லீபஸ் விண்மீன் கூட்டம் (LEPUS CONSTELLATION)

சென்னையில் பிப்ரவரி , மார்ச் மாதங்களில் இரவு வானில் சுமார் 8.00 முதல் 9.00  மணிக்கு ஓரியன்(Orion) விண்மீன் கூட்டம் தலைக்கு மேலாகத் தெரியும்.

ஓரியன் கூட்டம் எளிதில் அடையாளம் காணக் கூடிய ஒன்று. அருகருகே நேர் கோட்டில் அமைந்த மூன்று விண்மீன்கள்(Orion belt) எளிதில் கட்புலனாகும்.




இந்த மூன்று விண்மீன்களை ஒரு கற்பனை நேர் கோட்டால் இணைத்து தென்கிழக்காக நீட்ட சிரியஸ்(Sirius) விண்மீனைக் காண முடியும்.

ஓரியன் இடுப்புக் கச்சுக்கு நாற்புறமும் நான்கு விண்மீன்களைக் காணலாம்.
இவற்றில் வட கிழக்கில் திருவாதிரை(Betelgeuse) யும், தென் மேற்கில் ரீகல்(Rigel)ம் காணப்படும்.

ஓரியனுக்குக் கீழே தெற்கில் ரீகலுக்கும் சிரியஸிற்கும் இடையில் முயல் விண்மீன் கூட்டம் (Hare)என்ற லீபஸ்(Lepus) மங்கலாகத் தெரியும்.
அதற்கும் தெற்கில் புறா(Dove) என்ற கொலம்பா(Columba) வீண்மீன் கூட்டமும் கட்புலனாகும். 






இவ்விரு விண்மீன் கூட்டங்கள் பற்றிய விரிவான தகவல்கள் பின்வரும் கட்டுரையில் தரப்பட்டுள்ளது. WWW.astroviewer.com தளத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் விண்மீன் கூட்டங்களின் நிலையை அறிந்து கொள்ள முடியும். இத்தகைய ஒரு படத்தின் துணையுடன் இரவில் எளிதில் விண்மீன்களைத்  தேடும் போது எளிதிதாக அடையாளம் காண இயலும். 


ஒவ்வொரு மாதமும் 88 விண்மீன் கூட்டங்களில் அந்த மாதம் எளிதில் அடையாளம் கண்டு கட்புலனாகும் விண்மீன் கூட்டங்களைக் குறித்து எழுத நினைத்துள்ளேன்.


இந்த முயற்சியைத் தொடர்வது உங்கள் ஆதரவையும் வரவேற்பையும் பொருத்தது.


லீபஸ் வடக்கு வானில் ஓரியனின் காலடியில் அமைந்த விண்மீன் கூட்டமாகும். இலத்தீன் மொழியில் இப்பெயருக்கு முயல் என்று பொருள்.


 லீபஸ் குறிப்பிட்ட எந்த  புராணக் கதைகளுடன் புராணக் கதைகளுடன் தொடர்பு படுத்தப்படவில்லை. சில நேரங்களில் வேடனான  ஓரியனின் வேட்டை நாய்களாகச் சொல்லப்படும் கேனிஸ் மேஜர் (CANIS MAJOR) மற்றும் கேனிஸ் மைனர்(CANIS MINOR) ஆகியவற்றால் துரத்தப்படுவது போல சித்தரிக்கப்படும். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் முதல் முதலாக இவ்விண்மீன் கூட்டத்தை அட்டவணை வரிசைப்படுத்தியவர் டாலமி(PTOLEMY).

Image courtesy : solarsystemquick.com


ஹிண்ட் கிரிம்சன் நிற  விண்மீன் என்றழைக்கப்படும் R லெப்போரிஸ் (R Leporis) என்ற பிரசித்தி பெற்ற இரட்டை விண்மீனின் இல்லமாக இவ் விண்மீன் கூட்டம் விளங்குகிறது. இது தவிர பல குறிப்பிடத்தக்க ஆழ் வான் பொருட்களையும் (DEEP SKY OBJECTS) தன்னகத்தே கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக NGC 1904, ஒழுங்கிலி விண்மீன் திரள் NGC1821 (IRREGULAR GALAXY) சுருளி நெபுலா IC418 (SPIROGRAPH NEBULA) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.  
லீபஸ் விண்மீன் கூட்டம் வடக்கு அரை கோளத்தின் இரண்டாவது கால் வட்டத்துண்டு பகுதியில் (NQ2) பரப்பளவில் 290 சதுர பாகைகளுடன் (SQUARE DEGREE) 51 வது இடத்தில் உள்ளது. இரவு வானின் 0.7 விழுக்காடு
 பரப்பளவில் பரவியுள்ளது. 

