செவ்வாயும் முழுநிலவும்


நீங்கள் செவ்வாய்யை பார்த்திருக்கிறீர்களா?
செவ்வாய்? .. அதுவா பார்த்திருக்கிறேன். சிவப்புச் சாயம் பூசிய அல்லது வெற்றிலை போட்டவர்கள் வாய் என்பது உங்கள் பதிலாக இருந்தால் நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிப்பதிலிருந்து தயவு செய்து விலகலாம்.


அது பற்றி நிறையப் பார்த்தும் கேட்டும் இருக்கிறேன். மகள் அல்லது மகன் ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு பொருத்தம் பார்க்க அலைந்த போது என்பது, உங்கள் பதில் என்றால் கொஞ்சம் பரவாயில்லை. நீங்கள் விருப்பமிருந்தால் தாராளமாக மேற்கொண்டு தொடரலாம்.


நான் சொல்லப் போவது செவ்வாய் கோளை வெறும் கண்களால் காண்பது குறித்து. அதாவது நவகிரகங்களில் ஒன்றாக இருந்து அங்காரகன் என்ற பெயருடன் வயசுப் பசங்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு திருமணத்துக்கு பிரச்சனையாக சொல்லப்படும் செவ்வாய் கோளை அடுத்து வரும் 2018 செப்டம்பர் மாதம் வரையில் காண்பது பற்றி. அதற்காக செவ்வாய் கோளை தரிசித்தால் சகல செவ்வாய் தோஷங்களும் நிவர்த்தியாகும் பார்க்காவிட்டால் தெய்வக் குற்றம் ஆகி வம்சத்திற்கே திருமண யோகம் வாய்க்காது என்றெல்லாம் ஜல்லியடிக்கப் போவதில்லை. ஆனால் அப்படி தரிசித்து உங்களுக்குத் திருமணம் நிச்சயமானால் மறக்காமல் என் வங்கிக் கணக்குக்கு ஆச்சாரிய சம்பாவனையாகத் தட்சிணையை அனுப்புவதில் எனக்கு ஆட்சேபமில்லாத மகிழ்ச்சியே


நம் இரவு வானில் காணப்படும் வேறெந்த பொருளையும் போல காட்சியளிக்காத ஒரே காரணத்தால் இதனை இன்றிரவு எளிதில் காண முடியும். “அய்யா, நீங்க சொன்னபடி வானத்தை இரவு முழுவதும் பார்த்தேன். ஒன்றுமே தெரியவில்லை, கழுத்து வலிதான் மிச்சம்”, என்று சென்னை வாசிகள் புகார் பட்டியல் வாசிக்க வேண்டாம்.   இதற்கு மேக மூட்டம் இல்லாத வானமும் தூசிகள் குறைவான வளி மண்டலமும் வெட்டவெளி மைதானமும் புற மின் விளக்கு ஒளி அதிகம் இல்லாத சூழலும் தேவை. ஆகவே கிராமப் புறங்களில் காண்பது அல்லது புறநகர் பகுதிகளில் இரவில் காண்பது எளிது.


இரவில் வானத்தை நோக்கும் பலரும் கடந்த 2018 ஜூன் 7 ஆம் தேதி முதல் இரவு வானில் அதிகப் பொலிவுடனும் சிவப்பாகவும் ஒரு விண்மீன் தெரிவதைப் பார்த்திருக்கலாம். கடவுள் அவதரிக்கப் போவதாகவோ அல்லது அப்படி 2003 ஆம ஆண்டிலேயே அவதரித்த அவதார புருஷன் தான் என்று சுயமாக அறிவித்துக் யாராவது கரடி விடக் கூடும். நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.


அது வேறு ஒன்றுமில்லை. அது சாட்சாத் நமது செவ்வாய் கோள்தான். நம் கதிரவக் குடும்பத்தின் இரண்டாவது பொலிவான கோள் வியாழனை விட தற்போது செவ்வாய் பொலிவாகத் தோற்றமளிக்கிறது. வானியல் பொருட்களில் கதிரவன், நிலவு, வெள்ளிக்குப் பின் நான்காவது பொலிவான பொருள் வியாழன். ஆனால் செவ்வாய்க் கோள் வரும் 7 செப்டம்பர் 2018 வரையில் வியாழனை விட 1.8 மடங்கு அதிகப் பொலிவுடன் காட்சியளிக்கும்.

கடந்த 2003 ஆம் ஆண்டில் புவிக்கு மிகமிக அருகில் இந்த சிவந்த நிறமுள்ள கோள் வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இவ்வாறு புவிக்கு மிகமிக அருகில் செவ்வாய் வந்த நிகழ்வு கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு. அந்த கால கட்டத்தில் இக்கோள் அதிகபட்சப் பொலிவோடு காணப்பட்டது.  இப்போது 2018 ல் அத்தனை பெரும் பொலிவுடன் காணப்படாவிட்டாலும் கிட்டத்தட்ட அந்தப் பொலிவுக்கு இணையான பொலிவுடன் காணப்படுகிறது


நடக்கும் 2018 ஜூலை மாத இறுதிப்பகுதியில் பொலிவான நிலவு செவ்வாயை கடந்து செல்லும் காலம் இந்தக் கோளை வெறும் கண்ணால் காணக் கிடைக்கும்  ஒரு அரிய நல்வாய்ப்பு.


