ஐந்து கோள்கள் கட்புலனாகும் 2018 மார்ச் மாதம்
கடந்த
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பொலிவான ஐந்து கோள்களை ஒரே நேரத்தில்
வானில் நம்மால் காண முடிந்தது. அதே போன்று நடக்கும்
2018 ஆண்டு மார்ச் மாதத்தில் காண முடியுமா என்றால் முடியாது என்பதே
நேர்மையான பதிலாக இருக்கும். இருப்பினும் வட அரைக்
கோளத்தில் வசிப்பவர்கள் மார்ச் 2018 இல் ஐந்து பொலிவான கோள்களையும்
ஆதவன் உதிக்கும் முன்போ (Dawn) அன்றி மறைந்த பின்னோ (Dusk)
காணக் கூடிய அரியதோர் வாய்ப்பு நடக்கும் மார்ச் மாதம் நமக்குக் கிடைக்க உள்ளது. இவ்வாய்ப்பைத் தென் அரைக் கோளத்தில்
வசிப்பவர்கள் ஏப்ரல் 2018 இல் பெறுகின்றனர்.
பொலிவான கோள்கள் என்று நாம் இங்கே குறிப்பிடுவது, எந்த ஒரு ஒளியியல் கருவியின் துணையும் இன்றி, அதாவது
வானியல் தொலை நோக்கி அல்லது இரு கண் நோக்கி இவற்றின் உதவி இல்லாமல் மனிதனால் வெறும்
கண்களுக்கே காலங்காலமாய் புலப்பட்ட நம் கதிரவக் குடும்பத்தில் உள்ள கோள்களில் பின்வரும் ஐந்து கோள்களே
ஆகும். கதிரவனின் வெளிப்புற வரிசையில் எடுத்துக்
கொண்டால் முதலில் புதன் (Mercury), வெள்ளி (Venus), செவ்வாய் (Mars),
வியாழன் (Jupiter) இறுதியாக சனி (Saturn)
என்று பொலிவான கோள்களைக் குறிப்பிடலாம்.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால்
கதிரவனுக்கும் புவிக்கும் இடையில் புவியின் சுற்றுப் பாதைக்கு உள் அடங்கி சுற்றுப்
பாதையைக் கொண்டுள்ள (Inferior Planets) கோள்களான புதனும், வெள்ளியும் வானின் ஒரு பகுதியில், பொதுவாக மேற்கு வானில்
கதிரவன் மறைவிற்குப் பின் கட்புலனானால், புவியின் சுற்றுப் பாதைக்கும்
அப்பால் சுற்றி வரும் கோள்களான (Superior Planets) செவ்வாய்,
வியாழன் மற்றும் சனி ஆகியன நள்ளிரவிலோ அல்லது விடிவதற்கு சற்றே முன்னதாகவோ
கட்புலனாகும்.
கதிரவனின் மறைவுக்குப் பின்னர் புதனையும்
வெள்ளியையும் வடஅட்சங்களில் காண்பது என்பது மிதமான தென் அட்சங்களில் காண்பதை விடச் சற்றே எளிதானது.
காரணம் இவ்விரு கோள்களும் கதிரவனின் மறையும் தருவாயிலேயே கிட்டத்தட்ட
மறைந்து விடும். சூரியன்
மறைந்த சற்று நேரத்தில் மேற்கு அடிவானை நோக்கவும். புதனை விட
வெள்ளி சுமார் 12 மடங்கு பொலிவானது என்பதால் வெள்ளிக் கோளை வழிகாட்டியாகக்
கொண்டு புதனை அடையாளம் காணலாம். மார்ச் மாதம் 3 ம் நாளில் (03.03.2018) வானத்தின் குவிப்பரப்பில் இவ்விரு
கோள்களும் மிக அருகாமையில், ஒரு பாகைக்கு (1o)
சற்றே அதிகமான தொலைவிலேயே (அதாவது நீட்டப்பட்ட
நம் கையின் சுண்டு விரலை நோக்கினால் எவ்வளவு தடிமன் இருக்குமோ அவ்வளவு தொலைவு வேறுபாட்டில்)
அமையும். நடக்கும் மார்ச் மாதம் முதல் மூன்று வாரங்களுக்கு
இரு கண்நோக்கி ஒன்றின் பார்வைப் புலமான (field of view)
5
பாகைக்குள் (5o) காண முடியும்.