லீபஸ் கூட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப் பெரிய விண்மீன் R - Leporis(R - லெப்போரீஸ்)ஆகும். ஹிப்பர்கோஸ் விண்மீன் அட்டவணைப் படி(Hipparcos star catalogue) இதில் 726  விண்மீன்கள் அட்டவணைபடுத்தப்பட்டுள்ளன. பொலிவு எண் 6.0 மற்றும் அதற்கும் கீழானவை மொத்தம் 45. விண்மீன் கூட்டத்தில் புறவெல்லைக் கோடாக 11 விண்மீன்களும் அமைந்துள்ளன.



இவ் விண்மீன் கூட்டத்தை  +63 பாகை முதல் -90 பாகை வரையிலான அட்சத்தில் காண இயலும். அருகில் உள்ள பிற விண்மீன் கூட்டங்கள் சீலம்(CAELUM), கேனிஸ் மேஜர்(CANIS MAJOR), கொலம்பா(COLUMBA) எரிடனஸ்(ERIDANUS) மானோசிரோஸ்(MANOCEROS)  மற்றும் ஓரியன்(ORION). லீபஸ் விண்மீன் கூட்டம் ஓரியன் குடும்பத்தின் அங்கத்தினரில் ஒன்றாகும்.



ஓரியன் குடும்பத்தின் பிற அங்கத்தினர்களாக விளங்குபவை கேனிஸ் மேஜர், கேனிஸ் மைனர், மானோசிரோஸ் மற்றும் ஓரியன்.


லீபஸ் விண்மீன் திரளில் புவியிலிருந்து 41000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த மெசியர்79 (Messier 79) என்ற NGC1904 கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் (GLOBULAR CLUSTER GALAXIES), NGC 1821 என்ற ஒழுங்கிலி விண்மீன் கூட்டம் (IRREGULAR GALAXY) ஆகியன குறிப்பிடத்தக்க ஆழ் வான் பொருட்கள் ஆக விளங்குகின்றன. 





படம் (இடது) NGC1904 கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் (GLOBULAR CLUSTER GALAXY)

படம்(வலது) NGC 1821 என்ற ஒழுங்கிலி விண்மீன் கூட்டம் (IRREGULAR GALAXY)
இக் கூட்டத்தில் ஒரு விண்மீன் கோள்களுடன் உள்ளது. மிகவும் பொலிவான அர்நெப் (ARNEB) விண்மீனின் தோற்றப் பொலிவு எண் (APPARENT MAGNITUDE) 2.58 மதிப்புடையது. லீபஸ் விண்மீன் கூட்டத்துடன் தொடர்புடைய விண்கற்கள் மழை எதுவும் இல்லை.  

இந்த விண்மீன் கூட்டத்தில் நமக்கு அதிகம் ஆர்வம் உள்ள விண்மீன்கள்:


(1) கிலிசீ(Gliese 229)229 புவிக்கு மிக அருகில் 18.77 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. 

(2) மிகத் தொலைவான விண்மீன் HIP 28132. இது கதிரவனிடமிருந்து 65232.67 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

(3) வெறும் கண்ணால் பார்க்கக் கூடிய பொலிவு குறைந்த விண்மீன் HD33093. இவ்விண்மீனின் பொலிவெண் 5.97. பொதுவாக வெறும் கண்ணால் பார்க்கக் கூடிய பொலிவு குன்றிய விண்மீன் 6.0 தோற்றப் பொலிவெண் கொண்டதாக இருக்கும். 



