
(irritable bowel syndrome (IBS) or
Crohn’s disease) வேகாஸ் நரம்பின் செயல்பாடு குறைவதன் காரணமாக ஏற்படுவதாகத் தெரிவிக்கிறது (9).
ஆதரவு உயிரிகள் அல்லது ப்ரோபயாட்டிக் (probiotic)
என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுபவை உடலுக்கு நன்மை செய்யும் உயிருள்ள
பாக்டீரியா, ஈஸ்ட் போன்றவையாகும். எலிகளுக்கு
இந்த நல்ல பாக்டீரியாக்கள் கொண்ட உணவை (எடுத்துக்காட்டு
- தயிர்) அளித்த போது அவற்றுக்கு மனஅழுத்தம் தரும்
ஹார்மோனின் அளவு (stress
hormone ) குறைந்திருப்பது
கண்டறியப்பட்டது. ஆனால் வேகாஸ் நரம்பைத் துண்டித்து விட்டுப் பின்னர் அளிக்கப்பட்ட நல்ல பாக்டீரியா
உணவால் எந்த விளைவுமே ஏற்படவில்லை (10).
மேற்கண்ட ஆய்வு குடல் – மூளை அச்சின்
செயல்பாட்டில், மன அழுத்தத்தின் மீதான வேகாஸ் நரம்பின் முக்கியத்துவத்தை
உணர்த்துவதாக அமைந்துள்ளது.
நரம்பியக்கடத்திகள் (Neurotransmitters)
நமது உடலில் குடலும் மூளையும் நரம்பியக்கடத்திகள்
(Neurotransmitters) எனப்படும் வேதிப்பொருட்கள்
வழியாக இணைக்கப்பட்டுள்ளன. மூளையில் உருவாகும் நரம்பியக்கடத்திகள்
உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக
செரட்டோனின்(serotonin) என்னும் நரம்பியக்கடத்தியே மகிழ்ச்சியான உணர்விற்கும் உடல் கடிகாரத்தை
(body clock) கட்டுப்படுத்துவதிலும் பங்களிக்கிறது (11).
இது போன்று நிறைய நரம்பியக்கடத்திகள், இலட்சம் கோடிக்
கணக்கில் (trillion) நுண்ணுயிரிகள்
வசிக்கும் குடலில் பகுதியில் அங்குள்ள குடல் உயிரணுக்களால் (gut cells) உருவாக்கப்படுகின்றன
என்பது ஒரு சுவாரசியமான தகவல் . குடல் பகுதியில் அதிக விகிதாச்சாரத்தில்
செரட்டோனின் உற்பத்தியாகிறது (12).
பயம் மற்றும் படபடப்பைக் கட்டுப்படுத்தும்
மற்றொரு நரம்பியக்கடத்தி காபா(GABA) என்று சுருக்கமாக
அழைக்கப்படும் காமா அமினோ பியூட்டைரிக் அமிலமானது (gamma-aminobutyric acid) நமது குடல் நுண்ணுயிரிகளால்
உருவாக்கப்படுகிறது (13).
ஆய்வக எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில்
சிலஆதரவு உயிரிகள் (probiotics)
காபா (GABA) வை அதிக அளவில் உற்பத்தியாகும்படியாகத்
தூண்டி படபடப்பு மற்றும் மனச் சோர்வு ஒத்த நடத்தையைக் (depression-like behavior) குறைப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
(14).
குடல் வாழ்
நுண்ணுயிர்கள் தயாரிக்கும் மூளையைப் பாதிக்கும் வேறு சில வேதிப் பொருட்கள்.
பல இலட்சம் கோடிக் (trillions) கணக்கில் நமது
குடலில் வசிக்கும் நுண்ணுயிர்கள் எப்படி நமது மூளையைப் பாதிக்கின்றன என்று இப்போது
பார்ப்போம்(15).
நமது குடல் நுண்ணுயிர்கள் பியூட்டைரேட்
(butyrate), ப்ரோபயனேட்
(propionate) மற்றும் அசிட்டேட்
(acetate) போன்ற எஸ்சிஎப்ஏ
(SCFA) சுருக்கப்பெயர்
கொண்ட குட்டை சங்கிலி கொழுப்பு அமிலங்களை (short-chain fatty acids) நிறையவே உற்பத்தி
செய்கின்றன (16).
குடல் நுண்ணுயிர்கள் நார்சத்துக்களை
செரிப்பதன் எஸ்சிஎப்ஏ (SCFA) வை தயாரிக்கின்றன.
இவ்வாறு தயாரிக்கப்படும் எஸ்சிஎப்ஏ (SCFA) பசியெடுப்பதைக்
குறைத்து மூளையின் செயல்பாட்டுகளைப்
பல வகைகளில் பாதிக்கிறது.
பிறிதொரு ஆய்வில் ப்ரோப்பியனேட் எடுத்துக்
கொள்வது உணவு உட்கொள்வதைக் குறைத்துவிடுவதால், மூளையின் செயல்பாட்டுக்கு அதிகச் சக்தியளிக்கும்
உணவு தரும் பயனும் குறைந்து போகிறது (17). மற்றொரு எஸ்சிஎப்ஏ
யான (SCFA) பியூடைரேட்(butyrate) மற்றும் அதனை
உருவாக்கும் நுண்ணுயிர்களும் சேர்ந்து மூளைக்கும் இரத்ததிற்கும் இடையில் ஒரு தடுப்பு
அரணை ஏற்படுத்துகின்றன. இந்த தடுப்பரண், மூளை – இரத்த அரண் (18) (blood-brain barrier) என்றழைக்கப்படுகிறது.