புவியானது கதிரவனுக்கும் செவ்வாய்க்கும் நடுவில் பயணிக்கும் போது நமது வானத்தின் எதிர்ப்புறம் செவ்வாய் அமையும். முழு நிலவு ஏற்படும் 2018 ஜூலை 27 போதும் நம் புவி கதிரவனுக்கும், நிலவுக்கும் நடுவில் பயணிக்கிறது. உண்மையில் வரும் ஜூலை 27 அன்று ஏற்படும் முழு நிலவின் போது புவி நேர் கீழாகச் செல்வதால் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. அந்த இரவில் நிலவும் செவ்வாயும் அருகருகே சேர்ந்து ஜோடியாகப் பயணிக்கப் போகின்றன. 


படம்  Earthsky.org தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

இரவு வானில் ஆண்டு தோறும் செவ்வாயின் பொலிவு மாறிக் கொண்டே இருக்கும். இத்தகைய மாற்றம் தான் வானில் செவ்வாயை நாம் பார்க்கும் ஆவலைத் தூண்டும்  முக்கியமான காரணி. 2017 ஆம் ஆண்டு முழுவதும் செவ்வாய் மிகவும் பொலிவிழந்து மங்கலாகவே காணப்பட்டது. எனவே சென்ற ஆண்டு முழுவதும் வெறும் கண்ணால் பார்த்துப் பழகிய செவ்வாயை இன்றிரவு பார்க்கும் போது ஒப்பனை இல்லாத நிலையில் பார்க்கும் சுமாரான அழகுடைய சாதாரணமான பெண் எப்படி ஒப்பனைக்குப் பின்னர் பிரமிக்க வைக்கும் அழகுடன் படுகவர்ச்சியாக அடையாளம் தெரியாமல் மாறியிருப்பாளோ அது போல் சென்ற ஆண்டின் அழுது வடிந்த செவ்வாயை மிகப் பொலிவாக இப்போது பார்த்தால் நமக்கும் அடையாளமே தெரியாது.

என்ன காரணம்? ஏன் செவ்வாய் சில நேரம் படு பொலிவாகவும், சில நேரங்களில் பொலிவு குன்றி மங்கலாகவும் தெரிகிறது?

முதலில் செவ்வாய் அப்படி ஒன்றும் அளவில் பெரிய கோள் இல்லை. அதன் விட்டமே 6,790 கிலோமீட்டர் தான். அதாவது புவியின் விட்டமான 12,750 கிலோ மீட்டருடன் ஒப்பிட்டு நோக்க செவ்வாயின் விட்டம் கிட்டத்தட்ட புவியின் விட்டத்தில் பாதியை விட சற்றே அதிகம் அவ்வளவுதான். ஆகவே செவ்வாயின்  பொலிவு , வியாழனைப் போல் அதன் வடிவளவு காரணமாக இல்லை. மாறாக அது புவியிலிருந்து அமையும் தொலைவால் என்றே சொல்லலாம்.


இன்றிரவு முதல் செவ்வாயை சந்திரன் அருகில் காண முயற்சிக்கலாம்.
ஆசிரியப் பெருந்தகைகள் மாணவர்களுக்கு செவ்வாயையும், முழு சந்திர கிரகணத்தையும் ஜூலை 27 அன்று காட்டுங்கள்.

சந்திப்போம்.

Comments

  1. மிக்க மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete
  2. நிறைவான, பல அரிய தகவல்கள் உள்ளடக்கிய கட்டுரை. USA Atlanta
    வி லிருந்து , நிதானமாய் இதனை வாசித்து , மகிழ்கிறேன்.
    மிகப் பெரிய அகராதி பெட்டகம், கல்லிடைக்குறிச்சி யின், தகவல் சுரங்கம், கோயம்பேட்டின் Google, அகவை 58 என்பதால், பணி ஓய்வு தரப்பட்ட, மாமனிதர்.
    நல்லாசிரியர் விருது, மாணாக்கர் வழங்கி, அதனால் தலைகுனிவுக்கு ஆட்பட்ட, முற்றிய புற்றால், முழுதும் சிதைந்திட்ட பள்ளிக் கல்வித் துறை.

    ReplyDelete
  3. சார், எங்கோ பெரிய சிகரத்தின் மீது என்னைத் தூக்கி வைத்திருக்கிறீர்கள். உங்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகள் இருந்த காலத்தில் பணி செய்யும் வாய்ப்பை இறைவன் நல்கினான். அதற்கு நன்றி. மகிழ்ச்சியும் திருப்தியுமான ஓய்வு கால வாழ்வு அது கிட்டுவதே பெறும் பேறு. உங்கள் வாழ்த்தும் பாராட்டும் ஊக்கமும்இருந்தால் போதும் இன்னும் நிறைய எழுத.
    மரியாதையுடன் கூடிய அன்புடன்,

    வெ.சுப்ரமணியன்
    27.07.2018.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)