   
(4) மிகவும் பொலிவான விண்மீன் அர்நெப்   
அர்நெப்(Arneb) விண்மீன்: இதனை வானியலில் ஆல்பா லெபோரிஸ்(Alpha Leporis) என்று குறிப்பிடுவர்.அரபு மொழியில் அர்நெப் என்றால் முயல் என்று பொருள்படும். முயலின் காதுகளாக நான்கு விண்மீன்கள் கப்பா, லாம்டா, லோட்டா மற்றும் நியு லெபோரிஸ் கற்பனை செய்யப்படுகின்றன.
அர்நெப் ஒரு பேரரக்க மஞ்சள் – வெள்ளை விண்மீன் (Yellow – White super giant).
புவியிலிருந்து சுமார் 2200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அதாவது ஒளியின் திசை வேகமான 3 இலட்சம் கிலோமீட்டர் வினாடிக்கு என்ற பெரும் வேகத்தில் பயணித்தால் 2200 ஆண்டுகள் ஆகும்.
நமது கதிரவனை விட 32000 மடங்கு பொலிவுடன் கதிரவனைப் போல்  129 மடங்கு ஆரமும், 12 மடங்கு நிறையும் கொண்டுள்ளது. இது 13 மில்லியன் ஆண்டுகள் வயதானது என நம்பப்படுகிறது.
இந்த விண்மீன் இறந்து கொண்டிருக்கும் மிக வயதான விண்மீன். இது இன்னும் விரிவடையும் பேரரக்க நிலையிலோ அல்லது  அதையும் கடந்து சுருங்குவதால் வெப்பமடையும் நிலையிலோ இருக்கலாம் என்றே கருதப்படுகிறது. எனவே சூப்பர் நோவா(SUPER NOVA) வாக வெடித்து தன் முடிவை அடையும்.

நிஹல் என்ற பீட்டா லெபோரிஸ் ( Nihal - Beta Leporis)

இது பொலிவான மஞ்சள் அரக்க விண்மீனாகும். இதன் தொற்றப் பொலிவெண் 2.84. கதிரவனிடமிருந்து 160 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இவ் விண்மீன் கதிரவனின் நிறையைப் போல் 3.5 மடங்கு நிறையும் 16 மடங்கு ஆரமும் கொண்டது. நிஹல் என்ற அரேபிய பாரம்பரியப் பெயருக்கு தாகம் தீர்த்துக் கொள்ளும் ஒட்டகங்கள் (Camels quenching their thirst) என்று பொருளுரைக்கப்படுகிறது. சுமார் 240 மில்லியன் வருடங்கள் இதன் வயது என்று கணக்கிடப்பட்டுள்ளது. பீட்டா லெபோரிஸ் இரட்டை விண்மீனாகக் கருதப்படுகிறது. இதன் கூட்டாளி விண்மீன் பொலிவு மாறு விண்மீனாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.


ஹிண்ட்'ஸ் கிரிம்சன் விண்மீன் என்ற ஆர் – லெபோரிஸ் (Hind’s Crimson Star – R Leporis)


 இது ஒரு கார்பன் விண்மீன்.அதிகம் அறியப்பட்ட பொலிவு மாறு விண்மீனான இதன் தோற்றப் பொலிவு எண் 5.5 முதல் 11.7வரை மாற்றம் அடைகிறது. இது நீண்ட கால மிரா வகை பொலிவு மாறு விண்மீன். இந்த பொலிவு மாற்றம் 418 முதல் 441 நாட்கள் நாற்பதாண்டு கால இடைவெளியில் நடைபெறுகிறது.1300 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த இவ்விண்மீன் கதிரவனை விட 500 மடங்கு ஆரத்துடனும் 5700 முதல் 7000 மடங்கு பொலிவாகவும் விளங்குகிறது. இன்னும் விடுபட்ட விண்மீன்கள் பல உள்ளன. இருப்பினும் முன்னர் குறிப்பிட்டது போல் நமக்கு அறிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும் விண்மீன்கள் பற்றிய தகவல்களுடன் முடிக்கிறேன்.

அடுத்து இன்னும் சில நாட்களில் நாம் காண இருப்பது புறா விண்மீன் கூட்டம். அதுவரை இம் மாத இரவு வானில் லீபஸ் விண்மீன் கூட்டத்தைக் காண முயற்சி செய்யவும்.

மீண்டும் விரைவில் சந்திப்போம்.....     


Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)