ஆகவே இரு கண்நோக்கியின் புலத்தில் உங்களால் வெள்ளிக் கோளைக் காண முடிந்தால்
கண்டிப்பாக அதே பார்வைப் புலத்திலேயே அதிகச் சிரமம் இன்றி புதனையும் காண முடியும்.
செவ்வாய்,
வியாழன், சனி ஆகியவற்றைக் கண்டறிவதே நமது அடுத்த
இலக்காகும். இவற்றை நோக்க நமது பார்வையை கிழக்குத் திசைக்காக மாற்ற வேண்டும். ஒவ்வொரு
நாளும் இரவு வானில் முதலில் வியாழனும் பின்னர் செவ்வாயும் கடைசியாகச் சனியும் மெல்ல அடி வானிலிருந்து உயர்ந்து வருவதைக் காண இயலும். இவை சரியாக எந்த நேரத்தில் உதிக்கும் என்று கூறவியலாது. காரணம்
புவிக்கோளத்தின் வெவ்வேறு பகுதிகளில் சற்று வேறுபட்ட நேரத்தில் இவை உதயமாகின்றன. வடக்கு அட்சங்களில் இருந்து
நோக்கும் போது வியாழன், செவ்வாய் மற்றும் சனி ஆகியவை இரவு வானில் மெதுவாக சற்று தாமதமாகவே உதிக்கின்றன. ஆனால் புவிக்கோளத்தின்
தெற்குஅட்சங்களிலிருந்து நோக்கும் போது இக் கோள்கள் சற்று சீக்கிரமாகவே உதயமாகின்றன.
புவி
வட அரைக் கோளத்தின் அட்சங்களில் நள்ளிரவுக்கு ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் வியாழன்
கிழக்கு வானில் தோன்ற ஆரம்பிக்கும். வியாழனை அடையாளம் காண்பது மிகவும் எளிதானது. காரணம்
வியாழன் மிகப் பொலிவான கோளாக விளங்குகிறது. இருப்பினும் வெள்ளி அதை விட இன்னும் பொலிவானது. செவ்வாயும்
சனியும் வியாழனின் அளவுக்கு அத்தனை பொலிவானவை இல்லை. செந்நிற செவ்வாயும், தங்க நிற
சனியும் மிக மங்கலாக கதிரவன் உதயமாவதற்கு சற்று முன்புதான் உதயமாகும்.
பஞ்சாங்கங்களில்(Almanacs)
கதிரவன் மற்றும் கோள்கள் புதன், வெள்ளி, செவ்வாய்,
வியாழன் மற்றும் சனி ஆகியன உதிக்கும் மற்றும் மறையும் கால அட்டவணை தரப்பட்டிருக்கும்.
கோள்களைக்
காண்பதில் நீங்கள் அதிகம் அனுபவம் இல்லாதவராக இருந்தால், சந்திரனின் துணை கொண்டு அறிதல்
எளிதானது. ஒவ்வொரு மாதமும் கட்புலனாகும் ஒவ்வொரு கோளுக்கும் அருகில் சில தினங்கள் இருந்து
பின்னர் கடந்து செல்லும். இந்த 2018 ஆண்டின் மார்ச் மாதம் ஏழாம் தேதி (07.03.2018)
முதல் காலையில் சந்திரனை வியாழன், செவ்வாய் மற்றும் சனியுடன் காண முடியும். அது போல்
மார்ச் 18 ஆம் தேதி முதல் நிலவை வெள்ளி, புதனுடன் மாலை வானில் காண இயலும்.
செவ்வாய்க்கும் சனிக்கும் உள்ள இடைவெளியை வானின் கோளக் கூரையில் பார்த்துக்
கொண்டே வந்தால் அது குறைந்து கொண்டே வருவதைக் காணலாம். 2018 ஏப்ரல் முதல் வாரத்தில்
இவ் விரு கோள்களும் ஒன்றோடு ஒன்று மேல் படிதல் நடைபெறும்.
இந்த ஐந்து கோள்களையும் காணும் பேறு கிட்டுமா என்று நாமும் இந்த 2018 ஆண்டின் மார்ச் மாதம் முழுவதும் முயன்று தான் பார்ப்போமே.
Comments
Post a Comment