வாஸ்துப் பிரச்சனை

என் வீட்டருகில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. அதில் ஒரு வீட்டின் ஒரு அறையின் சன்னல் என் இல்லத்தின்  மாடி அறைக்கு நேர் எதிரில் உள்ளது.

 என் வீட்டில் அந்த அறையின் சன்னலில் பத்தாண்டுகளுக்கு முன்பு சன்னல் குளிர் பதனி ( window AC) பொருத்தியிருந்தேன். அப்புறம் 2016 ல் அதை மாற்றி பிரிக்கப்பட்ட குளிர்பதனி (Split AC) பொருத்தினேன்.

இந்த பணியை ஒரு ஒப்பந்தக்காரர் என் வீட்டை புதிப்பிக்கும் போது ஒரு அவரது செலவில் செய்து தந்தார்.

அப்போது சன்னல் குளிர்பதனி எடுத்த பின்னர் அந்தத் திறப்பை மூடத் தேவையான இரும்புக் கிரில் மற்றும் கண்ணாடி ஆகியவற்றையும் மாற்றினார்.

வீட்டில் பெரும்பாலும் நானும் மனைவியும் மட்டுமே. அதனால் மாடியில் அதிகம் நாங்கள் புழங்குவதும் இல்லை.

பொதுவாக விருந்தினர்கள் அல்லது
என் மகன்/மகள் வீட்டுக்கு வரும் போது மட்டுமே பயன்படுகிறது அந்த மாடி அறை என்பதால் சன்னலைத் திறப்பதே அபூர்வம்.

 சன்னலுக்கு அதிக வெளிச்சம் காரணமாகவும் புறாக்கள் தொந்தரவு காரணமாகவும் சன்னல் திரை எப்போதும் போட்டே இருக்கும்.

பணிகள் முடிந்த பின்னர் நானும் அது என்ன வகைக் கண்ணாடி என்று பார்க்கவில்லை.

ஒருநாள் அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருந்த எதிர் சன்னல் நண்பர் என்னிடம் வந்து சன்னல் கண்ணாடியை மாற்றுங்கள். ஏனெனில் அது ஆடி போல இருப்பதால் அவர் வீட்டில் நடப்பது எதிரொளிக்கிறது அதனால் தனக்கு வாஸ்துப் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று வேண்டுகோள் வைத்தார்.

நானும் முதலில் அவரது சொல்லுக்கு மதிப்பளித்து சரி முடிந்தால் பார்க்கலாம் என்று சொன்னேன்.

இடையில் மகன், மகள் திருமண வேலைகள் என்று ஏகத்திற்கும் அலைச்சல் அலுவல்களில் அந்த சன்னல் கண்ணாடி விஷயத்தைச் சுத்தமாக மறந்தும் விட்டேன்.

அந்த நண்பர் அப்புறம் பொது நிகழ்ச்சிகளில் நேரில் சந்திக்க நேரிடும் போது கவனிக்காத மாதிரி முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விடுவார்.

எனக்கும் அவர் என்னிடம் கோபமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒருநாள் இருவருக்கும் பொதுவான வேறு ஒரு நண்பர் இந்த சன்னல் கண்ணாடி விஷயம் காரணமாகத்தான் அவர் என்னிடம் விரோதம் காட்டுகிறார் என்றார்.

இத்தனைக்கும் அவர் வீட்டு  சன்னலுக்கும் என் வீட்டு சன்னலுக்கும் இடையில் கிட்டத்தட்ட எட்டடி தூரம் இருக்கும். என் பொது நண்பர் சொன்னதை யோசித்துப் பார்த்தேன்.

நல்லபடியாக இருந்த நண்பரை இப்படி கவனக்குறைவாக இருந்து பகையாக்கிக்  கொண்டு விட்டேனோ என்ற எண்ணமும் கூடவே ஒப்பந்தக்காரர் போட்ட கண்ணாடியை மாற்றி வேறு போடலாமா என்று சிந்தனையும் வந்தது.

அதை ஒப்பந்தக்காரரிடம் சொன்ன போது அவர் சிரித்தபடி அதெல்லாம் அவர் சொல்ல எந்த உரிமையும் இல்லை. அவருக்கு வேறு வேலை இல்லை. அதற்கெல்லாம் செவி சாய்த்து ஏமாளியாக வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

இன்றைக்கு அவருக்காக உங்கள் வீட்டு சன்னல் கண்ணாடியை மாற்றி அவர் கோபத்தை சரி செய்யலாம் , நட்பு கெடாது என்பதெல்லாம் சரிதான் சார். ஆனால் நாளைக்கே அவருக்கு ஒரு பிரச்சனை வந்தால் நீங்கள் உங்கள் வீட்டில் இருப்பதால் அவருக்கு வாஸ்து பிரச்சினை உள்ளது என்று அவர் சொல்வதாக வைத்துக் கொள்வோம். அப்போது அவருக்காக  வீடு மாறுவீர்களா சார் என்றார்.
எனக்கு வீடு கட்டித் தந்த அதே ஒப்பந்தக்காரர் தான் பத்தாண்டுகளுக்குப் பின் வாஸ்து பார்த்த நண்பரின் அடுக்குமாடி குடியிருப்பையும் கட்டியவர்.


இன்றைக்கு வாட்ஸ்  ஆப் வீடீயோ பதிவு ஒன்று வந்திருந்தது. அதைப் பார்த்ததும் ஒப்பந்தக்காரர் சொன்னது நினைவுக்கு வந்தது. சிரிப்பும் வந்தது.

நல்லவேளை சுயநலமான ஒருவருக்காக அல்லது தேவையற்ற நட்புக்கு வேண்டி ஒரு தவறான மூட நம்பிக்கையை வளர்க்கும் செயலை ஊக்கப்படுத்தக் காரணமாக நாம் இல்லை என்ற திருப்தி ஏற்பட்டது.

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை உணர்ந்து தெளிந்தாலே பல தேவையற்ற பகைகள் காணாமல் போகும்.

Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)