31.01.2018 சந்திர கிரகணம் - ஒரு பார்வை


                                                              2018 ஆம் ஆண்டில் ஜனவரி 31 அன்று நிகழ இருக்கும் முழு சந்திர கிரகணம் மிகவும் சிறப்பானது. இந்த நிகழ்வின் சிறப்பு, அடிக்கடி நிகழாத அபூர்வமான மூன்று முக்கியமான நிகழ்வுகள் ஒருசேர நிகழ்வதே . இத்தகைய நிகழ்வை பெரிய நீல குருதி நிலவென்று(Super Blue Blood Moon) வேடிக்கையாகப் பெயரிட்டு அழைக்கலாம். மேலும் இந் நிகழ்வு வானியல் ஆய்வாளர்களுக்கு நிலவினை வெப்பம் உணரும் கேமிரா மூலம் படமெடுக்கும் அரிய வாய்ப்பையும் நல்கியுள்ளது.


                                             2018 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில்முழு நிலவு (பௌர்ணமி) கடந்த 2 ஆம் தேதி காட்சி தந்தது. இப்போது மீண்டும் ஜனவரி 31 ஆம் தேதி மீண்டும் முழு நிலவு காட்சியளிக்கப் போகிறது. ஒரு மாதத்தில் இருமுறை முழு நிலவு காட்சியளிப்பது சற்று அபூர்வமான நிகழ்வே. இத்தகைய நிகழ்வை ப்ளூ மூன்(Blue moon) என்றழைப்பர்.


                                         பொதுவாக நீல நிலா(Blue Moon) தொடர்பாக இருவகையான வரையறைகள் சொல்லப்படுகிறது. அதாவது பழைய வரையறைப்படி ஒரு ஆண்டின் நான்கு பருவங்களில் ஏதாவது ஒரு பருவத்தில் நான்கு முறை முழுநிலவு காட்சியளித்தால் அதில் மூன்றாவது முழு நிலவானது நீல நிலவு(Blue moon) எனப்படும். ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள். இதனை 4 ஆல் வகுத்தால் ஒரு பருவம் சராசரியாக 91.25 நாட்கள் கொண்டது. அடுத்தடுத்த முழு நிலவுகளுக்கிடைப்பட்ட கால அளவு சராசரியாக 29.5 நாட்கள். ஆக மூன்று முழுநிலவுகளுக்கு ஆகும் காலம் சராசரியாக 88.5 நாட்கள். மாதங்கள் 31, 30 மற்றும் 28 அல்லது 29 என்று அசமபாகமாக பங்கிடப்பட்டுள்ளது. எனவே இத்தகைய சாத்தியக் கூறு மிகவும் அரிதானது


                                                                   புவியின் வட அரைக் கோளத்திற்கு இளவேனிற்காலம்(SPRING) மார்ச் 1 முதல் மே 31 வரை, கோடைகாலம் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை இலையுதிர்காலம் செப்டம்பர் 1முதல் நவம்பர் 30 வரை, மற்றும் குளிர்காலம் டிசம்பர் 1முதல் பிப்ரவரி 28 வரை .  2107 ஆம் ஆண்டு டிசம்பர்1 முதல் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 வரையிலான குளிர் காலத்தில்(WINTER) நான்கு முழு நிலவுகள் ஏற்படவில்லை. ஆகவே முதல் வரையறைப்படி நிகழ்வு நீல நிலவு ஆக சொல்லப்பட  தகுதி பெறவில்லை.
மற்றொரு வரையறைப்படி ஒரு நாட்காட்டி மாதத்தில்(Calendar month) இரு முறை முழு நிலவு தோன்றுவது. தற்போது இந்த வரையறைப்படிதான் நிகழ்வு நீலநிலவு என்றழைக்கப்படுகிறது. அதாவது கடந்த ஜனவரி 2 ஆம் நாளில் ஒரு முழு நிலவும் அடுத்த முழு நிலவு ஜனவரி 31 ஆம் நாளிலும் வருகிறது. அடுத்த முழு நிலவுகள் இளவேனிற்காலமான மார்ச் 2, மார்ச் 31, ஏப்ரல் 29 மற்றும் மே 29 தேதிகளில் வருவதால் மார்ச் 31 ஆம் நாள் வரும் முழு நிலவானது நீல நிலவுக்கு வரையறை 2  அடிப்படையில் தகுதியாகிறது.