குடல் நுன்ணுயிர்கள் வளர் சிதை மாற்றத்தை
பித்த(Bile and
Amino acids) மற்றும் அமினோ அமிலங்களில் ஏற்படுத்தி மூளையைப் பாதிக்கும்
வேறு வேதிப் பொருட்களையும் உருவாக்குகிறது (15).
பித்த அமிலங்கள், உணவு மூலம்
பெறப்படும் கொழுப்பைச் செரிப்பதற்காக கல்லீரலால் தயாரிக்கப்படும் வேதிப்பொருள்.
இருப்பினும் மூளையைப் பாதிக்கும் தன்மையை இவையுமே கொண்டுள்ளன.
எலிகள்மீது நடத்தப்பட்ட இரு ஆய்வுகளில் மன அழுத்தம் மற்றும் சமூகச்சீர்கேடு
ஆகியன குடல் பாக்டீரியா மூலம் பித்த அமிலச்சுரப்பைக் குறைத்து பின்னர்அமிலச்சுரப்புக்குக்
காரணமான மரபணுக்களையே மாற்றி விடுகின்றன (19,20).
வீக்கத்தைப் பாதிக்கும் குடல் நுண்ணுயிர்கள்.
நமது குடல்-மூளை அச்சானது
நோய் எதிர்ப்பு அமைப்பு வழியாக இணைக்கப்பட்டுள்ளது. குடல் மற்றும்
குடல் நுண்ணுயிர்கள் எது நம் உடலில் புகுந்தது எது வெளியேற்றப்பட்டது என்பதைக் கட்டுப்படுத்தி
நம் நோய்த் தடுப்பு அமைப்பிலும் வீக்கம் ஏற்படுவதிலும் பெரும் பங்கை வகிக்கின்றன (21).
நமது உடலில் நோய்த்தடுப்பு அமைப்பு
நீண்டகாலம் செயல்பாட்டில் இருந்தால், அது வீக்கம் உருவாக வழிசெய்யும்.
இவ்வாறாக நாள்பட்ட வீக்கத்தால் அல்ஸீமர்(Alzheimer’s disease) நோய் போன்ற மூளைக்
கோளாறுகளைத் தோற்றுவிக்கும் (22). ஒருவகை பாக்டீரியாவால் உருவாகும் லிப்போபாலிசாக்கரைடு
(Lipopolysaccharide) என்ற எல்பிஎஸ் (LPS) வீக்கத்தைத் தரும் நஞ்சாகும். இந்த நஞ்சு
அதிக அளவில் குடலில் இருந்து குருதியில் கலக்கும் போது வீக்கத்தை உண்டாக்கும். இச்செயல் குடல்-இரத்த தடுப்பரணில் ஏற்படும் கசிவின் காரணமாக
பாக்டீரியாவும், லிப்போபாலிசாக்கரைடும் இரத்தத்தில் நுழைவதால்
ஏற்படுகிறது. கடுமையான மனச்சோர்வு (severe
depression), சிந்தனையும் செயலும் தொடர்பின்றி வேறாக இருத்தல் (schizophrenia) மற்றும் மனச்
சிதைவு நோய் (dementia) ஆகிய பல மூளைக் கோளாறுகள் பெருமளவில் குருதியில் லிப்போபாலிசாக்கரைடு கலத்தல்
மற்றும் வீக்கமும் இவற்றுடன் தொடர்பு பெற்றுள்ளது (23).
சுருக்கமாகச் சொன்னால், நமது குடலும்,
மூளையும் உடல் ரீதியாக இலட்சக்கணக்கான நரம்புகளால் இணைக்கப்பட்டுள்ளது.
அதில் மிக முக்கியமாது வேகாஸ் நரம்பு. குடலும்
அதில் காணப்படும் நுண்ணுயிர்களும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் செயலைச் செய்வதுடன்
பல்வேறு மூளைஆரோக்கியத்தைப் பாதிக்கும் வேதிப் பொருட்களையும் உருவாக்குகிறது.
----------------------------------------------------------------------------------------------------
1) https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4367209/
2) https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4362231/
3) https://www.ncbi.nlm.nih.gov/pubmed/22968153
4) https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2776484/
5)
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3845678/
6)
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/29593576
7)
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/29467611
8)
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/11297721
9)
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/25207649
10)
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/21876150
11)
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/12851635
12)
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4393509/
13)
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5127831/
14)
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/26577887
15)
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5414803/
16)
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4756104/
17)
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/27169834
18) https://www.ncbi.nlm.nih.gov/pubmed/26868600
19)
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/27006086
20)
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/28965876
21)
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/27231050
22)
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1760754/
நல்ல அறிவியல் கட்டுரை
ReplyDeleteவாழ்த்துகள்
மிக்க மகிழ்ச்சி. நன்றி . தொடர்ந்து ஆதரவு நல்க வேண்டும்.
Delete