குடலுக்கும் மூளைக்குமான இணைப்பு எப்படிச் செயல்படுகிறது?
காதல் வயப்பட்டவர்களுக்கு நெஞ்சில் பட்டாம் பூச்சி பறக்குமாம் கவிஞர்கள் சொல்லுகிறார்கள் . கடும்பசியில் கண்கள் இருட்டிக் கொண்டு மயக்கம் வருவதற்கு முன் கண்ணில் பூச்சிகள் பறப்பது போல் உணர்ந்திருப்போம் . சில நேரங்களில் பயணம் செய்ய பேருந்தில் ஏறிய பின்னரே பணத்தை வீட்டில் மறந்து விட்டு வந்து விட்டது நினைவுக்கு வரும் . பயணச் சீட்டு வாங்க கையில் சல்லிக் காசில்லாத நிலையில் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடலாம் என்றால் பயணச் சீட்டு பரிசோதகர் அங்கு நிற்கிறார் . இப்படியாக ஒரு எதிர்பாராத சிக்கலான தருணத்தில் வயிற்றில் சங்கடமான உணர்வு அல்லது வயிற்றைக் கலக்கும் . இதுமாதிரியான வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்கும் சங்கடமான உணர்வு உங்களுக்கு எப்போதாவது ஒரு முறையாவது ஏற்பட்டுள்ளதா ? எப்போதும் தீவனத்தைக் குறித்தே பேசுபவனை கிண்டலாகக் குறிப்பிடும் போது , அவனது மூளை வயிற்றில் இருக்கிறது என்று சொல்வது உண்டல்லவா . ஆனால் வயிற்றில் அதாவது குடலில் மூளை இல்லாவிட்டாலும் , மேற்குறிப்பிட்ட மனதுக்குச் சங்கடமான சூழலில் நிகழ்வுகள் ஏற்படும் போது வயிற்றிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் குடலும் மூள...