                                                    இது தவிர ஒரு ஆண்டில் மாதம் ஒரு முழு நிலவு என்ற கணக்கில் 12 முழு நிலவுகள் வருவது பொதுவான நிகழ்வே. அவ்வாறு ஏற்படும் 12  முழு நிலவுகளுக்கும் பெயர் சொல்லப்படுகிறது. ஒரு ஆண்டில் அபூர்வமாக 13 முழு நிலவுகள் ஏற்படும் போது அந்த பதிமூன்றாம் முழு நிலவே நீல நிலவு(Blue moon)என்று வழங்கப்படுகிறது. பொதுவாக ப்ளூ மூன் முப்பத்திரண்டு  மாத இடைவெளியில் ஏற்படும் நிகழ்வாகும். ஒரு நூற்றாண்டில் 3 முதல் 5 முறை இரட்டை நீல நிலவு அதாவது ஒரு ஆண்டில் இரு முறை மாதாந்திர நீல நிலவு ஏற்படுவது நடக்க வாய்ப்பு உள்ளது. அடுத்த இரட்டை நீல நிலவு 2037 இல் வரும்.

படம்(1)


நன்றி :

வேறு வகையான இரட்டை  நீல நிலவுகளும் நடக்கலாம். 1100 ஆண்டுகளில் ஒரு மாதாந்திர நீல நிலவும் ஒரு பருவ நீல நிலவும் 20 முறைகள் வரலாம்.


அடுத்து பெருநிலவு (Super moon) என்பது சந்திரன் புவியைச் சுற்றி வரும் பாதையும் ஒரு நீள் வட்டப்பாதையே. நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும் போது நிலா சில முறை புவிக்கு அருகிலும் (Perigee syzygy) சில முறை புவிலிருந்து மிக அதிகத் தொலைவிலும்(Apogee syzygy) அமையும். ஒரு ஆண்டில் நிகழும் 12 அல்லது 13 முழு நிலவுகளில் மூன்று முதல் நான்கு நிகழ்வுகள்  புவிலிருந்து மிகக் குறைந்த தொலைவில் நிகழும். இவையே பெரு நிலவு(Super moon) என்றழைக்கப்படுகின்றன




அப்படி ஒரு பெரு நிலவு கடந்த ஜனவரி 2 ம் நாளிலும், அடுத்தது ஜனவரி 31 ம் நாளிலும் நடக்கவிருக்கிறது. நிலவின் இந்த இயக்கம் ஒரு அலையும் இயக்கம் போல அமைகிறது.


நன்றி: விக்கி பிடியா

 (படம் 3 )
இதன் எதிர்நிலையான அதிகத்தொலைவில் காணப்படும் முழு நிலவு மைக்ரோ நிலவு(Micro moon) எனப்படும்.
இந்த நூற்றாண்டின் மிகப் பெரு நிலவை 2052 ஆண்டில் டிசம்பர் 6 ஆம் நாள் காணலாம். அதாவது அன்றுதான் இந்த நூற்றாண்டில் அதி குறைந்த தொலைவில் நிலவு புவிலிருந்து அமைந்த நிலையில் முழு நிலவு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பெரு முழு நிலவு புவிலிருந்து காணும் போது சாதாரண முழு நிலவை விட 14 விழுக்காடு  அதிகமான விட்டத்துடனும், 30 விழுக்காடு அதிகமான பொலிவுடனும்(Brighter) தோன்றுகிறது. அதே போல மைக்ரோ நிலவு(Micro moon) புவிலிருந்து காணும் போது சாதாரண முழு நிலவை விட 14 விழுக்காடு  குறைவான விட்டத்துடனும், 30 விழுக்காடு குறைவான பொலிவுடனும்(Brighter) தோன்றுகிறது

புவிக்கு அருகில் நிலவு அமையும் போது சந்திர கிரகணம் ஏற்படுதல் மற்றொரு அபூர்வ நிகழ்வு. இது 18 ஆண்டுகள் 11நாட்கள் 8 மணி காலத்திற்கொரு முறை ஏற்படும். சரோஸ்(SAROS)என்று பெயரிட்டு இந் நிகழ்வு அறியப்படுகிறது.


