2018 ஜூலை 27 சந்திர கிரகணம் – ஒரு பார்வை



சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி வரும் போது சந்திரன் மீது பூமியின் நிழல் விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சூரியனின் ஒளியில் புவி உருவாக்கும் நிழலில் அடர்த்தி குறைந்த பகுதியை புற நிழல் (பெனம்பரா) என்றும் அடர்ந்த பகுதியை கரு நிழல் (அம்பரா) என்றும் பிரிக்கலாம். சந்திரன், புற நிழல் பகுதிகளைக் கடக்கும் போது பகுதிக் கிரகணமும், கரு நிழல் பகுதிக்குள் முழுவதுமாக உள்நுழைந்து கடக்கும் போது முழு சந்திர கிரகணமும் ஏற்படுகிறது. 



வரும் 2018 ஜூலை 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10.44 மணிக்குத் தொடங்கி மறுநாள்  ஜூலை 28 காலை 4.58 மணிவரையில் 6 மணி நேரம் 14 நிமிட காலத்திற்கு  நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணமே இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திரகிரகணம். கிரகணத்தின் உச்ச நிலை 28 ஜூலை அதிகாலை 1.51 மணிக்கு அமையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.




சென்னையைப் பொருத்தவரையில் புறநிழல் கிரகணம் ஜூலை 27 அன்று இரவு 10.44 மணிக்குத் தொடங்குகிறது. பகுதி கிரகணம் 11.54 க்கு ஆரம்பமாகிறது. ஜூலை 28 அன்று அதிகாலை 1.00 மணிக்குத் தொடங்கும் முழு சந்திரகிரகணம் 1.51 க்கு உச்ச கட்டத்தை அடைகிறது. பின்னர் ஜூலை 28 அதிகாலை 2.43 க்கு முடிவடைகிறது. ஆக முழு சந்திரகிரகணம் 1 மணி 43 நிமிடங்களுக்கு நீடிக்கிறது. காலை 3.49 க்கு பகுதி சந்திர கிரகணம் முடிவடைகிறது. காலை 4.58 க்கு புறநிழல் கிரகணமும் முடிவுக்கு வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.



படம்: நன்றி விக்கி மீடியா காமன்ஸ்


கரு நிழல் பகுதியில் இருக்கும் போது சந்திரன் முற்றிலுமாக மறைந்து விடாமல் சிவப்பு அல்லது பழுப்பும் சிவப்பும் கலந்த நிறத்தில் காட்சியளிக்கும் என்பதால் குருதி நிலா என்ற பொருள்படும் படி ஆங்கிலத்தில் பிளட் மூன் என்று வழங்கப்படுகிறது. இதற்குக் காரணம் சூரிய வெள்ளொளியின் சிறிய அலைநீளங்களான கருநீலம் ,ஊதா மற்றும் நீலம் ஆகியன புவியின் வளி மண்டலத்தால் சிதறடிக்கப்பட்ட பின், மீதமுள்ள அதிக அலைநீளமுள்ள சிவப்பு நிறம் வளி மண்டலத்தின் வழியே விலகல் அடைந்து நிலவின் மீது விழுகிறது. 



இதற்கிடையில் 2003 ஆண்டில் பூமிக்கு மிக அருகில் வந்ததால் மிகப் பொலிவாகத் தெரிந்த செவ்வாய் கோள்  அதன் பின்னர் சென்ற ஆண்டு வரையில் பொலிவிழந்தே இருந்தது. தற்போது மீண்டும் 2018 ஜூலை 7 முதல் கிட்டத்தட்ட அதை விடச் சற்றே குறைவான பொலிவுடன் 2018 செப்டம்பர் 7 ஆம் தேதி வரை வானில் தெரியும். அதிலும் வரும் 27ம் தேதி சந்திரனுக்கு மிக அருகில் செவ்வாயைக் காண முடியும். செவ்வாய் சிவப்பு நிறத்தில் வியாழனை விட 1.8 மடங்கு அதிகமான பொலிவுடன் காட்சிப்படுகிறது.


கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு முன்னர் பூமிக்கு மிகமிக அருகில்  செவ்வாய் வந்தது மட்டுமல்லாது அதே சமயம் பூமிக்கு இருபுறமும் எதிரெதிராக 1800 கோணத்தில் சூரியனும், செவ்வாயும் அமைவதுமான நிகழ்வு கி.மு.57,517 ஆம் ஆண்டில் ஏற்பட்டது அதாவது கிட்டத்தட்ட கடந்த 60000 ஆண்டு கால இடைவெளியிலேயே ஒரே நேரத்தில் செவ்வாய் புவிக்கு மிக மிக அருகில் வருவதும், சூரியனும் செவ்வாயும் 1800  கோணத்தில் பூமிக்கு இருபுறம் அமைவதும் நடைபெறுகிறது. ஆக சூரியனுக்கு 1800 எதிராகவும் பூமிக்கு மிக நெருக்கமாகவும் செவ்வாய் வரும் நிகழ்வு 60,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அபூர்வ நிகழ்ச்சி என்று நாம் சொல்லலாம்.  2003 ஆம் ஆண்டில் புவிலிருந்து செவ்வாய் 34.6 மில்லியன் மைல் (55.7 மில்லியன் கிமீ) தொலைவில் இருந்தது. அதன் பின் தற்போது 2018 ஆம் ஆண்டில் 35.8 மில்லியன் மைல் (57.7 மில்லியன் கிமீ) தொலைவில் அதாவது 2003  ஆம் ஆண்டில் இருந்ததை விட சுமார் 1.2 மில்லியன் மைல் அல்லது 2.0 மில்லியன் கிமீ தொலைவாக இப்போது அமைந்துள்ளது.



 2018 ஜூலை மாதம் மாலை மற்றும் முன்னிரவு நேரத்தில் வானில் நிலவின் நிலையை மையமாக கொண்டு அதற்கு சற்றே கீழே புள்ளியாக சனிக் கோள், நிலவுக்கு அருகில் கிழக்கில் சிவந்த பொலிவான செவ்வாய், மேற்கில் பொலிவான வியாழன், பொலிவான வியாழனுக்கு இன்னும் மேற்கில் மிகப்பொலிவான வெள்ளி என்று நான்கு கோள்களையும் நீண்ட வில் வடிவான கற்பனைக் கோட்டால் இணைத்து எளிதில் அடையாளமறிந்து கொள்ளலாம். சந்திர கிரகணத்தன்று சந்திரனுடன் செவ்வாயும் இணைந்து அருகில் பயணிப்பதால் செவ்வாய் நம் கண்களுக்குத் தெரிவதில் எந்த சிரமமும் இராது.




சூரிய கிரகணத்தைப் போல் சந்திர கிரகணத்தையும் மேற் சொன்ன கோள்களையும் காண்பதற்கு தொலைநோக்கி, இருகண் நோக்கி போன்ற எந்த புற உதவி சிறப்புக் கருவியும் தேவை இல்லை. கருவிகள் உதவி இன்றி நேரடியாகவே வெறும் கண்ணால் பார்க்க முடியும்.

இந்த முழு சந்திரகிரகணம் சென்னையில் முழுவதுமாகத் தெரியும்


இந்த கிரகணம் ஆசியா, ஐரோப்பாவின் பெரும்பாலான இடங்களிலும் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவின் தெற்குப்பகுதி, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக் , இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அண்டார்டிகாவில் இந்த கிரகணம் தெரியும்.



அடுத்த சந்திர கிரகணம் 2019 ஜூலை 17 அன்று நடைபெற உள்ளது. அப்போது சென்னையில் பகுதி சந்திர கிரகணத்தையே காண முடியும்.

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)