கடைசியாக நாம் சந்திர கிரகணம் என்றால் என்னவென்று பார்ப்போம். முழு நிலவு புவியின் நிழலில் நேரடியாகக் கடந்து செல்வதே சந்திர கிரகணம். எல்லா மாதங்களிலும் இது வான் நோக்கர்களுக்கு தெரிவதில்லை. காரணம் நிலவின் சுற்றுப்பாதை சற்றே 5 பாகை அளவுக்கு சரிந்திருப்பதே ஆகும்.

நிலவு புவியைச் சுற்றி வருவதை கீழ்கண்ட படத்தால் நாம் விளங்கிக் கொள்ளலாம்.



பெனும்பரா(Penumbra)என்ற புற நிழற் பகுதியில் சந்திரன் நுழைந்ததும் பகுதி கிரகணம்(Partial Eclips) தொடங்குகிறது. அம்பரா(Umbra) என்ற அக நிழற்பகுதியில் முழு கிரகணம் ஆரம்பித்து விடுகிறது. பின்னர் அக நிழற் பகுதியான அம்பரா  பகுதியை விட்டு நீங்கியதும் மறைந்த பகுதிகள் மீண்டும் படிப்படியாக விலகி கட்புலனாக ஆரம்பிக்கிறது. இறுதியாக புறநிழற் பகுதி பெனும்பராவை  விட்டு வெளியேறியதும் மீண்டும் முழுநிலவு கட்புலனாகிறது. 

இவ்வாறு முழு கிரகணம் நடைபெறும் அக நிழற் பகுதியில் நிலவு நுழைந்ததும் புவியிலிருந்து நோக்க நிலவு தாமிர நிறத்தை  அடைகிறது. இந்நிகழ்ச்சி அக நிழற் பகுதியில் ஒளிசிதறல் காரணமாக சிவப்பை விட அலை நீளம் குறைந்த  மற்ற நிறங்கள் சிதறல்  அடைவதால் கட்புலனாகும் நிலா சிவந்த நிறத்தில் காணப்படும். 
மாலை 4.21 மணிக்கே புற நிழல் பகுதியில் சந்திரன் நுழைந்ததுமே கிரகணம் தொடங்கினாலும் தொடுவானுக்குக் கீழே அமைவதால் கட்புலனாகாது.

மாலை 5.18 மணிக்கு பகுதி கிரகணம் தொடங்குகிறது. ஆனால் இந்நிகழ்வும் தொடுவானுக்குக் கீழாக அமைவதால் கட்புலனாகாது.

மாலை 6.04 மணிக்கு சந்ரோதயம் தொடுவானுக்குக் கீழ் ஆரம்பிக்கிறது. 

இந்தியாவில்  31.01.2018 அன்று மாலை சந்திரன் உதிக்கும் போதே முழு சந்திர கிரகணமும் 6.21 மணிக்கு ஆரம்பமாகி விடுகிறது. 6.59 மணிக்கு உச்ச கட்டத்தை அடைகிறது. கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கு சற்றே அதிகமாக 7.37 மணிக்கு முழு சந்திர கிரகணம் முடிவடைந்து விடுகிறது. 

பின்னர் இரவு 8.41 க்கு பகுதி கிரகணம் நிறைவடைகிறது. இறுதியாக இரவு 9.38 மணிக்கு புற நிழற் பகுதி கிரகணமும் முற்றுப் பெறுகிறது.

மீண்டும் 27ஜூலை 2018ல் ஒரு முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இது சென்னையில் கட்புலனாகும்.

ஆக ஏக காலத்தில் மூன்று வானியல் நிகழ்ச்சிகள் ஒருங்கே நாளை நடைபெற உள்ளது. சூரிய கிரகணத்தைப் போல காப்புக் கண்ணாடி அணிந்து சந்திர கிரகணத்தைக் காண வேண்டிய அவசியம் இல்லை. வரலாற்று நிகழ்வான இதனை தவறாமல் கண்டு களிப்போமாக.
   





Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)